நம்பிக்கை—உண்மையிலேயே நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகிறதா?
தானியேலுக்குப் பத்து வயதுதான் ஆகியிருந்தது, ஆனால் ஒரு வருட காலமாக புற்றுநோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கும் சரி அவனுடைய நெருங்கிய சொந்த பந்தங்களுக்கும் சரி, அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் தானியேல் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. படித்து, பெரிய ஆராய்ச்சியாளனாகி, என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் போவதாக நம்பிக்கொண்டிருந்தான். முக்கியமாக, அவனுடைய புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் கைதேர்ந்த ஒரு டாக்டர் அவனை சந்திக்கவிருந்ததால் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால் மோசமான சீதோஷ்ண நிலை காரணமாக அவன் எதிர்பார்த்த அந்த டாக்டர் வரமுடியாமல் போய்விட்டது. அதனால் அவன் மனமொடிந்து போனான். முதன்முறையாக, நம்பிக்கையை கைவிட்டான். பின்பு இரண்டே நாட்களில் உயிர் விட்டான்.
நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் ஆரோக்கியத்தை பாதிக்கும் விதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த சுகாதார பணியாளர் ஒருவர் தானியேலின் கதையை விவரித்தார். நீங்களும் இதுபோன்ற கதைகளைக் கேள்விப்பட்டிருக்கலாம். உதாரணமாக, முதியவர் ஒருவர் மரண படுக்கையில் இருக்கலாம், ஆனால் முக்கியமான ஒரு நிகழ்ச்சியை—பாசத்திற்குரியவரை சந்திப்பதற்கோ அல்லது ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவதற்கோ—ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த நிகழ்ச்சி வந்து போன பிறகு, மரணம் சடுதியில் கவ்விக்கொள்கிறது. இப்படிப்பட்ட உதாரணங்களில், என்ன சக்தி செல்வாக்கு செலுத்துகிறது? சிலர் நினைப்பது போல, நம்பிக்கை உண்மையிலேயே அந்தளவு சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்க முடியுமா?
நம்பிக்கையும் நம்பிக்கையான பிற உணர்ச்சிகளும் ஒருவருடைய வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பலமான செல்வாக்கு செலுத்துகின்றன என அநேக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் இத்தகைய கருத்துக்கள் எப்பொழுதும் ஒருமித்தவையாக இருப்பதில்லை. ஆராய்ச்சியாளர்கள் சிலர், இத்தகைய உரிமைபாராட்டல்கள் அனைத்தையும் விஞ்ஞானப்பூர்வமற்ற கட்டுக்கதை என ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். உடல் ரீதியிலான உபாதைகளுக்கு கண்டிப்பாக உடல் ரீதியிலான காரணங்களே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
ஆனால், நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றிய சந்தேக மனப்பான்மை புதிய ஒன்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் நம்பிக்கை என்பதை வரையறுக்கும்படி கேட்கப்பட்டபோது, “அது ஒரு பகல் கனவு” என பதிலளித்தார். சமீபத்தில், அமெரிக்க அரசியல் மேதை பென்ஜமின் ஃபிராங்க்ளின் பட்டென்று இவ்வாறு கூறினார்: “நம்பிக்கையின் மீது சார்ந்திருப்பவன் பட்டினியால் சாவான்.”
அப்படியானால், நம்பிக்கையைப் பற்றிய உண்மைதான் என்ன? அது எப்பொழுதுமே பகல் கனவுதானா, ஆகாயக் கோட்டை கட்டி ஆறுதலை தேடும் ஒரு வழியா? அல்லது, ஆரோக்கியத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றா? அது உறுதியான ஆதாரமும் உண்மையான நன்மைகளும் கொண்ட ஒன்றென நினைக்கவும் நியாயமான காரணம் இருக்கிறதா? (g04 4/22)