கடைச் சாமான்களைத் திருடுதல் தீங்கற்ற த்ரில்லா? கொடிய க்ரைமா?
இந்தக் காட்சியைக் கொஞ்சம் உங்கள் மனத்திரையில் ஓடவிட்டுப் பாருங்கள். ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரின் முன்கதவு திறக்கப்படுகிறது, ஸ்டைலான உடையில் டீனேஜ் பெண்கள் இருவர் உள்ளே நுழைகிறார்கள். மேக்கப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒயிலாக நடந்து செல்கிறார்கள். யூனிஃபார்மில் இருக்கும் செக்யூரிட்டி கார்ட் அவர்களைப் பின்தொடர்கிறார், ஆனால் சுமார் 30 அடி தூர இடைவெளி வந்ததும், அதிகாரத் தோரணையில் தன் கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு நின்றுவிடுகிறார். லிப்ஸ்டிக்குகளையும் மஸ்காராவையும் ‘கூலாகப்’ பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்கள் மீது ஒரு கண் வைக்கிறார்.
தங்களை நோட்டமிடுகிற செக்யூரிட்டி கார்ட்டை அவர்கள் ஓரக்கண்ணால் பார்க்கிறார்கள். அவர்களுக்குள் பயங்கர ‘த்ரில்.’ ஒருத்தி நெயில்பாலிஷ் பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு மெதுவாக நகர்கிறாள், அங்கு ஓரிரு பாட்டில்களை எடுத்துப் பார்க்கிறாள். வெவ்வேறு சிவப்புகளில் உள்ள இரண்டு நெயில்பாலிஷ்களைக் கையிலெடுத்து முகத்தைச் சுளித்தவாறு, ‘எது நன்றாக இருக்கிறது’ என்பதைத் தீர்மானிப்பது போல் பாவனை செய்கிறாள். பிறகு, ஒரு பாட்டிலை வைத்துவிட்டு, கொஞ்சம் ‘டார்க்கான’ கலரை எடுத்துக்கொள்கிறாள்.
நின்றுகொண்டிருக்கும் செக்யூரிட்டி கார்ட் கீழே பார்க்கிறார், பிறகு வேறு பக்கமாகப் பார்வையைச் செலுத்துகிறார். இதுதான் சமயமென்று, அந்தப் பெண்கள் லிப்ஸ்டிக்குகளையும் நெயில்பாலிஷ் பாட்டில்களையும் டக்கென எடுத்து சட்டென ஹான்ட்-பேக்கில் போட்டுவிடுகிறார்கள். அவர்கள் முகத்தில் எந்தவொரு கலவரமோ டென்ஷனோ தெரிவதில்லை, ஆனால் உள்ளுக்குள் அத்தனை பரபரப்பு, படபடப்பு, பதற்றம், பயம் எல்லாமே. ஆனாலும், இன்னும் கொஞ்ச நேரம் அந்தக் கடையில் வலம் வருகிறார்கள்; ஒருத்தி நெயில்ஃபைலர் வைக்கப்பட்டுள்ள போர்டுகளை நோட்டமிடுகிறாள், மற்றொருத்தி ஐப்ரோ பென்சில்களை நோட்டமிடுகிறாள்.
பிறகு, ஒருவருக்கொருவர் கண்ணால் பேசி தலையசைத்துக் கொள்கிறார்கள், அதன்பிறகு கடையின் முன் பகுதியை நோக்கி நடையைக் கட்டுகிறார்கள். அவர்கள் போவதற்கு செக்யூரிட்டி கார்ட் வழிவிடுகிறார், “பளீர்” புன்னகை உதிர்த்தவாறே அவரைக் கடந்துபோகிறார்கள். காஷ் கவுன்டருக்கு நேரெதிராக செல்ஃபோனின் உதிரிப் பாகங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்கிறார்கள், அங்குள்ளவற்றின் மீது கண்களை உருள விடுகிறார்கள். செல்ஃபோன் வைப்பதற்கான லெதர் பைகளைப் பற்றி ஏதோ கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். பிறகு வாசல் கதவை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஒவ்வொரு அடியை வைக்கும்போதும், சொல்ல முடியாதளவு நெஞ்சுக்குள் வெலவெலப்பு, கிலுகிலுப்பு, ஒருவித குறுகுறுப்பு. மிரட்சியின் உச்சிக்கே போனது போல் அத்தனை ‘த்ரில்.’ வாசல் கதவைத் தாண்டி வரும்போது சந்தோஷத்தில் தொண்டை கிழிய கத்த வேண்டும் போல் இருக்கிறது, ஆனாலும் உதட்டுக்கு பூட்டுப் போட்டுக்கொண்டு வெளியேறுகிறார்கள். வெளியே வந்ததுதான் தாமதம், உற்சாகமும் பெருமிதமும் ததும்பிய அவர்களது முகம், ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல் பிரகாசிக்கிறது. அடிநெஞ்சில் சின்னதாய் ஒரு பிரளயமே ஏற்பட்ட உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத் தணிகிறது, ஒரு பெரிய இழுப்பு இழுத்து ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விடுகிறார்கள். அவசர அவசரமாக நடையைக் கட்டுகிறார்கள், வழியெல்லாம் “க்ளுக் க்ளுக்கென்று” வெற்றிச் சிரிப்பைச் சிதறிக்கொண்டே போகிறார்கள். இப்போது அவர்கள் நினைப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: ‘கடைக்காரர்களுடைய கண்களில் மண்ணைத் தூவி, வெற்றிகரமாகச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு வந்துவிட்டோம்!’
இவ்விரு பெண்களும் கற்பனை கதாபாத்திரங்கள்தான், என்றாலும் வருத்தகரமாக, இது போன்ற சம்பவங்கள் உண்மையிலேயே நடந்து வருவதைத்தான் நாங்கள் விவரித்திருக்கிறோம். கடைச் சாமான்கள், அமெரிக்காவில் மட்டும் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் தடவை களவாடப்படுகின்றன, இது அங்கு மட்டுமே நடக்கிற பிரச்சினை அல்ல, ஆனால் உலகெங்குமே நடக்கிற ஒரு பிரச்சினை. இதனால் விளைகிற பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. என்றாலும், கடைச் சாமான்களைத் திருடிக்கொண்டு போகும் அநேகர் இந்தப் பாதிப்புகளை சீரியஸாகவே எடுத்துக்கொள்வதில்லை. கையில் காசு இருந்தாலும் நிறைய பேருக்கு அப்படித் திருடுவதற்குத்தான் மனம் பரபரக்கிறது. ஏன், எதற்கு? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (g05 6/22)