உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 5/06 பக். 15-17
  • நான் எதற்காக வாசிக்க வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நான் எதற்காக வாசிக்க வேண்டும்?
  • விழித்தெழு!—2006
  • இதே தகவல்
  • சிரத்தையோடு வாசியுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • தினந்தோறும் பைபிளை வாசிப்பதிலிருந்து பயனடைதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு முக்கியம்—பகுதி 1: வாசிப்பதா பார்ப்பதா?
    குடும்ப ஸ்பெஷல்
மேலும் பார்க்க
விழித்தெழு!—2006
g 5/06 பக். 15-17

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் எதற்காக வாசிக்க வேண்டும்?

“வாசிப்பதற்கெல்லாம் எனக்குப் பொறுமையில்ல, அதுக்குப் பதிலா டிவி பார்க்கச் சொல்றீங்களா, பார்க்கிறேன்.”​—⁠ மார்காரிடா, 13, ரஷ்யா.

“வாசிக்கப் பிடிக்குமா, ‘பாஸ்கெட் பால்’ விளையாடப் பிடிக்குமான்னு கேட்டா, ‘பாஸ்கெட் பால்’ விளையாடத்தான் பிடிக்கும்னு சொல்வேன்.”​—⁠ ஆஸ்கர், 19, அமெரிக்கா.

நீங்கள் நேரமெடுத்து இதுவரை வாசித்திருப்பதிலிருந்தே என்ன தெரிகிறது? வாசிக்க கற்றுக்கொள்வது முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துவைத்திருப்பது தெரிகிறது. அப்படியிருந்தாலும், ஒரு புத்தகத்தை ஏன், ஒரு கட்டுரையைக்கூட வாசிக்க உங்களுக்கு மகா கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, மாத்திரை சாப்பிடுவது நல்லது என்று உங்களுக்குத் தெரியும், ஆனாலும் அதைக் கண்டாலே உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். அதேபோல் வாசிப்பதும்கூட உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம்.

உங்களைப் போன்ற டீனேஜர்கள், வாசிப்பதை ஏன் கஷ்டமாக நினைக்கிறார்கள்? வாசிப்பதில் அவர்களுக்கு ஏதாவது பயன் இருந்திருக்கிறதா? 11 நாடுகளைச் சேர்ந்த டீனேஜர்களை விழித்தெழு! பேட்டி கண்டது. அவர்கள் சொல்வதை நீங்களே கேளுங்கள்.

வாசிப்பது உங்களுக்கு ஏன் ரொம்ப கஷ்டம்?

“வாசிக்க டைம் எங்கே இருக்கு.”​—⁠செம்ஸிஹான், 19, ஜெர்மனி.

“என்னை மாதிரி ஒரு சோம்பேறிக்கு வாசிக்கிறது கொஞ்ச கஷ்டம்தான்.”​—⁠எசேக்கியல், 19, பிலிப்பைன்ஸ்.

“ ‘அறுவையான’ விஷயங்களையெல்லாம் படி படி என்றால் என்னால் படிக்க முடியாது.”​—⁠கிறிஸ்டியன், 15, இங்கிலாந்து.

“சின்ன புத்தகமாக இருந்தால் ‘ஓகே’ வாசிப்பேன், ஆனால், பெரிசாக இருந்தால் தொடவே மாட்டேன்”​—⁠எரிக்கோ, 18, ஜப்பான்.

“நான் வாசிக்க உட்கார்ந்தாலும் என் புத்தி ஊர் சுத்தும்.”​—⁠ஃபிரான்ஸிஸ்கோ, 13, தென் ஆப்பிரிக்கா.

கிறிஸ்தவ இளைஞர்கள் பைபிளை வாசிப்பது முக்கியம். (சங்கீதம் 1:1-3) ஆனால் அதை வாசிக்க நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? ஏன்?

“பைபிள் ரொம்ப பெரிய புக்! அதைப் படித்து முடிப்பேன் என்ற நம்பிக்கையே எனக்கில்லை!”​—⁠ஆன்னா, 13, ரஷ்யா.

“மூளையைக் கசக்கிப் பிழிஞ்சாலும் பைபிளில் சில விஷயங்கள் புரியறதே இல்லை. ரசித்துப் படிக்கிற மாதிரியே இல்லை.”​—⁠ஜெஸ்‍ரீல், 11, இந்தியா.

“எனக்கு ஒழுங்கே கிடையாது, அதனால்தான் பைபிளை வாசிக்கிறதற்கு நேரம் கிடைப்பதில்லை.”​—⁠எல்ஸா, 19, இங்கிலாந்து.

“வீட்டுக்கு வந்து ‘ஹோம் வொர்க்’ செய்யணும், மத்த வேலைகள் செய்யணும். பைபிளைப் படிக்க ஏது நேரம்.”​—⁠ஸூரிசாடை, 14, மெக்சிகோ.

“பொழுதுபோக்கிலேயே நிறைய டைம் போய்விடுகிறது, அதைக் குறைத்தால்தானே பைபிள் வாசிக்க முடியும்.”​—⁠ஷோ, 14, ஜப்பான்.

வாசிப்பது கஷ்டம்தான். ஆனால் அதில் பிரயோஜனம் இருக்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

“வாசிப்பதால் என் அறிவு வளர்ந்திருக்கிறது. அதிக நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் பேச முடிகிறது.”​—⁠மோனிஷா, 14, இந்தியா.

“வாசிக்கும்போது கவலையெல்லாம் மறந்துபோகுது.”​—⁠ஆலிசன், 17, ஆஸ்திரேலியா.

“நிஜ வாழ்க்கையில் ‘விசிட்’ பண்ண முடியாத சில இடங்களை, வாசிக்கும்போது ‘விசிட்’ பண்ண முடிகிறது.”​—⁠டூயன், 19, தென் ஆப்பிரிக்கா.

“மற்றவர்கள் சொல்வதை நம்புவதற்குப் பதிலாக நானே படித்து தெரிந்துகொள்ள முடிகிறது.”​—⁠அபியு, 16, மெக்சிகோ.

வாசிப்பதில் ஆர்வம் வர எது உதவியாக இருந்தது?

“நான் சின்ன பிள்ளையா இருக்கும்போதே அம்மா அப்பா என்னை சத்தமா வாசிக்க சொல்வாங்க.”​—⁠டான்யா, 18, இந்தியா.

“வாசிக்கிறதை கற்பனைசெஞ்சு பார்க்கும்படி அம்மா அப்பா சொல்வாங்க”​—⁠டானியெல், 18, இங்கிலாந்து.

“எனக்கு பிடித்தமான பைபிள் புத்தகங்களை முதலில் வாசிக்கும்படி அப்பா ‘ஐடியா’ கொடுத்தார். சங்கீதம், நீதிமொழிகள் போன்ற புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். இப்போது பைபிளை ஆர்வத்தோடு வாசிக்கிறேன், போரடிப்பதில்லை.”​—⁠சரின், 16, தென் ஆப்பிரிக்கா.

“நாலு வயசிலேயே என் அம்மா அப்பா எனக்காக ஒரு டேபிளும் புக் ஷெல்ஃபும் கொடுத்துட்டாங்க. நான் குழந்தையா இருந்ததிலிருந்தே எனக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை அந்த புக் ஷெல்ஃபில் அடுக்கியும் கொடுத்துட்டாங்க.”​—⁠ஆரி, 14, ஜப்பான்.

பைபிளை வாசிப்பது ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

“பைபிள்ல இல்லாத நிறைய விஷயங்கள ஜனங்க நம்புறாங்க. ஆனா நாமே வாசிச்சால்தான் உண்மையைத் தெரிஞ்சுக்க முடியும்.” (அப்போஸ்தலர் 17:11)​—⁠மாத்யு, 15, அமெரிக்கா.

“பைபிளை ரொம்ப கவனம் செலுத்தி படிக்கணும். அப்படிப் படிச்சதால்தான் மற்றவர்களிடம் தெளிவாகவும் தைரியமாகவும் என் நம்பிக்கைகளை எடுத்துச்சொல்ல முடிகிறது.” (1 தீமோத்தேயு 4:13)​—⁠ஜேன், 19, இங்கிலாந்து.

“பைபிளை வாசிக்கும்போது, யெகோவாவே என்னிடம் பேசுவதுபோல் இருக்கிறது. சில விஷயங்கள் என் மனதைத் தொடுகின்றன.” (எபிரெயர் 4:12)​—⁠ஒபதியா, 15, இந்தியா.

“பைபிள் வாசிக்கும்போது யெகோவா என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது, நல்ல அறிவுரைகளும் கிடைக்கிறது. அதனால் ஆர்வமாகப் படிப்பதற்குப் பழகிவருகிறேன்.” (ஏசாயா 48:17, 18)​—⁠விக்டோரியா, 14, ரஷ்யா.

பைபிளையும் அது சம்பந்தமான புத்தகங்களையும் எப்போது வாசிக்கிறீர்கள்?

“நான் ஒரு ‘டைம்டேபிள்’ போட்டிருக்கிறேன். அதன்படி தினமும் காலையில் எழுந்தவுடன் பைபிளிலிருந்து ஒரு அதிகாரத்தை வாசிக்கிறேன்.”​—⁠லையிஸ், 17, பிரேசில்.

“நான் தினமும் ஸ்கூலுக்கு டிரெயினில் போகும்போது வாசிக்கிறேன். நான்கு வருடங்களாக இப்படித்தான் செய்கிறேன்.”​—⁠டாயிசி, 19, ஜப்பான்.

“ராத்திரி கொஞ்ச நேரம் பைபிளை வாசித்துவிட்டுதான் தூங்கப் போகிறேன்.”​—⁠மாரியா, 15, ரஷ்யா.

“ ‘காவற்கோபுரம்’ அல்லது ‘விழித்தெழு!’ பத்திரிகையிலிருந்து தினமும் நான்கு பக்கங்கள் படிக்கிறேன். அடுத்த இதழ் வருவதற்குள் முழு பத்திரிகையும் வாசித்து முடித்துவிடுகிறேன்.”​—⁠எரிக்கோ, 18, ஜப்பான்.

“தினமும் ஸ்கூலுக்குப் போவதற்கு முன் பைபிளை வாசிக்கிறேன்.”​—⁠ஜேம்ஸ், 17, இங்கிலாந்து.

இவர்களெல்லாம் சொல்கிறபடியே, வாசிப்பதில் நிறைய நன்மைகள் உண்டு. தன்னம்பிக்கை கூடும், அறிவும் வளரும். அதுமட்டுமல்ல, பைபிளையும் அது சம்பந்தப்பட்ட புத்தகங்களையும்​—⁠இந்தப் பத்திரிகையையும்கூட⁠—⁠வாசிப்பது ‘கடவுளிடம் நெருங்கி வருவதற்கும்’ உங்களுக்கு உதவும். (யாக்கோபு 4:8, NW) எனவே, வாசிப்பது மகா கஷ்டமாக இருந்தாலும், வாசிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்!

சிந்திப்பதற்கு

◼ பைபிளை வாசிப்பது ஏன் முக்கியம்?

◼ பைபிளையும் அது சம்பந்தமான புத்தகங்களையும் வாசிப்பதற்கு எப்படி ‘நேரத்தை ஒதுக்கலாம்’?​—⁠எபேசியர் 5:15, 16, NW.

[பக்கம் 16-ன் பெட்டி]

ஒத்துப்பாருங்கள்

வாசிக்கிற காரியங்களை ஏற்கெனவே அறிந்த காரியங்களுடன் ஒத்துப்பாருங்கள். இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்:

◼ ஏற்கெனவே தெரிந்த விஷயங்களுடன்: இதே விஷயங்களை வேறெதாவது புத்தகத்திலோ பத்திரிகையிலோ கதையிலோ படித்திருக்கிறேனா? அதிலும் இதிலும் வரும் கதாபாத்திரங்கள் ஒரேமாதிரி இருக்கிறார்களா?

◼ உங்களுடன்: இது எப்படி என் சூழ்நிலையோடும் கலாச்சாரத்தோடும் பிரச்சினைகளோடும் ஒத்திருக்கிறது? பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சந்தோஷமாக வாழ்வதற்கும் இது எப்படி எனக்கு உதவும்?

◼ சுற்றுப்புறத்துடன்: இந்த விஷயத்திலிருந்து இயற்கை பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும், வித்தியாசமான கலாச்சாரங்கள் பற்றியும், சமுதாய பிரச்சினைகள் பற்றியும் என்ன கற்றுக்கொள்ளலாம்? படைப்பாளரைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்