போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பது எப்படி?
ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
டாக்டரைப் பார்க்க அப்பாய்ண்ட்மென்ட் வாங்கியிருக்கிறீர்கள்; வீட்டிலிருந்து கிளம்பும்போது, அதற்கு இன்னும் நிறைய நேரமிருக்கிறது என்று நினைக்கிறீர்கள். ஆனால், வழியில் டிராஃபிக் ஜாமில் மாட்டிக் கொள்வீர்கள் என நினைக்கவில்லை. நிமிடங்கள் மெதுவாக கடந்து செல்லச்செல்ல உங்கள் காரும் மெதுவாக ஊர்ந்து செல்கிறது; உங்களுக்கு டென்ஷன் தலைக்கேறத் துவங்குகிறது. ஒருவழியாக கிளினிக்கை அடைகிறீர்கள், ஆனால் அரைமணி நேரம் தாமதமாக.
நகரவாசிகளுக்கு அதிக எரிச்சலைக் கிளப்புகிற பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த “டிராஃபிக் ஜாம்”; அதிலும், ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் நிற்கிற வாகனங்களின் நெரிசலைப் பற்றி சொல்லவே வேண்டாம்; சாலை போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுகிறது, அதோடு காற்றும் மாசுபடுகிறது. இதனால், நகரத்தில் வாழுகிற லட்சக்கணக்கானோர் தினமும் அல்லல்படுகிறார்கள் என்பது வருத்தகரமான விஷயம்; ஆனால், இந்தத் துன்பத்துக்கு விடிவுகாலம் பிறப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் நிலைமையைக் குறித்து டெக்ஸாஸ் போக்குவரத்து நிறுவனம் இவ்வாறு அறிக்கை செய்தது: “பெரிய ஊர்கள், சிறிய ஊர்கள் என்றில்லாமல் எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.” நகரங்களில் பயணிப்பவர்களுடைய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் போதிய வசதிகளைச் செய்துதர முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகிறார்கள் என அந்த அறிக்கை குறிப்பிட்டது. அங்கு மட்டுமல்ல, உலகெங்கும் இதே நிலைதான். சீனாவில் பல்லாயிரக்கணக்கான வாகனப் பயணிகள் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஸ்தம்பித்துப்போன போக்குவரத்து நெரிசலில் சமீபத்தில் சிக்கிக்கொண்டார்கள்; அதைச் சரிசெய்ய போலீஸார் பல நாட்கள் போராடினார்கள். மெக்சிகோ நகரின் மையப்பகுதி வழியாக 20 கிலோமீட்டர் பயணிப்பதற்கு நான்கு மணிநேரத்திற்கும் மேலாகிறது; நடந்துபோனால்கூட அந்த இடத்தைக் கடப்பதற்கு இவ்வளவு நேரமாவதில்லை.
நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. நகரவாசிகளின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரிக்கிறது; அதோடு, இன்று உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். நகரவாசிகள் பெருகப் பெருக அங்குள்ள வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதைப்பற்றி ஓர் எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆட்களும் ஏராளம் கார்களும் ஏராளம்; இருக்கும் கொஞ்சநஞ்ச இடத்திலேயே எல்லாரும் அவற்றை ஓட்ட விரும்புகிறார்கள்.”
டிராஃபிக் பிரச்சினையைத் தீர்ப்பதில் சிரமங்கள்
வாகனங்கள் இல்லாமல் சமாளிக்க முடியாது என்ற நிலைக்கு மனிதர்கள் வந்துவிட்டதால், வாகன அதிகரிப்பை நகரங்கள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும். சுமார் நாற்பது லட்சம் மக்கள் வசிக்கிற அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஆட்களைவிட இப்போது கார்களின் எண்ணிக்கைதான் அதிகம்! மற்ற நகரங்கள் இந்த நிலைமையை இன்னும் எதிர்ப்படாவிட்டாலும் சாலைகளில் படையெடுக்கிற வாகனங்களைச் சில நகரங்களால் மட்டுமே சமாளிக்க முடிகிறது. “வாகனங்களை மனதில் வைத்து நகரங்கள் அமைக்கப்படவில்லை” என்பதாக மாட்ரிட்ஸ் அர்பன் கமிஷனின் தலைவரான கார்லோஸ் குஸ்மான் தெரிவிக்கிறார். குறுகலான சாலைகளை உடைய பழைய நகரங்களே பெரும்பாலும் போக்குவரத்து நெரிசலில் அல்லல்படுகின்றன; எனினும், நவீன மாநகரங்களின் அகலமான சாலைகளில்கூட குறிப்பாக காலையிலும், மாலையிலும் ‘ரஷ் அவர்ஸில்’ விரைவாக டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுவிடுகிறது. “நகர்ப்புற போக்குவரத்துப் பிரச்சினைகள்” என்ற தம்முடைய அறிக்கையில் டாக்டர் ஷான் பால் ராடிரிக் இவ்வாறு தெரிவிக்கிறார்: “இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் நாள்முழுவதும் டிராஃபிக் ஜாம் ஏற்படுகிறது, அதோடு இந்தப் பிரச்சினை இன்னும் மோசமாகி வருகிறது.”
அரசாங்கம் நெடுஞ்சாலைகளை அமைக்கும் வேகத்தைவிட கார்களின் விற்பனை அதிகமாக இருப்பதால், சிறந்த முறையில் அமைக்கப்பட்ட சாலைகள்கூட மளமளவென அதிகரிக்கிற வாகன நெரிசலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகின்றன. “காலப்போக்கில், புதிய சாலைகளை அமைப்பதோ பழைய சாலைகளை அகலமாக்குவதோ ‘ரஷ் அவர்ஸில்’ ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை கொஞ்சம்கூட குறைக்கப் போவதில்லை” என்று ஸ்டக் இன் டிராஃபிக்—கோப்பிங் வித் பீக்-அவர் டிராஃபிக் கன்ஜஷன் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
வாகனங்களை நிறுத்துவதற்குப் போதுமான இடவசதி இல்லாதிருப்பதும்கூட போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. ஒருசில நேரத்தில், சாலைகளை வலம்வருகிற கார்கள் பல, நிறுத்துவதற்கு இடம் தேடி அலைகிற கார்களாக இருக்கலாம். முக்கியமாக நகரங்களில், போக்குவரத்து நெரிசலில் காற்று மாசுபடுவதால் ஒவ்வொரு வருடமும் சுமார் 4,00,000 பேர் இறப்பதாக கணக்கிடப்படுகிறது. ஓர் அறிக்கையின்படி, இத்தாலியிலுள்ள மிலான் நகரத்தில் காற்று எந்தளவு மாசுபட்டிருக்கிறதென்றால், நாள்முழுக்க அங்கிருக்கும் காற்றை சுவாசிப்பது 15 சிகரெட்டுகளைக் குடிப்பதற்குச் சமமாக இருக்கிறது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிற இழப்பைக் கணக்கிடும்போது விரயமாகிற மணிநேரங்கள், டிரைவர்கள் அனுபவிக்கிற டென்ஷன் ஆகியவற்றையும்கூட அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சிரீதியான பாதிப்பை அளவிடுவது மிக கடினம்; ஆனால், அமெரிக்காவிலுள்ள 75 பெரிய நகரங்களில் டிராஃபிக் ஜாமினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஒரு வருடத்திற்கு சுமார் 70 பில்லியன் டாலரென அங்கு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கணக்கிடப்பட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா?
பிரச்சினையைக் குறைக்க சில தீர்வுகள்
இது சம்பந்தமாக பல நகரங்கள் ஏற்கெனவே சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. உலகிலேயே அதிகளவு வாகனங்களை உபயோகிக்கிற நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், வாகன விற்பனையைக் கட்டுப்படுத்துகிறது. இத்தாலியிலுள்ள பல நகரங்களும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களும் பகல் நேரங்களில் பெரும்பாலும் கார்கள் நகரின் மையப்பகுதிக்கு வருவதை முற்றிலும் தடை செய்திருக்கின்றன.
நகரின் மையப்பகுதிக்குள் நுழைகிற கார் டிரைவர்களிடம் “டிராஃபிக் பீஸை” வசூலிப்பதன்மூலம் இன்னும் சில நகரங்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றிருக்கின்றன. லண்டனில் இத்திட்டம் அமலுக்கு வந்தபோது, போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்படுவது 30 சதவீதம் குறைந்தது; அதோடு மற்ற நகரங்களும் இதே முறையைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றன. மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ சிட்டியில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அதுவும் ரிஜிஸ்டிரேஷன் நம்பரின் அடிப்படையில், கார்கள் நகரின் மையப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
பொதுப் போக்குவரத்து வசதிகளை நவீனமாக்குவதற்கும், சாலைகளைச் சீரமைப்பதற்கும், நகரைச் சுற்றிலும் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கும் அதிகாரிகள் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். டிராஃபிக் சிக்னல்களை இயக்குவதற்கும் விபத்தின் காரணமாக ஏற்படுகிற போக்குவரத்து நெரிசல்களை உடனடியாக சரிசெய்யுமாறு காவல்துறையிடம் தெரிவிப்பதற்கும் அவர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். நாளின் குறிப்பிட்ட சில மணிநேரங்களில் பேருந்துகள் மட்டுமே செல்வதற்கான பாதைகளும், போக்குவரத்து வசதிக்கு ஏற்ப பல்வேறு திசைகளில் செல்வதற்கான பாதைகளும்கூட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இருந்தாலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி காண்பது குடிமக்கள் தரும் ஒத்துழைப்பில்தான் பெரிதும் சார்ந்துள்ளது.
நீங்கள் என்ன செய்யலாம்?
‘மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்ய’ வேண்டுமென்று இயேசு கிறிஸ்து கூறினார். (மத்தேயு 7:12, ஈஸி டு ரீட் வர்ஷன்) இந்த ஞானமான அறிவுரையைப் பின்பற்றுவது, மோசமான போக்குவரத்துப் பிரச்சினைகள் சிலவற்றைக் குறைக்க உதவக்கூடும். மறுபட்சத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய சௌகரியத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்தால், சிறந்த திட்டங்கள்கூட தோல்வியைத் தழுவலாம். உங்களுடைய நகரத்தில் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்கு உதவுகிற சில ஆலோசனைகளைக் கவனியுங்கள்.
அருகிலுள்ள இடங்களுக்கு, நடந்து செல்வதோ சைக்கிளைப் பயன்படுத்துவதோ சிறந்த தீர்வாக இருக்கலாம். இவை அநேக சமயங்களில், விரைவாக, எளிதாக செல்வதற்கு உதவுவதோடு ஆரோக்கியத்திற்கும் வழிசெய்கின்றன. தூர இடங்களுக்குச் செல்ல, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது சிறந்த தெரிவாக இருக்கலாம். பேருந்துகளையும், சுரங்க ரயில் பாதைகளையும், மற்ற ரயில் பாதைகளையும் மேம்படுத்துவதன் மூலம் மக்கள் தங்களுடைய கார்களைப் பயன்படுத்தாதிருக்க அநேக நகரங்கள் தூண்டுவிக்கின்றன. இத்தகைய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தினால் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கோ ரயில் நிலையத்திற்கோ காரில் சென்றாலும்கூட, அங்கிருந்து நகரின் மையப்பகுதிக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
காரில் செல்வதைத் தவிர்க்க முடியாவிட்டால், நீங்கள் மட்டுமே தனியாகப் பயணிப்பதற்குப் பதிலாக பலரை அழைத்துச் செல்வதற்கான சாத்தியத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ‘ரஷ் அவர்’ போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இது மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். அமெரிக்காவில், வழக்கமாகச் சாலைகளில் பயணிப்பவர்களில் 88 சதவீதத்தினர் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள்; இவர்களில், சுமார் மூவரில் இருவர் தனியாகப் பயணிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிற கணிசமான எண்ணிக்கையினர் இவ்வாறு ஒன்றாக சேர்ந்து பயணித்தால், “ரஷ் அவர்ஸில் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலையும் தாமதத்தையும் பேரளவாக குறைக்கக்கூடும்” என்பதாக ஸ்டக் இன் டிராஃபிக் புத்தகம் குறிப்பிடுகிறது. மேலும், அநேக இடங்களில், இருவரோ அதற்கும் அதிகமானோரோ பயணிக்கிற கார்கள் செல்வதற்காகப் பிரத்தியேகப் பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே உள்ள கார்கள் அத்தகைய பாதைகளில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற சூழ்நிலை உங்களுக்கு இருந்தால், ‘ரஷ் அவர்’ டிராஃபிக்கைத் தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும்சரி, வாகனங்களை ஓட்டுகிற மற்றவர்களுக்கும்சரி காரியங்களைச் சுலபமாக்குகிறது. உங்கள் வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்தினால், அதனால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம். என்னதான் சிறந்த திட்டங்களை வகுத்தாலும் நீங்கள் டிராஃபிக் ஜாமில் மாட்டிக் கொள்ளவே மாட்டீர்கள் என்பதற்கு அது உத்தரவாதம் அளிப்பதில்லை. அத்தகைய சமயங்களில், அதைச் சரியான மனநிலையுடன் பார்ப்பது டென்ஷனைக் குறைக்க அதிக உதவியாக இருக்கும்.—மேலே உள்ள பெட்டியைக் காண்க.
நீங்கள் பெரிய நகரத்தில் வாழ்கிறீர்கள் என்றால், போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இருந்தாலும், பொறுப்பாக நடந்து கொள்வதன் மூலமும், மற்ற டிரைவர்களுக்கு மரியாதை காட்டுவதன் மூலமும் பொறுமையாக நடந்து கொள்வதன் மூலமும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்ள உங்களால் முடியும்.
[பக்கம் 23-ன் பெட்டி/படம்]
டிராஃபிக் குளறுபடியா, அமைதியாயிருங்கள்
ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டைச் சேர்ந்த டாக்ஸி டிரைவரான ஹைமே, 30 வருடங்களுக்கும் மேலாக டிராஃபிக் ஜாமுடன் போராடி வருகிறார். மோசமான சூழ்நிலைகளில் அவர் எப்படி அமைதியாக சமாளிக்கிறார் என்பதைப் பாருங்கள்.
◼ வாசிப்பதற்காக எதையாவது கைவசம் வைத்திருப்பேன். அதனால், டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டாலும்கூட எரிச்சலடைய மாட்டேன்.
◼ வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கையில், காரிலுள்ள ரேடியோவில் நியூஸ் கேட்பேன் அல்லது பைபிள் ரெக்கார்ட்டிங்கைப் போட்டுக் கேட்பேன். இவ்வாறு டிராஃபிக்கைப் பற்றிய கவலையை ஓரங்கட்டிவிடுகிறேன்.
◼ பொதுவாக ஹாரனை உபயோகிக்கவே மாட்டேன், ஹாரன் அடித்தால் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறதே தவிர எந்தப் பிரயோஜனமும் இருப்பதில்லை. மற்ற டிரைவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதன்மூலம் டென்ஷனைத் தவிர்க்கிறேன், மற்றவர்களுக்கும் டென்ஷன் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறேன்.
◼ முரட்டுத்தனமான டிரைவர்களைச் சந்தித்தால், அமைதியாக இருக்க முயலுகிறேன். அவர்களிடமிருந்து எட்டியே ஓட்டுகிறேன். பொறுமைக்கு நிகர் எதுவுமில்லை.
◼ மாற்றுச் சாலைகளைக் கண்டறிய முயன்றாலும்கூட, சில சமயங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகையில் திட்டமிட்ட நேரத்திற்குச் சென்றெட்ட முடியாது என்பதை என்னுடைய பயணிகளிடம் முன்னதாகவே தெரிவித்துவிடுகிறேன். நேரத்தைக் கடைப்பிடிப்பது நகரத்தில் பயணம் செய்பவர்களுக்குக் கடினமான காரியம்.