எமது வாசகரிடமிருந்து
வியாதியிலிருந்து விடுதலை! (ஜனவரி 2007) “சிலர், பயனற்ற அல்லது தீங்கையே விளைவிக்கக் கூடிய சிகிச்சை முறைகளுக்காக அல்லது மருந்துகளுக்காகத் தங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்குகிறார்கள்” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். மாற்று மருந்துகளை மனதில் வைத்து இதை எழுதியதுபோல் தெரிகிறது. ஏனெனில், இந்தக் கட்டுரையில் சில மாற்று சிகிச்சை முறைகள் எந்தளவு பயனுள்ளவை, பாதுகாப்பானவை என்பதைக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அப்படியென்றால், பொது மருந்து பாதுகாப்பானது, அதிக பயனுள்ளது என விழித்தெழு! சிபாரிசு செய்கிறதா? ஐ.மா. பொது கணக்கு வைப்பு அலுவலகத்தின்படி, பொது மருந்து அந்தளவிற்கு பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இல்லை என்பதை நிரூபிக்க அநேக ஆதாரங்கள் உள்ளன.
ஜி. சி., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பதில்: ஒரு காலத்தில் மிகவும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள், பிறகு பாதுகாப்பற்றவையாக நிரூபிக்கப்பட்டன. இது, பொது மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் பொருந்தும். எனவே, நீங்கள் எந்தச் சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தாலும், அதாவது பொது மருத்துவமானாலும் சரி மாற்று மருத்துவமானாலும் சரி, அதன் நன்மைகளையும் ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிந்திருப்பது ஞானமான செயலாகும். மேலும், இது பைபிள் நியமங்களோடு முரண்படாதிருப்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நீங்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமாய் இருக்க வேண்டும். நாங்கள் இதற்கு முன்பு பல முறை குறிப்பிட்டிருந்ததுபோலவே, விழித்தெழு! பத்திரிகை எந்தக் குறிப்பிட்டச் சிகிச்சை முறையையும் சிபாரிசு செய்வதில்லை. மேலும், மற்றவர்கள் தேர்ந்தெடுக்கும் சிகிச்சைகளைக் கிறிஸ்தவர்கள் குறைகூறவோ விமர்சிக்கவோ கூடாது. அந்தக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தபடி, மனிதகுலத்தின் அனைத்து வியாதிகளுக்கும் மாற்று மருத்துவமானாலும் சரி பொது மருத்துவமானாலும் சரி, நிரந்தர தீர்வை அளிக்கவே முடியாது. ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டுமே நிரந்தர விடுதலையை அளிக்க முடியும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
நான் ‘மானைப்போல் குதிப்பேன்’ (ஆகஸ்ட் 2006) பிரான்சேஸ்கோ ஆபாடேமார்கோவின் பொறுமையும் மனத்தாழ்மையும் உண்மையில் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தன. யெகோவாவைச் சேவிப்பதற்காக அவர் தன்னுடைய உடல் ஊனத்தைச் சமாளிக்க மட்டுமல்ல, தன் எதிர்மறையான எண்ணங்களை எதிர்த்து போராடவும் முயற்சி செய்திருக்கிறார். எனவே, நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குச் சிறந்த விதத்தில் யெகோவாவைச் சேவிக்க முடியும் என்பதை மனதில் பதித்துக்கொள்ள அவருடைய அனுபவம் எனக்கு உதவியது. அதோடு, கடவுளுடைய வார்த்தைக்கு இசைய வாழ்ந்ததால் மலைக்க வைக்கும் மாற்றங்களைச் செய்ய அவரால் முடிந்ததைப் பார்த்தும் உற்சாகம் பெற்றேன்.
என். ஜி., கம்போடியா
பிரான்சேஸ்கோ ஏகப்பட்ட தடைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. எனினும், அவருக்கு சத்தியம் கிடைத்தவுடன் அந்தத் தடைகளை அவர் ஆர்வமாகவும் மனப்பூர்வமாகவும் சமாளித்தார். உறுதி காட்டுவதில் மெச்சத்தகுந்த உதாரணம் அவர்! அவருடைய வாழ்க்கை சரிதை, என்னைச் செயல்பட தூண்டுவித்ததுபோலவே மற்றவர்களையும் தூண்டுவிக்கும் என்று நம்புகிறேன்.
எம். டி., தென் ஆப்பிரிக்கா
எனக்கு இந்தக் கட்டுரை ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது! பிரான்சேஸ்கோ ஆபாடேமார்கோவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் எனக்குக் கிடைத்தால், யெகோவாவுக்கு அதிகளவில் சேவை செய்வதற்குக் கூடுதல் முயற்சியை எடுக்க அவருடைய அனுபவம் எனக்கு எந்தளவு ஊக்கமளித்தது என்பதைச் சொல்வேன்.
ஜே. பி., ஐக்கிய மாகாணங்கள்
வைராக்கியத்திலும் சகிப்புத்தன்மையிலும் தலைச்சிறந்த முன்மாதிரி வைத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி பிரான்சேஸ்கோ. புதிய உலகில் நீங்கள் நிச்சயம் மானைப்போல் துள்ளிக் குதிப்பீர்கள். உங்களை உளமார நேசிக்கிற, உங்களை எப்போதும் ஜெபத்தில் நினைக்கிற சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எஸ். ஜி., ரஷ்யா