உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 11/07 பக். 19-21
  • பைபிள் எதைப்பற்றிச் சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் எதைப்பற்றிச் சொல்கிறது?
  • விழித்தெழு!—2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொய்யர், மோசமான ஆட்சியாளர் என கடவுள்மீது களங்கம்
  • களங்கத்தை கடவுள் களைவது எப்படி
  • கடவுளுடைய ராஜ்யம்​—⁠ஒரே தீர்வு
  • நமக்கு நடைமுறை அறிவுரைகள்
  • பரலோக தகப்பனிடமிருந்து வந்த “கடிதம்”
  • கடவுளுடைய ராஜ்யம்—பூமியின் புதிய அரசாங்கம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • தீமை தொடருவது ஏன்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
    “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
விழித்தெழு!—2007
g 11/07 பக். 19-21

பைபிள் எதைப்பற்றிச் சொல்கிறது?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுடன் கடவுள் தொடர்புகொண்ட விதத்தைப்பற்றி பைபிள் சொல்வதால் சிலர் இதை சரித்திரப் புத்தகமாகக் கருதுகிறார்கள். சட்டம், குடும்பம், நன்நெறி, மதம் சார்ந்த 600-⁠க்கும் மேற்பட்ட சட்டதிட்டங்களை இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்திருந்தார். எனவே இதை சிலர் ஒழுக்கநெறிகள் அடங்கிய புத்தகமாகக் கருதுகிறார்கள். வேறு சிலர், கடவுளுடைய மனதைப் படம்பிடித்துக் காட்டுகிற ஆன்மீக வழிகாட்டியாக இதைக் கருதுகிறார்கள்.

சொல்லப்போனால், இந்த எல்லா கருத்துகளும் சரியானவையே. அது எதைப்பற்றிச் சொல்கிறதென பைபிளே இவ்வாறு குறிப்பிடுகிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) ஆம், சரித்திரப் பதிவுகள், சட்டங்கள், ஆன்மீக புத்திமதிகள் என கடவுளுடைய வார்த்தையிலுள்ள எல்லாமே பொன் போன்றவை.

எனினும், பைபிள் பயனுள்ள தகவலின் தொகுப்பு மட்டுமே அல்ல, அதைவிட மேலானது. இது, யெகோவா தேவனிடமிருந்து கிடைத்த வெளிப்படுத்துதல் ஆகும். கடவுளுடைய வழிநடத்துதலால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், அனுதின வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை ஆலோசனைகளை அளிக்கிறது. யெகோவா ஏன் பூமியையும் மனிதரையும் படைத்தார் என்பதையும், மனிதர்களின் துயரத்திற்குக் காரணமானவற்றை எப்படி அவர் முற்றிலும் நீக்கப்போகிறார் என்பதையும்பற்றிச் சொல்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, வேண்டுமென்றே மோசமானவராக கடவுள் சித்தரிக்கப்பட்டிருப்பதையும், இந்தச் சர்வலோக விவாதத்தை அவர் தீர்க்கப்போகிற விதத்தையும்பற்றி இது விவரிக்கிறது.

பொய்யர், மோசமான ஆட்சியாளர் என கடவுள்மீது களங்கம்

கடவுள், முதல் மனிதர்களான ஆதாமையும் ஏவாளையும் உடலிலும் உள்ளத்திலும் பரிபூரணமாகப் படைத்தார் என்றும் அழகான இடத்தில் அவர்களைக் குடிவைத்தார் என்றும் பைபிள் சொல்கிறது. பூமியையும் மிருகங்களையும் ஆண்டுகொள்ளும் பொறுப்பை அவர்களுக்கு அளித்தார். (ஆதியாகமம் 1:28) ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய பிள்ளைகளாக முடிவில்லா காலத்திற்குப் பூமியில் வாழும் வாய்ப்பிருந்தது; அதற்கு, தங்கள் பரலோகத் தகப்பனுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அவர்கள் செய்யக்கூடாதென ஒரேவொரு காரியத்திற்கு மட்டுமே அவர் தடைவிதித்தார். “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று அவர் சொன்னார்.​—⁠ஆதியாகமம் 2:16, 17.

ஆனால், பிசாசாகிய சாத்தான் என பைபிள் அடையாளம் காட்டுகிற ஓர் ஆவி சிருஷ்டி, கடவுள் சொன்னதற்கு நேர்மாறானதை, அதாவது “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சொன்னான். (ஆதியாகமம் 3:1-5) இப்படியாக, கடவுள் சொன்னதை சாத்தான் துணிச்சலோடு மாற்றிச் சொன்னான். இதன்மூலம், படைப்பாளரைப் பொய்யரென அழைத்தான். அதோடு, கடவுள் ஆளும் விதம் சரியில்லையென்றும் மறைமுகமாகக் குறிப்பிட்டான். அதாவது, அவருடைய உதவி இல்லாமலேயே மனிதனால் சிறப்பாய் வாழ முடியும் என்றான். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் சுதந்திரப் பறவையாய் பறக்கலாம், நல்லது கெட்டதைத் தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ளலாம் என ஏவாளை நம்பவைத்தான். சொல்லப்போனால் அவள், “தேவர்களைப்போல்” இருப்பாளென அவன் சொன்னான். இவ்வாறு, யெகோவாவின் நற்பெயருக்கும் நோக்கத்திற்கும் சாத்தான் களங்கம் கற்பித்தான்.

ஏவாளுக்கும் சாத்தானுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியது. உண்மையில், தம்முடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி, நற்பெயரை நிலைநாட்ட வேண்டுமென்ற யெகோவாவின் நோக்கமே பைபிளின் முக்கியப் பொருளாகும். இது, இயேசு சொல்லிக்கொடுத்த மாதிரி ஜெபத்தில், அதாவது பரமண்டல ஜெபத்தில் ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் . . . பூமியில் செய்யப்படுவதாக’ என ஜெபிக்கும்படி தம் சீஷர்களுக்கு இயேசு கற்பித்தார்.​—⁠மத்தேயு 6:9, 10.

களங்கத்தை கடவுள் களைவது எப்படி

பின்வரும் சில முக்கியமான விவாதங்களை சாத்தான் எழுப்பினான்: யார் உண்மையைச் சொன்னது​—⁠யெகோவாவா, சாத்தானா? தமது படைப்புகளை யெகோவா நீதியாகவும் சிறப்பாகவும் ஆட்சி செய்கிறாரா? தமக்குக் கீழ்ப்படியும்படி மனிதர்களிடம் எதிர்பார்க்க அவருக்கு உரிமை இருக்கிறதா? உண்மையிலேயே நல்ல விதத்தில் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள மனிதர்களால் முடியுமா? இந்தக் கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்களைக் கொடுப்பதற்கே, தற்காலிகமாய் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள மனிதர்களை அவர் அனுமதித்திருக்கிறார்.

இதன் விளைவு? ஏதேனில் அந்த முதல் பொய் சொல்லப்பட்டதிலிருந்து, கஷ்டங்களும் துன்பங்களும் மனிதரைத் துரத்த ஆரம்பித்தன. இரத்தக் கறைபடிந்த சரித்திரமே இதற்கு அத்தாட்சி. இதிலிருந்து, சாத்தான் பயங்கரமான பொய்யன் என்பதும், கடவுளைவிட்டு விலகி சுதந்திரமாய் செயல்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்பதும் தெளிவாய்த் தெரிகிறது. எனினும், யெகோவா அன்புள்ளவராக, எல்லையில்லா ஞானமுள்ளவராக இருப்பதால், ஏதேனில் தலைதூக்கிய எல்லா கஷ்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதன்மூலம் தம்முடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்குவதற்குத் தீர்மானித்திருக்கிறார். மேசியாவால் ஆளப்படும் ராஜ்யத்தின்மூலம் அதை அவர் செய்யப்போகிறார். அந்த ராஜ்யம் எதை அர்த்தப்படுத்துகிறது?

கடவுளுடைய ராஜ்யம்​—⁠ஒரே தீர்வு

லட்சக்கணக்கானோர் தவறாமல் பரமண்டல ஜெபத்தைச் சொல்லி வருகிறார்கள். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள சில நிமிடங்களை எடுத்துக்கொள்வோமா? “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். (மத்தேயு 6:10) சிலர் நினைப்பதுபோல் ராஜ்யம் என்பது இருதயநிலையைக் குறிப்பதில்லை. மாறாக, அது ஓர் அரசாங்கத்தை, “ராஜாதி ராஜா”வான இயேசு கிறிஸ்து ஆட்சி செய்கிற பரலோக அரசாங்கத்தைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:13, 16; தானியேல் 2:44; 7:13, 14) பூமி முழுவதையும் இயேசு ஆட்சி செய்வார், எல்லாரும் நிரந்தரமாய் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழி செய்வார், துன்மார்க்கம் அனைத்தையும் உருத் தெரியாமல் பூமியிலிருந்து நீக்கிவிடுவார் என்று பைபிள் கற்பிக்கிறது. (ஏசாயா 9:6, 7; 2 தெசலோனிக்கேயர் 1:6-10) இவ்வாறு, ‘உம்முடைய சித்தம் . . . பூமியில் செய்யப்படுவதாக’ என்ற இயேசுவின் வார்த்தைகளை எந்த மனித அரசாங்கமும் அல்ல, கடவுளுடைய அரசாங்கமே நிறைவேற்றும்.

இந்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறுமென உறுதி அளிப்பதற்குத் தம்முடைய உயிரையே இயேசு கிரயபலியாகக் கொடுத்தார்; இதன்மூலம், ஆதாமின் சந்ததியாரைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்க வழிசெய்தார். (யோவான் 3:16; ரோமர் 6:23) எனவே, ஆதாமிடமிருந்து பெற்ற பாவம் நீக்கப்படுவதையும், படிப்படியாய் மனிதர்கள் பரிபூரணத்தை அடைவதையும் கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் வைக்கிற அனைவரும் கடவுளுடைய அரசாங்கத்தில் பார்க்கப் போகிறார்கள். (சங்கீதம் 37:11, 29) ஒருவழியாக, நம்மை வாட்டி வதைக்கிற வியாதிகள், குறிப்பாக முதுமையில் நம்மை அலைக்கழிக்கிற வியாதிகள், சுவடு தெரியாமல் மறைந்துவிடும். வியாதியும் மரணமும் மனிதர்களின் மனதில் ஏற்படுத்தும் வேதனையும் வலியும்கூட ‘ஒழிந்துபோயிருக்கும்.’​—⁠வெளிப்படுத்துதல் 21:4.

தம்முடைய வாக்குறுதிகளை கடவுள் நிறைவேற்றுவாரென நாம் எப்படி உறுதியாய் நம்பலாம்? பைபிளிலுள்ள நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறியிருப்பது நம்முடைய நம்பிக்கை பலப்படுவதற்கு ஒரு காரணம். (9-⁠ஆம் பக்கத்தைக் காண்க.) எனவே, பைபிள்மீதுள்ள நம்பிக்கை கண்மூடித்தனமானதுமல்ல, நினைப்பது கைகூடும் என்ற ஆசையினால் ஏற்பட்டதுமல்ல. மாறாக, நியாயமாக யோசித்து, எக்கச்சக்கமான ஆதாரங்கள் இருப்பதாலேயே அந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.​—⁠எபிரெயர் 11:1.

நமக்கு நடைமுறை அறிவுரைகள்

எதிர்காலத்தைக் குறித்து உறுதியான நம்பிக்கை அளிப்பதோடுகூட, இப்போதே அதிக சந்தோஷமாய் வாழ்வதற்கு பைபிள் துணைபுரிகிறது. உதாரணத்திற்கு, திருமணம், குடும்ப வாழ்க்கை, பிறருடன் நடந்துகொள்ளும் விதம், மகிழ்ச்சியைக் கண்டடைவது போன்ற அநேக விஷயங்களில் கடவுளுடைய வார்த்தை அளிக்கும் நடைமுறையான அறிவுரைகள் ஒப்பற்றவை. சில உதாரணங்கள் இதோ:

◼ யோசித்துப் பேசுங்கள். “சிந்தனையற்ற பேச்சு வாள்போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.”​—⁠நீதிமொழிகள் 12:18, பொது மொழிபெயர்ப்பு.

◼ குறுகிய மனப்பான்மையால் பொறாமைப்படுவதைத் தவிருங்கள். “மன அமைதி உடல் நலம் தரும்; சினவெறியோ எலும்புருக்கியாகும்.”​—⁠நீதிமொழிகள் 14:30, பொ.மொ.

◼ பிள்ளைகளைச் சிட்சியுங்கள். “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” ‘தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளை தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.’​—⁠நீதிமொழிகள் 22:6; 29:15.

◼ மன்னியுங்கள். “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:7) ‘அன்பு சகல பாவங்களையும் மூடும்’ என்று ஞானியான சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 10:12) மன்னித்து, மறந்துவிட முடியாதளவுக்குப் படுமோசமான குற்றத்தை யாராவது உங்களுக்குச் செய்திருந்தால், “நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து” என பைபிள் அறிவுரை கொடுக்கிறது.​—⁠மத்தேயு 18:15.

◼ பண ஆசையைத் தவிருங்கள். “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:10) பணத்தை அல்ல, ‘பண ஆசையையே’ பைபிள் கண்டனம் செய்கிறதென்பதைக் கவனியுங்கள்.

பரலோக தகப்பனிடமிருந்து வந்த “கடிதம்”

இப்படியாக, பைபிள் பல விஷயங்களைப்பற்றி குறிப்பிடுகிறது. நாம் கவனித்த விதமாக, கடவுளையும் அவருடைய நோக்கத்தையும் பற்றியே முக்கியமாய்ச் சொல்கிறது. அதேசமயத்தில், அது நம்மைப் பற்றியும் சொல்கிறது; அதாவது, இப்போதும் கடவுளுடைய ராஜ்யத்தில் எப்போதும் நாம் எப்படிச் சந்தோஷமாய் வாழலாம் என்பதைப் பற்றியும் சொல்கிறது. ஒருவிதத்தில் பைபிள், ‘பரமண்டலங்களிலிருக்கிற பிதாவாகிய’ யெகோவாவிடமிருந்து வந்த கடிதத்தைப்போல் இருக்கிறது. (மத்தேயு 6:9) இதன்மூலம், தம்முடைய அருமையான எண்ணங்களை யெகோவா நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார், அவருடைய சித்தத்தையும் முத்தான குணங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பைபிளை வாசித்து, தியானிப்பதன்மூலம் உண்மையில் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை நாம் மனக்கண்ணில் காண ஆரம்பிக்கிறோம். அவருடைய குணங்களால் ஈர்க்கப்படும்போது, அவருடன் நெருங்கி வரவும் அவருடன் அன்பான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் தூண்டப்படுகிறோம். (யாக்கோபு 4:8) தெளிவாகவே, சரித்திரத்தையும் தீர்க்கதரிசனத்தையும் சட்டத்தையும் மட்டுமே பைபிள் குறிப்பிடவில்லை. இது கடவுளுடன் நமக்குள்ள பந்தத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுவே, இந்தப் புத்தகத்தை உண்மையில் தனிச்சிறப்புமிக்கதாகவும் மிக அருமையானதாகவும் ஆக்குகிறது.​—⁠1 யோவான் 4:8, 16.

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

இயேசு சொல்லிக்கொடுத்த மாதிரி ஜெபத்தின் ஆரம்ப வாக்கியங்களில் பைபிளின் பொருள் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது

[பக்கம் 21-ன் பெட்டி/படம்]

பைபிளை எப்படி வாசிப்பது

பைபிள் சுவாரசியமான புத்தகம். சொல்லப்போனால், அதிலுள்ள பதிவுகளும் ஒழுக்கநெறி சார்ந்த புத்திமதிகளும் எல்லாரும் நன்கு அறிந்தவை; அதனால், அவை பல மொழி இலக்கியங்களில் முக்கிய இடத்தை ஏற்றிருக்கின்றன. நம் படைப்பாளரான யெகோவா தேவனைப்பற்றி அறிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. அது அறிவாழமிக்க நடைமுறை ஞானத்தின் பிறப்பிடமாகவும் திகழ்கிறது. “ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்” என்று பைபிளிலுள்ள பழமொழி ஒன்று சொல்கிறது. (நீதிமொழிகள் 4:7) பைபிளை வாசிப்பதிலிருந்து நீங்கள் எப்படிப் பெருமளவு பயன் அடையலாம்?

பொதுவாக மனம் விழிப்பாக இருக்கும் நேரத்தில் வாசிப்பதற்குத் திட்டமிட முயற்சி செய்யுங்கள். மளமளவென்று மேலோட்டமாக வாசிக்காதீர்கள். கடவுளுடைய எண்ணங்களால் உங்கள் மனதை நிரப்பி, வாசித்தவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே உங்கள் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஒரு பகுதியை வாசித்து முடித்த பிறகு, நீங்கள் வாசித்தவற்றைக் குறித்து சிந்தியுங்கள், அது சம்பந்தமாய் நீங்கள் ஏற்கெனவே தெரிந்துவைத்துள்ள விஷயங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இது நீங்கள் நன்கு புரிந்துகொள்வதற்கும் அதிக நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கும் உதவும்.​—⁠சங்கீதம் 143:⁠5.

‘பைபிளில் எந்தப் புத்தகத்தை முதலில் வாசிப்பது?’ என சிலர் யோசிக்கலாம். விரும்பினால், ஆதியாகமத்திலிருந்து நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம். எனினும், முதன்முறையாக பைபிளை வாசித்த சிலர் சுவிசேஷங்களை முதலில் வாசிப்பது, அதாவது, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விவரங்கள் காணப்படுகிற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய புத்தகங்களை முதலில் வாசிப்பது எளிதாயிருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதைத் தொடர்ந்து, உள்ளம் கவரும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதும் ஞான வார்த்தைகள் நிறைந்த, கவிதை நடையில் உள்ளதுமான சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி ஆகிய புத்தகங்களை சிலர் வாசிக்கிறார்கள். இதன் பிறகு, பைபிளின் மற்ற புத்தகங்களையும் வாசிக்க ஆர்வப் பசி உங்களைத் தூண்டலாம். (கீழே காண்க.) பொதுவாக புதிய ஏற்பாடு என அழைக்கப்படுகிற பகுதியை மட்டும் வாசித்தால் போதுமென்ற தவறான கருத்துக்கு நீங்கள் அடிபணிந்துவிடாதீர்கள். ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, . . . பிரயோஜனமுள்ளது’ என்பதை மறந்துவிடாதீர்கள்.​—⁠2 தீமோத்தேயு 3:16, 17.

முக்கியமாக, பைபிளை பொருள்வாரியாக வாசிப்பது பயனுள்ளதாய் இருக்கிறது. உதாரணத்திற்கு, பைபிள் படிப்பு நடத்த யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துகிற பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில், “சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழி,” “கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம்,” “இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” போன்ற காலத்துக்கேற்ற தலைப்புகளில் தகவல்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.​—⁠பக்கம் 18-லுள்ள பெட்டியைக் காண்க.

[பக்கம் 21-ன் பெட்டி]

பொருள்வாரியாக பைபிளை வாசிப்பது

உயிர் தோன்றிய விதமும் மனிதன் பாவத்தில் வீழ்ந்ததும் ஆதியாகமம்

பண்டைய இஸ்ரவேல் தேசம் உருவான விதம் யாத்திராகமம்முதல் உபாகமம்வரை

விறுவிறுப்பூட்டும் சம்பவங்கள் யோசுவாமுதல் எஸ்தர்வரை

நெகிழ வைக்கிற கவிதையும் பாட்டும் யோபு, சங்கீதம், சாலொமோனின் உன்னதப்பாட்டு

வாழ்க்கைக்கு உதவுகிற ஞானம் நீதிமொழிகள், பிரசங்கி

தீர்க்கதரிசனமும் வழிகாட்டும் நெறிமுறைகளும் ஏசாயாமுதல் மல்கியாவரை, மற்றும் வெளிப்படுத்துதல்

இயேசுவின் வாழ்க்கையும் போதனையும் மத்தேயுமுதல் யோவான்வரை

கிறிஸ்தவம் பிறந்ததும் பரவியதும் அப்போஸ்தலருடைய நடபடிகள்

சபைகளுக்குக் கடிதங்கள் ரோமர்முதல் யூதாவரை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்