இளைஞர் கேட்கின்றனர்
நான் தனியாகப் போய் வாழத் தயாராகிவிட்டேனா?
“எனக்கு 19 வயதாகியும் இன்னும் பெற்றோருடனேயே இருப்பதைப் பார்த்து எல்லோரும் கேவலமாக நினைப்பார்களோ என்று சில சமயங்களில் எனக்குத் தோன்றுகிறது. சொந்தக் காலில் நின்றால்தான் நான் மேஜர் என்று ஒத்துக்கொள்வார்கள் போலிருக்கிறது.” —கேட்டீ.a
“எனக்குக் கிட்டத்தட்ட 20 வயதாகிவிட்டது; இஷ்டப்படி வாழ முடியாததை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. என் அம்மா அப்பாவோடு எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. என் விருப்பங்களுக்கு அவர்கள் ஒருநாளும் மதிப்பு கொடுப்பதில்லை; அவர்களுடைய விருப்பங்களைத்தான் என்மீது திணிக்கிறார்கள். அதனால் நான் வீட்டைவிட்டுப் போக முடிவு செய்துவிட்டேன்.” —ஃபீயோனா.
நீங்கள் வீட்டைவிட்டுப் போய் சொந்தக் காலில் நிற்பதற்கான பக்குவத்தை அடைவதற்கு வெகு முன்பே சுதந்திரமாக வாழ ஆசைப்படலாம். இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். சொல்லப்போனால், பிள்ளைகள் வளர்ந்து, ஆளாகி, தங்களுடைய அம்மா அப்பாவைவிட்டுத் தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே கடவுளுடைய நோக்கம். (ஆதியாகமம் 2:23, 24; மாற்கு 10:7, 8) ஆனால், சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஏங்குகிறீர்கள் என்பதற்காக வீட்டைவிட்டுப் போகிற சமயம் வந்துவிட்டதென்று அர்த்தமாகுமா? ஒருவேளை அர்த்தமாகலாம். என்றாலும், நீங்கள் வீட்டைவிட்டுப் போகுமளவுக்குப் பக்குவப்பட்டிருக்கிறீர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? நீங்கள் பதிலளிக்க வேண்டிய மூன்று முக்கியமான கேள்விகளைக் கவனியுங்கள். முதலாவது . . .
என்னுடைய நோக்கம் என்ன?
என்ன காரணத்தினால் நீங்கள் வீட்டைவிட்டுப் போக விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே நன்கு புரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பாருங்கள். இங்குள்ள காரணங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள்.
________ வீட்டிலுள்ள பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள
________ அதிக சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள
________ நண்பர்கள் மத்தியில் மதிப்பைக் கூட்டிக்கொள்ள
________ ‘ரூம் மேட்’ தேவைப்படும் நண்பருக்கு உதவிசெய்ய
________ வேறொரு இடத்தில் வாலண்டியர் வேலைசெய்ய
________ அனுபவம் பெற
________ பெற்றோருடைய பணச்சுமையைக் குறைக்க
________ வேறு ஏதோவொரு காரணத்திற்காக .....
மேலே கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் நிச்சயமாகவே மோசமானவை அல்ல. என்றாலும், நீங்கள் என்ன காரணத்திற்காக வீட்டைவிட்டுப் போகிறீர்கள் என்பது, உங்களுடைய எதிர்கால சந்தோஷத்தைப் பெரிதும் பாதிக்கும். உதாரணத்திற்கு, வீட்டிலுள்ள பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ அதிக சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவோ வீட்டைவிட்டுப் போக நினைக்கிறீர்கள் என்றால், உங்களுக்காகக் காத்திருப்பது அதிர்ச்சிதான்!
20 வயதாக இருக்கும்போது வீட்டைவிட்டு வந்த டான்யெல், தன்னுடைய அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொண்டாள். “யாருமே முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. வீட்டைவிட்டு வெளியே போனாலும்கூட, வேலை நேரம் அல்லது பணப் பிரச்சினை காரணமாக நினைத்தபடி வாழ முடியாது” என்கிறாள் அவள். ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டில் வசித்த கார்மன் இவ்வாறு சொல்கிறாள்: “அந்த அனுபவம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது; ஆனால், ஓய்வு நேரம் கொஞ்சம்கூடக் கிடைக்காததுபோல் தோன்றியது. வீட்டைச் சுத்தம் செய்வது, ரிப்பேர் வேலைகளைச் செய்வது, தோட்ட வேலை செய்வது, துணி துவைப்பது, தரையைத் தேய்த்துக் கழுவுவது என வீட்டுவேலைகள் அத்தனையையும் செய்ய வேண்டியிருந்தது.”
நீங்கள் வீட்டைவிட்டுப் போனால் முன்பிருந்ததைவிடக் கொஞ்சம் சுதந்திரமாக இருக்கலாம் என்பது உண்மைதான், நண்பர்கள் மத்தியில் அதிக மதிப்பைப் பெறலாம் என்பதும் உண்மைதான். ஆனால், பில்களைக் கட்டுவது, சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என எல்லாவற்றையும் நீங்கள்தான் செய்ய வேண்டியிருக்கும்; சில சமயங்களில், தனியாகப் பொழுதைக் கழிக்கவும் வேண்டியிருக்கும். எனவே, வீட்டைவிட்டுப் போவது குறித்து மற்றவர்கள் உங்களை அவசரப்படுத்தினாலும் நீங்கள் திடுதிப்பென்று ஒரு தீர்மானத்தை எடுக்காதீர்கள். (நீதிமொழிகள் 29:20) ஒருவேளை, நீங்கள் வீட்டைவிட்டுப் போவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்; ஆனால், அது மட்டுமே போதாது. சொந்தக் காலில் நின்று சமாளிப்பதற்கான திறமைகளும் தேவை—இது இரண்டாவது கேள்வியை எழுப்புகிறது . . .
எனக்குப் பக்குவம் வந்துவிட்டதா?
வீட்டைவிட்டுப் போவதென்பது பாலைவனத்தில் நடைப்பயணம் போவதைப் போன்றது. கூடாரம் போடவும், நெருப்பு மூட்டவும், சமைக்கவும், வரைபடத்தைப் புரிந்துகொள்ளவும் தெரியாமலேயே அவ்வாறு நடைப்பயணம் போக நினைப்பீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள்! இருந்தாலும், நிறைய இளைஞர்கள் தனியாக வாழ்வதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு முன்பே வீட்டைவிட்டுப் போய்விடுகிறார்கள்.
‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்’ என்று ஞானியாகிய சாலொமோன் ராஜா சொன்னார். (நீதிமொழிகள் 14:15) வீட்டைவிட்டுப் போவதற்கான பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டதா என்பதை நீங்களே தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்புகளைக் கவனியுங்கள். இவற்றில், எந்தெந்த திறமைகள் உங்களிடம் இருக்கின்றனவோ அவற்றிற்குப் பக்கத்தில் ஒரு ✓ போடுங்கள்; எந்தெந்த திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமோ அவற்றிற்குப் பக்கத்தில் ஒரு ✘ போடுங்கள்.
❍ பணத்தை நிர்வகிக்கும் திறமை “நான் சொந்தமாகச் செலவு செய்ததே இல்லை. வீட்டைவிட்டுப் போனால் எல்லாச் செலவுகளையும் நான்தானே பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்? இதை நினைக்கவே பயமாக இருக்கிறது” என்கிறாள் 19 வயது செரீனா. பணத்தைச் சரியாகச் செலவு செய்ய நீங்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
“ஞானமுள்ள ஒருவர் காதுகொடுத்துக் கேட்டு அதிகமாகக் கற்றுக்கொள்வார்” என்கிறது ஒரு பைபிள் பழமொழி. (நீதிமொழிகள் 1:5, NW) ஆகவே, ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகலாம் என்று உங்கள் பெற்றோரிடம் ஏன் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கூடாது? உதாரணமாக, வீட்டு வாடகை அல்லது வட்டி, உணவு, கார் செலவு, மற்ற போக்குவரத்துச் செலவு ஆகியவற்றிற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேளுங்கள். பின்பு, அதற்கேற்றாற்போல் எப்படி பட்ஜெட் போட்டு எல்லாச் செலவுகளையும் கவனித்துக்கொள்வது என்பதைக் கேட்டுக் கற்றுக்கொள்ளுங்கள். இதுபோல் பட்ஜெட் போடும் பழக்கம் ஏன் ரொம்ப முக்கியம்? 20 வயது கெவின் இவ்வாறு சொல்கிறான்: “வீட்டைவிட்டுப் போய் சொந்தக் காலில் நிற்கும்போது, திடீர் திடீரென நிறையச் செலவுகள் வரும். ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் தலைக்குமேல் கடனாகிவிடும், பிறகு அதைக் கட்டி முடிப்பதற்குள் உயிர் போய்விடும்.”
உங்களால் வீட்டைவிட்டுப் போய் தனியாகச் சமாளிக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ள இப்படிச் செய்துபாருங்கள்: நீங்கள் வேலை செய்துகொண்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் மற்ற செலவுகளுக்கும் ஆகக்கூடிய மொத்தப் பணத்தைச் சில காலத்திற்கு உங்கள் பெற்றோரிடம் கொடுத்து வையுங்கள். வீட்டில் இருக்கும்போதே உங்கள் செலவுகளுக்குப் பணம் கட்ட உங்களால் முடியவில்லை என்றால், அல்லது உங்களுக்கு விருப்பமில்லை என்றால், வீட்டைவிட்டுப் போக இன்னும் நீங்கள் பக்குவம் அடையவில்லை என்றே அர்த்தம்.—2 தெசலோனிக்கேயர் 3:10, 12.
❍ வீட்டுவேலை செய்யும் திறமை ‘வீட்டைவிட்டுப் போனால் நானே என் துணிகளைத் துவைக்க வேண்டியிருக்குமே’ எனப் பயப்படுகிறான் 17 வயது ப்ரையன். உங்களை நீங்களே கவனித்துக்கொள்கிற பக்குவத்தை அடைந்துவிட்டீர்களா என்று எப்படித் தெரிந்துகொள்வீர்கள்? 20 வயது ஆரன் இந்த ஆலோசனையைத் தருகிறான்: “நீங்கள் தனி வீட்டிற்குப் போய்விட்டதாக நினைத்து ஒரு வாரம் எல்லா வேலைகளையும் செய்து பாருங்கள். நீங்களே கடைக்குப் போய், நீங்களே உணவுப்பொருள்களை வாங்கி, நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள். உங்கள் துணியை நீங்களே துவைத்து நீங்களே இஸ்திரி போடுங்கள். நீங்களே வீட்டைச் சுத்தம் செய்யுங்கள். எங்கு போக வேண்டுமானாலும் யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே போங்கள்.” இந்த ஆலோசனையைக் கடைப்பிடிக்கும்போது, இரண்டு நன்மைகளைப் பெறுவீர்கள்: (1) விலைமதிக்க முடியாத திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள், (2) உங்கள் பெற்றோர் செய்கிற வேலைகளை அதிகமாய் மதிப்பீர்கள்.
❍ மற்றவர்களோடு ஒத்துப்போகும் திறமை உங்கள் பெற்றோரோடும் கூடப் பிறந்தவர்களோடும் உங்களால் ஒத்துப்போக முடிகிறதா? முடியவில்லை என்றால், வீட்டைவிட்டுப் போய் உங்கள் நண்பரோடு நிம்மதியாக வாழலாமென நீங்கள் நினைக்கலாம். ஒருவேளை நீங்கள் நினைக்கிறபடி நடக்கலாம். ஆனால், 18 வயதாகும் ஈவ் சொல்வதைக் கவனியுங்கள்: “என்னுடைய இரண்டு தோழிகள் ஒரு வீடு எடுத்து ஒன்றாகத் தங்கினார்கள். அதுவரை அவர்கள் உயிர்த் தோழிகளாக இருந்தார்கள், ஆனால் அதற்குப் பிறகு எலியும் பூனையுமாக ஆகிவிட்டார்கள். ஒருத்தி படு சுத்தம், இன்னொருத்தி அவளுக்கு நேரெதிர். ஒருத்திக்குக் கடவுள் பக்தி அதிகம், இன்னொருத்திக்கு அப்படி இல்லை. அவர்களால் ஒத்துப்போகவே முடியவில்லை.”
18 வயதான எரின் வீட்டைவிட்டுப் போக விரும்புகிறாள். ஆனாலும், இவ்வாறு சொல்கிறாள்: “வீட்டில் இருக்கும்போதே மற்றவர்களோடு ஒத்துப்போவது எப்படியென நீங்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம். பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது எப்படி, விட்டுக்கொடுப்பது எப்படி என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம். பெற்றோரோடு சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டைவிட்டுப் போகிறவர்கள், அப்படிப்பட்ட சண்டை சச்சரவுகளிலிருந்து ஓடுவதற்குத்தான் கற்றுக்கொள்கிறார்களே தவிர அவற்றைத் தீர்ப்பதற்குக் கற்றுக்கொள்வதில்லை.”
❍ ஆன்மீகக் காரியங்களுக்குத் தவறாமல் நேரம் ஒதுக்குதல் பெற்றோருடைய மத பழக்கவழக்கங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே சிலர் வீட்டைவிட்டுப் போகிறார்கள். வேறு சிலர், பைபிள் படிப்பதற்கும் மற்ற ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதற்கும் தவறாமல் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு போனாலும், மெதுமெதுவாக வேண்டாத காரியங்களிலெல்லாம் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே, ‘விசுவாசம் எனும் கப்பலை மூழ்கடிக்காமல்’ இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?—1 தீமோத்தேயு 1:19.
உங்களுடைய அம்மா அப்பாவின் மத நம்பிக்கைகளைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்காதீர்கள். நாம் நம்புவது உண்மையென நாமே நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யெகோவா தேவன் விரும்புகிறார். (ரோமர் 12:1, 2) ஆகவே, பைபிளை வாசிப்பதற்கும் மற்ற ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதற்கும் அட்டவணை போடுங்கள், அதைத் தவறாமல் பின்பற்றுங்கள். அட்டவணையில் உள்ளதை காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு, உங்கள் பெற்றோரின் தூண்டுதல் இல்லாமல் ஒரு மாதத்திற்கு அதைப் பின்பற்ற முடிகிறதா என்று பாருங்கள்.
கடைசியாக, நீங்கள் கவனிக்க வேண்டிய மூன்றாவது கேள்வி . . .
என்னுடைய குறிக்கோள்தான் என்ன?
சிலர் பிரச்சினைகளைப் பார்த்து பயந்து அல்லது தங்களுடைய அப்பா அம்மாவுடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க வீட்டைவிட்டுப் போகிறார்கள். எதிலிருந்தெல்லாம் தப்பிக்க முடியும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்களே ஒழிய இனி எப்படித் தனியாகச் சமாளிக்க முடியும் என்று நினைப்பதில்லை. பின்நோக்குக் கண்ணாடியை மட்டுமே பார்த்துக்கொண்டு காரை ஓட்டுவது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ, அதுபோல்தான் இவர்களுடைய மனப்பான்மையும் இருக்கிறது. ஒரு டிரைவர் பின்னால் பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டினால் தன் கண்முன் இருப்பது அவருக்குத் தெரியுமா? தெரியாது. இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால், வீட்டைவிட்டுப் போவதைப் பற்றியே சிந்திப்பதற்குப் பதிலாக, பிரயோஜனமான ஒரு குறிக்கோள்மீது உங்கள் கண்களைப் பதிய வையுங்கள்.
யெகோவாவின் சாட்சிகளில் சில இளைஞர்கள், பிரசங்க வேலையில் ஈடுபடுவதற்காக ஒதுக்குப்புறப் பகுதிகளுக்கோ வெளிநாடுகளுக்கோ குடிமாறிப் போயிருக்கிறார்கள். வேறு சிலர், வணக்கத்திற்கான கட்டிடங்களைக் கட்ட உதவுவதற்கோ யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் சேவை செய்வதற்கோ குடிமாறிப் போயிருக்கிறார்கள். இன்னும் சிலர், திருமணம் செய்துகொள்வதற்கு முன் சிறிது காலம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக வீட்டைவிட்டுப் போயிருக்கிறார்கள்.b
எந்தக் குறிக்கோளை அடைய நீங்கள் வீட்டைவிட்டுப் போக நினைக்கிறீர்கள் என்று இங்கு எழுதுங்கள். .....
சில பேர் எத்தனை காலம் வீட்டில் இருந்தாலும், சொந்தக் காலில் நிற்கத் தேவையான முதிர்ச்சியை அடையாமல் இருக்கலாம், அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ளாமலும் இருக்கலாம். இது உண்மையென்றாலும், அவசரப்பட்டு ஒரு தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். “திட்டமிட்டு உழைப்பவர்கள் நிச்சயம் பலன் அடைவார்கள், ஆனால் அவசரப்படுகிறவர்கள் நிச்சயம் தரித்திரம் அடைவார்கள்” என்கிறது ஒரு பைபிள் பழமொழி. (நீதிமொழிகள் 21:5, NW) உங்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேளுங்கள். (நீதிமொழிகள் 23:22) இந்த விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்யுங்கள். மேலே சொன்ன பைபிள் நியமங்களைக் கவனத்தில்கொண்டு ஒரு தீர்மானம் எடுங்கள்.
எனவே, “இப்போதே நான் வீட்டைவிட்டுப் போகலாமா?” என்று கேட்டுக்கொள்வதைவிட, “தனியாக எல்லாவற்றையும் சமாளிக்கிற பக்குவம் எனக்கு வந்துவிட்டதா?” என்று கேட்டுக்கொள்வதுதான் முக்கியம். இரண்டாவது கேள்விக்கு ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அளித்தால், தனியாகப் போய் வாழத் தயாராகிவிட்டீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். (g10-E 07)
“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில் உள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b ஒரு பிள்ளை, குறிப்பாக ஒரு பெண்பிள்ளை, திருமணமாகும்வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது சில கலாச்சாரங்களில் உள்ள வழக்கம். இந்த விஷயத்தின் பேரில் பைபிள் குறிப்பிட்ட எந்த ஆலோசனையையும் அளிப்பதில்லை.
சிந்திப்பதற்கு
● உங்கள் வீட்டில் பிரச்சினைகள் இருந்தாலும், சில காலத்திற்கு வீட்டிலேயே இருப்பது உங்களுக்கு எப்படி நன்மை அளிக்கலாம்?
● நீங்கள் வீட்டில் இருக்கும்போதே என்ன செய்தால் உங்கள் குடும்பத்திற்குப் பிரயோஜனமாகவும், சொந்தக் காலில் நிற்பதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவியாகவும் இருக்கும்?
[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]
மற்ற இளைஞர்கள் சொல்வது
“நீங்கள் தனியாகக் கையாள வேண்டியிருக்கும் சில பொறுப்புகளை உங்கள் பெற்றோர் இப்போதே கொடுத்தால், அது உங்கள் நன்மைக்குத்தான்; நீங்கள் பிற்பாடு தனியாகப் போய் வாழ்வதற்கு அது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். அதனால், வீட்டில் இருக்கும்போதே அவற்றைக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.”
“சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்புதான். ஆனால், அம்மா அப்பா வைக்கிற நிபந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டைவிட்டுப் போக நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் தனியாகச் செல்லத் தயார் இல்லை என்றுதான் அர்த்தம்.”
[படங்கள்]
சாரா
ஏரன்
[பக்கம் 19-ன் பெட்டி]
பெற்றோரின் கவனத்திற்கு
மேலே உள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்ட செரீனா வீட்டைவிட்டுப் போகப் பயப்படுகிறாள். அதற்கான ஒரு காரணத்தை அவள் இவ்வாறு விளக்குகிறாள்: “என் சொந்தக் காசு போட்டு ஏதாவது வாங்க வேண்டும் என்று நான் நினைத்தால்கூட, என் அப்பா என்னை விடமாட்டார். இது அவருடைய பொறுப்பு என்று சொல்வார். ஆகவே, தனியாகப் போய் எல்லாச் செலவுகளையும் கவனித்துக்கொள்வதை நினைத்தாலே பயமாக இருக்கிறது.” செரீனாவின் அப்பா நல்ல எண்ணத்துடன்தான் அப்படிச் செய்கிறார் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், தன் வீட்டுக் காரியங்களைத் தானே கவனித்துக்கொள்ள மகளுக்கு அவர் கற்றுக்கொடுக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?—நீதிமொழிகள் 31:10, 18, 27.
உங்கள் பிள்ளைகளைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறீர்களா? இதனால், சொந்தக் காலில் நிற்பதற்குத் தேவையான திறமைகளை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடிவதில்லையா? பதிலை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்வீர்கள்? மேலே உள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட அதே நான்கு திறமைகளை ஒரு பெற்றோரின் கோணத்திலிருந்து கவனியுங்கள்.
பணத்தை நிர்வகிக்கும் திறமை. வரி செலுத்துவதற்கான படிவத்தை எப்படிப் பூர்த்தி செய்வது என்று உங்களுடைய பெரிய பிள்ளைகளுக்குத் தெரியுமா? உள்ளூர் வரிச் சட்டங்களை எப்படிக் கடைப்பிடிப்பதென்று தெரியுமா? (ரோமர் 13:7) பணத்தை எப்படிப் பொறுப்பாகச் செலவு செய்வதென்று தெரியுமா? (நீதிமொழிகள் 22:7) பட்ஜெட் போட்டு, வருமானத்திற்குள் வாழத் தெரியுமா? (லூக்கா 14:28-30) சொந்தமாகச் சம்பாதித்த பணத்தில் ஒரு பொருளை வாங்கும் சந்தோஷத்தை அவர்கள் ருசித்திருக்கிறார்களா? முக்கியமாக, நேரம், பணம் போன்றவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுகிற மிகப் பெரிய சந்தோஷத்தை அவர்கள் அனுபவித்திருக்கிறார்களா?—அப்போஸ்தலர் 20:35.
வீட்டுவேலை செய்யும் திறமை. உங்களுடைய மகள்களுக்கும் மகன்களுக்கும்கூட சமைக்கத் தெரியுமா? துணிகளைத் துவைத்து இஸ்திரி போட உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் கார் ஓட்டுகிறார்கள் என்றால், சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகளைக் கவனமாகச் செய்யத் தெரியுமா? உதாரணத்திற்கு, ப்யூஸ்ஸையோ ஆயிலையோ டயரையோ மாற்றத் தெரியுமா?
மற்றவர்களோடு ஒத்துப்போகும் திறமை. உங்கள் பெரிய பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்ளும்போது, எப்பொழுதும் நீங்கள் போய் தடுத்து, பிரச்சினையைத் தீர்த்துவைக்கப் பார்க்கிறீர்களா? அல்லது, உங்கள் பிள்ளைகள் தாங்களாகவே பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதற்கும், அதைப் பற்றி உங்களிடம் பிற்பாடு தெரிவிப்பதற்கும் அவர்களைப் பழக்கியிருக்கிறீர்களா?—மத்தேயு 5:23-25.
ஆன்மீகக் காரியங்களுக்குத் தவறாமல் நேரம் ஒதுக்குதல். உங்கள் பிள்ளைகள் இதை நம்ப வேண்டும், அதை நம்ப வேண்டும் என்று சட்டம் விதிக்கிறீர்களா அல்லது தாங்களாகவே நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ளும்படி பக்குவமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா? (2 தீமோத்தேயு 3:14, 15) உங்கள் பிள்ளைகள் மதம் மற்றும் ஒழுக்கம் சம்பந்தமாகக் கேட்கிற கேள்விகளுக்கு நீங்களே எப்பொழுதும் பதில் சொல்வதற்குப் பதிலாக, ‘சிந்திக்கும் திறனை’ வளர்த்துக்கொள்வதற்கும் ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களை பயிற்றுவிப்பதற்கும்’ அவர்களுக்கு உதவுகிறீர்களா? (நீதிமொழிகள் 1:4, NW; எபிரெயர் 5:14) பைபிள் படிப்புக்காக நீங்கள் பின்பற்றுகிற அதே அட்டவணையை அவர்களும் பின்பற்ற வேண்டுமென விரும்புகிறீர்களா? அல்லது, அதைவிட நல்ல அட்டவணையை அவர்கள் பின்பற்ற வேண்டுமென விரும்புகிறீர்களா?
மேலே சொல்லப்பட்டுள்ள அம்சங்களில் உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க நேரமும் பெருமளவு முயற்சியும் தேவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், உங்கள் பிள்ளைகள் வீட்டைவிட்டுப் போய் சொந்தக் காலில் நிற்கும் காலத்தில் அதற்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.
[பக்கம் 18-ன் படம்]
வீட்டைவிட்டுப் போவது பாலைவனத்தில் நடைப்பயணம் போவதைப் போன்றது; பயணத்தை ஆரம்பிப்பதற்குமுன் அதைச் சமாளிப்பதற்கான திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்