உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g17 எண் 1 பக். 3-7
  • டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?
  • விழித்தெழு!—2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு வருவதற்கான காரணங்கள்
  • மனதையும் உடல்நலத்தையும் பராமரியுங்கள்
  • நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
  • மனச்சோர்வு: எல்லாம் வெறும் மனக்கற்பனையா?
    விழித்தெழு!—1988
  • மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுதல்
    விழித்தெழு!—1988
  • மனச்சோர்வு மனதைவிட்டு மறைய
    விழித்தெழு!—2009
மேலும் பார்க்க
விழித்தெழு!—2017
g17 எண் 1 பக். 3-7
மனச்சோர்வால் கஷ்டப்படும் ஒரு டீனேஜ் பையன் தன் படுக்கையில் சோர்வாக உட்கார்ந்திருக்கிறான்

அட்டைப்படக் கட்டுரை

டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?

“கொஞ்ச நாள் நான் மனச்சோர்வால கஷ்டப்பட்டேன். எனக்கு அப்போ எதுவுமே செய்ய பிடிக்காது, எனக்கு பிடிச்ச விஷயங்களகூட செய்ய பிடிக்காது. எப்பவும் தூங்கிட்டே இருக்கணும்னு தோணும். ‘என் மேல யாருக்கும் அன்பே இல்ல, நான் எதுக்கும் லாயக்கே இல்ல, நான் எல்லாருக்கும் பாரமா இருக்கேன் அப்படினு எல்லாம் தோணும்” என்று லத்திக்காa சொல்கிறாள்.

“தற்கொலை செஞ்சிக்கலாம்னு தோணுச்சு. ஆனா உண்மையிலயே எனக்கு சாக பிடிக்கல. இப்படியெல்லாம் யோசிக்கிறத நிறுத்தணும்னு நான் நினைச்சேன். நான் பொதுவா எல்லார்கிட்டயும் பாசமா, அன்பா பழகுவேன். ஆனா மனச்சோர்வால தவிக்கும்போது யார பத்தியும் எத பத்தியும் நான் யோசிக்க மாட்டேன்” என்று ஜூலியா சொல்கிறாள்.

டீனேஜ் வயதில் அடியெடுத்து வைத்த சமயத்தில்தான் லத்திக்காவுக்கும் ஜூலியாவுக்கும் மனச்சோர்வு வந்தது. மற்ற டீனேஜ் பிள்ளைகளுக்கும் சில நேரம் இப்படிப்பட்ட பிரச்சினை வரலாம். ஆனால், லத்திக்காவுக்கும் ஜூலியாவுக்கும் வார கணக்காக... மாத கணக்காக மனச்சோர்வு இருந்தது. மனச்சோர்வு வந்தபோது எப்படி இருந்தது என்று லத்திக்கா சொல்கிறார், “தப்பிக்க வழியே இல்லாத ஒரு இருட்டான குகைக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு. அந்த சமயத்துல, நான் நானாவே இல்ல. எனக்கு ஏதோ பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.”

பொதுவாக, நிறைய டீனேஜர்களுக்கு வருகிற பிரச்சினைதான் லத்திக்காவுக்கும் ஜூலியாவுக்கும் வந்தது. சமீப காலங்களில் நிறைய இளைஞர்களுக்கு இதுபோல் மனச்சோர்வு வருவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. “10-19 வயதுள்ள பிள்ளைகளுக்கு உடல்நல பிரச்சினைகள் வருவதற்கு முக்கிய காரணம்” மனச்சோர்வுதான் என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.

சில பிள்ளைகள் பருவ வயதை எட்டும்போது அவர்களிடம் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் தெரியலாம். உதாரணத்துக்கு தூக்கம், பசி, உடல் எடை போன்றவற்றில் மாற்றங்கள் தெரியலாம். அதோடு, தன்னம்பிக்கை இழந்துவிடுவது, ‘எதற்குமே லாயக்கில்லை’ என்று உணர்வது, சோகமாக இருப்பது, யாரோடும் பழகாமல் இருப்பது போன்ற அறிகுறிகளும் தெரியலாம். மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகம் வைப்பது... கவனிப்பது... கஷ்டமாக இருக்கலாம். அவர்களுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வரலாம், அதற்கு முயற்சிகூட செய்யலாம். மருத்துவர்களால் விளக்க முடியாத இன்னும் சில அறிகுறிகள்கூட அவர்களிடம் தெரியலாம். ஒருவருக்கு மனச்சோர்வு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள மனநல நிபுணர்கள் சில அறிகுறிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். ஒன்றிற்கும் அதிகமான அறிகுறிகள் இருக்கின்றதா... அதுவும் வாரக்கணக்காக இருக்கின்றதா... அது அந்த நபருடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறதா... என்றெல்லாம் அவர்கள் பார்ப்பார்கள்.

டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு வருவதற்கான காரணங்கள்

உலக சுகாதார அமைப்பு இப்படிச் சொல்கிறது: பல பிரச்சினைகள் ஒருவரை ஒரே சமயத்தில் தாக்கும்போது அவருக்கு மனச்சோர்வு வரலாம். ஒருவேளை உடல்நல பிரச்சினை, மன அழுத்தம், மற்றவர்களால் மோசமாக நடத்தப்படுவது போன்றவைகூட மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கலாம். இதைப் பற்றி கூடுதலாக இப்போது பார்க்கலாம்.

உடல்நல பிரச்சினைகள். இதய நோய், ஹார்மோனின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவது, போதைப்பொருளை அதிகமாக பயன்படுத்துவது போன்றவற்றால் மனச்சோர்வு இன்னும் அதிகமாகலாம்.b அதுமட்டுமல்ல, நம்முடைய பரம்பரையில் யாருக்காவது மனச்சோர்வு இருந்தால் அது நமக்கும் வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. மனச்சோர்வு ஏற்படுவதற்கு ஜீன்களும் ஒரு காரணமாக இருக்க முடியும் என்று இதில் இருந்து தெரிகிறது. ஜீன்கள் நம் மூளையில் ஒரு விதமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதால் மனச்சோர்வு வரலாம். ஜூலியாவின் விஷயத்தில் இதுதான் நடந்தது.

மன அழுத்தம். மன அழுத்தம் வருவது இயல்புதான். ஆனால், தொடர்ந்து மன அழுத்தம் இருந்தால், அல்லது அது தீவிரமானால், உடலளவிலும் மனதளவிலும் அது பாதிப்புகளை ஏற்படுத்தும். டீனேஜ் வயதில், பிள்ளைகளுக்கு பொதுவாக ஹார்மோன் சுரக்கும் அளவில் மாற்றங்கள் ஏற்படும். அதுபோன்ற சமயங்களில், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது மனச்சோர்வில் கொண்டுபோய்விடும். ஒரு குறிப்பிட்ட காரணத்தினால்தான் மனச்சோர்வு வரும் என்று சொல்ல முடியாது. மனச்சோர்வு வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

அப்பா-அம்மா விவாகரத்து செய்துகொள்வது, அல்லது பிரிந்து வாழ்வது, பாசமான ஒருவர் இறந்துபோவது, கொடுமைப்படுத்தப்படுவது, செக்ஸ் தொல்லையை அனுபவிப்பது, பயங்கரமான விபத்தில் மாட்டிக்கொள்வது, தீராத வியாதியால் கஷ்டப்படுவது, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதால் ஒதுக்கப்படுவது போன்ற காரணங்களால் மன அழுத்தம் வரலாம். கடைசியில் அது மனச்சோர்வில் போய் முடியும். அதோடு, படிப்பு விஷயத்திலோ மற்ற விஷயங்களிலோ பெற்றோர் அதிகமாக எதிர்பார்ப்பது, மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து அன்பு கிடைக்காமல் போவது, பெற்றோர்கள் எந்த நேரத்தில் கோபப்படுவார்கள், திட்டுவார்கள் என்று தெரியாமல் குழம்பிப்போவது, நண்பர்களிடம் இருந்து வரும் தொல்லை, எதிர்காலத்தைப் பற்றிய கவலை போன்றவையும்கூட மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கலாம். மனச்சோர்வை சமாளிக்க டீனேஜ் பிள்ளைகள் என்ன செய்யலாம்?

மனதையும் உடல்நலத்தையும் பராமரியுங்கள்

ஒரு மனநல நிபுணரால்தான் மனச்சோர்வுக்கு சிகிச்சை கொடுக்க முடியும். அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளாலும் ஆலோசனைகளாலும் மனச்சோர்வை சமாளிக்க முடியும்.c “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை” என்று இயேசு சொன்னார். (மாற்கு 2:17) நமக்கு ஏதாவது நோய் வந்தால், நம் உடலில் இருக்கும் எந்தவொரு உறுப்பு வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். ஏன், மூளைகூட பாதிக்கப்படலாம்! நம் உடலுக்கும் மனதுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. அதனால், நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதுகூட நமக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் தரலாம்.

மனச்சோர்வை சமாளிக்க வேறு என்னவெல்லாம் செய்யலாம்? உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். சத்தான உணவைச் சாப்பிடுங்கள், போதுமான அளவு தூங்குங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஒருவிதமான ரசாயனம் சுரக்கும், அது உங்கள் மனநிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்; உங்களுக்கு புது தெம்பையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அதுமட்டுமல்ல, எந்தெந்த விஷயங்கள் உங்கள் மனதை பாதிக்கிறது என்று கண்டுபிடியுங்கள். முடிந்தால், உங்களுக்கு எப்போதெல்லாம் மனச்சோர்வு ஏற்படுகிறது... அதற்கான அறிகுறிகள் என்ன என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். பின்பு அதை சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து பாருங்கள். உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் நபரிடம் உங்கள் மனதில் இருப்பதை சொல்லுங்கள். உங்கள் பிரச்சினையை புரிந்திருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் அல்லது நண்பர்கள்கூட உங்களுக்கு உதவலாம். நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என்பதையெல்லாம் ஒரு டைரியில் எழுதி வையுங்கள். இப்படி செய்தது, ஜூலியாவுக்கு உதவியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளோடு நல்ல பந்தத்தை வளர்க்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்க்கையை உங்களால் சந்தோஷமாக அனுபவிக்க முடியும். ஏனென்றால், “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.—மத்தேயு 5:3.

ஒரு டீனேஜ் பெண் தன் பெற்றோரோடு உட்கார்ந்து சாப்பிடுகிறாள், உடற்பயிற்சி செய்கிறாள், நன்றாக தூங்குகிறாள்

நன்றாக சாப்பிடுங்கள், சுறுசுறுப்பாக இருங்கள், நன்றாக தூங்குங்கள்

ஒரு டீனேஜ் பெண் பைபிளைப் பிடிக்கிறாள்

கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்

இயேசு சொன்னது எவ்வளவு உண்மை என்று லத்திக்காவும் ஜூலியாவும் உணர்ந்தார்கள். லத்திக்கா சொல்கிறார், “கடவுளுக்கு பிடிச்ச விஷயங்கள செய்யும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு. அப்படி செய்றதுனால, என் பிரச்சினைகள பத்தியே யோசிச்சிட்டு இருக்காம, மத்தவங்க மேல அக்கறை காட்ட முடியுது. ஆனா, அப்படி செய்றது சில சமயங்கள்ல எனக்கு கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் அது எனக்கு சந்தோஷத்த தருது.” ஜெபம் செய்வது, பைபிளைப் படிப்பது ஜூலியாவுக்கு ஆறுதலை தந்தது. ஜூலியா சொல்கிறார், “மனசுல இருக்கிறத எல்லாம் கடவுள்கிட்ட கொட்டிட்டா ரொம்ப நிம்மதியா இருக்கும். கடவுளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னும், அவருக்கு என்மேல அக்கறை இருக்கும்னும் புரிஞ்சிக்க பைபிள் எனக்கு உதவி செய்யுது. பைபிள தினமும் வாசிக்கிறதுனால எதிர்காலத்த நினைச்சு பயப்படாம நம்பிக்கையோட இருக்க முடியுது.”

நீங்கள் வளர்ந்த விதம், வாழ்க்கையில் உங்களுக்கு நடந்த விஷயங்கள், ஜீன்கள் மூலம் உங்களுக்கு கடத்தப்பட்ட குணங்கள், இவையெல்லாம் நீங்கள் யோசிக்கும் விதத்தையும் உங்கள் உணர்ச்சிகளையும் பாதிக்கலாம். நம் படைப்பாளரான யெகோவா தேவன் இதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அதனால், நமக்கு தேவையான உதவியையும் ஆறுதலையும் கொடுக்கிறார். நம்மை புரிந்துகொண்டு நம்மீது அன்பு காட்டும் நபர்கள் மூலமாக நமக்கு உதவுகிறார். அதுமட்டுமல்ல, சீக்கிரத்தில் கடவுள் எல்லா வியாதிகளையும் குணமாக்குவார். உடலளவிலும் மனதளவிலும் யாருக்கும் எந்த வியாதியும் இருக்காது. “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24.

நம்முடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது” என்று பைபிள் வாக்கு கொடுக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) இதை கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சீக்கிரத்தில், கடவுள் இந்த பூமியை எப்படியெல்லாம் மாற்றப்போகிறார் என்றும் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை தரப்போகிறார் என்றும் தெரிந்துகொள்ள jw.org-ஐ பாருங்கள். அதில் மனச்சோர்வைப் பற்றி கூடுதலாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம். வித்தியாசமான தலைப்புகளில் நிறைய கட்டுரைகளையும் அந்த வெப்சைட்டில் நீங்கள் வாசிக்கலாம்; பைபிளையும் ஆன்லைனில் படிக்கலாம். ◼

a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b வியாதி, மருந்து, போதைப்பொருள் போன்றவை ஒருவருடைய மனநிலையை பாதிக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம்.

c எப்படிப்பட்ட சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விழித்தெழு! பத்திரிகை சொல்வதில்லை.

பெற்றோர்கள் எப்படி உதவலாம்?

  • மனச்சோர்வால் கஷ்டப்படும் டீனேஜ் பிள்ளைகளுக்கு, தங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கலாம். அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கலாம். மனச்சோர்வுக்கான அறிகுறிகள் என்னென்ன என்பதுகூட அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இதையெல்லாம் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் டீனேஜர்களும் ஒரே விதமாக நடந்துகொள்வது கிடையாது. அதனால், உங்கள் பிள்ளைகளை நன்றாக கவனியுங்கள். சாப்பிடும் விஷயத்தில், தூங்கும் விஷயத்தில், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தில், மற்றவர்களோடு பழகும் விதத்தில், அவர்களுடைய மனநிலையில் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்று பாருங்கள். முக்கியமாக, இந்த மாற்றங்கள் வாரக்கணக்காக இருக்கிறதா என்று பாருங்கள்.

  • தற்கொலையைப் பற்றி அவர்கள் பேசினாலோ அல்லது அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலோ அதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

  • அவர்களுக்கு மனச்சோர்வு (சில சமயங்களில் மட்டும் சோகமாக இருப்பதை இது குறிக்கவில்லை) இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், மருத்துவரிடம் அவர்களை அழைத்துச் செல்லுங்கள்.

  • மருத்துவர் சொல்லும் ஆலோசனைப்படி நடக்க அவர்களுக்கு உதவுங்கள். அவர்களிடம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றால், அல்லது அவர்களுக்கு வேறு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் திரும்பவும் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

  • சரியான நேரத்துக்கு சாப்பிடவும் தூங்கவும் உடற்பயிற்சி செய்யவும் குடும்பமாக முயற்சி செய்யுங்கள்.

  • அவர்களிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். மனச்சோர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க அவர்களுக்கு உதவுங்கள்.

  • அவர்கள் தனிமையுணர்வால் கஷ்டப்படுவார்கள், தங்களைப் பற்றியே கேவலமாக உணர்வார்கள், எதற்கும் லாயக்கில்லாதவர்களாக உணர்வார்கள். அதனால், அவர்கள்மீது நீங்கள் நிறைய அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.

முதல் உதவி–மனதுக்கு!

மனதின் முதல் உதவிக்கு தேவையான பொருள்கள். அதில், உற்சாகப்படுத்தும் வார்த்தைகள், பைபிள் வசனங்கள், நல்ல படங்கள், கட்டுரைகள் மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் இருக்கலாம்

நீங்கள் மனச்சோர்வால் கஷ்டப்படுகிறீர்களா? உங்கள் மனச்சோர்வுக்கு மருந்தாக இருக்கும் பொருள்களை ஒரே இடத்தில் வையுங்கள். உதாரணத்துக்கு, இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள்களை பாருங்கள். நீங்கள் விரும்பினால் வேறு பொருள்களையும் வைத்துக்கொள்ளலாம். இதை பயன்படுத்தும்போது உங்கள் யோசனைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியும்.

  • உங்களுக்கு பிடித்தவர்களுடைய ஃபோன் நம்பர்

  • உங்களுக்கு பிடித்த பாடல்கள்

  • நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், பலப்படுத்தும் கட்டுரைகள்

  • ஆறுதலான பைபிள் வசனங்கள். உதாரணத்துக்கு, சங்கீதம் 34:18; 51:17; 94:19; பிலிப்பியர் 4:6, 7

  • உங்களுக்கு பிடித்தவர்களை ஞாபகப்படுத்தும் பொருள்கள்

  • சந்தோஷமான தருணங்களை நீங்கள் எழுதி வைத்திருக்கும் டைரி

டீனேஜில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு!

டீனேஜில் இருக்கும் ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள்தான் மனச்சோர்வால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக, பெண் பிள்ளைகளுக்கு உடலளவிலும் மனதளவிலும் பிரச்சினைகள் வரும். அதோடு, செக்ஸ் தொல்லையையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதனால், அவர்களுக்கு வரும் மன அழுத்தம் மனச்சோர்வில் போய் முடிகிறது. ஷாரன் ஹெர்ஷ் என்ற ஒரு ஆலோசகர் இப்படி சொல்கிறார்: ஒரு பெண் பிள்ளையை ‘சுற்றி நடக்கும் மோசமான சம்பவங்களும், அவள் மனதுக்குள் நடக்கும் போராட்டங்களும் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றது.’ அதுமட்டுமல்ல, மீடியாவில் வரும் அழகான பெண்களைப் பார்த்து தாங்களும் அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ‘நான் பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இல்ல’ ‘நான் அழகா இருந்தாதான் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க’ என்றெல்லாம் கவலைப்படும் பெண்களுக்கு மனச்சோர்வு வர அதிக வாய்ப்பு இருக்கிறது.d

d எண் 4, 2016 விழித்தெழு! பத்திரிகையில் வந்த “பைபிளின் கருத்து—அழகான உடல் தோற்றம்” என்ற ஆங்கில கட்டுரையைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்