உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g17 எண் 2 பக். 14-15
  • சிலுவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிலுவை
  • விழித்தெழு!—2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?
  • இயேசுவின் சீஷர்கள் கடவுளை வணங்குவதற்கு சிலுவையைப் பயன்படுத்தினார்களா? அல்லது கிறிஸ்தவ மதத்தின் அடையாள சின்னமாக அதை நினைத்தார்களா?
  • கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவுக்கு மதிப்பு கொடுக்கலாம்?
  • வணக்கத்தில் மெய்க் கிறிஸ்தவர்கள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • சிலுவை
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • இயேசு உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா?
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—2017
g17 எண் 2 பக். 14-15
சிலுவை டாலர் இருக்கும் ஒரு செயின்

பைபிளின் கருத்து | சிலுவை

சிலுவை

சிலுவையை கிறிஸ்தவ மதத்தின் அடையாள சின்னமாக நிறைய பேர் நினைக்கிறார்கள். இருந்தாலும், அதை அணிந்துகொள்ளவோ அல்லது வீடுகளில் சர்ச்சுகளில் அதை வைத்துக்கொள்ளவோ வேண்டிய அவசியமில்லை என்று அதில் சிலர் நினைக்கிறார்கள்.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?

மக்கள் என்ன சொல்கிறார்கள்

ரோமர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அந்த சிலுவை இரண்டு மரத்துண்டுகளால் செய்யப்பட்டிருந்தது.

பைபிள் என்ன சொல்கிறது

இயேசுவை “மரத்திலே தூக்கிக் கொலை” செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 5:30, தமிழ் O.V.) இயேசுவைக் கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட பொருளை விவரிக்க, பைபிள் எழுத்தாளர்கள் ஸ்டவ்ரஸ் மற்றும் ஸைலோன் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். அந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரே ஒரு மரத்துண்டைத்தான் குறிக்கிறது. ஸ்டவ்ரஸ் என்ற கிரேக்க வார்த்தை “ஒரு மரக் கம்பத்தை குறிக்கிறது என்றும் அது எந்த விதத்திலும் ஒரு சிலுவையைக் குறிக்காது என்றும்” குரூஸிஃபிகேஷன் இன் ஆன்டிகியுட்டி புத்தகம் சொல்கிறது. அப்போஸ்தலர் 5:30-ல் பயன்படுத்தப்பட்ட ஸைலோன் என்ற வார்த்தை “நேராக நிமிர்த்தி வைக்கப்பட்ட மரக் கம்பத்தை” குறிக்கிறது. இதில்தான், மரண தண்டனைக்குறிய கைதிகளை ரோமர்கள் அறைந்தார்கள்.”a

“ஒருவன் ஒரு பெரிய பாவத்தைச் செய்திருந்தால் அதற்காக அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம். அவனுடைய உடலை மரக் கம்பத்தில் தொங்கவிடுவதாக இருந்தால், ராத்திரி முழுவதும் அதை மரக் கம்பத்திலேயே விட்டுவிடக் கூடாது. . . . மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” என்று இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டம் சொல்கிறது. (உபாகமம் 21:22, 23) இதே மாதிரியான மரண தண்டனைதான் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டதாக பைபிள் விவரிக்கிறது. இந்த சட்டத்தை மேற்கோள் காட்டி பவுல் என்ற கிறிஸ்தவ அப்போஸ்தலர் இப்படி எழுதினார்: ‘“மரக் கம்பத்தில் [ஸைலோன்] தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டிருப்பதால், கிறிஸ்து நமக்குப் பதிலாகச் சாபமானார்.’ (கலாத்தியர் 3:13) இயேசு மரக் கம்பத்தில், அதாவது ஒரே ஒரு மரத்துண்டில் அறையப்பட்டார் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன.

“அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.”—அப்போஸ்தலர் 10:39, தமிழ் O.V.

இயேசுவின் சீஷர்கள் கடவுளை வணங்குவதற்கு சிலுவையைப் பயன்படுத்தினார்களா? அல்லது கிறிஸ்தவ மதத்தின் அடையாள சின்னமாக அதை நினைத்தார்களா?

பைபிள் என்ன சொல்கிறது

ஆரம்ப காலத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலுவையை ஒரு மதச் சின்னமாக பயன்படுத்தினார்கள் என்று பைபிள் சொல்வதில்லை. அந்த காலத்தில் வாழ்ந்த ரோமர்கள்தான் தங்களுடைய கடவுளை வணங்குவதற்கு சிலுவையைப் பயன்படுத்தினார்கள். கொஞ்ச காலத்துக்கு பிறகு, அதாவது இயேசு இறந்து சுமார் 300 வருஷங்களுக்கு பிறகு, ரோம பேரரசரான கான்ஸ்டன்டைன், சிலுவையை தன்னுடைய ராணுவ படைகளின் சின்னமாக பயன்படுத்தினார். காலப்போக்கில் அது சர்ச்சுகளோடு சம்பந்தப்பட்ட ஒரு சின்னமாக மாறியது.

உண்மை கடவுளை வணங்காதவர்கள்தான் தங்களுடைய வழிபாட்டில் சிலுவையைப் பயன்படுத்தினார்கள். அப்படியிருக்கும்போது இயேசுவின் சீஷர்கள் உண்மை கடவுளை வணங்க சிலுவையைப் பயன்படுத்தியிருப்பார்களா? தன்னை வணங்க ‘எந்தவொரு வடிவத்தையும்’ பயன்படுத்தக் கூடாது என்று கடவுள் சொல்லியிருந்தார். ‘சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓட வேண்டும்’ என்ற கட்டளையையும் கிறிஸ்தவர்களுக்கு கொடுத்திருந்தார். இதெல்லாம் இயேசுவின் சீஷர்களுக்கு நன்றாக தெரியும். (உபாகமம் 4:15-19; 1 கொரிந்தியர் 10:14) “கடவுள் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார்.” அதனால், கடவுளை வணங்குவதற்கு எந்த ஒரு பொருளையோ சின்னத்தையோ முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக கடவுளுடைய “சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” அவரை வணங்கினார்கள். இப்படித்தான் தன்னை வணங்க வேண்டும் என்று கடவுளே சொல்லியிருக்கிறார்.—யோவான் 4:24.

‘உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்குவார்கள்.’—யோவான் 4:23.

கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவுக்கு மதிப்பு கொடுக்கலாம்?

மக்கள் என்ன சொல்கிறார்கள்

“நமக்கு மீட்பு கிடைப்பதற்கு காரணமாக இருக்கும் ஒரு பொருளுக்கு மதிப்பு மரியாதை காட்டுவதுதான் சரியாக இருக்கும். . . . அப்படிப்பட்ட பொருள்களுக்கு ஒருவர் மதிப்பு கொடுக்கிறார் என்றால், அதைக் குறிக்கும் நபரையும் அவர் மதிக்கிறார் என்று அர்த்தம்.”—நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா.

பைபிள் என்ன சொல்கிறது

நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், கடவுளிடம் நெருங்கி போவதற்கும், முடிவில்லாத வாழ்க்கையைப் பெறுவதற்கும் இயேசுவின் மரணம் வழி செய்திருக்கிறது. அதற்காக நாம் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும். (யோவான் 3:16; எபிரெயர் 10:19-22) இயேசுவை அடையாளப்படுத்தும் ஒரு சின்னத்தைப் பயன்படுத்துவதாலோ அவர்மீது நம்பிக்கை இருக்கிறது என்று வெறுமனே சொல்வதாலோ அவருக்கு நன்றி காட்டுகிறோம் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், “விசுவாசத்தைச் செயலில் காட்டவில்லை என்றால், அது செத்ததாக இருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:17) அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் இயேசுமீது இருக்கும் விசுவாசத்தை எப்படிச் செயலில் காட்டலாம்?

பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்: “கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் அவர் ஒருவரே இறந்தார். சொல்லப்போனால், . . . அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14, 15) இயேசு காட்டிய அன்பைப் பார்த்து அவரைப் போலவே வாழ கிறிஸ்தவர்கள் தூண்டப்படுகிறார்கள். இதுதான், இயேசுவுக்கு மதிப்பு காட்ட மிகச் சிறந்த வழி, மதச் சின்னத்தை பயன்படுத்துவது அல்ல.

‘மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பது என் தகப்பனின் விருப்பம்.’—யோவான் 6:40.

a எத்தால்பார்ட் டபிள்யு. புல்லிங்கர் எழுதிய, அ கிரிட்டிக்கல் லெக்ஸிகன் அண்ட் கண்கார்டன்ஸ் டூ தி இங்கிலீஷ் அண்ட் கிரீக் நியூ டெஸ்டமன்ட் என்ற புத்தகத்தில் (11-வது பதிப்பு) பக்கங்கள் 818–819-லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்