அட்டைப்படக் கட்டுரை | பைபிள் உண்மையிலேயே கடவுள் தந்த புத்தகமா?
பைபிள் “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” எழுதப்பட்டதா?
பைபிள் உண்மையிலேயே கடவுள் தந்த புத்தகமா, அல்லது மனிதர்களுடைய கருத்துகள் இருக்கிற புத்தகமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற சிலருக்குக்கூட இந்த சந்தேகம் இருக்கிறது. 2014-ல் ஒரு கருத்துக்கணிப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. பெயருக்கென்று கிறிஸ்தவர்களாக இருக்கும் அநேகர், “பைபிள் ஏதோவொரு விதத்தில் கடவுளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். ஆனால், அந்த கருத்துக்கணிப்பில் பங்குகொண்ட ஐந்து பேரில் ஒருவருக்கு பைபிளைப் பற்றி வித்தியாசமான கருத்து இருந்தது. பைபிளில் வெறும் “கட்டுக்கதைகள், புராண கதைகள், சரித்திர பதிவுகள், மனிதர்கள் எழுதிய நீதிநெறிகள் இருக்கிறது” என்று சொன்னார்கள். அப்படியென்றால், “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” எழுதப்பட்டிருக்கிறது என்று பைபிள் சொல்வது உண்மைதானா என்ற கேள்வி எழும்புகிறது.—2 தீமோத்தேயு 3:16.
“கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” எழுதப்பட்டது–இதன் அர்த்தம் என்ன?
பைபிளில் 66 சிறு புத்தகங்கள் இருக்கின்றன. 1,600 வருஷ காலப்பகுதியில் 40 மனிதர்களால் இது எழுதப்பட்டது. அப்படியிருக்கும்போது, “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” இது எழுதப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” பைபிள் எழுதப்பட்டது என்ற வார்த்தைகள் பைபிளில் இருக்கும் எல்லா தகவல்களுக்கும் கடவுள்தான் சொந்தக்காரர் என்பதைக் காட்டுகிறது. அதனால்தான், ‘மனிதர்கள் . . . கடவுள் கொடுத்த வார்த்தைகளை கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு சொன்னார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 1:21) கண்களால் பார்க்க முடியாத தன்னுடைய சக்தியை பயன்படுத்தி கடவுள் தன்னுடைய எண்ணங்களை மனிதர்களுக்கு தெரியப்படுத்தினார். இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு முதலாளி, தான் எழுத நினைத்த கடிதத்தை செக்ரெட்டரியை வைத்து எழுதுகிறார். முதலாளி சொல்லச் சொல்ல செக்ரெட்டரி அந்தக் கடிதத்தை எழுதினாலும், அந்தக் கடிதம் முதலாளியுடையது, செக்ரெட்டரியுடையதல்ல. அதேபோல், கடவுள் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி தன்னுடைய செய்தியை மனிதர்களுக்கு தெரிவித்தார். அதை அவர்கள் பதிவு செய்தார்கள்.
பைபிள் எழுத்தாளர்களுக்கு கடவுள் தன்னுடைய செய்தியை எப்படியெல்லாம் தெரியப்படுத்தினார்? சிலருக்கு தரிசனங்கள் மூலமாகவும் இன்னும் சிலருக்கு கனவுகள் மூலமாகவும் தெரியப்படுத்தினார். வேறு சிலருக்கு தேவதூதர்கள் மூலமாக சொன்னார். சில சமயங்களில், தன்னுடைய செய்தியை சொந்த வார்த்தைகளில் எழுத பைபிள் எழுத்தாளர்களுக்கு கடவுள் சுதந்திரம் கொடுத்தார். மற்ற சந்தர்ப்பங்களில், அவர் சொன்னதை அப்படியே எழுதும்படி அவர்களிடம் சொன்னார். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், பைபிள் எழுத்தாளர்கள் கடவுளுடைய செய்தியைத்தான் பதிவு செய்தார்களே தவிர, அவர்களுடைய கருத்துகளை அல்ல.
மனிதர்கள் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்தான் பைபிளை எழுதினார்கள் என்று எப்படி உறுதியாக சொல்லலாம்? இதை நம்புவதற்கு மூன்று ஆதாரங்களை இப்போது பார்க்கலாம்.