உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g18 எண் 1 பக். 8-9
  • அன்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பு
  • விழித்தெழு!—2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘பரிபூரணமாக இணைக்கிற’ அன்பில் பிணைக்கப்பட்டவர்களாக...
  • அன்பு (அகாப்பே)—எதுவல்ல, எது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • “தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • ‘அன்பு நிரந்தரமானது’—உங்கள் விஷயத்தில் எப்படி?
    விழித்தெழு!—1998
  • அன்பு, “ஒற்றுமையின் பரிபூரண கட்டு”
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
விழித்தெழு!—2018
g18 எண் 1 பக். 8-9
சந்தோஷமாக இருக்கும் ஒரு தம்பதி

சந்தோஷப் பாதையில் செல்ல...

அன்பு

மனிதர்கள் அன்புக்காக ஏங்குகிறார்கள். எந்தத் திருமணமும், எந்தக் குடும்பமும், எந்த நட்பும் அன்பு இல்லாமல் தழைக்காது. அப்படியானால், மனநலனுக்கும் மகிழ்ச்சிக்கும் அன்பு மிகமிக முக்கியம் என்பதைச் சொல்லவே வேண்டாம். ஆனால், “அன்பு” என்பது என்ன?

காதலர்களுக்கு இடையிலான அன்பு முக்கியமானது என்றாலும், நாம் இங்கே பேசுவது அந்த அன்பைப் பற்றி அல்ல. மாறாக, சொந்த நலனைவிட மற்றவர்களுடைய நலனில் ஆழ்ந்த அக்கறை காட்டத் தூண்டுகிற உயர்ந்த வகையான அன்பு. இது கடவுளுடைய நெறிமுறைகளின் அடிப்படையிலான அன்பு என்றாலும், அதில் பாசமும் நட்பும் கனிவும் கலந்திருக்கிறது.

அன்பை அழகாக வர்ணிக்கும் இந்த வார்த்தைகளைப் பாருங்கள்: “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், . . . எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:4-8.

ஆம், இப்படிப்பட்ட அன்பு ஒருபோதும் ஒழிந்துபோகாது. சொல்லப்போனால், காலம் போகப்போக அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அந்த அன்பு பொறுமையும் கருணையும் உள்ளதாக... மன்னிக்கும் தன்மை உள்ளதாக... இருப்பதால், அது ‘எல்லாரையும் பரிபூரணமாக இணைக்கிறது.’ (கொலோசெயர் 3:14) இப்படிப்பட்ட அன்பைக் காட்டுகிறவர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், அவர்களிடையே உள்ள பந்தம் முறிந்துபோகாமல் பாதுகாப்பாக, சந்தோஷமாக இருக்கும். உதாரணத்துக்கு, திருமண பந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

‘பரிபூரணமாக இணைக்கிற’ அன்பில் பிணைக்கப்பட்டவர்களாக...

இயேசு கிறிஸ்து, திருமண விஷயத்தில் முக்கியமான நெறிமுறைகளைக் கற்றுக்கொடுத்தார். உதாரணத்துக்கு, ஒரு “‘மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’ . . . அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று சொன்னார். (மத்தேயு 19:5, 6) இதில் குறைந்தது இரண்டு முக்கியமான நெறிமுறைகள் பளிச்சென்று தெரிகின்றன.

“இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்.” இந்த உலகத்தில், இருப்பதிலேயே மிகமிக நெருக்கமான பந்தம் திருமண பந்தம்தான். ஒரு கணவனோ மனைவியோ தன் மணத்துணை அல்லாத நபரோடு “ஒரே உடலாக” ஆகிவிடாமல் இருக்க, அதாவது தன் துணைக்குத் துரோகம் செய்யாமல் இருக்க, அன்புதான் உதவுகிறது. (1 கொரிந்தியர் 6:16; எபிரெயர் 13:4) ஒருவருக்கொருவர் உண்மையாக இல்லாமல்போகும்போது நம்பிக்கை சுக்குநூறாகி விடுகிறது, திருமண பந்தம் முறிந்து விடுகிறது. பிள்ளைகள் இருந்தால், அவர்களும்கூட உணர்ச்சி ரீதியில் பயங்கரமாகப் பாதிக்கப்படலாம்; அன்பும் பாதுகாப்பும் கிடைக்காததுபோல் அவர்கள் உணரலாம், அல்லது எப்போதும் கோபப்படுகிறவர்களாக இருக்கலாம்.

‘கடவுள் இணைத்து வைத்தது.’ திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தமாகவும் இருக்கிறது. இந்த உண்மையை மதிக்கிற தம்பதிகள் தங்களுடைய திருமண பந்தத்தைப் பலப்படுத்த கடினமாக முயற்சி செய்கிறார்கள். பிரச்சினைகள் தலைதூக்கும்போது, அந்தப் பந்தத்திலிருந்து விடுபட அவர்கள் வழிதேடுவதில்லை. அவர்களுடைய அன்பு பலமானதாக, உறுதியானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட அன்பு “எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்”; ஆம், மணவாழ்வில் ஏற்படுகிற பிரச்சினைகளைச் சமாளித்து, ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்குக் கைகொடுக்கும்.

பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சுயநலமில்லாத அன்பைக் காட்டும்போது, அவர்களுடைய பிள்ளைகள் ரொம்பவே நன்மையடைகிறார்கள். ஜெஸிக்கா என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “அப்பாவும் அம்மாவும் ஒருத்தர்மேல ஒருத்தர் ரொம்ப அன்பும், மரியாதையும் வெச்சிருக்காங்க. அப்பாமேல அம்மா வெச்சிருக்கிற மரியாதைய பார்க்கும்போது, நானும் அவங்கள மாதிரியே ஆகணும்னு ஆசையா இருக்கு.”

அன்புதான் கடவுளுடைய மிக முக்கியமான குணம். ஆம், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) அதனால், யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்” என்றும் அழைக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை! (1 தீமோத்தேயு 1:11) நம்முடைய படைப்பாளரான அவருடைய குணங்களை, முக்கியமாக அவருடைய அன்பை, பின்பற்றுவதற்கு நாம் கடினமாக முயற்சி செய்தால், நாமும்கூட சந்தோஷமானவர்களாக இருப்போம். எபேசியர் 5:1, 2 இப்படிச் சொல்கிறது: “அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். . . . தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.”

முக்கியக் குறிப்புகள்

‘அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.’—1 கொரிந்தியர் 13:4-8.

அன்பு சந்தோஷத்தைத் தரும். ஏனென்றால், அது. . .

  • மற்றவர்களுடைய நலனில் ஆழ்ந்த அக்கறை காட்ட உதவுகிறது

  • காலம் போகப்போக வளர்ந்துகொண்டே இருக்கும்

  • திருமண பந்தத்தையும் நட்புறவையும் பலப்படுத்துகிறது, உறுதியாக்குகிறது

  • பிள்ளைகள் சந்தோஷமான சூழலில் வளரவும், பாதுகாப்பாக உணரவும் உதவுகிறது

  • நம்முடைய படைப்பாளரைப் போல நம்மை ஆக்குகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்