பெற்றோருக்குக் கீழ்ப்படிவதை, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஒப்பிடலாம். நீங்கள் எந்தளவு நம்பகமானவர்களாக இருக்கிறீர்களோ, அந்தளவு மற்றவர்கள் உங்களை நம்புவார்கள்
இளைஞர்களுக்கு
10 நம்பகத்தன்மை
இதன் அர்த்தம் என்ன?
நம்பகமான ஒருவர் தன்னுடைய பெற்றோர்கள், நண்பர்கள், முதலாளிகள் என எல்லாருடைய நம்பிக்கையையும் சம்பாதிப்பார். சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிவார், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார், எப்போதும் உண்மை பேசுவார்.
இது ஏன் முக்கியம்?
நமக்கு எந்தளவு சுதந்திரம் கிடைக்கும் என்பது இதுவரை நாம் எந்தளவு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.
“உங்க அப்பா-அம்மாவோட நம்பிக்கைய சம்பாதிக்கணும்னா, நீங்க முதிர்ச்சி உள்ளவங்களா, பொறுப்புள்ளவங்களா நடந்துக்கணும். நீங்க அவங்ககூட இருக்கும்போது மட்டும் இல்ல, அவங்ககூட இல்லாதபோதும் அப்படி நடந்துக்கணும்.”—செராஹி.
பைபிள் நியமம்: “எப்போதும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருங்கள்.”—1 பேதுரு 2:12.
நீங்கள் என்ன செய்யலாம்?
நீங்கள் இன்னும் அதிக நம்பிக்கைக்குரியவராக ஆக நினைத்தாலும் சரி, இழந்த நம்பிக்கையை மறுபடியும் சம்பாதிக்க நினைத்தாலும் சரி, இந்த ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்:
நேர்மையானவர்களாக இருங்கள். நீங்கள் பொய் பேசினால், மற்றவர்களுக்கு உங்கள்மேல் இருக்கும் நம்பிக்கை தவிடுபொடியாகிவிடும். ஆனால், நீங்கள் ஒளிவுமறைவில்லாமல் நேர்மையாகப் பேசும்போது, அதுவும் உங்கள் தவறுகளை மறைக்காமல் பேசும்போது, மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்துக்கொள்வீர்கள்.
“எந்தப் பிரச்சினையும் இல்லாதப்போ நேர்மையா நடந்துக்குறது ரொம்ப ஈஸி. ஆனா, உங்கமேல தப்பான அபிப்பிராயம் ஏற்படும்னு தெரிஞ்சும் நீங்க நேர்மையா நடந்துக்கிட்டா, மத்தவங்க உங்கள இன்னும் அதிகமா நம்புவாங்க.”—கேய்மன்.
பைபிள் நியமம்: “நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.
நம்பகமானவர்களாக நடந்துகொள்ளுங்கள். நம்பகத்தன்மை என்பது “வேலை வாய்ப்பு கிடைக்க உதவுகிற மூன்று முக்கியமான விஷயங்களில் ஒன்று” என மனித-வள நிபுணர்கள் 78 சதவீதம் பேர் குறிப்பிட்டிருப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு காட்டுகிறது. நம்பகமானவர்களாக நடந்துகொள்ள இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்; அப்படிச் செய்தால், பெரியவர்களாக ஆகும்போது நிறைய நன்மைகளைப் அனுபவிப்பீர்கள்.
“நான் பொறுப்பா நடந்துகுறதையும், யாரும் சொல்லாமலயே வீட்டு வேலைகள செய்றதையும் என் அப்பா-அம்மா பார்க்குறாங்க. நான் இந்த மாதிரி நடந்துக்குறத பார்க்க பார்க்க அவங்க என்னை அதிகமா நம்புறாங்க.”—சாரா.
பைபிள் நியமம்: “நீங்கள் என் சொல்லுக்குக் கட்டுப்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்; நான் கேட்டுக்கொள்வதற்கும் அதிகமாகவே நீங்கள் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.”—பிலேமோன் 21.
பொறுமையாக இருங்கள். உங்களுடைய உடல் வளர்ச்சியை மற்றவர்களால் எளிதாகப் பார்க்க முடியும்; ஆனால், நீங்கள் முதிர்ச்சியுள்ளவராகவும் பொறுப்புள்ளவராகவும் ஆகிவருகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் காலம் கழித்துதான் மற்றவர்களால் பார்க்க முடியும்.
“ஏதாவது ஒரு விஷயத்த செஞ்சுட்டா மட்டும் உங்க அப்பா-அம்மாவும் மத்தவங்களும் உங்கள நம்பிட மாட்டாங்க. நீங்க தொடர்ந்து பொறுப்புள்ளவங்களா நடந்துக்கிட்டாதான் அவங்களுக்கு உங்கமேல நம்பிக்கை வரும்.”—ப்ரான்டன்.
பைபிள் நியமம்: ‘பொறுமையைக் காட்டுங்கள்.’ —கொலோசெயர் 3:12.