1. கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணமா?
ஏன் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?
நாம் படும் கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணம் என்று நிறைய பேர் நினைப்பதால், அவர்கள் அவரை வேண்டாமென்று ஒதுக்குகிறார்கள்.
சிந்திக்க...
நமக்கு வரும் கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணம் என்று நிறைய மதத் தலைவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சிலர் இப்படிச் சொல்கிறார்கள்:
இயற்கைப் பேரழிவுகள் கடவுள் தரும் தண்டனை.
பரலோகத்தில் கடவுளுக்கு நிறைய தேவதூதர்கள் தேவைப்படுவதால்தான் பிள்ளைகள் இறந்துபோகிறார்கள்.
கடும் வேதனைகளுக்குக் காரணமாக இருக்கும் போர்களில் ஏதாவது ஒரு பக்கத்தைக் கடவுள் ஆதரிக்கிறார்.
இப்படியெல்லாம் கடவுளைப் பற்றி மதத் தலைவர்கள் சொல்லிக்கொடுப்பது, தவறானதாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? கடவுள் ஒருவேளை அவர்களை ஒதுக்கியிருந்தால்?
அதிகம் தெரிந்துகொள்ள...
பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.
பைபிள் சொல்வது...
கடவுள் நமக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதில்லை.
ஏனென்றால், அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. அவருடைய குணங்கள் என்னவென்று பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு:
“[கடவுளுடைய] வழிகளெல்லாம் நியாயமானவை. . . . அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.”—உபாகமம் 32:4.
“உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.”—யோபு 34:10.
“சர்வவல்லமையுள்ளவர் நியாயத்தைப் புரட்ட மாட்டார்.”—யோபு 34:12.
தன்னைப் பற்றிய தவறான கருத்துகளைச் சொல்லும் மதங்களை கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை.
கடவுள் நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறார் என்று சொல்லும் மதங்களையும், போரையும் வன்முறையையும் ஆதரிக்கிற மதங்களையும் இது குறிக்கிறது.
“அந்தத் தீர்க்கதரிசிகள் [கடவுளுடைய] பெயரில் பொய்யாகத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். நான் அவர்களிடம் பேசவும் இல்லை, அவர்களைப் பேசச் சொல்லவும் இல்லை, அவர்களை அனுப்பவும் இல்லை. அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் தரிசனங்களெல்லாம் பொய். . . . அவர்களே கதைகளை ஜோடித்து உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”—எரேமியா 14:14.
மதத்தின் பேரில் மக்களை ஏமாற்றுவதை இயேசு கண்டனம் செய்தார்.
“என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாளில் நிறைய பேர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோமே, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோமே, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களைச் செய்தோமே’ என்று சொல்வார்கள்; ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று சொல்வேன்.”—மத்தேயு 7:21-23.