எலக்ட்ரானிக் சாதனங்களால் கல்யாண வாழ்க்கை கசக்குமா?
கணவனும் மனைவியும் எலக்ட்ரானிக் சாதனங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகும். உதாரணத்துக்கு, ஒருநாளில் அவர்களால் அடிக்கடி பேசிக்கொள்ள முடியும்.
ஆனால், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தினால்...
ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட முடியாமல் போய்விடலாம்.
அவசியமே இல்லையென்றாலும் ஆஃபீஸ் வேலைகளை வீட்டில் செய்ய ஆரம்பித்துவிடலாம்.
ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கிற நம்பிக்கையை இழந்துவிடலாம், துரோகம் செய்கிற அளவுக்கு போய்விடலாம்.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்
மைக்கேல் இப்படிச் சொல்கிறார், “சில சமயம் நானும் என் மனைவியும் ஒரே ரூம்லதான் இருப்போம். ஆனா, அவ என்னை கண்டுக்காம ஃபோனையேதான் பாத்துட்டிருப்பா. ‘இப்பதான் ஃபோனையே எடுத்தேன்’னு சொல்லுவா.” ஜோனத்தான் என்பவர் இப்படிச் சொல்கிறார், “சில சமயத்துல கணவனும் மனைவியும் பக்கத்துப் பக்கத்துல இருந்தாலும், ஏதோ பல மைல் தூரம் தள்ளியிருக்கிற மாதிரி தோணும்.”
யோசித்துப்பாருங்கள்: நீங்கள் உங்கள் துணையோடு செலவிட வேண்டிய சந்தோஷமான நேரத்தையெல்லாம் ஃபோன் கால்களும் மெசேஜுகளும் திருடிவிடுகிறதா?—எபேசியர் 5:33.
வேலை
சிலர், வேலையின் காரணமாக எப்போதுமே ஃபோனும் கையுமாக இருப்பார்கள். இன்னும் சிலர், அவசியமே இல்லையென்றாலும் வீட்டுக்கு வந்த பிறகும் ஆஃபீஸ் வேலைகளைச் செய்துகொண்டே இருப்பார்கள். லீ என்பவர் இப்படிச் சொல்கிறார், “உண்மைய சொல்லணும்னா, என் மனைவியோட இருக்குறப்போ வேலையில இருந்து வர்ற ஃபோனையும் மெசேஜையும் பாக்காம இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு.” ஜாய் என்ற பெண் இப்படிச் சொல்கிறார், “வீட்ல இருந்து வேல செய்றதுனால எப்பவுமே வேல இருந்துகிட்டே இருக்கு. மத்த வேலைகளுக்கு நேரம் ஒதுக்குறதே கஷ்டமா இருக்கு.”
யோசித்துப்பாருங்கள்: உங்கள் துணை உங்களிடம் பேசும்போது அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கிறீர்களா?—லூக்கா 8:18.
உண்மையாக இருங்கள்
கணவனோ மனைவியோ சோஷியல் மீடியாவில் போடுகிற சில போஸ்ட்டுகளால் அவர்களுக்குள் சந்தேகம் ஏற்படுவதாகவும், இதனால் பிரச்சினை வருவதாகவும் நிறைய பேர் சொல்கிறார்கள். அந்த போஸ்ட்டுகளை துணைக்குத் தெரியாமல் போடுவதாக அவர்களில் சிலர் சொல்கிறார்கள்.
கண்ணிவெடிகள் புதைந்திருக்கிற நிலம் மாதிரிதான் சோஷியல் மீடியா! அதில் கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகள் இருப்பதால், துணைக்கு துரோகம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். இன்று நிறைய பேர் விவாகரத்து செய்வதற்கு முக்கியக் காரணமே சோஷியல் மீடியாதான் என்று விவாகரத்து வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.
யோசித்துப்பாருங்கள்: உங்கள் துணை அல்லாத வேறு ஒருவரோடு பழகுவதை உங்கள் துணையிடமிருந்து மறைக்கிறீர்களா? —நீதிமொழிகள் 4:23.
நீங்கள் செய்ய வேண்டியவை
முன்னுரிமை கொடுங்கள்
நன்றாகச் சாப்பிடவில்லை என்றால் பலவீனமாகி விடுவோம். அதேபோல், துணையோடு நேரம் செலவிடவில்லை என்றால் குடும்ப வாழ்க்கை பலவீனமாகிவிடும்.—எபேசியர் 5:28, 29.
பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.” —பிலிப்பியர் 1:10.
கீழே உள்ள ஆலோசனைகளில் எதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைக் கலந்துபேசுங்கள். அல்லது, எலக்ட்ரானிக் சாதனங்கள் உங்கள் கல்யாண வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க உதவும் குறிப்புகளை எழுதுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சேர்ந்து சாப்பிடுங்கள்
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருங்கள்
உங்கள் துணையோடு சந்தோஷமாக நேரம் செலவிட ஏற்பாடு செய்யுங்கள்
ராத்திரியில் எலக்ட்ரானிக் சாதனங்களை ஆஃப் செய்யுங்கள். அதை கைக்கு எட்டாத தூரத்தில் வையுங்கள்
தினமும் 15 நிமிடமாவது துணையோடு பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். எலக்ட்ரானிக் சாதனங்கள் பக்கத்தில் இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இன்டர்நெட்டைப் பயன்படுத்தாதீர்கள்