தத்தளிக்கும் உலகம்
1 | ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்
ஏன் முக்கியம்?
ஒரு பிரச்சினையோ பேரழிவோ வரும்போது, அது நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
பிரச்சினைகள் அடுக்கடுக்காக வரும்போது மன அழுத்தம் வந்துவிடும். மன அழுத்தம் ரொம்ப நாளைக்கு அப்படியே இருந்தால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
பேரழிவோ தொற்றுநோயோ வரும்போது நமக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் போகலாம். மருந்துகளுக்கும் தட்டுப்பாடு வரலாம். மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் போகலாம்.
பேரிடர் ஏற்படும்போது பணக்கஷ்டம் வரலாம். அதனால், சத்தான உணவு, மருந்து மாத்திரை மாதிரியான அத்தியாவசிய தேவைகளைக்கூட வாங்க நம்மிடம் பணம் இல்லாமல் போகலாம்.
இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
ஒரு மோசமான வியாதியோ மன அழுத்தமோ வந்துவிட்டால், தெளிவாக யோசிக்க முடியாது. அதனால், உங்களுடைய உடல்நிலையைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியாமல் போய்விடலாம்.
உடல்நல பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், நிலைமை ரொம்பவே மோசமாகிவிடலாம். கடைசியில், உயிரையே அது உருவிவிடலாம்.
ஆரோக்கியமாக இருந்தால், எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் நிதானமாக நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள உங்களால் நிச்சயம் ஏதாவது செய்ய முடியும்.
இதைச் செய்துபாருங்கள்
வருமுன் காப்பதே சிறந்தது! புத்திசாலியாக இருக்கிற ஒருவர் ஆபத்துகளை முன்பாகவே கண்டுபிடித்து, அவற்றில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் முடிந்தவரை செய்வார். உடல்நலத்தைப் பாதுகாக்கிற விஷயத்துக்கும் இது பொருந்தும். உங்களையும் உங்கள் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்போது, முடிந்தளவுக்கு உங்களால் வியாதிகள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். அல்லது, அதன் பாதிப்பையாவது குறைக்க முடியும்.
“எங்களயும் எங்க வீட்டையும் நாங்க சுத்தமா வெச்சுக்குறதுனால டாக்டர் ஃபீஸையும் மருந்து மாத்திரைக்கு ஆகுற பணத்தயும் எங்களால மிச்சப்படுத்த முடியுது.”—ஆன்ட்ரு.a
a இந்தப் பத்திரிகையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.