படிப்பு 23
சப்தமும் நிறுத்தமும்
1 நீங்கள் சொல்வது மற்றவர்களுக்கு உடனடியாக கேட்டாலொழிய அதன் மதிப்பு இழக்கப்பட்டுவிடும். மறுபட்சத்தில், உங்கள் சப்தம் அளவுக்கு அதிகமாக உரத்ததாக இருந்தால், அது கேட்போருக்கு எரிச்சலாக இருக்க, நீங்கள் தயாரித்திருக்கும் நேர்த்தியான கருத்துக்களிலிருந்து அவர்கள் திசைதிருப்பப்படக்கூடும். போதியளவு சப்தத்தைக் குறித்து நாம் அக்கறையுள்ளவர்களாயிருப்பதற்கான அவசியம் அநேக ராஜ்ய மன்றங்களில் தெளிவாக தெரிகிறது. இங்கே மன்றத்தில் அநேகமாக முன்பகுதியிலிருந்து கூட்டங்களில் குறிப்புச்சொல்பவர்களை, பின்னாலிருப்பவர்களால் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் மேடையிலிருந்து பேசுபவருக்குப் போதுமான சப்தம் குறைவுபடுவதன் காரணமாக அவர் தன்னுடைய கேட்போர் கூட்டத்தை ஊக்குவிக்க தவறிவிடுகிறார். வெளி ஊழியத்திலும்கூட, காதுகேட்காதவர்களை நாம் சந்திக்கிறோம், சந்திக்கின்றவரின் வீட்டினுள்ளிருந்தோ வெளியேயிருந்தோ வருகின்ற மற்ற இரைச்சல்களையும் நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் நாம் சரியான சப்தத்துக்கு ஜாக்கிரதையாக கவனம்செலுத்த வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 செளகரியமாக கேட்கப்படுவதற்குப் போதிய சப்தமாக இருத்தல். எவ்வளவு சப்தத்தைப் பயன்படுத்துவது என்பதை தீர்மானிப்பதில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் முதல் காரியம், தேவைப்படும் குரல் பலம் பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்வியின் மூலம் மிகச் சிறப்பாக ஆராயப்படுகிறது. அதாவது முன்வரிசையிலிருப்பவர்களுக்கு மிதமிஞ்சியதாக இல்லாமல் பின்வரிசையில் இருப்பவர்களுக்கு நீங்கள் பேசுவது கேட்கும்படி இருந்ததா? தொடக்க நிலையிலிருக்கும் மாணாக்கருக்கு அதை கவனத்தில்கொள்வது போதுமானதாக இருக்கையில், அதிகமாக முன்னேறியிருப்பவர்கள் இதனுடைய பின்வரும் அம்சங்களிலும்கூட தேர்ச்சிபெற்றவராவதற்கு பெருமுயற்சி எடுக்க வேண்டும். இந்தப் பண்பின்பேரில் ஒவ்வொரு மாணாக்கரும் எந்தளவுக்கு ஆலோசனை கொடுக்கப்படுவார் என்பதை பள்ளி கண்காணி தீர்மானிக்க வேண்டும்.
3 சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான சப்தம். ஒரு பேச்சாளர் தான் பல்வேறு சூழ்நிலைகளில் பேசுவதை அறிந்தவராக இருக்க வேண்டும். இது அவருடைய பகுத்துணரும் ஆற்றலை விசாலப்படுத்தி, அவரை அதிக எளிதில் படியவைத்து, மிகவும் லாவகமாக கேட்போரை சென்றெட்டி அவர்களை பிடித்துநிறுத்தி வைக்கிறது.
4 நிலைமைகள் மன்றத்துக்கு மன்றமும் கேட்போரின் அளவிலும் வித்தியாசப்பட்டதாய் இருக்கின்றன. சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உங்கள் சப்தத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இராஜ்ய மன்றத்தில் ஒரு பேச்சை கொடுப்பது, புதிதாக அக்கறை காட்டும் நபரின் பகல்நேர அறையில் இருப்பதைவிட அதிக சப்தத்தைத் தேவைப்படுத்துகிறது. மேலுமாக, வெளி ஊழியத்துக்கான கூட்டத்தில் இருப்பது போல மன்றத்தின் முன்பகுதிக்கு அருகே ஒரு சிறிய தொகுதியிடமாக பேசுவது, ஓர் ஊழியக் கூட்டத்தில் இருப்பதை போல மன்றம் நிரம்பியிருக்கும்போது தேவைப்படுவதைக் காட்டிலும் குறைவான சப்தத்தையே தேவைப்படுத்தும்.
5 இந்த நிலைமைகளும்கூட, மாறுதலில்லாமல் இல்லை. திடீரென இரைச்சல்கள் வெளியிலிருந்தும் மன்றத்தின் உள்ளிருந்தும் எழும்புகின்றன. கடந்துசெல்லும் ஒரு கார், அருகில் ஓர் இரயில், விலங்குகளின் உரத்த ஒலிகள், பிள்ளைகளின் அழுகுரல், காலதாமதமான வருகை—இவை அனைத்தும் உங்கள் குரல் பலத்தில் ஒரு சரிப்படுத்தலைத் தேவைப்படுத்துகின்றன. அவற்றை உணர்ந்துகொண்டு சப்தத்தில் ஈடுசெய்ய தவறுவது ஏதாவது ஒன்றை, ஒருவேளை இன்றியமையாத ஒரு குறிப்பை தவறவிடும்படிச் செய்யலாம்.
6 அநேக சபைகள் குரலுக்கு ஒலிபெருக்கிச் சாதனத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதன் உபயோகத்துக்குக் கவனம் செலுத்தப்படாமல் சப்தம் அளவுக்கு அதிகமாக கூச்சலாகவும் பின்னர் சப்தமின்றியும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தால், இந்தச் சூழ்நிலைகளைக் கவனத்தில்கொள்ளத் தவறியதற்காக மாணாக்கருக்கு ஆலோசனை கொடுப்பது அவசியமாயிருக்கலாம். (ஒலிவாங்கி உபயோகத்தின்பேரில் படிப்பு 13-ஐ பார்க்கவும்.)
7 எப்போதாவது ஒரு பேச்சாளர் அவருடைய குரல் பண்பின் காரணமாக இந்தச் சப்தம் விஷயத்தில் தேர்ச்சிபெறுவதை கடினமாக காணலாம். இது உங்கள் பிரச்சினையாக இருந்து உங்கள் சப்தம் எடுத்துச்செல்வதாக இல்லாவிட்டால், ஆலோசனை கொடுக்கும்போது பள்ளி கண்காணி இதை கவனத்தில் கொள்வார். உங்கள் குரலை வளர்த்து அதை பலப்படுத்துவதற்கு உதவும் ஒருசில பயிற்சிகளை அல்லது ஒரு பயிற்றுவிப்பு திட்டத்தை அவர் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். இருந்தபோதிலும், குரல் பண்புதானே ஆலோசனைக்குத் தனியொரு குறிப்பாக இருக்கிறது, உங்கள் சப்தத்தைப் பற்றி சிந்திக்கையில் இதற்கு அழுத்தம் தரப்படாது.
8 ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒரே பேச்சில் நிதானித்துவிட முடியாது. எழக்கூடிய ஒவ்வொரு சாத்தியத்தின்மீதும் அல்ல, அப்போதைய பேச்சின்பேரில்தானே ஆலோசனை கொடுக்கப்பட வேண்டும். இருந்தபோதிலும், மாணாக்கர் அப்போது கொடுத்தப் பேச்சுக்காகப் பாராட்டப்பட்டு அவருடைய ஆலோசனைத் தாளில் “G” என்று குறிக்கப்பட்டாலும், தேவை இருப்பது போல் தோன்றினால், பள்ளி கண்காணி, வித்தியாசமானச் சூழ்நிலைகளின்கீழ் அவர் எதிர்ப்படக்கூடிய சாத்தியமான பிரச்சினைகளைப் பற்றி எச்சரிக்கலாம்.
9 ஒரு மாணாக்கர் தன்னுடைய சப்தம் போதுமானதாக இருக்கிறதா என்பதை எவ்வாறு தீர்மானிக்கலாம்? இதைக் கண்டறிய மிகச் சிறந்த ஒரு கருவி கேட்போர் பிரதிபலிப்பாகும். அனுபவமுள்ள ஒரு பேச்சாளர் தன்னுடைய முன்னுரையின்போது மன்றத்தின் பின்புறத்திலுள்ளவர்களை கூர்ந்து கவனிப்பார், பின்னர் அவர்களுடைய முகபாவனையிலிருந்தும் பொதுவான மனநிலையிலிருந்தும் அவர்களால் செளகரியமாக கேட்க முடிகிறதா என்பதைத் தீர்மானிக்கக்கூடியவராக இருந்து, அதற்கேற்ப தன்னுடைய சப்தத்தை மாற்றிக்கொள்கிறவராக இருப்பார். மன்றத்தின் “உணர்வை” அவர் புரிந்துகொண்டபட்சத்தில், அவருக்கு இனிமேலும் பிரச்சினை இராது.
10 மற்றொரு வழியானது அதே நிகழ்ச்சிநிரலில் மற்ற பேச்சாளர்களைக் கவனித்துப்பார்ப்பதாகும். அவர்கள் பேசுவதை எளிதில் கேட்கமுடிகிறதா? அவர்கள் எவ்வளவு சப்தத்தைப் பயன்படுத்துகின்றனர்? உங்களுடையதை அதற்கேற்ப சரிசெய்துகொள்ளுங்கள்.
11 பொருளுக்குப் பொருத்தமான சப்தம். சப்தம் பற்றிய நம்முடைய கலந்துரையாடலின் இந்த அம்சத்தைக் குரலில் ஏற்றத்தாழ்வோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. இப்பொழுது, நாம் வெறுமனே கலந்தாலோசிக்கப்படும் குறிப்பிட்ட பொருளுக்கு சப்தத்தைப் பொருத்துவதில்தானே அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம். உதாரணமாக, வேதாகமத்திலிருந்து கண்டன அறிவிப்புகள் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தால், மாணாக்கர் சகோதரர்கள் மத்தியில் அன்பின்பேரில் ஆலோசனையை வாசித்துக்கொண்டிருக்கையில் செய்வதைவிட தெளிவாகவே சப்தம் வித்தியாசமாக கட்டுப்படுத்தப்படும். மேலும் ஏசாயா 36:11-ஐ வசனங்கள் 12 மற்றும் 13-உடன் ஒப்பிட்டு இந்தக் கூற்றுகள் பேசப்பட்ட விதத்தில் என்ன வித்தியாசங்கள் இருந்திருக்கும் என்பதைக் கவனியுங்கள். சப்தம் பொருளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும், ஆனால் அது ஒருபோதும் அளவுக்கு அதிகமாகச் செய்யப்படக்கூடாது.
12 எவ்வளவு சப்தத்தைப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கையில், உங்கள் பொருளையும் உங்கள் நோக்கத்தையும் கூர்ந்து ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கேட்போர் கூட்டத்தின் சிந்தனையை நீங்கள் மாற்ற விரும்பினால், அளவுக்கு அதிகமான சப்தத்தினால் அவர்களைத் துரத்திவிடாதீர்கள். இருந்தபோதிலும், அவர்களை உற்சாகமான நடவடிக்கைக்கு ஊக்கப்படுத்த நீங்கள் விரும்பினால், ஒருவேளை சப்தம் பலமாக இருக்கலாம். பொருள் பலத்தைக் கேட்பதாக இருந்தால், மிகவும் மெதுவாகப் பேசி அதை பலவீனப்படுத்திவிடாதீர்கள்.
***********
13 உங்கள் பேச்சைக் கொடுக்கையில், சரியான இடங்களில் நிறுத்தம், போதுமான சப்தத்தைப் போலவே ஏறக்குறைய அதே அளவு முக்கியமாக இருக்கிறது. அவை இல்லாவிடில், கூற்றுகளின் கருத்து சுலபமாக தெளிவற்றதாகிவிட, உங்கள் கேட்போர் நினைவில் வைத்திருக்கவேண்டிய பிரதான குறிப்புகள் நிலையாகப் பதிய தவறிவிடுகின்றன. நிறுத்தங்கள் தன்னம்பிக்கையையும் நிதானத்தையும் உங்களுக்கு அளித்து, மேம்பட்ட சுவாச கட்டுப்பாட்டுக்கு இடமளித்து, பேச்சின் கடினமான கட்டங்களில் மன அமைதியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. நிலைமையை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும், அநாவசியமாக கலவரமடையாதிருப்பதையும், உங்கள் கேட்போர் கூட்டத்தைக் கருத்தில் கொண்டிருப்பதையும், அவர்கள் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற ஏதோவொன்று உங்களிடம் இருப்பதையும் நிறுத்தங்கள் கேட்போர் கூட்டத்துக்குக் காண்பிக்கின்றன.
14 தொடக்க நிலையிலிருக்கும் ஒரு பேச்சாளர் நேரத்தை வீணாக்காமல் பலன்தரத்தக்கவிதமாக நிறுத்தும் திறமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முதலாவது, நீங்கள் சொல்ல வேண்டியது முக்கியமானது மற்றும் அது நினைவில் வைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவதைக் குறித்து உறுதியாக நம்ப வேண்டும். தன் பிள்ளையைத் திருத்தும்போது ஒரு தாய் சில சமயங்களில் அவனுடைய கவனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தன் கருத்தை எடுத்துரைப்பதற்கு முன்பாக பீடிகைபோட்டு பேசுவாள். பிள்ளை முழு கவனத்தையும் கொடுக்கும்வரையாக அவள் வேறு ஒரு வார்த்தையையும்கூட பேசமாட்டாள். பின்னர் அவள் தன் மனதிலிருப்பதைச் சொல்லுவாள். பிள்ளை தான் சொல்வதை அசட்டை செய்யமாட்டான் என்பதையும் அது நினைவில் வைக்கப்படும் என்பதையும் உறுதிசெய்துகொள்ள அவள் விரும்புகிறாள்.
15 சில ஆட்கள் அன்றாட பேச்சிலும்கூட ஒருபோதும் நிறுத்தம் செய்வது கிடையாது. அது உங்கள் பிரச்சினையாக இருக்குமானால், வெளி ஊழியத்தில், உங்கள் ஊழியத்தின் பலன்தரத்தக்க தன்மையை முன்னேற்றுவிப்பதற்கு இந்தப் பண்பை நீங்கள் வளர்க்க விரும்புவீர்கள். அங்கே நம்முடைய பேச்சு உரையாடல் வடிவத்தில் இருக்கிறது. உங்கள் வீட்டுக்காரர் குறுக்கிடாமல் ஆனால் செவிகொடுத்துக் காத்திருக்கும் வகையில் நிறுத்தம் கொடுப்பதற்கு, சரியான வகையான நிறுத்தம் தேவையாக இருக்கிறது. ஆனால் உரையாடலில் நிறுத்த திறமையும் தேர்ச்சியும், மேடையிலிருந்து செய்யப்படும் திறமையில் இருப்பதைப் போலவே, இன்றியமையாததாயும் பலனளிப்பதாயும் இருக்கிறது.
16 ஒரு சொற்பொழிவில் நிறுத்தத்தின் சரியான உபயோகம் சம்பந்தமாக ஒரு வினைமையான பிரச்சினை, அளவுக்கு அதிகமான பொருளைக் கொண்டிருப்பதாகும். இதைத் தவிர்க்கவும். நிறுத்தங்களுக்கு நேரத்தை அனுமதிக்கவும்; அவை இன்றியமையாததாகும்.
17 நிறுத்தக்குறிகளுக்காக நிறுத்தம். நிறுத்தக்குறிகளுக்காக நிறுத்தம் என்பதற்கு வெறுமனே எண்ணங்களின் தெளிவுக்காக என்பதே பொருள்; சம்பந்தப்பட்ட கருத்துக்களை முனைப்பாக தோன்றும்படிச் செய்ய; சொற்றொடர்கள், வாக்கிய உட்பிரிவுகள், வாக்கியங்கள் மற்றும் பாராக்களின் முடிவுகளைக் காட்டுவதற்கு. சொல்லிறுதியில் மாறுதல் செய்வதன் மூலம் அடிக்கடி இப்படிப்பட்ட மாற்றங்களைக் காட்டமுடியும். ஆனால் நிறுத்தங்கள், சொல்லப்படுவதற்கு வாய்மொழியில் நிறுத்தக்குறிகளைக் கொடுப்பதற்கும்கூட பலன்தரத்தக்கதாக இருக்கின்றன. காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும் வாக்கியப் பிரிவுகளில் வித்தியாசமான முக்கியத்துவத்தை உடையதாக இருப்பது போல, நிறுத்தங்களும் அவற்றின் உபயோகத்தில் வித்தியாசப்பட்டதாக இருக்க வேண்டும்.
18 தவறான இடங்களில் நிறுத்தங்கள் ஒரு வாக்கியத்தின் எண்ணத்தையே முழுவதுமாக மாற்றிடக்கூடும். இதற்கு ஓர் உதாரணத்தை லூக்கா 23:43-லுள்ள (NW) இயேசுவின் வார்த்தைகளில் காணமுடியும், “மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன் இன்று, என்னுடனேகூட நீ பரதீசிலிருப்பாய்.” காற்புள்ளி அல்லது நிறுத்தம் “சொல்லுகிறேன்,” என்பதற்கும் “இன்று” என்பதற்கும் இடையே இருந்தால், முற்றிலும் வித்தியாசமான ஓர் எண்ணம் கிடைக்கும், இந்த வசனம் பொதுவாக தவறாக அர்த்தஞ்சொல்லப்படுவதிலிருந்து இதை காணமுடிகிறது. ஆகவே கருதப்பட்ட எண்ணத்தை எடுத்துச்சொல்ல சரியான நிறுத்தம் அத்தியாவசியமாகும்.
19 வாசிக்கையில் எழுத்துருவிலுள்ள எல்லா நிறுத்தக்குறிகளையும் கூர்ந்து கவனிப்பதன் மூலம் சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றும் பேச்சில், வாய்மொழியில் நிறுத்தக்குறிகளை உபயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள். எழுதப்பட்ட நிறுத்தக்குறிகளில், சிலசமயங்களில் வாசிக்கும்போது கவனியாமல் விடப்படக்கூடிய ஒரே நிறுத்தக்குறி காற்புள்ளியாகும். ஒரு காற்புள்ளி இருக்குமிடத்தில் நிறுத்துவதா வேண்டாமா என்பது அநேகமாக தெரிவுசெய்யப்படக்கூடிய ஒன்றாகும். ஆனால் அரைப்புள்ளிகள், முற்றுப்புள்ளிகள், மேற்கோள் குறிகள், மேலும் பாரா பிரிவுகள் ஆகிய அனைத்தும் கவனிக்கப்பட வேண்டும்.
20 உரையை அல்லது பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசிக்கையில், பிரதியில் குறித்துக்கொள்வது பிரயோஜனமாயிருப்பதை நீங்கள் காணலாம். ஒரு சுருக்கமான நிறுத்தம் (ஒருவேளை வெறும் ஒரு தாமதம்) புகுத்தப்படவேண்டிய இடத்தில் சொற்றொடர்களுக்கிடையே ஒரு சிறிய நேர்கோட்டை வரைந்துகொள்ளுங்கள்; நீளமான நிறுத்தத்துக்கு இரண்டு கோடுகள் அல்லது ஒரு “X.”
21 வாசித்துப் பழகும்போது சில வாக்கியங்கள் உங்களுக்கு விகாரமாகவும் மீண்டும் மீண்டும் தவறான இடங்களில் நீங்கள் நிறுத்துவது உங்களுக்குத் தெரிந்தால், ஒரு சொற்றொடரை உண்டுபண்ணும் எல்லா வார்த்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து இணைக்கும் குறிகளை பென்சிலில் வரைந்துகொள்ளலாம். பின்னர், நீங்கள் வாசிக்கையில், ஒன்றாகச் சேர்த்து சுழிக்கப்பட்டதில் கடைசி வார்த்தைக்கு வரும்வரையாக நிறுத்தவோ தயங்கவோ வேண்டாம். அனுபவமுள்ள அநேக பேச்சாளர்கள் இதைச் செய்கின்றனர்.
22 கருத்து மாற்றத்துக்காக நிறுத்தம். ஒரு பிரதான குறிப்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுகையில், ஒரு நிறுத்தமானது கேட்போர் சிந்திப்பதற்கு வாய்ப்பளிக்கிறது. தவிர, இது தவறாகப் புரிந்துகொள்வதை தவிர்க்கிறது. செல்லும் போக்கின் மாற்றத்தை உணர்ந்துகொண்டு அளிக்கப்படும் புதிய கருத்து விரிவாக்கப்படுவதை பின்பற்ற தன்னைச் சரிசெய்துகொள்ள மனதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. ஒரு வண்டி ஓட்டுநர் திரும்புவதற்காக வேகத்தைக் குறைப்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ, அதே போன்றே பேச்சாளர் கருத்து மாற்றத்துக்காக நிறுத்தம் செய்வதும் முக்கியமாகும்.
23 சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் ஒரு பேச்சில், பிரதான குறிப்புகளிடையே நிறுத்தத்தை அனுமதிக்கும் வகையில் குறிப்புத்தாளில் பொருள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இது பேச்சின் தொடர்ச்சியில் அல்லது கோர்வையில் குறுக்கிடவேண்டிய அவசியமில்லை, ஆனால் தனிப்பட்ட ஒரு குறிப்பை உச்சக்கட்டத்துக்கு படிப்படியாகக் கொண்டுசென்று, நிறுத்தம் கொடுத்து பின்னர் ஒரு புதிய கருத்துக்குச் செல்லும் வகையில் எண்ணங்கள் நன்றாக முறைப்படுத்திக் கூறப்பட்டிருக்க வேண்டும். அவசியமானால், உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கு இப்படிப்பட்ட உச்சக்கட்டங்களும் மாற்றங்களும் குறிப்புத்தாளிலும்கூட குறித்து வைக்கப்படலாம்.
24 கருத்து மாற்றத்துக்கான நிறுத்தங்கள் பொதுவாக நிறுத்தக்குறிகளுக்கான நிறுத்தத்தைவிட நீளமாக இருக்கின்றன; என்றபோதிலும், ஒரு பேச்சில் நீண்ட நிறுத்தங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது அல்லது பேச்சு மெல்ல இழுத்துச்செல்வதாக இருக்கும். தவிர, அவை பாதிக்கப்பட்டது போல தொனிக்கும் வாய்ப்பிருக்கிறது.
25 அழுத்தத்துக்காக நிறுத்தம். அழுத்தத்துக்காக நிறுத்தம் பொதுவாக ஒரு நாடகபாணியான நிறுத்தமாக இருக்கிறது. அது எதிர்பார்ப்பை உருவாக்குகிறது அல்லது கேட்போர் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
26 முக்கியமான ஒரு குறிப்புக்கு முன்பாக நிறுத்துவது எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அதற்கு பின்னர் கொடுக்கப்படும் நிறுத்தம் கருத்தின் முழு முக்கியத்துவமும் ஆழ்ந்து பதிவதற்கு இடமளிக்கிறது. நிறுத்தத்தின் இந்த இரண்டு பயன்களும் ஒன்றேயல்ல, ஆகவே குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் எது அதிக பொருத்தமாக இருக்கும் அல்லது இரண்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
27 அழுத்தத்திற்காக நிறுத்தங்கள் மிக அதிக குறிப்பிடத்தக்க கூற்றுகளுக்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், மற்றபடி அவற்றின் மதிப்பு இழக்கப்பட்டுவிடும்.
28 சூழ்நிலைகள் தேவைப்படுத்தும்போது நிறுத்தம். தடங்கல்கள் அநேகமாக ஒரு பேச்சாளர் கணநேரம் நிறுத்துவதை தேவைப்படுத்துகின்றன. தடை அளவுக்கு அதிகமாக கடுமையாக இல்லாவிட்டால், உங்கள் சப்தத்தை உயர்த்தி தொடர்ந்து பேசலாம் என்றால், பொதுவாக இதுவே மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால் தடை, பேச்சோடு முழுமையாக குறுக்கிடுவதற்குப் போதுமானதாக இருந்தால், நீங்கள் நிறுத்த வேண்டும். உங்கள் கரிசனையை கேட்போர் கூட்டம் போற்றுவார்கள். தவிர, அநேக தடவைகள் அவர்கள் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டில்லை, ஏனென்றால் தற்காலிகமான தடை கவனத்தைத் திசைதிருப்பிவிட்டிருக்கிறது. ஆகவே கேட்போர் கூட்டத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் நல்ல காரியங்களின் முழுப் பயனை அவர்கள் பெற்றுக்கொள்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள நிறுத்தத்தை பலன்தரத்தக்க விதத்தில் பயன்படுத்துங்கள்.
[கேள்விகள்]
1, 2. நாம் ஏன் போதிய அளவு சப்தமாக பேச வேண்டும்?
3-10. நாம் பயன்படுத்த வேண்டிய சப்தத்தின் அளவை தீர்மானிக்க என்ன சூழ்நிலைகள் உதவிசெய்கின்றன?
11, 12. பொருளுக்குப் பொருத்தமான சப்தத்தைக்கொண்டிருப்பது ஏன் அத்தியாவசியமானது?
13-16. நிறுத்தத்தின் மதிப்பைச் சுட்டிக்காட்டவும்.
17-21. நிறுத்தக்குறிகளுக்காக நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கவும்.
22-24. கருத்து மாற்றத்துக்காக நிறுத்துவது ஏன் அவசியமாக இருக்கிறது?
25-28. ஒரு குறிப்பை அழுத்திக்கூறவும் அமைதியைக் குலைக்கும் சூழ்நிலைகளை சமாளிக்கவும் நிறுத்தம் எவ்விதமாக நமக்கு உதவி செய்கிறது என்பதைக் காட்டவும்.