அதிகாரம் 10
ஒரு குஷ்டரோகி கடவுளுக்கு நன்றி செலுத்தினான்
உன் அம்மா இன்று உனக்கு நல்ல சாப்பாடு செய்து கொடுத்தார்களா? — அவர்கள் பங்கில் இது எவ்வளவு அன்பைக் காட்டுகிறது அல்லவா? — நீ அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தாயா? — மற்றவர்கள் நமக்கு அன்பான காரியங்களைச் செய்யும்போது, நாம் அவர்களுக்கு “நன்றி” சொல்ல சில சமயங்களில் மறந்துவிடுகிறோம் அல்லவா? பெரிய போதகர் பூமியில் இருக்கையில், “நன்றி” சொல்ல மறந்துவிட்ட குஷ்டரோகிகள் இருந்தனர்.
குஷ்டரோகி என்றால் யார் என்று உனக்குத் தெரியுமா? — குஷ்டரோகி எனப்படுகிறவன் குஷ்டரோகம் என்று அழைக்கப்படுகிற நோயை உடைய ஓர் ஆள் ஆவான். இந்த நோயானது ஓர் ஆளின் தசையின் சில பாகம் அழுகி விழுந்து விடும்படியுங்கூட செய்யக்கூடும். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, குஷ்டரோகிகள் மற்ற ஆட்களை விட்டு தூரமாய் விலகி வாழ்ந்திருக்க வேண்டியதாக இருந்தது. மற்றொரு ஆள் வருவதை ஒரு குஷ்டரோகி காண்பானானால், ‘நான் குஷ்டரோகி, தூர நில்லும்!’ என்று அவன் சத்தமிட்டு சொல்ல வேண்டும். மற்றப்படி, அந்தக் குஷ்டரோகியின் நோய் அவர்களுக்கு ஒட்டிக்கொள்ளக்கூடும்.
இயேசு குஷ்டரோகிகளிடம் வெகு தயவுடன் இருந்தார். ஒரு நாள் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கையில், ஒரு சிறிய பட்டணத்திற்கு அருகில் வந்தார். பத்துக் குஷ்டரோகிகள் அவரைப் பார்க்க வந்தார்கள்.
இந்தக் குஷ்டரோகிகள் இயேசுவுக்கு அருகில் வரவில்லை. அவர்கள் தூரத்திலேயே நின்றார்கள். ஆனால் இயேசு எல்லா வகையான நோய்களையும் சுகமாக்க கடவுளிடத்திலிருந்து வல்லமையைப் பெற்றிருந்தார் என்று அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆகவே, ‘இயேசுவே, போதகரே, எங்களுக்கு உதவி செய்யும்!’ என்று அவரை நோக்கிச் சத்தமிட்டார்கள்.
நோயுற்றிருக்கும் ஆட்களுக்காக நீ விசனப்படுகிறாயா? — இயேசு விசனப்பட்டார். குஷ்டரோகியாக இருப்பது எவ்வளவு விசனமான காரியம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்து: ‘போய் கடவுளுடைய ஆசாரியர்களிடம் உங்களைக் காட்டுங்கள்,’ என்று கூறினார்.
இவ்விதம் செய்யும்படி இயேசு ஏன் அவர்களுக்குச் சொன்னார்? — தம்முடைய ஜனத்துக்கு யெகோவா கொடுத்திருந்த அந்தச் சட்டத்தின் காரணமாக அப்படிச் செய்யும்படி சொன்னார். கடவுளுடைய ஆசாரியன் குஷ்டரோகியின் தசையைப் பார்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கூறியது. அவனுடைய நோய் முற்றிலும் அவனைவிட்டு நீங்குகையில் ஆசாரியன் அதைக் குஷ்டரோகியாக இருந்தவனுக்குச் சொல்லுவான். அப்பொழுது அவன், நோயில்லாத ஆட்களோடுகூட மறுபடியும் வாழ்ந்து வரலாம்.—லேவியராகமம் 13:16, 17.
ஆனால் இந்தப் பத்துக் குஷ்டரோகிகளுக்கு இன்னும் அவர்களுடைய நோய் இருந்துகொண்டிருந்தது. ஆகவே, இயேசு சொன்னபடி இவர்கள் ஆசாரியனைப் போய் பார்ப்பார்களா? — ஆம், அவர்கள் உடனே அப்படிச் செய்தார்கள், இயேசு தங்கள் நோயை நீக்கிப்போடுவார் என்று இந்த மனிதர் நம்பியிருந்திருக்க வேண்டும்.
என்ன நடந்தது? — அவர்கள் ஆசாரியனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கையில் அவர்களுடைய நோய் அவர்களை விட்டு நீங்கியது. அவர்களுடைய தசை குணமடைந்தது. அவர்கள் சுகமாக்கப்பட்டார்கள்! இயேசுவின் வல்லமையில் இருந்த அவர்களுடைய நம்பிக்கை பலனளிக்கப்பட்டது. ஆ, அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷ உணர்ச்சி உண்டாயிற்று!
ஆனால், இப்பொழுது, தங்கள் நன்றியுணர்வைக் காட்ட அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீ என்ன செய்திருப்பாய்? —
சுகமாக்கப்பட்ட மனிதரில் ஒருவன் இயேசுவினிடம் திரும்பிவந்தான். அவன் யெகோவாவுக்கு மகிமை செலுத்த ஆரம்பித்து, கடவுளைப்பற்றிய நல்ல காரியங்களைச் சொன்னான். இது செய்யவேண்டிய சரியான காரியமாயிருந்தது, ஏனென்றால் அவனைச் சுகமாக்குவதற்கான அந்த வல்லமை கடவுளிடத்திலிருந்து வந்தது. மேலும் அந்த மனிதன் பெரிய போதகரின் பாதங்களில் விழுந்து அவருக்கும் நன்றி செலுத்தினான். இயேசு செய்த காரியத்திற்கு அவன் மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தான்.
ஆனால் அந்த மற்ற ஒன்பது ஆட்களைப் பற்றியதென்ன? இயேசு பின்வருமாறு கேட்டார்: ‘சுகமாக்கப்பட்டவர்கள் பத்து குஷ்டரோகிகள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளுக்கு மகிமை செலுத்த ஒருவன் மாத்திரமே திரும்பி வந்தானா?’
ஆம், அது உண்மையே. அந்தப் பத்துக் குஷ்டரோகிகளில் ஒருவன் மாத்திரமே கடவுளுக்கு மகிமை செலுத்தினான், இயேசுவுக்கு நன்றி தெரிவிக்கத் திரும்பி வந்தான். இந்த மனிதன் ஒரு சமாரியனாயிருந்தான், வேறொரு நாட்டிலிருந்து வந்த ஒரு மனிதனாயிருந்தான். அந்த மற்ற ஒன்பது பேரும் கடவுளுக்கும் நன்றிசொல்லவில்லை; இயேசுவுக்குங்கூட நன்றி சொல்லவில்லை.—லூக்கா 17:11-19.
இந்த மனிதரில் யாரைப்போல் நீ இருக்கிறாய்? — நாம் இருவரும் அந்த சமாரிய மனிதனைப்போல் இருக்க விரும்புகிறோம் அல்லவா? — ஆகவே, எவராவது நமக்கு ஏதாவது தயவான காரியம் செய்கையில், நாம் என்ன செய்ய ஞாபகமாய் இருக்கவேண்டும்? — நாம் நம்முடைய நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
ஆட்கள் அநேகத் தடவைகளில் “நன்றி” சொல்ல மறந்துவிடுகின்றனர். ஆனால் “நன்றி” சொல்வது நல்லது. அது செய்யவேண்டிய சரியான காரியம். அதை நீ செய்கையில், யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசுவும் மகிழ்ச்சியடைகின்றனர்.
நீ இதைப்பற்றி யோசித்துப் பார்ப்பாயானால், ஆட்கள் உனக்குப் பல காரியங்களைச் செய்திருக்கின்றனர் என்பது உன் நினைவிற்கு வரும். நீ என்றாவது நோயுற்றிருந்தது உனக்கு நினைவிருக்கிறதா? — அந்தப் பத்துக் குஷ்டரோகிகளைப் போல் நீ அவ்வளவு அதிகமாய் ஒருபோதும் நோயுற்று இருந்திருக்கமாட்டாய். ஆனால் ஒருவேளை உனக்கு அதிக சளிப்பிடித்திருந்திருக்கலாம், அல்லது வயிற்று வலி ஏற்பட்டிருந்திருக்கலாம். உன் அம்மாவாவது அப்பாவாவது உன்னைக் கவனித்துக் கொண்டார்களா? — நீ சுகமாகும்படி அவர்கள் உனக்கு உதவி செய்ததற்காக நீ சந்தோஷமுள்ளவனாக இருக்கிறாயா? —
தன்னைச் சுகமாக்கினதற்காக அந்த சமாரியன் இயேசுவுக்கு நன்றி தெரிவித்தான், அது இயேசுவுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. அப்பாவும் அம்மாவும் உனக்குப் பல காரியங்களைச் செய்கையில் நீ “உங்களுக்கு நன்றி” என்று சொல்வாயானால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறாயா? — ஆம், நிச்சயமாக சந்தோஷப்படுவார்கள்.
சில சமயங்களில் ஆட்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் ஏதோ காரியங்களைச் செய்கின்றனர். அது ஒருவேளை அவர்களுடைய வேலையாக இருக்கலாம். அதைச் செய்ய அவர்கள் சந்தோஷப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிடக்கூடும்.
நீ பல காரியங்களைக் கற்றுக்கொள்ளும்படி உனக்கு உதவி செய்ய உன் பள்ளி உபாத்தினி கடினமாய் உழைக்கக்கூடும். இது அவர்களுடைய வேலை. ஆனால் நீ கற்றுக்கொள்ளும்படி உனக்கு உதவி செய்ததற்காக நீ அவர்களுக்கு நன்றி சொல்வாயானால் அவர்களுக்குச் சந்தோஷமாயிருக்கும்.
சில சமயங்களில் ஆட்கள் சிறிய காரியங்களை உனக்குச் செய்கிறார்கள். எவராவது எப்பொழுதாவது உனக்குக் கதவைத் திறந்து பிடிக்கிறார்களா? — அல்லது சாப்பாட்டு மேசையில் உணவை உனக்கு எடுத்துக்கொடுக்கிறார்களா? — இந்தச் சிறிய காரியங்களுக்காகவுங்கூட “நன்றி” சொல்லுவது நல்லது.
பூமியிலுள்ள மனிதருக்கு “நன்றி” சொல்ல நாம் நினைவுகூருவோமானால் அப்பொழுது பரலோகத்திலுள்ள நம்முடைய தகப்பனுக்கு “நன்றி” சொல்லவும் நாம் அநேகமாய் மறக்க மாட்டோம். யெகோவாவுக்கு நன்றி சொல்வதற்கு ஆ, எவ்வளவு காரியங்கள் இருக்கின்றன! அவர் நமக்கு நம்முடைய உயிரையும், வாழ்க்கையை இன்பகரமாக்கக்கூடிய எல்லா நல்ல காரியங்களையும் கொடுத்தார். ஆகவே ஒவ்வொரு நாளும் அவரைப்பற்றி நல்ல காரியங்களைச் சொல்வதன்மூலம் கடவுளுக்கு மகிமை செலுத்த நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது.
(நன்றி தெரிவிப்பதைக் குறித்து, சங்கீதம் 92:1 [91:1, டூ.வெ.]; எபேசியர் 5:20 ஆகியவற்றையும் வாசியுங்கள்.)