பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்
இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கூறினார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம், பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) மேலும் அவர் “ராஜ்யத்தின் நற்செய்தியைப்”பற்றி இடைவிடாமல் பேசினார். (மத்தேயு 4:23) உண்மையில், வேறு எதையும்விட ராஜ்யத்தைப் பற்றியே அவர் அதிகம் பேசினார். ஏன்? ஏனென்றால், இன்று வாழ்க்கையை அவ்வளவு கடினமாக்குகிற பிரச்னைகளைத் தீர்க்க கடவுள் இந்த ராஜ்யத்தையே கருவியாகப் பயன்படுத்துவார். இந்த ராஜ்யத்தின் மூலமாகவே, போர்கள், பசி, நோய், குற்றச் செயல்கள் ஆகியவற்றைக் கடவுள் சீக்கிரத்தில் ஒழித்துக்கட்டி, ஒற்றுமையையும் சமாதானத்தையும் கொண்டுவருவார்.
இப்படிப்பட்ட ஓர் உலகத்தில் வாழ நீங்கள் விரும்புவீர்களா? அப்படியானால், நீங்கள் இந்தச் சிறு புத்தகத்தை வாசிக்கவேண்டும். இதில், ராஜ்யம் ஓர் அரசாங்கம் என்றும், ஆனால் மனிதவர்க்கத்தின்மேல் ஆண்ட எந்த அரசாங்கத்தைப் பார்க்கிலும் இது மேம்பட்டதென்றும் நீங்கள் கற்றறிவீர்கள். இந்த ராஜ்யத்தைப் பற்றிய தம்முடைய நோக்கங்களைக் கடவுள், படிப்படியாய்த் தம்முடைய ஊழியருக்கு விளக்கின உணர்ச்சியார்வம் ஊட்டுகிற முறையையும் நீங்கள் காண்பீர்கள். அதோடு, இன்றுங்கூட இந்த ராஜ்யம் எப்படி உங்களுக்கு உதவி செய்யக் கூடுமென்பதையும் நீங்கள் காண்பீர்கள்.
உண்மையில், இப்போதே நீங்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமகனாகக் கூடும். ஆனால் இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, அதைப்பற்றி நீங்கள் மேலுமதிகம் அறிய வேண்டும். ஆகவே இந்தச் சிறு புத்தகத்தை ஆராய்ந்து பார்க்க நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம். இந்த ராஜ்யத்தைப் பற்றி இது உங்களுக்கு அறிவிக்கும் ஒவ்வொன்றும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது.
முதலாவதாக, கடவுளுடைய ராஜ்யம் நமக்கு ஏன் அவ்வளவு அதிகம் தேவைப்படுகிறதென்பதைக் காணலாம்.
மனித சரித்திரத்தின் தொடக்கத்தில், கடவுள் மனிதனைப் பரிபூரணமாய் உண்டாக்கி ஒரு பரதீஸில் (தோட்டத்தில்) வைத்தார். அந்தச் சமயத்தில் ராஜ்யம் தேவையாக இல்லை.
என்றபோதிலும், நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும், ஒரு கலகக்கார தூதனாகிய சாத்தானுக்குச் செவிகொடுத்தார்கள். அவன், கடவுளைப் பற்றிப் பொய்களை அவர்களுக்குச் சொல்லி, அவர்களுங்கூட கடவுளுக்கு விரோதமாகக் கலகஞ்செய்யும்படி தூண்டினான். இவ்வாறு அவர்கள் சாவதற்குத் தகுதியுள்ளவர்களானார்கள், ஏனென்றால் “பாவத்தின் சம்பளம் மரணம்.”—ரோமர் 6:23.
அபூரண, பாவமுள்ள மனிதன் பரிபூரண பிள்ளைகளைப் பிறப்பிக்க முடியாது. ஆகவே ஆதாமின் பிள்ளைகள் எல்லாரும் அபூரணராகவும், பாவிகளாகவும், மரிக்கிறவர்களாகவும் பிறந்தார்கள்.—ரோமர் 5:12.
அதுமுதற்கொண்டு, பாவ, மரண சாபத்திலிருந்து விடுதலையாகும்படி மனிதருக்கு உதவிசெய்ய கடவுளுடைய ராஜ்யம் அவர்களுக்குத் தேவையாயிருந்தது. மேலும் கடவுளுடைய பெயருக்கு விரோதமாகச் சாத்தான் சொன்ன பொய்களையும் கடவுளுடைய ராஜ்யம் அதன்மீதிருந்து அகற்றி உண்மையை நிரூபிக்கும்.
மனிதவர்க்கத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்கு ஒரு விசேஷித்த “வித்து” (அல்லது சந்ததி) பிறப்பிக்கப்படுமென்று யெகோவா தேவன் வாக்கு கொடுத்தார். (ஆதியாகமம் 3:15) இந்த “வித்து” கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இருப்பார். அவர் யார்?
ஆதாம் பாவம் செய்து ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்குப் பின்பு, ஆபிரகாம் என்ற பெயருடைய மிக உண்மையுள்ள ஒரு மனிதன் வாழ்ந்திருந்தான். யெகோவா ஆபிரகாமிடம், அவன் தன் சொந்த நகரத்தை விட்டு வெளியேறி பலஸ்தீனா தேசத்தில் கூடாரங்களில் வாழும்படி சொன்னார்.
யெகோவா சொன்ன எல்லாவற்றையும் ஆபிரகாம் செய்தான், இதில் மிகக் கடினமான ஒரு காரியமும் உட்பட்டிருந்தது. தன்னுடைய மகனாகிய ஈசாக்கை ஒரு பலிபீடத்தின்மேல் பலியிடும்படி யெகோவா அவனுக்குச் சொன்னார்.
ஒரு மனித பலியை யெகோவா உண்மையில் விரும்பவில்லை. ஆனால் தம்மை ஆபிரகாம் எவ்வளவாக நேசித்தான் என்பதை அவர் அறிய விரும்பினார். ஆபிரகாம் ஈசாக்கைக் கொல்லும் தறுவாயில் யெகோவா அவனைத் தடுத்து நிறுத்தினார்.
ஆபிரகாமின் பெரும் விசுவாசத்தின் காரணமாக பலஸ்தீனா தேசத்தை அவனுடைய சந்ததிக்குக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்து, வாக்குபண்ணப்பட்ட வித்து அவனுடைய வம்சாவழியிலும், அவனுடைய குமாரனாகிய ஈசாக்கின் மூலமாயும் வரும் என்று கூறினார்.—ஆதியாகமம் 22:17, 18; 26:4, 5.
ஏசா, யாக்கோபு என்ற இரட்டைக் குமாரர்கள் ஈசாக்குக்குப் பிறந்தார்கள். வாக்குபண்ணப்பட்ட வித்து யாக்கோபின் மூலமாய் வரும் என்று யெகோவா சொன்னார்.—ஆதியாகமம் 28:13-15.
இஸ்ரவேல் என்று யெகோவா பெயர்கொடுத்த யாக்கோபுக்கு 12 குமாரர்கள் பிறந்தார்கள், கடைசியாக இவர்கள் எல்லாருக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள். ஆகவே ஆபிரகாமின் பிள்ளைகள் பெருகத் தொடங்கினார்கள்.—ஆதியாகமம் 46:8-27.
அந்தப் பகுதியில் கடுமையான பஞ்சம் உண்டானபோது, யாக்கோபும் அவனுடைய குடும்பமும், எகிப்தின் அரசனாயிருந்த பார்வோனின் வரவழைப்பை ஏற்று எகிப்துக்குச் சென்று குடியேறினார்கள்.—ஆதியாகமம் 45:16-20.
எகிப்தில், இந்த வாக்குபண்ணப்பட்ட வித்து யாக்கோபின் குமாரனாகிய யூதாவின் சந்ததியாக இருப்பார் என்று வெளிப்படுத்தப்பட்டது.—ஆதியாகமம் 49:10.
கடைசியாக யாக்கோபு மரித்தான், அவனுடைய சந்ததி எண்ணிக்கையில் பெருகிக்கொண்டிருந்து முடிவில் ஒரு தேச ஜனம் போலானார்கள். அப்பொழுது எகிப்தியர் அவர்களைக் குறித்து பயமடைந்து அவர்களை அடிமைகளாக்கினார்கள்.—யாத்திராகமம் 1:7-14.
கடைசியாக யெகோவா, இஸ்ரவேல் புத்திரரை விடுதலையாக்கி அனுப்பிவிடும்படி அக்காலத்துப் பார்வோனை அதிகாரத்துடன் கேட்க, மிக உண்மையுள்ள மனிதனாகிய மோசேயை அனுப்பினார்.—யாத்திராகமம் 6:10,11.
பார்வோன் மறுத்தான், ஆகவே யெகோவா எகிப்தியர்மேல் பத்து வாதைகளைக் கொண்டுவந்தார். கடைசி வாதையாக, எகிப்தின் முதற்பேறான குமாரர்கள் யாவரையும் கொல்லும்படி சங்காரத் தூதனை அவர் அனுப்பினார்.—யாத்திராகமம், 7-12 அதிகாரங்கள்.
இஸ்ரவேலர் தங்கள் இராப் போஜனத்துக்கு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தங்கள் வாசல் நிலைக்கால் சட்டங்களில் பூசுவார்களேயானால், சங்காரத் தூதன் அவர்களுடைய வீடுகளை விட்டுக் கடந்து போவான் என்று கடவுள் இஸ்ரவேலருக்குச் சொன்னார். இவ்வாறு இஸ்ரவேலரின் முதற்பேறானவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.—யாத்திராகமம் 12:1-35.
இதன் பலனாக, பார்வோன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியேறும்படி கட்டளையிட்டான். பின்னால் அவன் தன் மனதை மாற்றி அவர்களைத் திருப்பிக் கொண்டுவரும்படி பின்தொடர்ந்து பிடிக்கச் சென்றான்.
இஸ்ரவேலர் தப்பிச் செல்வதற்கு யெகோவா சிவந்த சமுத்திரத்தினூடே ஒரு வழியைத் திறந்தார். பார்வோனும் அவனுடைய சேனைகளும் அவர்களைப் பின்தொடர முயன்றபோது, அவர்கள் மூழ்க்கடிக்கப்பட்டார்கள்.—யாத்திராகமம் 15:5-21.
வனாந்தரத்தில் சீனாய் என்ற பெயருடைய மலைக்கு யெகோவா இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தினார். அங்கே, அவர் தம்முடைய நியாயப்பிரமாணத்தை அவர்களுக்குக் கொடுத்து, அதை அவர்கள் கைக்கொண்டால், அவர்கள் ஓர் ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜனமுமாவார்கள் என்று சொன்னார். இவ்வாறு, காலப் போக்கில் இஸ்ரவேலர் கடவுளுடைய ராஜ்யத்தின் ஒரு முக்கிய பாகமாவதற்கு வாய்ப்பையுடையவர்களானார்கள்.—யாத்திராகமம் 19:6; 24:3-8.
இஸ்ரவேலர் சீனாய் மலைக்கருகில் ஏறக்குறைய ஓர் ஆண்டு இருந்த பின்பு, யெகோவா, அவர்க
ளுடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்குத் தாம் வாக்குக் கொடுத்திருந்த தேசமாகிய பலஸ்தீனாவுக்கு அவர்களை வழிநடத்தினார்.
பின்னால், பலஸ்தீனாவில், இஸ்ரவேலரை அரசர்கள் ஆளும்படி கடவுள் அனுமதித்தார். அப்பொழுது, பூமியில் கடவுளுக்கு ஒரு ராஜ்யம் இருந்தது.
யூதாவின் வம்சத்தானாகிய தாவீது இஸ்ரவேலின் இரண்டாவது அரசனானான். தாவீது இஸ்ரவேலின் சத்துருக்கள் யாவரையும் வென்றான், மேலும் எருசலேமை தேசத்தின் தலைநகரமாக்கினான்.
யெகோவா ஓர் அரசனை ஆதரிக்கையில், பூமிக்குரிய எந்த அரசனும் அவனை வெல்ல முடியாதென்று தாவீதின் ஆட்சியில் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
வாக்குபண்ணப்பட்ட வித்து தாவீதின் சந்ததியாரில் ஒருவராக இருப்பார் என்று யெகோவா சொன்னார்.—1நாளாகமம் 17:7, 11,14.
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் அவனுக்குப் பின் அரசாண்டான். அவன் ஞானமுள்ள அரசனாக இருந்தான், அவனுடைய ஆட்சியின்கீழ் இஸ்ரவேல் செழித்திருந்தது.
சாலொமோன் எருசலேமில் யெகோவாவுக்கு மிகச் சிறந்த ஓர் ஆலயத்தைக் கட்டினான். சாலொமோனின் ஆட்சியின்கீழ் இஸ்ரவேலில் இருந்த நிலைமைகள், எதிர்காலத்தில் கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்துக்குக் கொண்டுவரப்போகிற ஆசீர்வாதங்களில் சிலவற்றை நமக்குக் காட்டுகின்றன.—1 இராஜாக்கள் 4:24, 25.
என்றபோதிலும், சாலொமோனுக்குப் பின்வந்த அரசர்களில் பலர் வெகு மோசமாய் உண்மையற்றவர்களாக இருந்தார்கள்.
ஆனால் தாவீதின் சந்ததியார் எருசலேமில் இன்னும் அரசாண்டு கொண்டிருக்கையிலேயே, யெகோவா, பூமி முழுவதையும் உண்மையுடன் அரசாளப்போகிற தாவீதின் ஓர் எதிர்கால குமாரனைப் பற்றிச் சொல்ல தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவை உபயோகித்தார். இவரே வாக்குபண்ணப்பட்ட அந்த வித்தாக இருப்பார்.—ஏசாயா 9:6, 7.
இவருடைய அரசாட்சி சாலொமோனுடையதைப் பார்க்கிலும் அதிக மகிமையுள்ளதாயிருக்குமென்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா முன்னறிவித்தான்.—ஏசாயா, 11-ம் 65-ம் அதிகாரங்கள்.
இந்த வித்து யாராக இருப்பார் என்றறிய கடவுளுடைய ஊழியர்கள் முன்னிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அதிக ஆவலாயிருந்தார்கள்.
என்றபோதிலும், இந்த வித்து வருவதற்கு முன்பாக, இஸ்ரவேலின் அரசர்கள் அவ்வளவு மிகப் பொல்லாதவர்களாகி விட்டதனால், பொ.ச.மு. 607-ல் அந்தத் தேசத்தைப் பாபிலோனியர் கைப்பற்றும்படி யெகோவா அனுமதித்தார், ஜனங்களில் பெரும்பான்மையர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஆனால் கடவுள் தம்முடைய வாக்கை மறந்துபோகவில்லை. அந்த வித்து இன்னும் தாவீதின் வம்சாவழியில் தோன்றுவார்.—எசேக்கியேல் 21:25-27.
ஞானமும் உண்மையுமுள்ள மனித அரசன் நன்மைகளைக் கொண்டுவரக்கூடு மென்றாலும், இந்த நன்மைகள் மட்டுப்பட்டவையாக இருக்கின்றனவென்று, இஸ்ரவேலுக்கு நடந்த இது காட்டினது. உண்மையுள்ள மனிதர் மரித்துவிடுகிறார்கள், அவர்களுடைய வாரிசுகள் ஒருவேளை உண்மையற்றவர்களாகலாம். இதன் பரிகாரம் என்ன? வாக்குபண்ணப்பட்ட வித்தேயாகும்.
கடைசியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு, வித்து தோன்றுகிறார். அவர் யார்?
இதற்குப் பதிலைக் கடவுளிடமிருந்து வந்த ஒரு தூதன், மரியாள் என்ற பெயருடைய மணமாகாத ஓர் இஸ்ரவேல் பெண்ணுக்குக் கொடுத்தான். அவன் ஒரு குமாரனைப் பெறுவாளென்றும் அவருடைய பெயர் இயேசு எனப்படுமென்றும் அவன் அவளுக்குச் சொன்னான். அந்தத் தூதன் சொன்னது இதுவே:
“இவர் பெரியவராயிருப்பார் மகா உன்னத மானவருடைய குமாரன் எனப்படுவார்; யெகோவா தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார், அவர் அரசராக ஆளுகை செய்வார்.”—லூக்கா 1:32, 33.
ஆகவே இயேசு அந்த வாக்குபண்ணப்பட்ட வித்தும், முடிவில் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசருமாவார். ஆனால் அவருக்கு முன்னால் வாழ்ந்திருந்த உண்மையுள்ள மனிதரிலிருந்து இயேசு ஏன் வேறுபட்டவராக இருந்தார்?
இயேசு அற்புதமாய்ப் பிறந்தார். அவருடைய தாய் ஒரு கன்னியாக இருந்தாள், அவருக்கு மனிதத் தகப்பன் இல்லை. முன்னால் இயேசு பரலோகத்தில் வாழ்ந்திருந்தார், கடவுளுடைய பரிசுத்த ஆவி, அல்லது செயல் நடப்பிக்கும் சக்தி இயேசுவின் உயிரைப் பரலோகத்திலிருந்து மரியாளின் கருப்பைக்குள் மாற்றியது. ஆகவே, அவர் ஆதாமின் பாவத்தைச் சுதந்தரிக்கவில்லை. தம்முடைய வாழ்நாள் முழுவதும் இயேசு பாவம் செய்யவில்லை.—1 பேதுரு 2:22.
இயேசு 30 வயதானபோது முழுக்காட்டப்பட்டார்.
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ஜனங்களுக்குச் சொன்னார், கடைசியாக அந்த ராஜ்யத்தின் அரசராகத் தம்மை அறிமுகப்படுத்தினார்.—மத்தேயு 4:23; 21:4-11.
அவர் பல அற்புதங்களை நடப்பித்தார்.
நோயாளிகளைச் சுகப்படுத்தினார்.—மத்தேயு 9:35.
பசியாயிருந்தவர்களுக்கு அற்புதமாய் உணவளித்தார்.—மத்தேயு 14:14-22.
மரித்தோரையுங்கூட உயிர்த்தெழுப்பினார்.—யோவான் 11:38-44.
கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இயேசு மனிதவர்க்கத்துக்கு என்ன வகையான காரியங்களைச் செய்வாரென்று இந்த அற்புதங்கள் காட்டுகின்றன.
அரசனாகிய தாவீது எருசலேமைத் தன் ராஜ்யத்தின் தலைநகரமாக்கினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடவுளுடைய ராஜ்யம் பூமியில் இராது, பரலோகத்தில் இருக்கும் என்று இயேசு விளக்கினார். (யோவான் 18:36) இதன் காரணமாகவே இந்த ராஜ்யம் “பரலோக எருசலேம்,” என்றழைக்கப்படுகிறது.—எபிரெயர் 12:22, 28.
இந்த ராஜ்யத்தின் குடிமக்களாவதற்கு விரும்புகிறவர்கள் கீழ்ப்படிய வேண்டிய சட்டங்களை இயேசு குறிப்பிட்டார். இந்தச் சட்டங்கள் இப்பொழுது பைபிளில் இருக்கின்றன. ஜனங்கள் கடவுளை நேசிக்க வேண்டும் ஒருவரையொருவரும் நேசிக்க வேண்டும் என்பவை மிக முக்கியமான சட்டங்கள்.—மத்தேயு 22:37-39.
தம்முடைய ராஜ்ய ஆட்சியில் தாம் தனியாக இருக்கப்போவதில்லை என்றும் இயேசு வெளிப்படுத்தினார். பரலோகத்துக்குச் சென்று அங்கே அவரோடு ஆட்சி செய்யும்படி மனிதர்கள் தெரிந்தெடுக்கப்படுவர். (லூக்கா 12:32; யோவான் 14:3) எத்தனைபேர் இருப்பார்கள்? 1,44,000 பேர் என்று வெளிப்படுத்துதல் 14:1 பதிலளிக்கிறது.
1,44,000 பேர் மாத்திரமே இயேசுவுடன் ஆட்சிசெய்ய பரலோகத்துக்குப் போகிறார்களென்றால் மனிதவர்க்கத்தின் மற்ற யாவரும் என்ன நம்பிக்கை கொள்ளலாம்?
“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்,” என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.—சங்கீதம் 37:29.
பூமியில் என்றைக்கும் வாழப்போகிறவர்கள் “மற்றச் செம்மறியாடுகள்” என்று அழைக்கப்படுகிறார்கள்.—யோவான் 10:16.
ஆகவே இரண்டு நம்பிக்கைகள் இருக்கின்றன. இயேசு கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்ய பரலோகத்துக்குச் செல்லும்படி யெகோவா தேவன் அழைப்பு கொடுத்திருக்கிற 1,44,000 பேர் இருக்கிறார்கள். ஆனால் மற்றப் பல லட்சக்கணக்கானோர் அவருடைய ராஜ்யத்தின் குடிமக்களாக பூமியில் என்றென்றும் வாழும் நிச்சய நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 5:10.
சாத்தான் இயேசுவைப் பகைத்து அவரை எதிர்த்தான். இயேசு மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்தப் பின்பு, அவரைக் கைது செய்து கழுமரத்தில் ஆணி அறையும்படி சாத்தான் செய்தான். கடவுள் ஏன் இதை அனுமதித்தார்?
ஆதாமின் சந்ததியாராகப் பிறந்திருப்பதன் காரணமாக நாம் எல்லாரும் பாவஞ்செய்கிறோம் மரணத்துக்குப் பாத்திரராயிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.—ரோமர் 6:23.
இயேசு அற்புதமான முறையில் பிறந்ததன் காரணமாக, அவர் பரிபூரணராக இருந்தார், எனவே மரணத்துக்குப் பாத்திரராக இல்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். என்றபோதிலும், சாத்தான் ‘இயேசுவின் குதிங்காலை நசுக்க,’ அதாவது அவரைக் கொல்ல கடவுள் அனுமதித்தார். ஆகிலும் கடவுள் அவரை சாவாமையுடைய ஆவியாக மறுபடியும் உயிர்த்தெழுப்பினார். பரிபூரண மனித உயிருக்குரிய உரிமை அவருக்கு இன்னும் இருந்ததால், இதை அவர் மனிதராகிய நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்கு இப்பொழுது பயன்படுத்தக்கூடும்.—ஆதியாகமம் 3:15; ரோமர் 5:12, 21; மத்தேயு 20:28.
இயேசுவின் பலி குறிப்பதை நாம் முழுமையாய் விளங்கிக்கொள்வதற்கு நமக்கு உதவிசெய்ய, பைபிளில் தீர்க்கதரிசன மாதிரிகளைக் கொண்டு அதைப்பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, ஆபிரகாமின் அன்பைப் பரீட்சிப்பதற்காக, அவனுடைய குமாரனைப் பலியிடும்படி யெகோவா ஆபிரகாமுக்குச் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இது இயேசுவின் பலிக்கு ஒரு தீர்க்கதரிசன மாதிரியாக இருந்தது. மனிதவர்க்கத்தின்பேரில் யெகோவாவின் அன்பு அவ்வளவு மிகுந்ததாயிருந்ததனால், நாம் ஜீவனடையும்படியாகத் தம்முடைய குமாரனாகிய இயேசு நமக்காக மரிக்கும்படி அவர் அனுமதித்தார் என்பதை இது காட்டினது.—யோவான் 3:16.
யெகோவா இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுதலையாக்கின முறையையும் சங்காரத் தூதன் அவர்களை விட்டுக் கடந்துபோகச் செய்து, அவர்களுடைய முதற்பேறானவர்களைக் காப்பாற்றினதும் உங்களுக்கு நினைவிருக்கிறதா?—யாத்திராகமம் 12:12 13.
இது ஒரு தீர்க்கதரிசன மாதிரியாக இருந்தது. அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் இஸ்ரவேலரின் முதற்பேறானவர்களுக்கு உயிரைக் குறித்ததைப் போலவே, இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தம் அவரில் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு உயிரைக் குறிக்கிறது. அந்த இரவின் நிகழ்ச்சிகள் இஸ்ரவேலருக்கு விடுதலையைக் குறித்ததைப் போலவே இயேசுவின் மரணம் மனிதவர்க்கத்துக்குப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாகும் வாய்ப்பை அளிக்கிறது.
இதன் காரணமாகவே இயேசு, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றழைக்கப்படுகிறார்.—யோவான் 1:29.
என்றபோதிலும், இயேசு பூமியில் இருந்தபோது அவர் சீஷர்களைக் கூட்டிச்சேர்த்து, தம்முடைய மரணத்துக்குப் பின்பும் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி அவர்களைக் கற்பித்துப் பயிற்றுவித்தார்.—மத்தேயு10:5; லூக்கா 10:1.
இவர்களே, இயேசுவுடன் அவருடைய ராஜ்யத்தில் ஆட்சி செய்வதற்குக் கடவுள் தெரிந்தெடுத்த முதல் மனிதர்கள்.—லூக்கா 12:32.
யூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டால், அவர்கள் “ஆசாரிய ராஜ்யமாக” இருப்பார்களென்று கடவுள் யூதருக்கு வாக்குக் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்பொழுது அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டால் கடவுளுடைய ராஜ்யத்தின் பாகமாக இருப்பதற்கும் பரலோக ஆசாரியராகச் சேவிப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் அவர்களில் பெரும்பான்மையர் இயேசுவை வேண்டாமென தள்ளிவிட்டனர்.
ஆகவே அந்தச் சமயம் முதற்கொண்டு, யூதர்கள் இனிமேலும் கடவுளுடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமாக இல்லை; பலஸ்தீனா இனிமேலும் வாக்குபண்ணப்பட்ட தேசமாக இல்லை.—மத்தேயு 21:43; 23:37 38.
இயேசுவின் நாட்களிலிருந்து நம்முடைய நாட்கள் வரையாக, யெகோவா, பரலோகத்தில் இயேசுவுடன் ஆட்சி செய்யப்போகிறவர்களைக் கூட்டிச்சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவர்களில் இன்னும் ஒருசில ஆயிரம்பேர் இன்று பூமியில் உயிரோடிருக்கின்றனர். நாம் அவர்களை அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் என்றழைக்கிறோம்.—வெளிப்படுத்துதல் 12:17.
இப்பொழுது கடவுளுடைய ராஜ்யம் என்னவென்று நீங்கள் காணத் தொடங்குகிறீர்கள். இது பரலோகத்திலிருக்கும் ஓர் அரசாங்கம், இதன் அரசர் இயேசு கிறிஸ்து, பூமியிலிருந்துவரும் 1,44,000 ஆட்கள் அவருடன் சேருகிறார்கள். இது பூமியிலிருக்கும் உண்மையுள்ள மனிதவர்க்கத்தின்மீது ஆட்சி செய்யும், பூமிக்குச் சமாதானத்தைக் கொண்டுவரும் வல்லமையை உடையதாயிருக்கும்.
தம்முடைய மரணத்துக்குப் பின்பு, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்துக்குச் சென்றார். அங்கே, ஏற்றக்காலம் வருகையில் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக ஆட்சி செய்ய தொடங்கும்படி கடவுள் சொல்வதற்கு அவர் காத்திருந்தார். (சங்கீதம் 110:1) இது எப்பொழுதிருக்கும்?
யெகோவா, தம்முடைய ராஜ்யத்தைப் பற்றிய காரியங்களைத் தெரிவிப்பதற்குச் சில சமயங்களில் ஆட்களுக்குச் சொப்பனங்களை அனுப்பினார்.
தானியேலின் நாளில், இப்படிப்பட்ட ஒரு சொப்பனத்தை பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்கு யெகோவா அனுப்பினார். அது ஒரு பெரிய மரத்தைப் பற்றியது.—தானியேல் 4:10-37.
அந்த மரம் வெட்டப்பட்டது அதன் அடிமரம் ஏழு ஆண்டுகளுக்கு விலங்கிடப்பட்டது.
அந்த மரம் நேபுகாத்நேச்சாரைக் குறித்தது. அதன் அடிமரம் ஏழு ஆண்டுகளுக்கு விலங்கிடப்பட்டதைப் போலவே, நேபுகாத்நேச்சார் ஏழு ஆண்டுகளுக்குத் தன் நல்லறிவு நிலையை இழந்தான். பின்பு தன்னறிவுக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டான்.
இது முழுவதும் தீர்க்கதரிசன மாதிரியாக இருந்தது. நேபுகாத்நேச்சார் யெகோவாவின் உலக முழுமையான அரசாட்சிக்குப் படக்குறிப்பாக இருந்தான். முதலாவதாக, இது எருசலேமில் அரசனாகிய தாவீதின் சந்ததியாரின் மூலமாய்ச் செலுத்தப்பட்டது. பொ.ச.மு. 607-ல் பாபிலோன் எருசலேமைக் கைப்பற்றினபோது, அந்த அரசர்களின் வம்சாவழி தடைசெய்யப்பட்டது. “சட்டப் பூர்வ உரிமையுள்ளவர் வரும் வரையில்” தாவீதின் வம்சாவழியில் மற்றொரு அரசன் ஒருபோதும் இருப்பதில்லை. (எசேக்கியேல் 21:27) இயேசு கிறிஸ்துவே அந்த உரிமையுள்ளவராக இருந்தார்.
பொ.ச.மு. 607-லிருந்து இயேசு அரசாளத் தொடங்கும் வரையில் எவ்வளவு காலம் செல்லும்? ஏழு தீர்க்கதரிசன ஆண்டுகள். அதாவது, 2,520 ஆண்டுகள் (வெளிப்படுத்துதல் 12:6, 14) பொ.ச.மு. 607-லிருந்து 2,520 ஆண்டுகள் கணக்கிட பொ.ச. 1914-க்கு நம்மைக் கொண்டுவருகிறது.
ஆகவே 1914-ல் இயேசு பரலோகங்களில் ஆட்சிசெய்ய தொடங்கினார். இது எதைக் குறித்தது?
அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட ஒரு தரிசனத்தின் மூலமாய் பைபிள் நமக்குத் தெரிவிக்கிறது.
பரலோகத்தில் ஒரு பெண் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள்.—வெளிப்படுத்துதல் 12:1-12.
இந்தப் பெண், பரலோகத்திலிருக்கும் கடவுளுடைய ஊழியராகிய எல்லா தேவதூதர்களும் அடங்கிய கடவுளுடைய பரலோக அமைப்பைப் படமாகக் குறித்து நின்றாள். அந்த ஆண் குழந்தை கடவுளுடைய ராஜ்யத்தைக் குறிக்கிறது. இது 1914-ல் “பிறந்தது.”
அடுத்தப்படியாக என்ன நடந்தது? அரசராக இயேசு செய்த முதல் காரியமானது சாத்தானையும் அவனோடு சேர்ந்து கலகஞ்செய்த அந்தத் தூதர்களையும் பரலோகத்திலிருந்து கீழே பூமியில் விழ எறிந்து போட்டதாகும்..—வெளிப்படுத்துதல் 12:9.
இதன் விளைவை பைபிள் நமக்குத் தெரிவிக்கிறது: “பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.”—வெளிப்படுத்துதல் 12:12
ஆகவே, இயேசு பரலோகத்தில் ஆட்சிசெய்ய தொடங்கினபோது அவருடைய சத்துருக்கள் பூமியில் மிக மும்முரமாய்ச் செயலில் ஈடுபட்டனர். பைபிளில் முன்னறிவிக்கப்பட்டபடி, அவர் தம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்ய தொடங்கினார்.—சங்கீதம் 110:1, 2.
இது மனிதவர்க்கத்துக்கு எதைக் குறிக்கும்?
போர்கள், உணவு குறைபாடுகள், கொள்ளை நோய்கள், பூமியதிர்ச்சிகள் ஆகியவை உண்டாகுமென்று இயேசு நமக்குத் தெரிவித்திருக்கிறார்.—மத்தேயு 24:7, 8; லூக்கா 21:10, 11.
1914 முதற்கொண்டு இவை நடப்பதை நாம் கண்டிருக்கிறோம். இது, அப்பொழுது ராஜ்யம் ஆளத் தொடங்கினதென்று நாம் தெரிந்துகொண்டதற்கு மற்றொரு காரணமாகும்.
மேலும், “வெளியெற வழிதெரியாமல், ராஜ்யங்களின் தத்தளிப்பு . . . பயத்தினால் மனிதர் சோர்ந்து போவார்கள்.” (லூக்கா 21:25, 26) 1914 முதற்கொண்டு இதையும் நாம் கண்டிருக்கிறோம்.
மக்கள் “தற்பிரியராயும், பணப்பிரியராயும் . . . தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், . . . இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், . . . இருப்பார்கள்,” என்று அப்போஸ்தலனாகிய பவுலும் மேலுமாகக் கூறினான்.—2 தீமோத்தேயு 3:1-5.
இன்று வாழ்க்கை ஏன் இவ்வளவு கடினமாயிருக்கிறதென்பது இப்பொழுது உங்களுக்குத் தெரிகிறது. சாத்தான் வெகு மும்முரமாய்ச் செயல்படுகிறான். ஆனால் கடவுளுடைய ராஜ்யமும் ஊக்கமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
1914-க்குப் பின் உடனடியாக, மீதிபேரான, இயேசுவுடன் பரலோகத்தில் ஆளும் நம்பிக்கையுடையவர்கள், ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்கள். இந்தவேலை, இயேசு சொன்ன பிரகாரம், பூமி முழுவதிலும் பரவியிருக்கிறது.—மத்தேயு 24:14.
இந்தப் பிரசங்க வேலையின் நோக்கமென்ன?
முதலாவதாக, ஜனங்களுக்குக் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிச் சொல்வதாகும்.
இரண்டாவதாக, தாங்கள், ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்க விரும்புகிறார்களா என்பதைத் தீர்மானிக்க ஜனங்களுக்கு உதவிசெய்வதாகும்.
நம்முடைய நாட்களில் மனிதவர்க்கம் முழுவதும் செம்மறியாட்டைப் போன்றவர்களாகவும் வெள்ளாட்டைப் போன்றவர்களாகவும் பிரிக்கப்படுவார்கள் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 25:31-46.
அவரையும் அவருடைய சகோதரர்களையும் நேசிக்கிறவர்கள் “செம்மறியாடுகள்.” அப்படிச் செய்யாதவர்கள் “வெள்ளாடுகள்.”
“செம்மறியாடுகள்” நித்திய ஜீவனை அடைவார்கள் “வெள்ளாடுகள்” நித்திய ஜீவனை அடைவதில்லை.
இந்தப் பிரிக்கும் வேலையானது ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
இது தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம்.
“கடைசி நாட்களில் யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.”—ஏசாயா 2:2.
மனிதவர்க்கம் இப்பொழுது “கடைசி நாட்களை” எதிர்ப்படுகிறது.
யெகோவாவின் வணக்கத்துக்குரிய “ஆலயம்” பொய் மதங்களுக்கு மேலாக “உயர்த்தப்”பட்டிருக்கிறது.
“பல ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும் யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”—ஏசாயா 2:3.
ஆகவே, எல்லா ஜாதிகளிலிருந்தும் பலர் யெகோவாவை வணங்க வருகிறார்கள். மேலும் தங்களைச் சேர்ந்துகொள்ளும்படி மற்றவர்களையும் அழைக்கிறார்கள். யெகோவா விரும்புகிற முறையில் நடக்கும்படியும் அவர்கள் கற்றுக்கொள்ளுகிறார்கள்.
“அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4
யெகோவாவை வணங்குகிறவர்கள் ஒன்றுபட்டவர்களாயும் சமாதானமுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.
கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த நடவடிக்கையின் பலனாக இப்பொழுது உலகமெங்கும் ஏறக்குறைய முப்பது லட்சம் ஆட்கள் ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்கிறார்கள்.
பரலோகத்துக்குச் சென்று கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யும் நம்பிக்கையுடைய மீந்திருக்கிறவர்களாகிய, இந்த மீதிபேரைச் சுற்றி இவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
கடவுளுடைய அமைப்பின் மூலமாய் இவர்கள் ஆவிக்குரிய உணவைப் பெறுகிறார்கள்.—மத்தேயு 24:45-47.
இவர்கள் ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கும் கிறிஸ்தவர்களாலாகிய ஒரு சர்வதேச சகோதரத்துவம்.—யோவான் 13:35.
இவர்கள் மனசமாதானத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் அனுபவித்து மகிழ்கிறார்கள்.—பிலிப்பியர் 4:7.
சீக்கிரத்தில் இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு முடிக்கப்படும். “செம்மறியாடுகள்” கூட்டிச் சேர்க்கப்பட்டிருப்பர். அப்பொழுது ராஜ்யம் என்ன செய்யும்?
உண்மையுள்ள அரசனாகிய தாவீது கடவுளுடைய ஜனங்களின் எல்லா சத்துருக்களையும் கீழ்ப்படுத்தி வென்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அரசராகிய இயேசுவும் அப்படியே செய்வார்.
அரசனாகிய நேபுகாத்நேச்சார் ஒரு சமயம் பெரிய சிலையைப்பற்றி சொப்பனம் கண்டான், அது அவனுடைய நாளிலிருந்து நம் நாள் வரையாக இருந்துவந்திருக்கும் எல்லா உலக வல்லரசுகளையும் அடையாளமாகக் குறிப்பிட்டது. பின்பு ஒரு மலையிலிருந்து பெயர்க்கப்பட்ட ஒரு கல்லை அவன் கண்டான். அது அந்தச் சிலையைத் தூள்தூளாக நொறுக்கிற்று. அந்தக் கல் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறிக்கும் சின்னமாயிருந்தது.
இது, இந்தத் தற்போதைய பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் அழிவைக் குறிக்கிறது.—தானியேல் 2:44.
இந்த ராஜ்யம் கவிழ்க்கப்போகிற காரியங்களில் சில.
கடலுக்குள் எறியப்படும் ஒரு யந்திரக் கல்லைப்போல் பொய் மதம் ஒழிந்து மறைந்துபோம்.—வெளிப்படுத்துதல் 18:21.
இதன் காரணமாகவே கடவுளை நேசிக்கிற எல்லாரும் பொய் மதத்தைவிட்டு இப்பொழுதே வெளியேறும்படி துரிதப்படுத்தப்படுகின்றனர்.—வெளிப்படுத்துதல் 18:4.
அடுத்தப்படியாக அரசராகிய இயேசு ‘தேசங்களைச் சங்கரிப்பார் . . . இருப்புக்கோலால் அவர்களை மேய்த்து நடத்துவார்.’—வெளிப்படுத்துதல் 19:15.
ஆகவே, யெகோவாவின் சாட்சிகள், தங்கள் வரிகளைச் செலுத்தி நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறபோதிலும், அரசியலில் உட்படுகிறதில்லை.
கடைசியாக, பெரிய “வலுசர்ப்பமாகிய” சாத்தான் தானேயும் பாதாளத்துக்குள் (அபிஸ்ஸுக்குள்) தள்ளப்படுகிறான்.—வெளிப்படுத்துதல் 20:2, 3.
அரசராக இயேசுவுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துகிற “செம்மறியாடுகள்” மாத்திரமே இந்த உபத்திரவத்தைத் தப்பிப் பிழைப்பார்கள்.—மத்தேயு 25:31-34, 41, 46.
உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் “செம்மறியாடுகளைப்” பற்றிய ஒரு காட்சியை யோவான் கண்டான்.
“நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன்.“—வெளிப்படுத்துதல் 7:9.
இந்தத் “திரள் கூட்டம்,” நற்செய்தியின் பிரசங்கிப்புக்குச் செவிகொடுத்து செயல்படுகிற எல்லாராலும் ஆகியது.
இவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளியே வருவார்கள்.”—வெளிப்படுத்துதல் 7:14.
“குருத்தோலைகள்” இயேசுவைத் தங்கள் அரசராக அவர்கள் வரவேற்பதைக் காட்டுகிறது.
அவர்கள் “வெள்ளை அங்கிகளைத்” தரித்திருப்பதானது, இயேசுவின் பலியில் அவர்கள் விசுவாசம் வைத்திருப்பதைக் காட்டுகிறது.
“ஆட்டுக்குட்டியானவர்” இயேசு கிறிஸ்து.
அவர்கள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்? உண்மையுள்ள அரசனாகிய சாலொமோன் ஆட்சிசெய்தபோது இஸ்ரவேலில் இருந்த மகிழ்ச்சியான நிலைமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது அரசராகிய இயேசுவின் கீழ் பூமியில் இருக்கப்போகிற மகிழ்ச்சிக்கு ஒரு சிறிய படக்குறிப்பை அளித்தது.
ஏசாயா முன்னறிவித்தபடியே மனிதவர்க்கத்துக்குள்ளும் மனிதருக்கும் மிருகங்களுக்குமிடையிலும் சொல்லர்த்தமான சமாதானம் இருக்கும்.—சங்கீதம் 46:9; ஏசாயா 11:6-9.
இயேசு பூமியிலிருந்தபோது நோயுற்றவர்களைச் சுகப்படுத்தினதைப் போலவே, மனிதவர்க்கம் முழுவதிலுமிருந்தும் நோயை நீக்கிப்போடுவார்.—ஏசாயா 33:24.
திரளான ஜனங்களுக்கு அவர் உணவளித்ததைப் போலவே மனிதவர்க்கம் முழுவதிலிருந்தும் உணவு குறைபாடுகளை அவர் ஒழித்துப் போடுவார்.—சங்கீதம் 72:16.
மரித்தோரை அவர் உயிர்த்தெழுப்பினதைப் போலவே, கடவுளுடைய ராஜ்யத்துக்குத் தங்களைக் கீழ்ப்படுத்த முழு வாய்ப்பு கிடைத்திராத மரித்தோரை அவர் உயிர்த்தெழுப்புவார்.—யோவான் 5:28, 29.
படிப்படியாய், அவர் மனிதவர்க்கத்தை, ஆதாம் இழந்த அந்தப் பரிபூரண நிலைக்குத் திரும்பக் கொண்டுவருவார்.
இது அதிசயமான எதிர்காலமல்லவா? உங்களுக்கு அதைக் காண பிரியமா? அப்படியானால், இப்பொழுதே கடவுளுடைய ராஜ்யத்துக்கு உங்களைக் கீழ்ப்படுத்தி அந்தச் “செம்மறியாடுகளில்” ஒருவராவதற்கு உழையுங்கள்.
பைபிளைப் படித்து யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்ளுங்கள்.—யோவான் 17:3.
ராஜ்யத்துக்குக் குடிமக்களாக இருக்கிற மற்றவர்களுடனும் கூட்டுறவு கொள்ளுங்கள்.—எபிரெயர் 10:25.
ராஜ்யத்தின் சட்டங்களைக் கற்று அவற்றிற்குக் கீழ்ப்படியுங்கள்.—ஏசாயா 2:3, 4.
யெகோவாவைச் சேவிக்கும்படி உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுங்கள்.—மத்தேயு 28:19, 20.
யெகோவா தேவனுக்கு வெறுப்புண்டாக்கும் திருடுதல், பொய்ச் சொல்லுதல், ஒழுக்கக்கேடு, குடிவெறி ஆகியவற்றைப் போன்ற கெட்டக் காரியங்களைத் தவிர்த்திருங்கள்.—1 கொரிந்தியர் 6:9-11.
ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பங்குகொள்ளுங்கள்.—மத்தேயு 24:14.
இப்படிச் செய்தால், ஆதாம் தன் சந்ததியாருக்கு இழந்துவிட்ட அந்தப் பரதீஸ் திரும்பக் கொண்டுவரப்படுவதைக் கடவுளுடைய உதவியால் நீங்கள் காண்பீர்கள், மேலும் பின்வரும் அந்த வாக்கு நிறைவேற்றப்படுவதையும் நீங்கள் காண்பீர்கள்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 20-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பொ.ச.மு. 607 பொ.ச. 1914
பொ.ச.மு. பொ.ச.
500 1,000 1,500 2,000 2,520
[பக்கம் 11-ன் படங்கள்]
ஆபிரகாம்
ஈசாக்கு
யாக்கோபு
யூதா
தாவீது
[பக்கம் 14-ன் படங்கள்]
144,000
[பக்கம் 16-ன் படங்கள்]
இயேசு
ஆதாம்