அதிகாரம் 8
மரணத்தில் என்ன நேரிடுகிறது?
உங்களுக்கு அருமையான ஒருவரை மரணத்தில் இழப்பதால் உண்டாகிற வெறுமையான உணர்ச்சியை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஆ, எவ்வளவு விசனமாயும் ஆறுதலற்றவர்களாயும் நீங்கள் உணரக்கூடும்! பின்வருமாறு கேட்பது இயல்பானதே: ஒருவன் மரிக்கையில் அவனுக்கு என்ன நேரிடுகிறது? அவன் இன்னும் எங்கேயாவது உயிருடனிருக்கிறானா? உயிருள்ளோர், இப்போது மரித்தவர்களாக இருப்பவரின் தோழமையைப் பூமியில் மறுபடியும் எப்பொழுதாவது அனுபவித்து மகிழக்கூடுமா?
2 இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க, ஆதாம் மரித்தபோது அவனுக்கு என்ன நேரிட்டதென்பதை அறிவது நமக்கு உதவியாக இருக்கும். அவன் பாவம் செய்தபோது, கடவுள் அவனிடம்: “நீ எடுக்கப்பட்ட மண்ணுக்கே மறுபடியும் திரும்புமட்டும் இப்படியேயிருக்கும். நீ மண்ணே, மண்ணுக்கே திரும்புவாய் என்று சொன்னார்.” (ஆதியாகமம் 3:19, தி.மொ.) இது எதைக் குறிக்கிறதென்று எண்ணிப் பாருங்கள். கடவுள் அவனை மண்ணிலிருந்து படைப்பதற்கு முன்பாக, ஆதாம் இருக்கவில்லை. அவன் இல்லை. ஆகவே, அவன் மரித்தப் பின்பு, ஆதாம் அதே இல்லாமை என்ற நிலைக்குத் திரும்பினான்.
3 தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், மரணம் என்பது உயிருக்கு எதிர்பதம். பிரசங்கி 9:5, 10-ல் பைபிள் இதைக் காட்டுகிறது. தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பின் பிரகாரம் இந்த வசனங்கள் பின்வருமாறு சொல்லுகின்றன: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”
4 இது, மரித்தவர்கள் எதையும் செய்ய முடியாது, எதையும் உணரமுடியாது என்று அர்த்தப்படுத்துகிறது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம், அவர்களுக்கு அதற்கு மேலும் எவ்வித நினைவுகளும் கிடையாது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:3, 4) மரணத்தின் போது மனிதனின் ஆவி, அதாவது சுவாசிப்பதால் நீடித்திருக்கச் செய்யப்படுகிற அவனுடைய உயிர்-சக்தி, ‘பிரிகிறது.’ அது இனிமேலும் இல்லாமற்போகிறது. ஆகவே அவன் யோசிக்கக்கூடியவனாக இருப்பதன்பேரில் சார்ந்திருக்கிற கேள்வி, பார்வை, தொடுதலுணர்ச்சி, முகர்தல், சுவையறிதல் ஆகிய மனிதனின் எல்லா புலனுணர்வுகளும் இயங்காமல் நின்றுவிடுகின்றன. பைபிளின் பிரகாரம், மரித்தவர்கள் முற்றிலும் உணர்வற்ற ஒரு நிலைக்குள் பிரவேசிக்கின்றனர்.
5 மரித்துப் போகையில், மனிதரும் மிருகங்களும் முற்றிலும் உணர்வற்ற அதே நிலையில் இருக்கின்றனர். பைபிள் இந்தக் குறிப்பை எப்படிச் சொல்லுகிறதென்பதைக் கவனியுங்கள்: “இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் (ஆவி, NW) ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” (பிரசங்கி 3:19, 20) மிருகங்களை உயிர்வாழச் செய்கிற ஆவியும் மனிதரை உயிர்வாழச் செய்கிற ஆவியும் ஒன்றுதான். இந்த “ஆவி”, அல்லது காணக்கூடாத உயிர்-சக்தி பிரிகையில், மனிதனும் மிருகமும் தாங்கள் உண்டாக்கப்பட்ட மண்ணுக்குத் திரும்புகின்றனர்.
ஆத்துமா சாகிறது
6 மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், மனிதனுக்கு ஓர் ஆத்துமா இருக்கிறது, மிருகங்களுக்கோ அது இல்லை என்பதாகச் சில ஆட்கள் சொல்லியிருக்கின்றனர். என்றபோதிலும், ஆதியாகமம் 1:20-ம், 30-ம் வசனங்கள், கடவுள், தண்ணீர்களில் வாழ்வதற்கு “உயிருள்ள ஆத்துமாக்களைப்” படைத்தார் என்றும், மிருகங்கள் “ஆத்துமாவாக உயிர்” உள்ளவையாய் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றன. இந்த வசனங்களில் சில பைபிள் மொழிபெயர்ப்புகள் “ஆத்துமா” என்பதற்குப் பதிலாக “ஜந்து,” “உயிர்,” என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன; ஆனால் அவற்றின் ஓரக் குறிப்புகள் (ஆங்கில பைபிளில்) “ஆத்துமா” என்ற சொல்லே மூலமொழியில் தோன்றுகிறதென்று ஒப்புக்கொள்ளுகின்றன. மிருகங்களை ஆத்துமாக்கள் என்பதாகக் குறிப்பிடும் பைபிள் வசனங்களில் ஒன்று எண்ணாகமம் 31:28. அங்கே ஆங்கில பைபிள் “மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றுக்கு ஓர் ஆத்துமா வீதம்,” என்பதாகப் பேசுகிறது.
7 மிருகங்கள் ஆத்துமாக்களாக இருப்பதால் அவை சாகையில் அவற்றின் ஆத்துமாக்களும் சாகின்றன. பைபிள் சொல்லுகிற பிரகாரம்: “சமுத்திரத்திலுள்ள பிராணிகள் [உயிருள்ள ஆத்துமாக்கள், NW; கிங் ஜேம்ஸ்] யாவும் மாண்டு போயின.” (வெளிப்படுத்துதல் 16:3) மனித ஆத்துமாக்களைப் பற்றியதென்ன? முந்தின அதிகாரத்தில் நாம் கற்றறிந்தபடி, கடவுள் மனிதனை ஓர் ஆத்துமாவுடன் படைக்கவில்லை. மனிதன் ஆத்துமாவாக இருக்கிறான். ஆகவே, நம் எதிர்பார்ப்புக்கிசைய மனிதன் சாகையில், அவனுடைய ஆத்துமா சாகிறது. இதுவே உண்மையென்று பைபிள் மறுபடியும் மறுபடியுமாகச் சொல்லுகிறது. ஆத்துமா சாவாமை உடையது அல்லது அது சாக முடியாது என்று பைபிள் ஒருபோதும் சொல்லுகிறதில்லை. “புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே,” என்று சங்கீதம் 22:29 சொல்லுகிறது. “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்,” என்று எசேக்கியேல் 18:4-ம் 20-ம் விளக்குகிறது. மேலும் ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளில் யோசுவா 10:28-39-க்கு நீங்கள் திருப்புவீர்களானால், ஆத்துமா கொல்லப்படுவதாக அல்லது அழிக்கப்படுவதாகப் பேசப்பட்டிருக்கிற ஏழு இடங்களை நீங்கள் காண்பீர்கள்.
8 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தில் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, . . . அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்தார்.” (ஏசாயா 53:12) மீட்பின் கிரயத்தைப் பற்றிய இந்தப் போதகமானது, பாவஞ் செய்தவன் ஓர் ஆத்துமாவே (ஆதாமே) என்றும், ஆகவே மனிதரை மீட்பதற்கு, அதற்கு ஈடான ஓர் ஆத்துமா (மனிதன்) பலி செலுத்தப்பட வேண்டியதாயிருந்ததென்றும் நிரூபிக்கிறது. கிறிஸ்து, ‘தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றுவதன்’ மூலம் அந்த மீட்பின் கிரயத்தைக் கொடுத்தார். அந்த மனித ஆத்துமாவாகிய இயேசு மரித்தார்.
9 நாம் பார்த்திருக்கிறபடி, “ஆவி” என்பது நம்முடைய ஆத்துமாவிலிருந்து வேறுபட்ட ஒன்று, ஆவியானது நம்முடைய உயிர்-சக்தி. இந்த உயிர்-சக்தி மனிதரிலும் மிருகங்களிலும் அவற்றின் உடலின் ஒவ்வொரு உயிரணுக்களிலும் இருக்கிறது. மூச்சு விடுவதன் மூலம் இது நீடித்திருக்கச் செய்யப்படுகிறது, அல்லது உயிருடன் வைக்கப்பட்டு வருகிறது. அப்படியானால், மரணத்தில் “மண்ணானது . . . பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது,” என்று பைபிள் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறது? (பிரசங்கி 12:7) மரணத்தின் போது உரிய நேரத்தில் இந்த உயிர்-சக்தி உடலின் உயிரணுக்கள் எல்லாவற்றிலுமிருந்தும் பிரிந்து விடுகிறது. அந்த உடல் அழியத் தொடங்குகிறது. ஆனால், இது, நம்முடைய உயிர்-சக்தி சொல்லர்த்தமாய்ப் பூமியை விட்டுச் சென்று வானவெளியில் பிரயாணப்பட்டு, கடவுளிடம் செல்லுகிறதென்று அர்த்தமாகாது. அதற்கு மாறாக, எதிர்கால வாழ்க்கைக்கான நம்முடைய நம்பிக்கை இப்பொழுது முற்றிலும் கடவுளைச் சார்ந்தது என்ற அர்த்தத்தில் ஆவி தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது. அவருடைய வல்லமையால் மாத்திரமே அந்த ஆவி, அல்லது உயிர்-சக்தி, நாம் மறுபடியும் உயிர் வாழும்படியாகத் திரும்பக் கொடுக்கப்படக்கூடும்.—சங்கீதம் 104:29, 30.
லாசரு—நான்கு நாட்கள் மரித்திருந்த மனிதன்
10 நான்கு நாட்கள் மரித்தவனாயிருந்த லாசருவுக்கு என்ன நடந்ததென்பது செத்தவர்களின் நிலைமையை விளங்கிக்கொள்ள நமக்கு உதவி செய்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களிடம்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன் என்றார்.” என்றபோதிலும் சீஷர்கள்: “ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான்” என்று பதில் சொன்னார்கள். அப்பொழுது இயேசு: “லாசரு மரித்துப்போனான்,” என்று வெளிப்படையாய்ச் சொன்னார். லாசரு உண்மையில் மரித்துப் போயிருக்கையில் இயேசு ஏன் அவன் தூங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்? நாம் பார்க்கலாம்.
11 இயேசு, லாசரு வாழ்ந்திருந்த அந்தக் கிராமத்துக்கு அருகில் வந்தபோது, லாசருவின் சகோதரியாகிய மார்த்தாள் எதிர்கொண்டு அவரைச் சந்தித்தாள். சீக்கிரத்தில் அவர்கள், மற்றப் பலரோடுங்கூட, லாசரு வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றனர். அது ஒரு குகையாயிருந்தது, அதை மூடுவதற்கு ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: “கல்லை எடுத்துப்போடுங்கள்” என்று சொன்னார். லாசரு செத்து நான்கு நாட்களாயிருந்ததனால், மார்த்தாள் மறுத்து: “ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே,” என்றாள். ஆனால் அந்தக் கல் புரட்டப்பட்டது, இயேசு சத்தமாய்: “லாசருவே, வெளியே வா!” என்று கூப்பிட்டார். அவன் அப்படியே வெளியில் வந்தான்! அவன் உயிரோடு, இன்னும் பிரேதச் சீலைகள் சுற்றியிருக்க, வெளியே வந்தான். “இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள்,” என்று இயேசு சொன்னார்.—யோவான் 11:11-44.
12 இப்பொழுது இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: லாசரு மரித்தவனாயிருந்த அந்த நான்கு நாட்களின்போது அவனுடைய நிலைமை என்னவாயிருந்தது? அவன் பரலோகத்தில் இருந்தானா? அவன் ஒரு நல்ல மனிதன். என்றபோதிலும் தான் பரலோகத்தில் இருந்ததைப்பற்றி எதையும் லாசரு சொல்லவில்லை, அவன் அங்கே இருந்திருந்தால் அவன் நிச்சயமாகவே அதைப்பற்றிச் சொல்லியிருந்திருப்பான். இல்லை, இயேசு சொன்னபடியே லாசரு மெய்யாக மரித்திருந்தான். அப்படியானால் லாசரு வெறுமென தூங்கிக் கொண்டிருந்தான் என்று இயேசு ஏன் முதலில் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்?
13 “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்,” என்று பைபிள் சொல்லுகிறபடி மரித்திருந்த லாசரு உணர்வற்றவனாயிருந்தான் என்று இயேசு அறிந்திருந்தார். (பிரசங்கி 9:5) ஆனால் உயிருள்ள ஆளை ஆழ்ந்தத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடக்கூடும். ஆகவே, இயேசு, தமக்குக் கொடுக்கப்பட்டிருந்த கடவுளுடைய வல்லமையின் மூலம், தம்முடைய நண்பனாகிய லாசருவை மரணத்திலிருந்து உயிரோடெழுப்பக்கூடுமென்று காட்டப்போகிறவராயிருந்தார்.
14 ஒருவன் வெகு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கையில், அவனுக்கு நினைவு எதுவும் இருப்பதில்லை. மரித்தவர்களைக் குறித்ததிலும் அப்படியே இருக்கிறது. அவர்களுக்கு எந்த உணர்வும் கிடையாது. அவர்கள் இனிமேலும் இல்லை. ஆனால் கடவுளுடைய உரிய காலத்தில் கடவுளால் மீட்கப்பட்ட மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (யோவான் 5:28) நிச்சயமாகவே, இந்த அறிவு, கடவுளுடைய தயவைப் பெற விரும்பும்படி நம்மைத் தூண்டி செயல்பட வைக்க வேண்டும். அப்படி நாம் செய்வோமானால், நாம் ஒருவேளை மரித்தாலுங்கூட, கடவுளால் நினைவுகூரப்பட்டு திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுவோம்.—1 தெசலோனிக்கேயர் 4:13, 14.
[கேள்விகள்]
1. மரித்தவர்களைப் பற்றி என்ன கேள்விகளை மக்கள் அடிக்கடி கேட்கின்றனர்?
2. முதல் மனிதனாகிய ஆதாம் மரித்தபோது அவனுக்கு என்ன நேரிட்டது?
3. (எ) மரணம் என்றாலென்ன? (பி) மரித்தவர்களின் நிலைமையைப் பற்றி பிரசங்கி 9:5, 10 என்ன சொல்லுகிறது?
4. (எ) மரிக்கையில் ஒருவனின் யோசிக்கும் திறமைகளுக்கு என்ன நேரிடுகிறது? (பி) மரிக்கையில் ஏன் ஒருவனுடைய எல்லா உணர்வுகளும் இயங்காமல் நின்று விடுகின்றன?
5. (எ) செத்த மனிதரின் நிலைமையும் செத்த மிருகங்களின் நிலைமையும் ஒன்றேயென பைபிள் எப்படிக் காட்டுகிறது? (பி) மனிதரையும் மிருகங்களையும் உயிர் வாழச் செய்கிற அந்த “ஆவி” என்ன?
6. மிருகங்களும் ஆத்துமாக்களே என்று பைபிள் எப்படிக் காட்டுகிறது?
7. மிருக ஆத்துமாக்களும் மனித ஆத்துமாக்களும் சாகின்றனவென்று நிரூபிக்க பைபிள் என்ன சொல்லுகிறது?
8. மனித ஆத்துமாவாகிய இயேசு கிறிஸ்து மரித்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
9. ‘ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுடிபடியும் போகிறது,’ என்ற இவ்வார்த்தைகளின் கருத்தென்ன?
10. லாசரு மரித்துவிட்டிருந்தபோதிலும் அவனுடைய நிலைமையைப்பற்றி இயேசு என்ன சொன்னார்?
11. மரித்த லாசருவை இயேசு என்ன செய்தார்?
12, 13. (எ) லாசரு மரித்திருந்தபோது அவன் உணர்வற்றவனாயிருந்தான் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்? (பி) உண்மையில் லாசரு மரித்திருந்தபோது, அவன் தூங்கிக் கொண்டிருந்ததாக இயேசு ஏன் சொன்னார்?
14. மரித்தவர்களை உயிரோடெழுப்புவதற்கு கிறிஸ்துவுக்கு இருக்கும் வல்லமையைப் பற்றிய அறிவு, என்ன செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும்?
[பக்கம் 76-ன் படம்]
ஆதாம்—தூசியிலிருந்து உண்டாக்கப்பட்டான் . . . தூசிக்கே திரும்பினான்
[பக்கம் 78-ன் படம்]
இயேசு லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பாக அவன் என்ன நிலைமையில் இருந்தான்?