இப்படி உணருவது இயல்புதானா?
அப்பாவைப் பறிகொடுத்த ஒருவர் இப்படிச் சொன்னார்: “நான் இங்கிலாந்துல வளர்ந்தேன், உணர்ச்சிகள வெளிப்படையா காட்ட கூடாதுன்னுதான் எனக்கு சொல்லிக் கொடுத்திருந்தாங்க. நான் எதையாவது நினைச்சு அழறப்போ, ராணுவத்துல இருந்து ஓய்வுபெற்ற என் அப்பா நறநறன்னு பல்லை கடிச்சிட்டு, ‘அழாத!’ன்னு மிரட்டுவாரு. என்னோட அம்மா என்னையும் சரி, என்கூட பிறந்த மூணு பேரையும் சரி, கட்டிப்பிடிச்சதாவோ முத்தம் கொடுத்ததாவோ எனக்கு ஞாபகமே இல்ல. எனக்கு 56 வயசு இருக்குறப்போ அப்பா இறந்துட்டாரு. அது எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. ஆனாலும், ஆரம்பத்துல என்னால அழ முடியல.”
சில கலாச்சாரங்களில், மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். அவர்கள் சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குத் தெரியவருகிறது. ஆனால், உலகத்திலுள்ள மற்ற கலாச்சாரங்களில், மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளியில் காட்டிக்கொள்வதே இல்லை. குறிப்பாக வட ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் இருக்கிறவர்கள், அதுவும் அங்குள்ள ஆண்கள், தங்கள் உணர்ச்சிகளை மனதிலேயே பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். அப்படியென்றால், பிரியமான ஒருவரை இழந்து தவிக்கும்போது துக்கத்தை வெளியில் காட்டுவது தவறா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
கண்ணீர்விட்ட பைபிள் கதாபாத்திரங்கள்
மத்தியதரைக் கடலின் கிழக்கில் வாழ்ந்த எபிரெயர்கள்தான் பைபிளை எழுதினார்கள். பொதுவாக, அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிற மக்களாக இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய துக்கத்தை வெளிப்படையாகக் காட்டிய பல சந்தர்ப்பங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, தாவீது ராஜா தன்னுடைய மகன் அம்னோன் கொலை செய்யப்பட்டபோது துக்கம் தாங்காமல் “மிகவும் புலம்பி அழுதார்.” (2 சாமுவேல் 13:28-39) அவருடைய இன்னொரு மகன் அப்சலோம் இறந்தபோதுகூட அவர் துக்கப்பட்டார். இத்தனைக்கும், அவருக்கு அவன் நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தான்; அவருடைய ராஜ அதிகாரத்தைப் பறிக்க முயற்சி செய்திருந்தான். ஆனாலும் அவன் இறந்தபோது, “அதைக் கேட்டு [தாவீது] ராஜா மனம் கலங்கினார். நுழைவாசலின் மேலிருந்த அறைக்கு ஏறிப் போய்க் கதறினார். அப்படி ஏறிப் போகும்போது, ‘என் மகனே, அப்சலோமே, அப்சலோமே, என் மகனே! உனக்குப் பதிலாக நான் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!’ என்று கதறினார்.” (2 சாமுவேல் 18:33) எல்லா அப்பாவையும் போலத்தான் தாவீதும் அழுது புலம்பினார். பிள்ளைக்குப் பதிலாகத் தாங்கள் செத்துப்போயிருக்கலாம் என்று எத்தனையோ பெற்றோர் நினைத்திருக்கிறார்கள். பெற்றோர் இறப்பதற்கு முன்பே பிள்ளை இறப்பது, இயற்கைக்கு மாறானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இயேசுவின் நண்பர் லாசரு இறந்தபோது என்ன நடந்தது? இயேசு கண்ணீர்விட்டு அழுதார். (யோவான் 11:30-38) அதேபோல், இயேசு இறந்தபோது மகதலேனா மரியாள் அவருடைய கல்லறைக்குப் போய் அழுதாள். (யோவான் 20:11-16) உண்மைதான், இறந்தவர்களைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்கும் கிறிஸ்தவர்கள், ஆறுதலே அடைய முடியாத அளவுக்குத் துக்கப்படுவதில்லை. ஏனென்றால், இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனாலும், அவர்கள் இயல்பான உணர்ச்சிகளைக்கொண்ட சாதாரண மனிதர்கள்தான். அதனால், பிரியமானவரைப் பறிகொடுக்கும்போது அவர்களும் துக்கத்தில் தவிக்கிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 4:13, 14.
அழுவதா, அழாமல் இருப்பதா?
நீங்கள் எப்படி? உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது உங்களுக்குக் கஷ்டமாக அல்லது சங்கடமாக இருக்கிறதா? ஆலோசகர்கள் எதை சிபாரிசு செய்கிறார்கள்? இன்று அவர்கள் சொல்லும் பெரும்பாலான ஆலோசனைகள், ரொம்பக் காலத்துக்கு முன்பே பைபிளில் எழுதப்பட்டிருந்த அருமையான அறிவுரைகளோடு ஒத்துப்போகின்றன. துக்கத்தை நாம் வெளிக்காட்ட வேண்டும், அதை அடக்கி வைக்கக் கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள். இது, பழங்காலத்தில் வாழ்ந்த யோபு, தாவீது, எரேமியா போன்ற கடவுள்பக்தியுள்ள நபர்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது; துக்கத்தில் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பைபிளில் இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை மனதில் அடக்கி வைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியென்றால், நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல், நம் உணர்ச்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 18:1) உண்மைதான், ஒவ்வொரு கலாச்சாரத்தில் இருக்கிறவர்களும் ஒவ்வொரு விதமாகத் துக்கத்தை வெளிக்காட்டுகிறார்கள். அவரவரின் மத நம்பிக்கைகளைப் பொறுத்தும் அது மாறுகிறது.a
உங்களுக்கு அழ வேண்டும்போல் இருந்தால் என்ன செய்வது? அழுவது மனித இயல்புதான். லாசரு இறந்தபோது என்ன நடந்ததென்று மறுபடியும் யோசித்துப் பாருங்கள். இயேசு “உள்ளம் குமுறினார் . . . கண்ணீர்விட்டார்.” (யோவான் 11:33, 35) பிரியமான ஒருவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது அழுவது இயல்புதான் என்பதை இதன் மூலம் காட்டினார்.
பிரியமான ஒருவரைப் பறிகொடுக்கும்போது துக்கத்தில் அழுவது இயல்புதான்
SIDS என்ற ஒருவித நோயினால் தன் குழந்தை ரேச்சலை இழந்த ஒரு பெண்ணின் அனுபவம் இதை உறுதிப்படுத்துகிறது. அவளுடைய கணவர் இப்படிச் சொன்னார்: “ஆச்சரியமான விஷயம் என்னென்னா, குழந்தைய அடக்கம் செஞ்சப்போ நாங்க ரெண்டு பேரும் அழவே இல்ல. மத்த எல்லாரும்தான் அழுதுட்டு இருந்தாங்க.” அதற்கு அவள், “அவரு சொல்றது உண்மதான், ஆனா அதுக்கு அப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் அழுது தீர்த்துட்டேன். சில வாரங்களுக்கு அப்புறம் ஒருநாள் நான் வீட்டுல தனியா இருந்தேன். அப்பதான், என் குழந்தையோட பிரிவு என்னை ரொம்பவே வாட்டி எடுத்துச்சு; நாள் முழுக்க அழுதிட்டே இருந்தேன். ஆனா, ஒருவிதத்துல அது எனக்கு உதவியா இருந்துது. அழுததால பாரம் குறைஞ்சுது. ஒரு தாயா, என்னோட குழந்தைக்காக நான் அழவேண்டியிருந்துச்சு. என்னை கேட்டா, இறந்தவங்கள நினைச்சு யாராவது அழறாங்கன்னா, விட்டுடணும். ‘அழாதீங்க’ன்னு மத்தவங்க சொல்றது இயல்புதான். ஆனா, அப்படி சொல்றது எந்த விதத்துலயும் உதவி செய்யாது” என்று சொன்னாள்.
சிலர் எப்படி நடந்துகொள்கிறார்கள்?
ஜுவானிட்டாவின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு குழந்தையைப் பறிகொடுக்கும்போது ஏற்படுகிற வலி அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அவருக்கு ஐந்து முறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. ஆறாவது முறை அவர் கர்ப்பமாக இருந்தபோது, ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுபடியும் கருச்சிதைவு ஆகிவிடுமோ என்று அவர் பயந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவருக்கு குறைமாதத்திலேயே பிரசவ வலி வந்தது. கொஞ்ச நேரத்தில், கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையில் வனிஸா பிறந்தாள். “கடைசியா ஒரு அம்மாவா ஆனத நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு!” என்று ஜுவானிட்டா சொல்கிறார்.
ஆனால், அவருடைய சந்தோஷம் நீடிக்கவில்லை. நான்கே நாட்களில் வனிஸா இறந்துவிட்டாள். ஜுவானிட்டா சொல்கிறார்: “இனியும் நான் ஒரு அம்மா இல்லன்னு நினைச்சப்போ ரொம்ப வேதனையா இருந்துச்சு. எனக்கு ஒரு பெரிய குறை இருக்குறதா தோணுச்சு. வீட்டுல வனிஸாவுக்காக நாங்க தயார்பண்ணி வெச்சிருந்த அறைக்குள்ள போனப்போ மனசு ரொம்ப வலிச்சுது. அவளுக்காக நான் வாங்கி வெச்சிருந்த துணிமணிகள பார்த்தப்போ துக்கம் தொண்டைய அடச்சுது. அடுத்த ரெண்டு மாசத்துக்கு, அவ பிறந்த அந்த நாள பத்தியே யோசிச்சுட்டு இருந்தேன். யார்கிட்டயும் பேச பிடிக்காம தனியாவே இருந்தேன்.”
அவர் அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட்டதுபோல் நமக்குத் தெரியலாம். ஒருவருடைய நிலைமையைப் புரிந்துகொள்வது மற்றவர்களுக்குக் கஷ்டம்தான். ஆனால், ஜுவானிட்டாவைப் போலத் தங்களுடைய குழந்தையைப் பறிகொடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? சில காலம் வாழ்ந்து இறந்த ஒருவருக்காக எப்படித் துக்கப்படுவார்களோ அப்படித்தான் தங்களுடைய குழந்தைக்காகவும் துக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு குழந்தை, அம்மாவின் வயிற்றில் உருவாகும் சமயத்திலிருந்தே பெற்றோர் அதை உயிருக்கு உயிராக நேசிப்பார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்போதிலிருந்தே தாய்க்கும் சேய்க்கும் ஒரு விசேஷ பந்தம் உருவாகிறது. அதனால் குழந்தை இறக்கும்போது, ரொம்ப நாள் தன் கூடவே இருந்த ஒருவர் இறந்ததுபோல் அதன் தாய் உணருகிறாள். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கோபமும் குற்றவுணர்ச்சியும் உங்களை எப்படிப் பாதிக்கலாம்?
இன்னொரு பெண்ணின் மகனுக்குப் பிறவியிலேயே இதய நோய் இருந்தது. அவன் ஆறு வயதில் திடீரென்று இறந்துவிட்டான். அப்போது அவனுடைய அம்மாவுக்கு எப்படி இருந்தது? “என் மனசு மரத்துப்போன மாதிரி ஆயிடுச்சு, நடந்தத நம்பவே முடியல, மனசு உறுத்துச்சு, என்னோட கணவர் மேலயும் டாக்டர் மேலயும் கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சு. என் பையன் அவ்ளோ சீரியஸா இருந்தத அவங்க புரிஞ்சுக்காம போயிட்டாங்களோன்னு தோணுச்சு” என்று அவர் சொல்கிறார்.
துக்கத்தில் இருக்கிறவருக்குக் கோபம் வருவது இயல்புதான். டாக்டர்கள் மீதும், நர்ஸ்கள் மீதும் அவர் கோபப்படலாம். இறந்துபோனவரை அவர்கள் இன்னும் நன்றாகக் கவனித்திருக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஒருவேளை, நண்பர்கள் மீதும் உறவினர்கள் மீதும்கூட அவர் கோபப்படலாம். அவர்கள் ஏடாகூடமாக எதையாவது சொல்வதுபோல் அல்லது செய்வதுபோல் அவருக்கு தோன்றலாம். சிலர் இறந்துபோனவர் மீதுகூட கோபப்படலாம். அவர் தன்னுடைய உடல்நலத்தை அசட்டை செய்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஸ்டெல்லா என்ற பெண்ணும் அப்படித்தான் நினைத்தார். “என்னோட வீட்டுக்காரர்மேல கோபம் கோபமா வந்துச்சு. அவரு நினைச்சிருந்தா கண்டிப்பா சாகாம இருந்திருக்க முடியும். ரொம்ப முடியாம இருந்தப்பகூட டாக்டர் சொன்னத அவரு கேட்கவே இல்ல” என்று அவர் சொல்கிறார். சிலசமயம், ஒருவர் இறந்துவிடுவதால் மற்றவர்கள் தலையில் எல்லா சுமையும் விழுந்துவிடுகிறது. அதனால், இறந்தவர்மேல் அவர்கள் கோபப்படலாம்.
சிலர் கோபப்பட்டுவிட்டு, பிறகு ‘ஏன்தான் கோபப்பட்டேனோ’ என்று நினைத்துக் குற்றவுணர்ச்சியில் புழுங்கலாம். இன்னும் சிலர் தங்களுடைய அன்பானவரின் மரணத்துக்குத் தங்களையே குற்றப்படுத்திக்கொள்ளலாம். “நான் மட்டும் சீக்கிரமாவே அவர டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிருந்தா (அல்லது, ‘இன்னொரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிருந்தா’; ‘உடம்ப நல்லா பார்த்துக்க அவருக்கு உதவி செஞ்சிருந்தா’) அவர் இறந்திருக்க மாட்டாரு” என்று அவர்கள் நினைக்கலாம்.
பிள்ளையின் இழப்பைப் பெற்றோரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. மற்றவர்கள் அவர்களுக்கு அனுதாபமும் இரக்கமும் காட்டினால் உதவியாக இருக்கும்
மற்றவர்கள் இன்னும் நிறைய விஷயங்களை நினைத்துத் தங்களையே நொந்துகொள்ளலாம். அதுவும், அவர்களுக்குப் பிரியமான ஒருவர் எதிர்பாராத விதத்தில் திடீரென்று இறந்துவிட்டால் அவர்கள் குற்றவுணர்ச்சியில் ரொம்பவே தவிக்கலாம். இறந்தவரிடம் தாங்கள் கோபப்பட்ட சமயங்களையும் வாக்குவாதம் செய்த சமயங்களையும் நினைத்து வேதனைப்படலாம். அல்லது, இறந்தவரிடம் உண்மையில் எப்படி நடந்திருக்க வேண்டுமோ அப்படி நடந்துகொள்ளாமல்போனதை நினைத்துக் குமுறலாம்.
ஒரு பிள்ளையின் இழப்பு பெற்றோருடைய வாழ்க்கையில், குறிப்பாக அம்மாவின் வாழ்க்கையில், நிரந்தரமான ஒரு வெறுமையை ஏற்படுத்துகிறது என்று பல நிபுணர்கள் சொல்கிறார்கள். குழந்தையைப் பறிகொடுக்கும் தாய்மார்கள் ரொம்பக் காலத்துக்குத் துக்கத்தில் தவிப்பதைப் பார்க்கும்போது அந்த நிபுணர்கள் சொல்வது உண்மை என்று தெரிகிறது.
உங்கள் துணையை இழக்கும்போது
கணவனையோ மனைவியையோ இழப்பது இன்னொரு விதமான பேரிடியாக இருக்கும். அதுவும், இரண்டு பேரும் எப்போதும் எல்லாவற்றையும் ஒன்றுசேர்ந்து செய்திருந்தால் அது மிகப் பெரிய இடியாக இருக்கும். ஏனென்றால், சேர்ந்து பயணம் செய்வது, வேலை செய்வது, பொழுதைப் போக்குவது என எல்லாவற்றிலும் துணையையே சார்ந்திருந்த வாழ்க்கை, அவர் இறந்த பிறகு ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்துவிடும்.
யூனிஸ் என்ற பெண்ணின் கணவர் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டார். அப்போது அவளுக்கு எப்படி இருந்தது? “முதல் வாரத்துல, நான் பிரமபிடிச்ச மாதிரி இருந்தேன். உயிர் இல்லாத ஜடம் மாதிரி ஆயிட்டேன். எனக்கு எந்த ருசியும் தெரியல, வாசனையும் தெரியல. ஏதோ நடைப்பிணம் மாதிரி இருந்தேன். ஆனா, நடந்தத நம்ப முடியாம நான் தவிக்கல. ஏன்னா, கடைசியா டாக்டர்கள் என் கணவருக்கு சிகிச்சை கொடுத்தப்போ நான் கூடவே இருந்து பார்த்துட்டுதான் இருந்தேன். ஆனாலும், எதுவும் செய்ய முடியலயேன்னு ரொம்ப விரக்தியா இருந்துச்சு. மலையில இருந்து ஒரு கார் விழப்போறத பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாம நிக்கிற மாதிரி இருந்துச்சு” என்று அவள் சொல்கிறாள்.
அவள் அழுதாளா? “ஆமா, நான் ரொம்ப அழுதேன். மத்தவங்க எனக்கு அனுதாபம் சொல்லி நூத்துக்கணக்கான கார்டுகள அனுப்பி வெச்சாங்க. அந்த ஒவ்வொரு கார்ட படிச்சப்பவும் தேம்பித் தேம்பி அழுதேன். அதுக்கு அப்புறம் மனச தேத்திக்கிட்டு அந்த நாள ஓட்ட முடிஞ்சுது. ஆனா, எப்படி இருக்கீங்கன்னு திரும்பத் திரும்ப மத்தவங்க கேட்டப்பத்தான் என்னால தாங்கிக்கவே முடியல. அப்படிப்பட்ட சூழ்நிலையில எல்லாரும் வேதனையிலதானே இருப்பாங்க?” என்று அவள் சொல்கிறாள்.
துக்கத்தைச் சமாளிப்பதற்கு யூனிஸுக்கு எது உதவி செய்தது? “பழையபடி சகஜமா வாழணும்னு எனக்கே தெரியாம என் மனசுல முடிவு செஞ்சுட்டேன். ஆனாலும், வாழணும்னு ரொம்ப ஆசப்பட்ட என்னோட கணவரால வாழ முடியாம போயிடுச்சேன்னு நினைக்குறப்பத்தான் ரொம்ப வேதனையா இருக்கு” என்று அவள் சொல்கிறாள்.
“மற்றவர்கள் முடிவு செய்ய விட்டுவிடாதீர்கள்”
ஒரு ஆங்கில புத்தகத்தின் (Leavetaking—When and How to Say Goodbye) ஆசிரியர்கள் இப்படி ஆலோசனை சொல்கிறார்கள்: “நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படி உணர வேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்ய விட்டுவிடாதீர்கள். துக்கத்தில் இருக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாகத் துக்கப்படுகிறீர்கள் என்றோ, போதுமானளவு துக்கப்படவில்லை என்றோ மற்றவர்கள் நினைக்கலாம்; அதை உங்களிடம் சொல்லவும் செய்யலாம். அவர்களை மன்னித்துவிடுங்கள், அவர்கள் சொன்னதை மறந்துவிடுங்கள். மற்றவர்களால் அல்லது சமுதாயத்தால் வார்க்கப்பட்ட அச்சுக்குள் உங்களைத் திணிக்க முயற்சி செய்தால், வேதனையிலிருந்து உங்களால் மீண்டுவர முடியாது.”
ஒவ்வொருவரும் துக்கத்தை ஒவ்வொரு விதத்தில் சமாளிக்கிறார்கள் என்பது உண்மைதான். அதில் சிறந்த விதம் எது என்று யாரும் யாருக்கும் ஆலோசனை சொல்ல முடியாது. ஆனாலும், வாழ்க்கையின் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் துக்கத்திலேயே மூழ்கிவிடுவது ஆபத்தானது. அந்தச் சமயத்தில் கரிசனையுள்ள நண்பர்களின் உதவி தேவைப்படலாம். “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. அதனால், உதவி கேட்கவும், மனம் திறந்து பேசவும், கண்ணீர்விட்டு அழவும் தயங்காதீர்கள்.—நீதிமொழிகள் 17:17.
பிரியமான ஒருவரைப் பறிகொடுக்கும்போது நீங்கள் துக்கத்தில் தவிப்பது இயல்புதான். அதோடு, உங்கள் மனதிலுள்ள வேதனையை மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் தெரிந்துகொள்வது அவசியம்: ‘துக்கத்தை நான் எப்படிச் சமாளிப்பது? குற்றவுணர்ச்சியும் கோபமும் வருவது இயல்புதானா? அவற்றை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? எனக்கு ஏற்பட்ட இழப்பிலிருந்து மீண்டுவர எது உதவி செய்யும்?’ இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பதில் அடுத்த கட்டுரையில்.
a உதாரணமாக, நைஜீரியாவிலுள்ள யொருபா மக்கள், மறுபிறவி என ஒன்று இருப்பதாகக் காலம்காலமாக நம்பிவருகிறார்கள். அதனால், குழந்தையைப் பறிகொடுக்கும் ஒரு அம்மா தாங்க முடியாத துக்கத்தில் தவித்தாலும், அது கொஞ்சக் காலத்துக்குத்தான். ஏனென்றால், யொருபா மக்கள் பாடும் ஒரு பாடலில், ‘தண்ணீர்தான் சிந்திவிட்டது, தண்ணீர் ஜாடி உடையவில்லை’ என்ற பல்லவி வருகிறது. தண்ணீரைத் தாங்கும் ஜாடிபோல் இருக்கிற தாய் இன்னொரு பிள்ளையைப் பெற்றெடுக்க முடியும் என்பதுதான் அந்தப் பல்லவியின் அர்த்தம் என்று யொருபா மக்கள் சொல்கிறார்கள். ஒருவேளை, இறந்துபோன பிள்ளையே மறுபிறவி எடுத்து அவளுக்கு மறுபடியும் பிறக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அழியாத ஆத்துமா, மறுபிறவி போன்ற போதனைகள் பைபிளில் இல்லை. அதனால், அந்தப் போதனைகளை அடிப்படையாகக்கொண்ட மூடநம்பிக்கைகளையும் பாரம்பரியங்களையும் யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுவதில்லை.—பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4, 20.