மற்றவர்கள் எப்படி உதவலாம்?
“உங்களுக்கு ஏதாவது உதவி தேவைன்னா சொல்லுங்க.” அன்பானவரை இழந்த நம் நண்பரிடம் அல்லது உறவினரிடம் பெரும்பாலும் நாம் இப்படிச் சொல்கிறோம். நாம் மனதார உதவி செய்யத்தான் ஆசைப்படுகிறோம்.
அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய நாம் தயாராகவும் இருக்கிறோம். ஆனால், துக்கத்தில் இருப்பவர் நம்மிடம் வந்து, “நீங்க எனக்காக இந்த உதவிய செய்றீங்களா” என்று கேட்பாரா? பொதுவாக, கேட்க மாட்டார். அதனால், துக்கத்தில் இருப்பவருக்கு உண்மையிலேயே உதவ வேண்டுமென்றால், ஆறுதலாக இருக்க வேண்டுமென்றால், நாம்தான் முதல்படி எடுக்க வேண்டும்.
“சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:23; 25:11) அதனால், எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் தெரிந்துவைத்திருப்பது நல்லது. அன்பானவரை இழந்து தவித்த சிலருக்கு உதவியாக இருந்த சில பைபிள் ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன செய்ய வேண்டும் . . .
காதுகொடுத்துக் கேளுங்கள்: நாம் “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாக” இருக்க வேண்டும் என்று யாக்கோபு 1:19 சொல்கிறது. துக்கத்தில் இருப்பவரின் வேதனையைக் குறைக்க உதவும் ஒரு முக்கியமான வழி, அவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பது. துக்கத்தில் தவிக்கும் சிலர், இறந்துபோன தங்களுடைய அன்பானவரைப் பற்றிப் பேச நினைக்கலாம். ஒருவேளை, அந்த நபருக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றியோ அவருக்கு வந்த வியாதியைப் பற்றியோ பேச நினைக்கலாம். அல்லது, அவரைப் பறிகொடுத்த சமயத்திலிருந்து தாங்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பற்றிப் பேச நினைக்கலாம். அதனால் அவர்களிடம், “அத பத்தி நீங்க ஏதாவது பேச விரும்புறீங்களா?” என்று கேளுங்கள். அதை அவர்களே தீர்மானிக்கட்டும். “என்ன நடந்துச்சுனு மத்தவங்க என்கிட்ட கேட்டாங்க. அப்புறம் நான் சொன்னத காதுகொடுத்து கேட்டாங்க. அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு” என்று அப்பாவைப் பறிகொடுத்த ஒரு இளைஞன் சொன்னான். துக்கத்தில் தவிக்கிறவர் சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் நீங்கள் ஏதாவது பதில் சொல்ல வேண்டும் அல்லது ஆலோசனை கொடுக்க வேண்டும் என்று யோசிக்காதீர்கள்; அதற்குப் பதிலாக, பொறுமையோடும் அனுதாபத்தோடும் காதுகொடுத்துக் கேளுங்கள். அவருடைய மனதில் இருப்பதையெல்லாம் உங்களிடம் கொட்டிவிட அனுமதியுங்கள்.
உறுதியளியுங்கள்: அவர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள் என்று உறுதியளியுங்கள் (அல்லது, இதுபோல் வேறு ஏதாவது உண்மையான, உற்சாகமான விஷயத்தைச் சொல்லுங்கள்). சோகம், கோபம், குற்றவுணர்ச்சி போன்றவை ஏற்படுவது இயல்புதான் என்று அவர்களுக்குப் புரியவையுங்கள். இதுபோன்ற இழப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவந்திருக்கும் சிலரைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அப்படிப்பட்ட ‘இனிய வார்த்தைகள் . . . எலும்புகளுக்கு அருமருந்தாக இருக்கின்றன’ என்று நீதிமொழிகள் 16:24 சொல்கிறது.—1 தெசலோனிக்கேயர் 5:11, 14.
துக்கத்தில் தவிக்கிறவரைப் போய்ப் பாருங்கள்: நிறைய நண்பர்களும் உறவினர்களும் அவரோடு இருக்கிற முதல் சில நாட்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் எல்லாரும் போய்ப் பல மாதங்களுக்குப் பிறகும்கூட அவரைப் போய்ப் பாருங்கள். அப்போதுதான், நீங்கள் ஒரு ‘உண்மையான நண்பராக,’ “கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த” நண்பராக இருப்பீர்கள். (நீதிமொழிகள் 17:17) கார் விபத்தில் தன்னுடைய பிள்ளையை இழந்த தெரேஸா இப்படிச் சொல்கிறார்: “வீட்டுல நிறைய நேரம் நாங்க தனியா இருக்க கூடாதுன்னு எங்க நண்பர்கள் நினைச்சாங்க. அதனால, சாயங்கால நேரத்துல நாங்க பிஸியா இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டாங்க. வேதனையில மூழ்கிடாம இருக்க இது எங்களுக்கு உதவி செஞ்சுது.” அன்பானவர் இறந்து பல வருஷங்களானாலும், திருமண நாள், அவருடைய இறந்த நாள் போன்ற நாட்கள் வரும்போது, அவரைப் பறிகொடுத்தவர் வேதனையில் தவிக்கலாம். அந்த நாட்களை உங்களுடைய காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு, அவரைப் போய்ப் பார்த்து ஆறுதலளிக்கலாம், இல்லையா?
ஒருவருக்கு உதவி தேவைப்படுவதை நீங்கள் கவனித்தால், அவர்கள் கேட்கும்வரை காத்திருக்காதீர்கள்
நீங்களாகவே போய் உதவுங்கள்: துக்கத்தில் தவிக்கிறவர்களுக்கு நீங்கள் ஏதாவது வேலைகளைச் செய்துதர முடியுமா? அவர்களுடைய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள முடியுமா? அவர்களைப் பார்க்க வந்திருக்கும் நண்பர்களும் உறவினர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? அன்பானவரைச் சமீபத்தில் இழந்தவர்கள் பெரும்பாலும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பார்கள்; அதனால், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பார்கள். அப்படியிருக்கும்போது, மற்றவர்கள் எப்படியெல்லாம் தங்களுக்கு உதவலாம் என்று அவர்களால் எப்படிச் சொல்ல முடியும்? அதனால், அவர்களுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுவதை நீங்கள் கவனித்தால், அவர்கள் வந்து கேட்கும்வரை காத்திருக்காதீர்கள்; நீங்களே போய் உதவுங்கள். (1 கொரிந்தியர் 10:24; ஒப்பிடுங்கள்: 1 யோவான் 3:17, 18.) கணவரை இழந்த ஒரு பெண் இப்படிச் சொல்கிறாள்: “‘ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க’ன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா என்னோட ஒரு ஃப்ரெண்டு, உதவி வேணுமான்னு கேட்காம நேரா பெட்ரூமுக்கு வந்து, என் கணவர் படுத்திருந்த படுக்கையோட விரிப்பையும் தலைகாணி உறையையும் எடுத்து, துவைக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னொரு ஃப்ரெண்டு ஒரு பக்கெட்டு, தண்ணி, சோப்பு, ப்ரஷ் எல்லாத்தையும் எடுத்துட்டு போய், என் கணவர் வாந்திபண்ணியிருந்த ஜமுக்காளத்த துவைக்க ஆரம்பிச்சிட்டாங்க. சில வாரங்களுக்கு அப்புறம், என் சபையில இருந்த ஒரு மூப்பர் என் வீட்டுக்கு வந்து, ‘எல்லா ரிப்பேர் வேலயையும் நான் செஞ்சு தர்றேன். என்னென்ன இருக்குன்னு சொல்லுங்க’ன்னு கேட்டாரு. அவரு வேல செய்றதுக்கு ஏத்த டிரெஸ்ல வந்திருந்தாரு, எல்லா கருவிகளையும்கூட எடுத்துட்டு வந்திருந்தாரு. என் வீட்டுல இருந்த ஒரு கதவ சரிபண்ணி, எலக்ட்ரிக்கல் வேலயையும் செஞ்சு கொடுத்தாரு. அந்த உதவிய என்னால மறக்கவே முடியாது!”—யாக்கோபு 1:27-ஐ ஒப்பிடுங்கள்.
உபசரியுங்கள்: ‘உபசரிக்கும் குணத்தைக் காட்ட மறந்துவிடாதீர்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 13:2) முக்கியமாக, துக்கத்தில் தவிக்கிறவர்களை உபசரிக்க நாம் மறந்துவிடக் கூடாது. “நீங்க எப்போ வேணாலும் எங்க வீட்டுக்கு வரலாம்” என்று பொதுப்படையாகச் சொல்வதற்குப் பதிலாக, தேதியையும் நேரத்தையும் திட்டவட்டமாகச் சொல்லிக் கூப்பிடுங்கள். ‘நான் இன்னொரு சமயம் வர்றேன்’ என்று அவர்கள் சொன்னால், ‘சரி, பரவாயில்ல’ என்று உடனே சொல்லிவிடாதீர்கள். அன்பாக அவர்களைத் திரும்பவும் கூப்பிடுங்கள். மற்றவர்களுக்குமுன் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் ஒருவேளை அவர்களுக்கு இருக்கலாம். அல்லது, இப்படிப்பட்ட சமயத்தில் விருந்துக்குப் போய் மற்றவர்களோடு நேரம் செலவிடுவதை ஒரு குற்றமாக அவர்கள் நினைக்கலாம். அதனால், பைபிளில் சொல்லப்பட்டுள்ள லீதியாள் என்ற பெண்ணின் உதாரணத்தை மனதில் வையுங்கள். உபசரிப்பதில் அவள் பேர்போனவளாக இருந்தாள். தன்னுடைய வீட்டுக்கு வந்து தங்கும்படி கிறிஸ்துவின் சீஷர்களை அவள் “கெஞ்சிக் கேட்டாள்” என்றும், ‘கடைசியில் அவர்களைச் சம்மதிக்கவே வைத்துவிட்டாள்’ என்றும் பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 16:15.
பொறுமையாக இருங்கள், புரிந்து நடந்துகொள்ளுங்கள்: அன்பானவரை இழந்தவர்கள் ஆரம்பத்தில் ஏதேதோ பேசிவிடலாம். அதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். அவர்களுக்குள் இருக்கும் கோபமும் குற்றவுணர்ச்சியும் அவர்களை அப்படிப் பேச வைக்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் கோபத்தில் உங்கள்மேல் சீறினால், நீங்களும் பதிலுக்குக் கோபப்படாமல் உங்களுடைய பங்கில் விவேகத்தோடும் பொறுமையோடும் நடந்துகொள்ளுங்கள். “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் பொறுமையையும் காட்டுங்கள்” என்று பைபிள் சிபாரிசு செய்கிறது.—கொலோசெயர் 3:12, 13.
கடிதம் எழுதுங்கள்: இரங்கல் தெரிவிக்கும் கடிதத்தை அல்லது கார்டை அனுப்புவது எந்தளவுக்கு முக்கியம் என்பதை நிறைய பேர் புரிந்துகொள்வதில்லை. அதனால் என்ன பிரயோஜனம் கிடைக்கிறது? “என் ஃப்ரெண்டு ஆறுதலா ஒரு லெட்டர் எழுதியிருந்தா. அத திரும்பத் திரும்ப படிச்சு பார்த்தது, ரொம்ப உதவியா இருந்துது” என்று சின்டி என்ற பெண் சொல்கிறாள். அவருடைய அம்மா புற்றுநோய்க்குப் பலியாகியிருந்தார். நீங்கள் அனுப்பும் கடிதம் அல்லது கார்டு, “சுருக்கமாக” இருக்கலாம், ஆனால் அதில் இருக்கிற வார்த்தைகள் உங்கள் மனதிலிருந்து வந்திருக்க வேண்டும். (எபிரெயர் 13:22) அன்பானவரைப் பறிகொடுத்தவர்மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையைப் பற்றி அதில் எழுதலாம். அல்லது, இறந்தவரை நீங்கள் விசேஷமாக நினைவில் வைத்திருப்பதைப் பற்றியோ, இறந்தவரால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல மாற்றத்தைப் பற்றியோ எழுதலாம்.
அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்யுங்கள்: அன்பானவரைப் பறிகொடுத்தவருக்காக அவரோடு சேர்ந்து நீங்கள் செய்கிற ஜெபத்தின் மதிப்பைக் குறைவாக எடைபோடாதீர்கள். “நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 5:16) உதாரணத்துக்கு, அவர்களுக்காக நீங்கள் ஜெபம் செய்வதை அவர்கள் கேட்கும்போது, குற்றவுணர்வு போன்ற வேண்டாத உணர்ச்சிகளை அவர்களால் விட்டொழிக்க முடியும்.—யாக்கோபு 5:13-15-ஐ ஒப்பிடுங்கள்.
என்ன செய்யக் கூடாது . . .
அன்பானவரை இழந்து தவிக்கிறவர்களைப் பார்க்க நீங்கள் மருத்துவமனைக்குப் போவது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்
என்ன சொல்வது அல்லது என்ன செய்வது என்று தெரியாததால் ஒதுங்கியிருக்காதீர்கள்: ‘அவங்கள இப்போ தனியா விட்டுடறதுதான் நல்லது’ என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மையில், தவறாக எதையாவது சொல்லிவிடுவோமோ அல்லது செய்துவிடுவோமோ என்ற பயத்தால் நாம் அவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்க நினைக்கலாம். இருந்தாலும், நண்பர்களோ உறவினர்களோ சபையில் இருப்பவர்களோ அப்படி ஒதுங்கியிருந்தால், அன்பானவரை இழந்தவர்கள் தனிமையிலும் வேதனையிலும் இன்னுமதிகமாக மூழ்கிவிடுவார்கள். அவர்களுக்குக் கரிசனை காட்ட நாம் ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என்றில்லை. பெரும்பாலும், ஒருசில வார்த்தைகளும் சின்னச் சின்ன செயல்களும்தான் மிகச் சிறந்த விதத்தில் கரிசனை காட்ட உதவும். (எபேசியர் 4:32) நீங்கள் அவர்களோடு இருப்பதே அவர்களுக்கு அதிக உற்சாகத்தைத் தரும். (அப்போஸ்தலர் 28:15-ஐ ஒப்பிடுங்கள்.) தெரேஸா தன்னுடைய மகள் இறந்துபோன நாளைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “ஒரு மணிநேரத்துக்குள்ள எங்களோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆஸ்பத்திரியில வந்து குவிஞ்சிட்டாங்க; சபை மூப்பர்களும் அவங்களோட மனைவிகளும் வந்துட்டாங்க. சில பெண்கள் அவங்களோட முடியிலிருந்த கர்லர்களைக்கூட எடுக்கல, சிலர் வேலைக்குப் போட்டிருந்த அதே டிரெஸ்ல வந்திருந்தாங்க. அவங்க எல்லாரும், செஞ்சிட்டிருந்த வேலைகள அப்படி அப்படியே விட்டுட்டு வந்திருந்தாங்க. ‘என்ன சொல்றதுன்னே தெரியல’ன்னு நிறைய பேர் எங்ககிட்ட சொன்னாங்க. ஆனா, அவங்க அந்த நேரத்துல அங்க வந்ததே எங்களுக்கு ஆறுதலா இருந்துச்சு.”
துக்கப்படுவதை நிறுத்தும்படி வற்புறுத்தாதீர்கள்: அன்பானவரை இழந்தவரிடம், ‘அழாதீங்க’ என்று நாம் சொல்ல நினைக்கலாம். ஆனால், அவர்கள் கண்ணீர்விட்டு அழுவதுதான் நல்லது. “துக்கத்துல இருக்குறவங்க அவங்களோட உணர்ச்சிகள கொட்டி தீர்க்குறதுக்கு நாம விட்டுடணும். அதுதான் நல்லது” என்று கணவரை இழந்த கேத்தரன் சொல்கிறாள். எப்படி உணர வேண்டும் என்று மற்றவர்களுக்கு நீங்கள் சொல்லாதீர்கள். அதோடு, அவர்களைச் சோகப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக உங்கள் சோகத்தை மறைக்க நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, “அழுகிறவர்களோடு அழுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 12:15.
இறந்தவருடைய உடைகளை அல்லது மற்ற பொருள்களை அப்புறப்படுத்தும்படி அவசரப்பட்டு ஆலோசனை கொடுக்காதீர்கள்: ‘இறந்தவர ஞாபகப்படுத்துற பொருள்கள ஒருத்தர் வெச்சுக்கிட்டே இருந்தா துக்கத்திலிருந்து அவரால சீக்கிரமா மீண்டுவர முடியாது’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், அவர் உடனடியாகத் துக்கத்திலிருந்து மீண்டுவர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது; அவருக்குக் காலம் தேவைப்படலாம். பைபிளில் சொல்லப்பட்டுள்ள யாக்கோபுடைய அனுபவத்தை நினைத்துப் பாருங்கள். அவருடைய மகன் யோசேப்பை ஒரு கொடிய மிருகம் கொன்றுவிட்டதாக அவரிடம் சொல்லப்பட்டது. இரத்தக்கறை படிந்த யோசேப்பின் நீளமான அங்கி யாக்கோபிடம் கொடுக்கப்பட்டபோது, அவர் ‘தன்னுடைய மகனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார். அவருடைய மகன்களும் மகள்களும் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் ஆறுதலடையவில்லை.’—ஆதியாகமம் 37:31-35.
‘நீங்க இன்னொரு குழந்தைய பெத்துக்கலாம்’ என்று சொல்லாதீர்கள்: “நான் இன்னொரு குழந்தைய பெத்துக்கலாம்னு மத்தவங்க சொன்னப்போ எனக்கு எரிச்சலா இருந்துது” என்று பிள்ளையை இழந்த ஒரு தாய் சொல்கிறாள். மற்றவர்கள் நல்ல எண்ணத்தோடு அப்படிச் சொல்லலாம். ஆனால், துக்கத்தில் தவிக்கிற பெற்றோருக்கு அந்த வார்த்தைகள் ‘வாள் போலக் குத்தலாம்.’ (நீதிமொழிகள் 12:18) ஒரு பிள்ளையின் இடத்தை இன்னொரு பிள்ளையால் நிரப்பவே முடியாது. ஏன்? ஏனென்றால், ஒவ்வொரு பிள்ளையும் விசேஷமானது.
இறந்துபோனவரைப் பற்றிய பேச்சையே எடுக்கக் கூடாது என்று நினைக்காதீர்கள்: “நிறைய பேர் என் பையன் ஜிம்மியோட பேச்சையே எடுக்க மாட்டாங்க, அவனோட பேரக்கூட சொல்ல மாட்டாங்க. உண்மைய சொல்லணும்னா, மத்தவங்க அப்படி நடந்துகிட்டது என் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு” என்று ஒரு தாய் சொல்கிறாள். அதனால், இறந்துபோனவரைப் பற்றி யாராவது பேச ஆரம்பித்தால், வேண்டுமென்றே பேச்சை மாற்றாதீர்கள். துக்கத்தில் தவிப்பவர் தன்னுடைய அன்பானவரைப் பற்றிப் பேச விரும்புகிறாரா என்று கேளுங்கள். (ஒப்பிடுங்கள்: யோபு 1:18, 19; 10:1) துக்கத்தில் தவிக்கிற சிலர், இறந்தவருடைய நல்ல குணங்களைப் பற்றி நண்பர்கள் புகழ்ந்து பேசுவதைக் கேட்க விரும்புகிறார்கள்.—அப்போஸ்தலர் 9:36-39-ஐ ஒப்பிடுங்கள்.
‘இதுவும் நல்லதுக்குத்தான்’ என்று பட்டென்று சொல்லிவிடாதீர்கள்: ஒருவர் இறந்தது நல்லதுதான் என்று சொல்வது, ‘மனச்சோர்வால் வாடுகிறவர்களுக்கு ஆறுதலாக’ இருக்காது. (1 தெசலோனிக்கேயர் 5:14) தாயை இழந்த ஒரு இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “மத்தவங்க என்கிட்ட, ‘கஷ்டத்துல இருந்து அம்மாவுக்கு விடுதலை கிடைச்சிருக்கு,’ ‘இப்ப அவங்களுக்கு ஓய்வு கிடைச்சது நினைச்சு நாம ஆறுதல்பட்டுக்கணும்’ அப்படீன்னெல்லாம் சொன்னாங்க. ஆனா, அத எனக்கு கேட்கவே பிடிக்கல.” ஒருவேளை, நாம் அப்படியெல்லாம் சொன்னால், இறந்தவரை நினைத்து வருத்தப்படக் கூடாது என்றோ, அது அவ்வளவு பெரிய இழப்பு இல்லை என்றோ சொல்வதுபோல் ஆகிவிடும். ஆனால், துக்கத்தில் தவிப்பவர்கள் அன்பானவரின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்.
‘உங்க வேதனைய என்னால புரிஞ்சுக்க முடியுது’ என்று சொல்லாதீர்கள்: உண்மையிலேயே உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா? உதாரணமாக, ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையைப் பறிகொடுத்திருக்கலாம். அதே அனுபவம் உங்களுக்கு இல்லாவிட்டால், அவர்களுடைய வேதனை உங்களுக்குப் புரியுமா? அதே அனுபவம் உங்களுக்கு இருந்தால்கூட, அவரவரின் வேதனையும் வலியும் அவரவருக்குத்தான் தெரியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். (புலம்பல் 1:12-ஐ ஒப்பிடுங்கள்.) அதேசமயத்தில், உங்களுடைய அன்பானவரின் இழப்பிலிருந்து நீங்கள் எப்படி மீண்டுவந்தீர்கள் என்பதைச் சொல்வது பொருத்தமாக இருந்தால் அதைச் சொல்லுங்கள். அது ஓரளவு உதவியாக இருக்கும். ஒரு தாய் தன் மகள் கொலை செய்யப்பட்டதை நினைத்துத் தவித்துக்கொண்டிருந்தபோது, மகளை இழந்த இன்னொரு பெண் அவரிடம் பேசினார். அந்தப் பெண் எப்படி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார் என்பதைத் தெரிந்துகொண்டது அந்தத் தாய்க்கு உதவியாக இருந்தது. அவர் இப்படிச் சொல்கிறார்: “அவங்களுக்கு நடந்தத என்கிட்ட சொன்னாங்க. ஆனா, ‘உங்க வேதனைய என்னால புரிஞ்சுக்க முடியுது’ன்னு சொல்லி ஆரம்பிக்கல. அவங்களுக்கு எப்படியெல்லாம் இருந்துச்சுன்னு மட்டும் சொன்னாங்க. நானே அத எனக்கு பொருத்தி பார்க்குறதுக்கு விட்டுட்டாங்க.”
அன்பானவரை இழந்த ஒருவருக்கு உதவி செய்ய நீங்கள் கரிசனையோடும் விவேகத்தோடும் அதிக அன்போடும் நடந்துகொள்ள வேண்டும். துக்கத்தில் இருக்கிறவர் உங்களிடம் வந்து உதவி கேட்கும்வரை காத்திருக்காதீர்கள். “ஏதாவது உதவி வேணும்னா . . .” என்று வெறுமனே சொல்லாதீர்கள். அவருக்கு என்ன உதவி தேவை என்று கண்டுபிடித்து, நீங்களே அந்த உதவியைச் செய்யுங்கள்.
இன்னும் சில கேள்விகளுக்கு நாம் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்: இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்று பைபிள் சொல்வது, உங்களுக்கும் இறந்துபோன உங்களுடைய அன்பானவருக்கும் என்ன நம்பிக்கை தருகிறது? பைபிள் சொல்வது நிச்சயம் நடக்கும் என்று நாம் எப்படி உறுதியாக நம்பலாம்?