இறந்தவர்களுக்கு உறுதியான நம்பிக்கை
இருபத்தைந்து வயதான ஒரு பெண் இப்படிச் சொன்னாள்: “என்னை எங்க அம்மா தத்தெடுத்து வளர்த்தாங்க. அவங்களுக்கு புற்றுநோய் வந்ததால, 1981-ல இறந்துட்டாங்க. அவங்களுக்கு பிறந்த என் தம்பிக்கும் எனக்கும் இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. எனக்கு அப்போ 17 வயசு, என் தம்பிக்கு 11. அம்மா இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அவங்க பரலோகத்துக்கு போயிட்டதா எங்களுக்கு சொன்னாங்க. அதனால, நானும் என் வாழ்க்கையை முடிச்சுகிட்டு, அவங்க இருக்கிற இடத்துக்கே போயிடலாம்னு நினைச்சேன். அம்மா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டா இருந்தாங்க.”
நம் உயிருக்கு உயிரானவர்களுக்கு என்றாவது ஒருநாள் மரணம் வரலாம் என்ற உண்மையை நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை. அதுவும், அப்படியொன்று நடக்கும்போது அதை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. நம்முடைய அன்பானவரோடு சேர்ந்து இனிமேல் பேச முடியாது, சிரிக்க முடியாது, கையைப் பிடித்துக்கொண்டு நடக்க முடியாது என்றெல்லாம் நினைத்து நாம் தவிதவிக்கலாம். அவர் பரலோகத்துக்குப் போய்விட்டார் என்று சொல்வதால் அந்த வலி மறைந்துவிடாது.
ஆனால், பைபிள் தரும் நம்பிக்கை ரொம்பவே வித்தியாசமானது. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, நீங்கள் உயிருக்கு உயிராய் நேசித்த உங்கள் அன்பானவரோடு மறுபடியும் ஒன்றுசேரும் வாய்ப்பு இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. அதுவும், ஏதோ கண்ணுக்கு எட்டாத பரலோகத்தில் அல்ல, இந்தப் பூமியிலேயே அவரோடு ஒன்றுசேரும் வாய்ப்பு சீக்கிரத்தில் கிடைக்கப்போகிறது. அமைதி நிறைந்த, அநியாயங்கள் இல்லாத, அற்புதமான சூழ்நிலையில் உங்களால் வாழ முடியும். அந்தச் சமயத்தில், எல்லாரும் முழு ஆரோக்கியத்தோடு வாழ்வோம், நமக்கு மரணமே வராது. ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று சிலர் கேட்கலாம்.
இதெல்லாம் நடக்கும் என்பதை எதை வைத்து நம்புவது? ஒரு வாக்குறுதியை நம்ப வேண்டுமென்றால், அதைக் கொடுத்தவருக்கு அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆசையும் சக்தியும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அப்படியென்றால், இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்ற வாக்குறுதியைக் கொடுத்தவர் யார்?
கி.பி. 31-ல், இயேசு கிறிஸ்து இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “இறந்தவர்களைத் தகப்பன் உயிரோடு எழுப்புவது போலவே மகனும் தனக்கு விருப்பமானவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.” (யோவான் 5:21, 28) ஆம், இறந்துபோன லட்சக்கணக்கான ஆட்கள் இந்தப் பூமியில் மறுபடியும் உயிர்வாழ்வார்கள் என்ற வாக்குறுதியை இயேசு கிறிஸ்து கொடுத்தார். அதுவும், அழகு கொஞ்சும் அமைதியான பூஞ்சோலை பூமியில் அவர்கள் வாழ்வார்கள் என்று அவர் வாக்குக் கொடுத்தார். (லூக்கா 23:43; யோவான் 3:16; 17:3; ஒப்பிடுங்கள்: சங்கீதம் 37:29; மத்தேயு 5:5.) இயேசுவே இந்த வாக்குறுதியைக் கொடுத்திருப்பதால், அதை நிறைவேற்றும் ஆசை அவருக்கு நிச்சயம் இருக்கும் என்று நாம் நம்பலாம். ஆனால், அதை நிறைவேற்றும் சக்தி அவருக்கு இருக்கிறதா?
அந்த வாக்குறுதியைக் கொடுத்த இரண்டு வருஷங்களுக்குள், இறந்தவர்களை உயிரோடு கொண்டுவரும் ஆசையும் சக்தியும் தனக்கு இருப்பதை இயேசு மிகச் சிறந்த விதத்தில் நிரூபித்துக் காட்டினார்.
“லாசருவே, வெளியே வா!”
அது நெஞ்சை உருக்கும் சம்பவம். லாசருவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவருடைய இரண்டு சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும், யோர்தான் ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்த இயேசுவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார்கள். “எஜமானே, உங்கள் பாசத்துக்குரிய நண்பன் வியாதியாக இருக்கிறான்” என்று சொல்லி அனுப்பினார்கள். (யோவான் 11:3) லாசருவின் மேல் இயேசு அன்பு வைத்திருந்தது அவர்களுக்குத் தெரியும். உடம்பு முடியாமல் இருந்த தன் நண்பனைப் பார்க்க இயேசு விரும்பியிருக்க மாட்டாரா என்ன? ஆனால், உடனடியாக பெத்தானியாவுக்குப் போவதற்குப் பதிலாக, தான் இருந்த இடத்திலேயே அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் தங்கிவிட்டார்.—யோவான் 11:5, 6.
லாசருவின் உடல்நிலை பற்றி இயேசுவுக்குச் சொல்லி அனுப்பப்பட்ட பின்பு, ஏதோ ஒரு சமயத்தில் லாசரு இறந்துவிட்டார். லாசரு இறந்தது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், ஒன்றைச் செய்ய அவர் நினைத்திருந்தார். ஆனால், அவர் பெத்தானியாவுக்கு வந்து சேருவதற்குள், அவருடைய அருமை நண்பன் இறந்து நான்கு நாட்களாகிவிட்டன. (யோவான் 11:17, 39) இறந்துபோய் இத்தனை நாட்களாகிவிட்ட பின்பு இயேசுவால் அவரை மறுபடியும் உயிரோடு கொண்டுவர முடியுமா?
எப்போதும் துடிப்பாகச் செயல்பட்ட மார்த்தாள், இயேசு வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு அவரைச் சந்திப்பதற்கு ஓடோடிப் போனாள். (லூக்கா 10:38-42-ஐ ஒப்பிடுங்கள்.) அவள் அழுவதைப் பார்த்து இயேசு மனதுருகி, “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று வாக்குக் கொடுத்தார். எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்பதை நம்புவதாக அவள் சொன்னாள். அப்போது, இயேசு வெளிப்படையாகவே அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன். என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்” என்று சொன்னார்.—யோவான் 11:20-25.
கல்லறைக்குப் பக்கத்தில் வந்துசேர்ந்தபோது, அதன் வாசலை அடைத்திருந்த கல்லை எடுத்துப் போடும்படி இயேசு சொன்னார். பின்பு, சத்தமாக ஜெபம் செய்துவிட்டு, “லாசருவே, வெளியே வா!” என்று கட்டளை கொடுத்தார்.—யோவான் 11:38-43.
என்ன நடக்கும் என்று வைத்த கண் வாங்காமல் எல்லாரும் கல்லறையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருட்டிலிருந்து வெளியே வந்தது ஒரு உருவம்! அதன் பாதங்களும் கைகளும் துணிகளால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன, அதனுடைய முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள். இவன் போகட்டும்” என்று இயேசு கட்டளையிட்டார். கடைசி கட்டு அவிழ்க்கப்பட்டுக் கீழே விழுந்தது! நான்கு நாட்களுக்குமுன் இறந்துபோயிருந்த லாசரு, அங்கே உயிரோடு நின்றுகொண்டிருந்தார்!—யோவான் 11:44.
இது உண்மையிலேயே நடந்ததா?
லாசரு உயிரோடு எழுப்பப்பட்ட பதிவு, யோவான் புத்தகத்தில் ஒரு உண்மையான சரித்திர சம்பவமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. விவரங்கள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பதால் அது ஒரு கட்டுக்கதையாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதைச் சந்தேகப்படுவது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் பைபிளில் இருக்கிற மற்ற எல்லா அற்புதங்களையும் சந்தேகப்படுவதற்குச் சமமாக இருக்கும். இயேசுவின் உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்ள மறுப்பது, பைபிள் சொல்லும் எல்லா உண்மைகளையுமே ஏற்றுக்கொள்ள மறுப்பதாக இருக்கும்.—1 கொரிந்தியர் 15:13-15.
கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியென்றால், இறந்தவர்களைக் கடவுள் உயிரோடு எழுப்புவார் என்பதை நம்புவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்காது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒருவர் தன்னுடைய உயிலையும் அதற்கான சாட்சிப்பத்திரத்தையும் அவரே வாசித்து அதை வீடியோவில் பதிவு செய்கிறார். தன்னுடைய சொத்துகளை என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் அதில் சொல்கிறார். அவர் இறந்த பிறகு, அவருடைய குடும்பத்தாராலும் நண்பர்களாலும் அந்த வீடியோவில் அவரைப் பார்க்கவும் அவர் சொல்வதைக் கேட்கவும் முடியும். நூறு வருஷங்களுக்கு முன்பு, இப்படியொரு விஷயத்தைக் கனவில்கூட யோசித்துப் பார்த்திருக்க முடியாது. இன்றும்கூட உலகத்தின் தொலைதூரப் பகுதிகளில் வாழ்கிற சிலருக்கு இது கற்பனை செய்ய முடியாத ஒரு அதிசயம்தான்! எல்லாவற்றையும் படைத்தவர் உருவாக்கிய அறிவியல் சட்டங்களை வைத்து மனிதர்களாலேயே இப்படிப்பட்ட அதிசயத்தைச் செய்ய முடிகிறதென்றால், எல்லாவற்றையும் படைத்தவரால் இன்னும் எவ்வளவு பெரிய அதிசயத்தைச் செய்ய முடியும்! கண்டிப்பாகவே, உயிரைப் படைத்தவருக்கு அதை மறுபடியும் படைப்பது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது!
லாசருவை இயேசு மறுபடியும் உயிரோடு கொண்டுவந்ததால், இயேசு மீதும் உயிர்த்தெழுதல் மீதும் மக்களுக்கு இருந்த விசுவாசம் அதிகமானது. (யோவான் 11:41, 42; 12:9-11, 17-19) அதோடு, இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர கடவுளாகிய யெகோவாவும் அவருடைய மகனும் எவ்வளவு ஆசையாக இருக்கிறார்கள் என்பதை அந்தச் சம்பவம் அழகாக விவரிக்கிறது.
இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க ‘கடவுள் ஏக்கமாக இருப்பார்’
லாசரு இறந்தபோது கடவுளுடைய மகனாகிய இயேசு நடந்துகொண்ட விதம், அவருடைய மென்மையான உணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவதற்கு அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் வந்து, அவரைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுந்து, ‘எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்’ என்று சொன்னாள். அவள் அழுவதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுவதையும் இயேசு பார்த்தபோது உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார். ‘அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘எஜமானே, வந்து பாருங்கள்’ என்று சொன்னார்கள். அப்போது, இயேசு கண்ணீர்விட்டார். அதனால் யூதர்கள், ‘பாருங்கள், அவன்மேல் இவருக்கு எவ்வளவு பாசம்!’ என்று பேசிக்கொண்டார்கள்.”—யோவான் 11:32-36.
இயேசு “உள்ளம் குமுறினார்,” “மனம் கலங்கினார்,” “கண்ணீர்விட்டார்” என்றெல்லாம் இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவுக்கு எந்தளவு கரிசனை இருந்தது என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. மனதை உருக்கும் இந்தக் காட்சியைப் பதிவு செய்வதற்காக பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தைகள், இயேசு இந்தச் சம்பவத்தால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார் என்பதைக் காட்டுகின்றன. தன்னுடைய அருமை நண்பனாகிய லாசருவின் மரணமும், லாசருவின் சகோதரியுடைய அழுகையும் இயேசுவின் உள்ளத்தை உருக்கியதால் அவருடைய கண்களில் நீர் பெருக்கெடுத்தது.a
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இறந்துபோன இரண்டு பேரை இயேசு ஏற்கெனவே உயிரோடு எழுப்பியிருந்தார். லாசருவையும் அப்படி உயிரோடு எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். (யோவான் 11:11, 23, 25) இருந்தாலும், அவர் “கண்ணீர்விட்டார்.” அப்படியென்றால், மனிதர்களைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை இயேசு வெறும் ஒரு கடமையாக நினைப்பதில்லை. லாசரு இறந்த சமயத்தில் அவர் வெளிக்காட்டிய மென்மையான மற்றும் ஆழமான உணர்ச்சிகள், மரணத்தைச் சுவடு தெரியாமல் அழிப்பதற்கு அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
லாசருவை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவந்த சமயத்தில் இயேசு வெளிக்காட்டிய மென்மையான உணர்ச்சிகள், மரணத்தைச் சுவடு தெரியாமல் அழிப்பதற்கு அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன
அதே ஆர்வம் நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்கும் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை! ஏனென்றால், இயேசு ‘[யெகோவாவின்] குணங்களைத்தான் அப்படியே காட்டினார்.’ (எபிரெயர் 1:3) இறந்தவர்களை உயிரோடு எழுப்ப யெகோவா விரும்புவதைப் பற்றி யோபு என்பவர் இப்படிச் சொன்னார்: “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா? . . . நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன். உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்.” (யோபு 14:14, 15) “ஏக்கமாக இருப்பீர்கள்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, கடவுளுக்கு இருக்கும் உள்ளப்பூர்வமான ஆவலையும் விருப்பத்தையும் குறிக்கிறது. (ஆதியாகமம் 31:30; சங்கீதம் 84:2) அப்படியென்றால், இறந்தவர்களை உயிரோடு எழுப்ப யெகோவா ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை!
இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்ற வாக்குறுதியை நாம் நிஜமாகவே நம்பலாமா? கண்டிப்பாக நம்பலாம்! யெகோவாவுக்கும் சரி, அவருடைய மகனாகிய இயேசுவுக்கும் சரி, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது, அதற்கான சக்தியும் இருக்கிறது. அந்த வாக்குறுதியால் உங்களுக்கு என்ன நன்மை? இறந்துபோன உங்கள் அன்பானவர்களோடு இந்தப் பூமியில் நீங்கள் மறுபடியும் ஒன்றுசேர முடியும்! அதுவும், இன்றிருப்பது போல் இல்லாமல், ஒரு புத்தம் புது பூமியில்!
யெகோவா அன்று மனிதர்களைப் படைத்து ஒரு அழகான தோட்டத்தில் குடிவைத்தார்; அதேபோல், மனிதர்களைச் சீக்கிரத்தில் பூஞ்சோலையில் வாழ வைக்கப்போவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அப்போது, இயேசு கிறிஸ்து ராஜாவாகப் பரலோகத்திலிருந்து இந்தப் பூமியை ஆட்சி செய்வார். (ஆதியாகமம் 2:7-9; மத்தேயு 6:10; லூக்கா 23:42, 43) அந்தப் பூஞ்சோலையில், மனிதர்கள் நோய்நொடியோ சாவோ இல்லாமல் வாழ்வார்கள். (வெளிப்படுத்துதல் 21:1-4; ஒப்பிடுங்கள்: யோபு 33:25; ஏசாயா 35:5-7.) அதோடு, எல்லா விதமான பகையும், வன்முறையும், பண நெருக்கடியும் காணாமல் போயிருக்கும். அப்படிப்பட்ட அருமையான பூமியில்தான், இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்.
இயேசு கிறிஸ்து நமக்காகத் தன் உயிரையே கொடுத்ததால், மறுபடியும் உயிரோடு வரும் வாய்ப்பு இறந்தவர்களுக்குக் கிடைத்திருக்கிறது; இந்த நம்பிக்கை, எல்லா மக்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் இப்போது இதைத்தான் நம்புகிறாள். அவளுடைய அம்மா இறந்து சில வருஷங்களுக்குப் பின்பு, பைபிளைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் அவளுக்கு உதவி செய்தார்கள். “இறந்தவங்க மறுபடியும் உயிரோட வரப்போறத தெரிஞ்சுகிட்டப்போ, அழுகையே வந்துடுச்சு. அம்மாவ மறுபடியும் பார்க்கப்போறத நினைச்சு நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா?” என்று அவள் சொல்கிறாள்.
இறந்துபோன உங்கள் அன்பானவர்களைப் பார்க்க நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? உங்கள் ஆசை நிறைவேறும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். எப்படி? இதைப் பற்றி உங்களுக்குச் சொல்லித்தர யெகோவாவின் சாட்சிகள் காத்திருக்கிறார்கள்.
a “உள்ளம் குமுறினார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, வலியில் தவிப்பதை அல்லது உள்ளத்தின் ஆழத்தில் உருகுவதைக் குறிக்கும் வினைச்சொல்லிலிருந்து (em·bri·maʹo·mai) வருகிறது. “இயேசு வேதனையின் உச்சக்கட்டத்துக்கே போய்விட்டதால், அவரையே அறியாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து குமுறினார் என்பதைத்தான் அந்த வார்த்தை இங்கே அர்த்தப்படுத்துகிறது” என்று ஒரு பைபிள் அறிஞர் சொல்கிறார். “மனம் கலங்கினார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, கலக்கம் என்ற அர்த்தத்தைத் தரும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து (ta·rasʹso) வருகிறது. “மனம் தவிதவிப்பதை, . . . மிகுந்த வலியிலும் வேதனையிலும் துடிதுடிப்பதை” அது அர்த்தப்படுத்துவதாக அகராதியியல் ஆசிரியர் ஒருவர் சொல்கிறார். “கண்ணீர்விட்டார்” என்ற வார்த்தை “கண்ணீர் சிந்துவதை, மவுனமாக அழுவதை” குறிக்கும் கிரேக்க வினைச்சொல்லிலிருந்து (da·kryʹo) வருகிறது.