உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 1 பக். 83-பக். 85 பாரா. 3
  • திருத்தமாக வாசித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருத்தமாக வாசித்தல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • சிரத்தையோடு வாசியுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • பொருத்தமான இடங்களில் நிறுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • தினந்தோறும் பைபிளை வாசிப்பதிலிருந்து பயனடைதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 1 பக். 83-பக். 85 பாரா. 3

படிப்பு 1

திருத்தமாக வாசித்தல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

தாளிலிருப்பதை அப்படியே சத்தமாக வாசியுங்கள். வார்த்தைகளை விட்டுவிடாமலும், வார்த்தைகளின் சில பாகங்களை விழுங்கிவிடாமலும், ஒரு வார்த்தைக்கு பதிலாக வேறொரு வார்த்தையை தவறாக வாசிக்காமலும் இருங்கள். வார்த்தைகளை சரியாக உச்சரியுங்கள். மேலும், நிறுத்தக் குறிகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஏன் முக்கியம்?

கவனமாகவும் சரியாகவும் வாசிப்பது, பைபிள் சத்தியத்தின் திருத்தமான அறிவை அளிப்பதன் அடிப்படை அம்சமாகும்.

எல்லா மனிதரும் “சத்தியத்தின் திருத்தமான அறிவை அடைய” வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தமென வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன. (1 தீ. 2:4, NW) அதற்கிசைய, பைபிளிலிருந்து சத்தமாக வாசிக்கையில், திருத்தமான அறிவை தெரிவிப்பதற்கான நம் ஆவல், வாசிக்கும் விதத்திலேயே தெரிய வேண்டும்.

பைபிளிலிருந்தும் பைபிளை விளக்கும் மற்ற பிரசுரங்களிலிருந்தும் சத்தமாக வாசிக்கும் திறமை, இளைஞருக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி முக்கியமானது. யெகோவாவின் சாட்சிகளாக, யெகோவாவையும் அவரது வழிகளையும் பற்றிய அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஒருவரிடம் அல்லது ஒரு சிறிய கூட்டத்தாரிடம் வாசித்துக் காட்டுவதை இது பெரும்பாலும் உட்படுத்துகிறது. குடும்பத்திலும்கூட அவ்வாறு வாசிக்கிறோம். சத்தமாக வாசிக்கும் திறமையை முன்னேற்றுவிக்க உதவும் ஆலோசனைகளைப் பெறுவதற்கு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பொருத்தமான வாய்ப்புகள் கிடைக்கின்றன; சிறியவர், பெரியவர், சகோதரர்கள், சகோதரிகள் என அனைவருக்கும் அவ்வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பைபிளை மற்றவர்கள் முன் வாசிப்பது, அதாவது தனிப்பட்டவர்களுக்கு முன்பாகவோ சபைக்கு முன்பாகவோ வாசிப்பது முக்கியமானதாக கருதப்பட வேண்டிய ஒன்று. பைபிள் கடவுளின் ஏவுதலால் எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபி. 4:12) கடவுளுடைய வார்த்தையில் மதிப்புமிக்க அறிவு புதைந்திருக்கிறது; வேறெங்கும் கிடைக்காத அறிவு அது. ஒரே மெய் தேவனை அறிந்துகொள்ளவும் அவரோடு நல்ல உறவை வளர்த்துக்கொள்ளவும் வாழ்க்கையிலுள்ள பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிக்கவும்கூட அது ஒருவருக்கு உதவும். மேலும், கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெறும் வழியை அது விளக்குகிறது. ஆகவே, பைபிளை முடிந்தவரை சிறப்பாக வாசிப்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.​—⁠சங். 119:140; எரே. 26:⁠2.

திருத்தமாக வாசிப்பது எப்படி. திறம்பட வாசிப்பதில் அநேக அம்சங்கள் உட்பட்டிருக்கின்றன, திருத்தமாக வாசிக்க கற்றுக்கொள்வதே அதில் முதல் படி. அதாவது, தாளிலுள்ளதை அப்படியே வாசிக்க முயல வேண்டும். வார்த்தைகளை விட்டுவிடாதிருக்கவும், அவற்றின் கடைசி எழுத்துக்களை விழுங்கிவிடாதிருக்கவும், வேறு வார்த்தைகளைப் போன்றே அவை இருப்பதால் தவறாக வாசித்துவிடாதிருக்கவும் கவனமாக இருக்க வேண்டும்.

வார்த்தைகளை சரியாக வாசிப்பதற்கு நீங்கள் சூழமைவை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதற்கு கவனமாக தயாரிக்க வேண்டும். அடுத்ததாக என்ன சொல்லப்படும் என எதிர்பார்ப்பதற்கும் கருத்துக்களின் கோர்வையை கண்டுகொள்வதற்குமான திறனை காலப்போக்கில் நீங்கள் வளர்த்துக்கொள்ளும்போது, திருத்தமாக வாசிப்பதில் முன்னேற்றம் செய்வீர்கள்.

நிறுத்தக் குறிகள், எழுத்துவடிவ மொழியின் முக்கிய அம்சங்களாகும். எங்கே நிறுத்துவது, எவ்வளவு நேரம் நிறுத்துவது, எங்கே குரல் வேறுபாட்டை பயன்படுத்துவது போன்றவற்றை நிறுத்தக் குறிகள் காட்டலாம். சில மொழிகளில், நிறுத்தக் குறிகளுக்கு ஏற்ப தொனியை மாற்றத் தவறினால், கேள்வியானது வாக்கியமாக மாறிவிடலாம், அல்லது அர்த்தமே தலைகீழாக மாறிவிடலாம். சிலசமயங்களில் நிறுத்தக் குறிகள் பெரும்பாலும் இலக்கண விதிகளுக்காகவே பயன்படுத்தப்படலாம். அவை உங்கள் மொழியில் பயன்படுத்தப்படும் விதத்தை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது, பயனுள்ள வாசிப்பிற்கு ஒரு திறவுகோல். வெறுமனே வார்த்தைகளை அல்ல, ஆனால் கருத்துக்களைச் சொல்வதே உங்கள் குறிக்கோள் என்பதை ஞாபகம் வையுங்கள்.

திருத்தமாக வாசிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள, பயிற்சி செய்வது அவசியம். முதலில் ஒரேவொரு பாராவை மட்டும் வாசியுங்கள்; எந்தத் தப்பும் இல்லாமல் வாசிக்க வரும்வரை மீண்டும் மீண்டும் அதே பாராவை வாசியுங்கள். அதன்பின் அடுத்த பாராவிற்கு செல்லுங்கள். இறுதியாக, எந்த வார்த்தைகளையும் விட்டுவிடாமல் அல்லது திரும்பவும் வாசிக்காமல் அல்லது தவறாக வாசிக்காமல் பல பக்கங்களை முடிக்க முயலுங்கள். இவற்றையெல்லாம் செய்த பிறகு, நீங்கள் வாசிப்பதை கவனிக்கும்படியும் தவறுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டும்படியும் எவரிடமாவது கேளுங்கள்.

உலகின் சில பாகங்களில், மங்கலான கண்பார்வையும் குறைந்த வெளிச்சமும் வாசிப்பதை சிரமமாக்குகின்றன. இவற்றை சரிப்படுத்த முடியுமென்றால், நிச்சயமாகவே வாசிப்பதில் முன்னேற்றம் ஏற்படும்.

காலப்போக்கில், நன்கு வாசிக்கும் சகோதரர்கள், சபை புத்தகப் படிப்பின்போதும் காவற்கோபுர படிப்பின்போதும் அனைவர் முன்பாக வாசிப்பதற்கு நியமிக்கப்படுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட அரிய நியமிப்பை சரிவர நிறைவேற்றுவதற்கு, வார்த்தைகளை சரியாக சொல்வது மட்டுமே போதாது. சபையில் திறம்பட்ட பொது வாசிப்பாளர் ஆவதற்கு, நீங்கள் தனிப்பட்ட வாசிப்பு சம்பந்தமாக சிறந்த பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு, வாக்கியத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பங்கிருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால், சொல்லப்படும் விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. உங்களுக்காக வாசிக்கும்போதும் வார்த்தைகளைத் தவறாக வாசித்தால் வாக்கியத்தின் அர்த்தம் மாறிவிடும். அந்த வார்த்தைகள் எந்தச் சூழமைவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை கவனிக்காவிட்டால் தவறாக வாசிக்க வாய்ப்புண்டு. அந்தச் சூழமைவில் ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம் என்பதை புரிந்துகொள்ள முயலுங்கள். நிறுத்தக் குறிகளுக்கு ஏற்ப வாக்கியத்தின் அர்த்தம் எவ்வாறெல்லாம் மாறுகிறது என்பதையும் கவனியுங்கள். பல வார்த்தைகளைக் கொண்டே கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன என்பதை ஞாபகம் வையுங்கள். இவற்றை கவனத்தில் வைத்தால்தான், நீங்கள் வார்த்தைகளை தனித்தனியாக வாசிக்காமல் கோர்வையாக​—⁠சொற்றொடர்களாகவும் துணை வாக்கியங்களாகவும்​—⁠வாசிப்பீர்கள். பொது வாசிப்பின் மூலம் மற்றவர்களுக்கு திருத்தமான அறிவை அளிப்பதற்கு, என்ன வாசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அனுபவம் வாய்ந்த ஒரு கிறிஸ்தவ மூப்பருக்குத்தான், “பொது வாசிப்பை எப்போதும் சிரத்தையோடு செய்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 தீ. 4:13, NW) இந்த அம்சத்தில் நாம் அனைவருமே முன்னேற வேண்டியிருப்பதில் சந்தேகமில்லை.

நிறுத்தக் குறிகள்

முற்றுப்புள்ளி (.) முழு நிறுத்தத்தைக் குறிக்கிறது.

காற்புள்ளி (,) வாக்கியம் தொடரும் என்பதால் குறுகிய நிறுத்தத்தைக் குறிக்கிறது.

அரைப்புள்ளி (;) முற்றுப்புள்ளியைவிட குறுகிய, ஆனால் காற்புள்ளியைவிட நீண்ட நிறுத்தத்தைக் குறிக்கிறது.

முக்காற்புள்ளி (:) ஒரு பட்டியலை அல்லது மேற்கோளை அளிப்பதற்கு முன் பயன்படுத்தப்படுகிறது. நிறுத்த வேண்டும், ஆனால் குரலொலியை இறக்கக் கூடாது.

ஆச்சரியக் குறி (!) தொனியில் வெளிப்படும் பலத்த உணர்ச்சியைக் குறிக்கிறது.

கேள்விக்குறி (?) பொதுவாக தொனியை உயர்த்தி அல்லது குரலொலியை ஏற்றி வாக்கியத்தை வாசிக்க வேண்டும்.

மேற்கோள் குறிகள் (“ ” அல்லது ‘ ’) மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வார்த்தைகளை நிறுத்தி வாசிக்க வேண்டும் என்பதைக் காட்டலாம் (வாக்கியத்தின் ஒரு பாகம் என்றால் குறுகிய நிறுத்தம்; முழு வாக்கியம் என்றால் நீண்ட நிறுத்தம்).

கோடுகள் (—) வார்த்தைகளைப் பிரித்துக் காட்ட பயன்படுத்தப்படும்போது, பொதுவாக தொனியை அல்லது வேகத்தை லேசாக மாற்ற வேண்டும்.

பிறைக்குறிகள் ( ) மற்றும் பகர அடைப்புக் குறிகள் [ ] சற்று தாழ்ந்த தொனியில் வாசிக்க வேண்டிய வார்த்தைகளைப் பிரித்துக் காட்டலாம். பிறைக்குறிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் ரெஃபரன்ஸுகளை வாசிக்க வேண்டியதில்லை; அர்த்தத்தை முழுமையாக்குவதற்காக பகர அடைப்புக் குறிகளில் வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தால் தொனியை மாற்ற வேண்டியதில்லை.

தேர்ச்சி பெறுவது எப்படி

  • பழகுங்கள்! பழகுங்கள்!! பழகுங்கள்!!! சத்தமாக வாசித்துப் பழகுங்கள்.

  • நீங்கள் வாசிப்பதைக் கேட்டு பிழைகளை சுட்டிக்காட்டும்படி எவரையாவது கேளுங்கள்

  • தனிப்பட்ட படிப்பின்போது, உங்களைக் கட்டுப்படுத்தி கவனமாக வாசியுங்கள்.

  • வார்த்தைகளைத் தனித்தனியாக வாசிக்காமல் கோர்வையாக வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பயிற்சி: நன்கு தயாரித்த பிறகு, மத்தேயு 5-7 அதிகாரங்களிலிருந்து ஒரு பகுதியை நீங்கள் சத்தமாக வாசிக்கலாம்; அதை தன் பைபிளில் கவனிக்கும்படி ஒரு நண்பரையோ குடும்பத்தினரையோ கேட்கலாம். நீங்கள் ஒவ்வொரு முறை (1) ஒரு வார்த்தையை விட்டுவிடும்போதும், (2) வார்த்தையை தவறாக வாசிக்கும்போதும் அல்லது முன்னுக்குப் பின் வாசிக்கும்போதும், (3) நிறுத்தத்தை அல்லது குரலொலியில் மாற்றத்தைக் குறிக்கும் நிறுத்தக் குறிகளை கவனிக்காமல் விடும்போதும், உடனடியாக சுட்டிக்காட்டும்படி அவரைக் கேளுங்கள். இரண்டு அல்லது மூன்று சந்தர்ப்பங்களில் குறைந்தது பத்து நிமிடங்களுக்கு இப்படிச் செய்வது நல்லது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்