படிப்பு 12
சைகைகளும் முகபாவங்களும்
சில கலாச்சாரத்தினர் மற்றவர்களைவிட அதிக தாராளமாக சைகைகளை பயன்படுத்துகின்றனர். இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லாருமே முகபாவங்களுடனும் சிலவகை சைகைகளுடனும் பேசுகிறோம். வீடுகளில் பேசினாலும்சரி மேடைகளில் பேசினாலும்சரி, இதுவே உண்மை.
இயேசுவுக்கும் அவருடைய ஆரம்பகால சீஷர்களுக்கும் சைகைகள் இயல்பாகவே வந்தன. ஒரு சமயத்தில், இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் பேச விரும்புவதாக ஒருவர் வந்து கூறினார். அதற்கு இயேசு, ‘என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!’ என்று சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. (மத். 12:48, 49) இதைத் தவிர பைபிளில் அநேக உதாரணங்கள் உள்ளன. அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் பவுலும் இயல்பாக சைகைகளைப் பயன்படுத்தியதை அப்போஸ்தலர் 12:17 மற்றும் 13:16 காட்டுகின்றன.
எண்ணங்களும் உணர்ச்சிகளும் குரலின் வாயிலாக மட்டுமல்ல, சைகைகள் மற்றும் முகபாவங்கள் வாயிலாகவும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இவற்றை நன்றாக பயன்படுத்தாவிட்டால் ஏதோ அக்கறையின்றி பேசுவதுபோல் பிறருக்குத் தோன்றும். ஆனால் பேச்சு பரிமாற்றத்திற்குரிய இந்த அம்சங்கள் சுவைபட கலந்திருக்கையில், பேச்சின் தரம் பெரிதும் மெருகூட்டப்படுகிறது. நீங்கள் தொலைபேசியில் பேசும்போதும்கூட, சைகைகளையும் முகபாவங்களையும் பொருத்தமாக பயன்படுத்தினால், உங்களுடைய குரல் நீங்கள் சொல்லும் செய்தியின் முக்கியத்துவத்தையும் அதைக் குறித்து உங்களுடைய உணர்ச்சிகளையும் உடனடியாக தெரிவிக்கும். ஆகவே, நீங்கள் மனதிலிருந்து பேசினாலும்சரி வாசித்தாலும்சரி, சபையார் உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும்சரி தங்கள் பைபிளை பார்த்துக் கொண்டிருந்தாலும்சரி, சைகைகளும் முகபாவங்களும் மதிப்புமிக்கவை.
உங்களுடைய சைகைகளும் முகபாவங்களும் செயற்கையாக இருக்கக் கூடாது. எப்படி சிரிப்பது அல்லது எப்படி சீறுவது என்பதை யாராவது உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களா? இல்லையே. சைகைகள் உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டும். உங்களுடைய சைகைகள் எந்தளவுக்கு இயல்பாக வருகின்றனவோ அந்தளவுக்கு சிறப்பாக இருக்கும்.
பொதுவாக, சைகைகள் இரண்டு வகைப்படும்: விவரிக்கும் (descriptive) சைகைகள், வலியுறுத்தும் (emphatic) சைகைகள். விவரிக்கும் சைகைகள் செயலை தெரிவிக்கின்றன அல்லது பரிமாணத்தையும் இடத்தையும் காட்டுகின்றன. தேவராஜ்ய பள்ளியில் சைகைகள் என்ற குறிப்பில் நீங்கள் உழைக்கையில், ஏதோ ஓரிரண்டை செய்துவிட்டு அத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பேச்சு முழுவதிலும் சைகைகளை இயல்பாக இழையோட செய்யுங்கள். இது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், திசை, தூரம், அளவு, இடம், அல்லது ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட நிலைகள் ஆகியவற்றை காட்டுகிற வார்த்தைகளைத் தேடிப் பார்ப்பது உதவியாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய பேச்சோடு ஒன்றிவிடுவதே. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என யோசிக்காமல் சாதாரணமாக எப்படி பேசுவீர்களோ அப்படியே பேசுங்கள் அல்லது சாதாரணமாக எப்படி சைகைகள் செய்வீர்களோ அப்படியே செய்யுங்கள். பதற்றமின்றி நிதானமாக இருக்கும்போது சைகைகள் இயல்பாக வருகின்றன.
வலியுறுத்தும் சைகைகள் உணர்ச்சிகளையும் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன. அவை கருத்துக்களை சிறப்பித்துக் காட்டுகின்றன, அவற்றிற்கு வலிமையூட்டுகின்றன, உயிர்ப்பூட்டுகின்றன. வலியுறுத்தும் சைகைகள் முக்கியமானவை. ஆனால் ஜாக்கிரதை! வலியுறுத்தும் சைகைகள் எளிதில் உங்களுக்கே உரிய தனிபாணியாக (mannerism) மாறிவிடலாம். நீங்கள் திரும்பத் திரும்ப ஒரேவிதமான சைகைகளையே செய்தால், அவற்றின் பக்கமே கேட்போரின் கவனம் ஈர்க்கப்படும், பேச்சோ மெருகூட்டப்படாது. உங்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பதாக பள்ளி கண்காணி சுட்டிக்காட்டினால், கொஞ்ச காலத்திற்கு விவரிக்கும் சைகைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். அதற்குப் பிறகு, வலியுறுத்தும் சைகைகளை மறுபடியும் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
வலியுறுத்தும் சைகைகளையும் பொருத்தமான வேறு சில சைகைகளையும் எந்தளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு, நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களுடைய உணர்ச்சிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். சபையாரை சுட்டிக்காட்டிப் பேசுவது அவர்களை தர்மசங்கடமடையச் செய்யலாம். சில கலாச்சாரங்களில் ஓர் ஆடவன் செய்யும் சில சைகைகள்—ஆச்சரியத்தை வெளிப்படுத்த வாயில் கைகளை வைப்பது போன்ற சைகைகள்—பெண்மைக்குரிய ஒன்றாக கருதப்படும். உலகில் சில இடங்களில், பெண்கள் அடிக்கடி கையசைத்துப் பேசுவது அடக்கமற்றதாக கருதப்படுகிறது. ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில், சகோதரிகள் முக்கியமாக முகபாவங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், சிறிய கூட்டத்தாரிடம் பேசுகையில், மிதமீறி சைகைகள் செய்வது கேலிக்குரியவையாக கருதப்படலாம்.
நீங்கள் அனுபவம் பெற்று அச்சமின்றி இயல்பாக பேச ஆரம்பிக்கையில், வலியுறுத்துவதற்கு பயன்படுத்தும் எந்த சைகைகளும் உங்களுடைய உள்ளுணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும்; நீங்கள் உறுதியான நம்பிக்கையோடும் உள்ளப்பூர்வமாகவும் பேசுகிறீர்கள் என்பதையும் தெரியப்படுத்தும். மேலும், அந்த சைகைகள் உங்களுடைய பேச்சிற்கு அர்த்தமூட்டும்.
உங்களுடைய முகபாவங்கள். நீங்கள் உண்மையிலேயே எப்படி உணர்கிறீர்கள் என்பதை வேறெந்த அங்க அசைவுகளையும்விட பெரும்பாலும் உங்களுடைய முகமே பளிச்சென படம்பிடித்துக் காட்டுகிறது. கண்கள், வாயின் தோற்றம், தலை சாய்க்கும் விதம் ஆகிய அனைத்தும் பங்களிக்கின்றன. ஒரு வார்த்தைகூட உதிர்க்காமலேயே உங்களுடைய முகம் அசட்டை மனப்பான்மையை, அருவருப்பை, குழப்பத்தை, ஆச்சரியத்தை, அல்லது ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட முகபாவங்களோடு வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகள் சேரும்பொழுது, அவை காட்சி ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. படைப்பாளர் உங்களுடைய முகத்தில் பெருமளவு தசைகளை—30-க்கும் மேற்பட்ட தசைகளை—வைத்திருக்கிறார். நீங்கள் புன்முறுவல் புரிகையில் இவற்றில் கிட்டத்தட்ட பாதி செயல்படுகின்றன.
நீங்கள் மேடையில் இருந்தாலும்சரி வெளி ஊழியத்தில் இருந்தாலும்சரி, இதயத்திற்கு மகிழ்ச்சியூட்டும் இனிமையான செய்தியை மக்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். புன்சிரிப்பு இதை உறுதிப்படுத்துகிறது. மறுபட்சத்தில், உங்களுடைய முகம் உணர்ச்சிகளின்றி இருந்தால், நீங்கள் உள்ளப்பூர்வமாகத்தான் பேசுகிறீர்களா என்ற சந்தேகம் எழலாம்.
இவை எல்லாவற்றையும்விட, மற்றவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்கிறீர்கள் என்பதை உங்களுடைய புன்சிரிப்பு தெரிவிக்கிறது. அந்நியர்களைக் கண்டாலே மக்கள் அஞ்சி நடுங்குகிற காலமாக இது இருப்பதால், நீங்கள் சொல்வதை பயமின்றி அதிக ஆர்வத்தோடு கேட்பதற்கு புன்சிரிப்பு மிகவும் அவசியம்.