உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 21 பக். 150-பக். 152 பாரா. 5
  • வசனங்களைச் சரியான அழுத்தத்தோடு வாசித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வசனங்களைச் சரியான அழுத்தத்தோடு வாசித்தல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • வேதவசனங்களை வாசிப்பதும் பொருத்துவதும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • தகுந்த இடங்களில் அழுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ‘பொது வாசிப்பில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்’
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • வசனங்களைச் சரியாக பொருத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 21 பக். 150-பக். 152 பாரா. 5

படிப்பு 21

வசனங்களைச் சரியான அழுத்தத்தோடு வாசித்தல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய தர்க்க ரீதியிலான விவாதத்தை சிறப்பித்துக் காட்டுகிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் அழுத்திக் கூறுங்கள். தகுந்த உணர்ச்சியோடு வாசியுங்கள்.

ஏன் முக்கியம்?

வசனங்களுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து வாசிக்கும்போது அவற்றின் முழு வலிமையும் முனைப்பாக காட்டப்படுகிறது.

கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி நீங்கள் தனிநபரிடம் பேசினாலும்சரி கூட்டத்தாரிடம் பேசினாலும்சரி, கடவுளுடைய வார்த்தையை மையமாக கொண்டே பேச வேண்டும். இது பொதுவாக பைபிளிலிருந்து வேதவசனங்களை வாசிப்பதை உட்படுத்துகிறது; இதை சிறப்பாக செய்ய வேண்டும்.

தகுந்த அழுத்தம் கொடுப்பது உணர்ச்சியை உட்படுத்துகிறது. வேதவசனங்களை உணர்ச்சியோடு வாசிக்க வேண்டும். சில உதாரணங்களை கவனியுங்கள். சங்கீதம் 37:11-ஐ நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது, அங்கே வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள சமாதானத்தை மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் உணர்வு உங்களுடைய குரலில் வெளிப்பட வேண்டும். வேதனையும் மரணமும் முடிவுக்கு வருவது சம்பந்தமாக வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசிக்கும்போது, முன்னறிவிக்கப்பட்டுள்ள மகத்தான விடுதலைக்கு மனமார்ந்த போற்றுதல் காட்டும் விதத்தில் உங்களுடைய குரல் இருக்க வேண்டும். பாவக் கறைகள் நிறைந்த ‘மகா பாபிலோனை’ விட்டு வெளியே வரும்படியான அழைப்பை வெளிப்படுத்துதல் 18:2, 4, 5-ல் வாசிக்கும்போது அவசர உணர்வை ஊட்டும் தொனியில் வாசிக்க வேண்டும். ஆனால் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சி உள்ளப்பூர்வமாக இருக்க வேண்டும், மிதமிஞ்சி இருக்கக் கூடாது. எந்தளவு உணர்ச்சியோடு வாசிக்க வேண்டும் என்பது அந்த வசனத்தை வைத்தும் அது பயன்படுத்தப்படும் விதத்தை வைத்தும் தீர்மானிக்கப்படுகிறது.

சரியான வார்த்தைகளை வலியுறுத்துங்கள். ஒரு வசனத்தில் ஒரு பகுதியின் பேரில் மட்டுமே குறிப்புகள் சொல்வதாக இருந்தால், அந்த வசனத்தை வாசிக்கையில் அந்தப் பகுதியை நீங்கள் சிறப்பித்துக் காட்ட வேண்டும். உதாரணமாக, மத்தேயு 6:33-ஐ வாசிக்கும்போது, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை . . . தேடு”வது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நீங்கள் பகுத்தாராய எண்ணியிருந்தால், “நீதியையும்” என்ற வார்த்தைக்கோ “இவைகளெல்லாம்” என்ற வார்த்தைக்கோ முக்கிய அழுத்தம் கொடுக்க மாட்டீர்கள்.

ஊழியக் கூட்டத்தில் ஒரு பேச்சில், மத்தேயு 28:19-ஐ வாசிக்க நீங்கள் திட்டமிடலாம். எந்த வார்த்தைகளை நீங்கள் வலியுறுத்த வேண்டும்? வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் தளராமலிருப்பதற்கு உற்சாகப்படுத்த விரும்பினால், “சீஷராக்கி” என்ற வார்த்தையை வலியுறுத்துங்கள். மறுபட்சத்தில், உங்களுடைய நாட்டில் குடியேறும் மக்களுடன் பைபிள் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கிறிஸ்தவ உத்தரவாதத்தைப் பற்றி பேசுவதற்குத் திட்டமிட்டால், அல்லது தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்கு பிரஸ்தாபிகள் சிலரை உற்சாகப்படுத்த விரும்பினால், “சகல ஜாதிகளையும்” என்பதை வலியுறுத்தலாம்.

பெரும்பாலும், ஒரு கேள்விக்கு பதிலளிப்பதற்காக அல்லது பிறர் சர்ச்சைக்குரியதாக கருதுகிற ஒரு விவாதத்திற்கு ஆதரவாக ஒரு வசனம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வசனத்திலுள்ள எல்லா கருத்துக்கும் ஒரே மாதிரி அழுத்தம் கொடுத்தால், அந்த வசனத்திற்கும் உங்களுடைய விவாதத்திற்கும் இடையே உள்ள தொடர்பை சபையார் புரிந்துகொள்ள தவறிவிடலாம். உங்களுக்கு அந்தக் குறிப்பு தெளிவாக தெரியலாம், ஆனால் அவர்களுக்கோ அது தெரியாது.

உதாரணமாக, பைபிளில் கடவுளுடைய பெயர் காணப்படுகிற சங்கீதம் 83:17-ஐ வாசிக்கும்போது, “உன்னதமானவர்” என்பதற்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கடவுளுக்கு தனிப்பட்ட பெயர் இருக்கிறது என்பதை வீட்டுக்காரர் தெளிவாக புரிந்துகொள்ள தவறிவிடலாம். “யேகோவா” என்ற பெயருக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், யெகோவாவின் அரசுரிமையைப் பற்றி விவாதிக்கையில் அதே வசனத்தைப் பயன்படுத்தும்போது, “உன்னதமானவர்” என்பதற்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதைப் போலவே, விசுவாசத்தோடு கிரியையும் அவசியம் என்பதை வலியுறுத்த யாக்கோபு 2:24-ஐ பயன்படுத்தும்போது, “கிரியைகளினாலேயும்” என்பதற்குப் பதிலாக “நீதிமான்களாக்கப்படுகிறானென்று” என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் சிலர் முக்கிய குறிப்பை உணரத் தவறிவிடலாம்.

பயனுள்ள மற்றொரு உதாரணத்தை ரோமர் 15:7-13-ல் காணலாம். இது, புறஜாதிகளும் யூதர்களும் இருந்த சபைக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய ஒரு நிருபத்தின் பாகமாக இருக்கிறது. கிறிஸ்துவின் ஊழியம் விருத்தசேதனம் பண்ணப்பட்ட யூதர்களுக்கு மாத்திரமல்ல, “புறஜாதியாரும் இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்து”வதற்கு அவர்களுக்கும் பயன் தருகிறது என்பதை இங்கே அப்போஸ்தலன் பவுல் விவாதிக்கிறார். புறஜாதியாருக்கு கொடுக்கப்பட்ட அந்த வாய்ப்பிற்கு கவனத்தை ஈர்த்து, அவர் நான்கு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார். பவுலின் மனதிலிருந்த குறிப்பை வலியுறுத்துவதற்கு அந்த மேற்கோள்களை நீங்கள் எப்படி வாசிக்க வேண்டும்? 9-ம் வசனத்தில் “புறஜாதியாரும்” என்பதையும் 10-ம் வசனத்தில் “புறஜாதிகளே” என்பதையும், 11-ம் வசனத்தில் “புறஜாதிகளே, எல்லாரும்” மற்றும் “ஜனங்களே, எல்லாரும்” என்பதையும், 12-ம் வசனத்தில் “புறஜாதியாரை” என்பதையும் வலியுறுத்துவதற்கு நீங்கள் குறித்துக்கொள்ளலாம். ரோமர் 15:7-13-ஐ அதேவிதமாக வலியுறுத்தி வாசித்துப் பாருங்கள். அப்படி வாசிக்கும்போது, பவுலுடைய விவாதத்தின் முழு கோர்வையும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும், புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் இருக்கும்.

அழுத்தம் கொடுக்கும் முறைகள். முனைப்பாக காட்ட விரும்பும் கருத்தாழமிக்க வார்த்தைகளை பல வழிகளில் வலியுறுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் முறைகள் வேதவசனத்திற்கும் பேச்சு அமைப்பிற்கும் இசைவாக இருக்க வேண்டும். இங்கே சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குரல் அழுத்தம். இது, கருத்தாழமிக்க வார்த்தைகளை வாக்கியத்திலுள்ள பிற வார்த்தைகளிலிருந்து முனைப்பாக தெரியச் செய்வதற்கு குரலில் ஏற்படுத்தும் எந்த மாற்றத்தையும் உட்படுத்துகிறது. சத்தத்தின் அளவை மாற்றுவதன் மூலம்​—அதிகரிப்பதன் மூலமோ குறைப்பதன் மூலமோ​—இந்த அழுத்தத்தைக் கொடுக்கலாம். பல மொழிகளில், குரலில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவது அழுத்தம் கொடுக்கிறது. என்றபோதிலும், சில மொழிகளில் அப்படி செய்வது அர்த்தத்தையே அடியோடு மாற்றிவிடலாம். முக்கியமான வார்த்தைகளை மெதுவாக சொல்லும்போது அவற்றின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட சில வார்த்தைகளை சிறப்பித்துக் காட்டுவதற்கு குரலில் அழுத்தம் கொடுக்க முடியாத மொழிகளில், நீங்கள் சிறந்த பலனைப் பெற அந்த மொழியில் வழக்கமாக பின்பற்றப்படும் முறை எதுவோ அதை பின்பற்றுவது அவசியம்.

நிறுத்தம். ஒரு வசனத்தின் முக்கிய பகுதியை வாசிப்பதற்கு முன்போ பின்போ​—அல்லது முன்பும் பின்பும்​—இதைச் செய்யலாம். முக்கிய கருத்தை வாசிப்பதற்கு முன்பு நிறுத்தம் கொடுப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது; பின்பு நிறுத்தம் கொடுப்பது நீங்கள் மனதில் ஏற்படுத்திய பதிவை ஆழமாக்குகிறது. ஆனால் அளவுக்கு மீறி நிறுத்தம் கொடுத்தால் எதுவுமே முனைப்பாக தெரியாது.

திரும்பத் திரும்ப கூறுதல். வாசிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி, ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ மீண்டும் வாசிப்பதன் மூலமாகவும் முக்கிய குறிப்பை வலியுறுத்தலாம். ஆனால் முழு வசனத்தையும் வாசித்துவிட்டு பின்பு முக்கிய வார்த்தைகளைத் திரும்ப சொல்லும் முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சைகைகள். அங்க அசைவும் முகபாவமும் ஒரு வார்த்தைக்கு அல்லது சொற்றொடருக்கு உணர்ச்சியை சேர்க்கலாம்.

குரலின் தொனி. சில மொழிகளில், வார்த்தைகளுக்கு அர்த்தமூட்டி அவற்றை தனியே பிரித்துக் காட்டுகிற தொனியில் அவை சில சமயம் வாசிக்கப்படலாம். இங்கேயும் விவேகத்தை காண்பிக்க வேண்டும், முக்கியமாக நக்கலாக வாசிக்கும் விஷயத்தில்.

வசனங்களை பிறர் வாசிக்கையில். ஒரு வசனத்தை வீட்டுக்காரர் வாசிக்கையில், அவர் ஒருவேளை தவறான வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கலாம் அல்லது எந்த வார்த்தைக்கும் அழுத்தம் கொடுக்காமல் வாசிக்கலாம். அப்பொழுது நீங்கள் என்ன செய்யலாம்? பொதுவாக, அந்த வசனங்களை நீங்கள் பொருத்திக் காட்டுவதன் மூலம் அர்த்தத்தை தெளிவாக்குவதே மிகவும் சிறந்தது. பொருத்திக் காட்டிய பிறகு, கருத்தாழமிக்க வார்த்தைகளுக்கு நேரடியாக விசேஷ கவனம் செலுத்தலாம்.

அழுத்தத்தோடு வாசிக்கும் கலையை வளர்த்துக்கொள்வது எப்படி

  • நீங்கள் எந்த வசனத்தை வாசிக்க திட்டமிட்டாலும் இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த வார்த்தைகள் எப்படிப்பட்ட உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன? அதை நான் எப்படி தெரியப்படுத்துவது?’

  • நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் வசனங்களை பகுத்தாராயுங்கள். ஒவ்வொன்றுக்கும் இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த வசனம் என்ன நோக்கத்திற்கு உதவும்? அந்த நோக்கத்தை அடைய எந்த வார்த்தைகளை வலியுறுத்த வேண்டும்?’

பயிற்சிகள்: (1) வெளி ஊழியத்தில் நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் ஒரு வசனத்தை பகுத்தாராயுங்கள். தகுந்த உணர்ச்சியோடு வாசிப்பதற்கு பழகிப் பாருங்கள். நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் முறையை மனதிற்கொண்டு, சரியான வார்த்தை(களு)க்கு அழுத்தம் கொடுத்து அந்த வசனத்தை சத்தமாக வாசியுங்கள். (2) தற்போது படிக்கும் பிரசுரத்தில், வசனங்கள் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள ஒரு பாராவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வசனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பகுத்தாராயுங்கள். கருத்தாழமிக்க வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். வசனங்களுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கும் முறையில் முழு பாராவையும் சத்தமாக வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்