இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன?
“எ ன் வாழ்க்கை பிரமாதமா அமையணும்னு விரும்புறேன்” என்கிறாள் ஒரு பருவப் பெண். உங்களுக்கும் இதே விருப்பம் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை எப்படி உண்மையிலேயே ‘பிரமாதமாக’ அமைத்துக்கொள்ள முடியும்? கைநிறைய சம்பாதிக்க வேண்டும், கௌரவமான வேலை பார்க்க வேண்டும், பேரும் புகழும் பெற வேண்டும் என்றெல்லாம் மீடியாக்களும் நண்பர்களும் ஆசிரியர்களும்கூட உங்களுக்கு சொல்லலாம்.
ஆனால் பணத்தையும் பொருளையும் குவிப்பதில் குறியாக இருப்பது “காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்” என பைபிள் எச்சரிக்கிறது. (சபை உரையாளர் [பிரசங்கி] 4:4, பொது மொழிபெயர்ப்பு) ஏனெனில் வெகு சில இளைஞர்களே உண்மையில் பணமும் புகழும் சம்பாதிக்கின்றனர். அவர்களுக்கும் இறுதியில் மிஞ்சுவது பெரும் ஏமாற்றமே. பிரிட்டனில், பேராசிரியராக கௌரவமாக பணிபுரிய நினைத்த ஓர் இளைஞன், “அது ஒரு காலி டப்பாவைப் போன்றது” என்கிறான். “திறந்து பார்த்தால்தான் தெரியும் அதில் ஒன்றுமே இல்லையென்பது” என சொல்கிறான். ஒரு வேலை உங்களுக்கு பணம் பொருளையும் பேர் புகழையும் சிலசமயம் பெற்றுத் தரலாம் என்பது உண்மைதான். ஆனால் அது உங்கள் ‘ஆன்மீக தேவையை’ திருப்தி செய்யாது. (மத்தேயு 5:3, NW) அதுமட்டுமல்ல, ‘இந்த உலகம் ஒழிந்துபோகிறது’ என 1 யோவான் 2:17 எச்சரிக்கிறது. இந்த உலகில் நீங்கள் முன்னுக்கு வந்தாலும் அது கொஞ்ச நாளுக்குத்தான்.
“நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என பிரசங்கி 12:1 இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது. ஆம், உங்கள் வாழ்க்கையை பிரமாதமாக அமைத்துக் கொள்வதற்கு தலைசிறந்த வழி, யெகோவா தேவனின் சேவைக்கு அதை அர்ப்பணிப்பதே. ஆனால் முதலில் கடவுளுக்கு சேவை செய்வதற்கான தகுதியை நீங்கள் பெற வேண்டும். அதை எப்படி பெறலாம்? கடவுளுக்கு சேவை செய்வதில் என்ன அடங்கியிருக்கிறது?
யெகோவாவின் சாட்சியாவதற்கு தகுதி பெறுதல்
முதலாவதாக, கடவுளை சேவிப்பதற்கான ஆசையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்; உங்கள் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இந்த ஆசை உங்களுக்கு தானாகவே வந்துவிடாது. தனிப்பட்ட விதமாக நீங்கள் யெகோவாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். “ஜெபம் செய்வது யெகோவாவிடம் நெருங்கி வர உதவுகிறது” என்கிறாள் ஒரு பருவப் பெண்.—சங்கீதம் 62:8; யாக்கோபு 4:8.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியதை ரோமர் 12:2 (NW) சொல்கிறது: “கடவுளுடைய நன்மையான, ஏற்கத்தக்க, பரிபூரணமான சித்தம் என்னவென்று உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.” உங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் விஷயங்களில் சிலவற்றை எப்போதாவது சந்தேகித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், பைபிள் தரும் அறிவுரைக்கு இணங்க, இந்த விஷயங்கள் உண்மைதானா என்பதை “உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”! நீங்களே ஆராய்ந்து பாருங்கள். பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வாசியுங்கள். ஆனாலும் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வது மனதுடன் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. நீங்கள் வாசிக்கும் விஷயங்களை தியானிக்க நேரம் செலவிடுங்கள்; அப்போதுதான் அது உங்கள் அடையாளப்பூர்வ இருதயத்தில் பசுமரத்தாணிபோல் பதியும். கடவுள் மீதான உங்கள் அன்பும் வளரும்.—சங்கீதம் 1:2, 3.
அடுத்ததாக, நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பற்றி பழக்கமானவர்களிடம், ஒருவேளை பள்ளி தோழர்களிடம் கலந்து பேச முயலுங்கள். அதன்பின் வீட்டுக்கு வீடு பிரசங்கிக்க ஆரம்பியுங்கள். அப்படி பிரசங்கிக்கும்போது எப்போதாவது பள்ளி தோழரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். முதலில் நீங்கள் மிகவும் தர்மசங்கடப்படலாம். ஆனால் ‘சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்பட’ கூடாதென பைபிள் நமக்கு சொல்கிறது. (ரோமர் 1:16) ஜீவனும் நம்பிக்கையும் தரும் செய்தியைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள்! பிறகு எதற்கு வெட்கப்பட வேண்டும்?
உங்கள் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருந்தால் நீங்கள் ஏற்கெனவே அவர்களுடன் சேர்ந்து பிரசங்கித்து வரலாம். ஆனால் ஒப்புக்கு அவர்களுடன் சென்றுவிட்டு ஒன்றும் பேசாமல் வந்துவிடுகிறீர்களா, அல்லது பத்திரிகைகளையும் துண்டுப்பிரதிகளையும் மட்டுமே கொடுத்துவிட்டு வந்துவிடுகிறீர்களா? வீடுகளில் சந்திப்பவர்களிடம் நீங்களே பேசி, பைபிளிலிருந்து அவர்களுக்கு கற்பிக்க முடிகிறதா? இல்லையென்றால் உங்கள் பெற்றோரிடமிருந்து அல்லது சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்த ஒருவரிடமிருந்து உதவியைப் பெறுங்கள். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக தகுதி பெறுவதை உங்கள் இலக்காக வையுங்கள்!
காலப்போக்கில், கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க தூண்டப்படுவீர்கள்; இனி கடவுளை சேவிக்கப் போவதாக அவரிடம் உறுதி அளிப்பீர்கள். (ரோமர் 12:1) ஆனால் அந்த ஒப்புக்கொடுத்தல் வெறுமனே அந்தரங்க விஷயமல்ல. “இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ண” வேண்டுமென கடவுள் அனைவரிடமும் எதிர்பார்க்கிறார். (ரோமர் 10:10) முழுக்காட்டுதல் பெறும் சமயத்தில், உங்கள் விசுவாசத்தை முதலில் வாயினால் அறிக்கை செய்கிறீர்கள். பிறகு தண்ணீரில் முழுக்காட்டுதல் பெறுகிறீர்கள். (மத்தேயு 28:19, 20) முழுக்காட்டுதல், முக்கியமான படி என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் எந்த விதத்திலாவது தவறிவிடுவீர்கள் என நினைத்து தயங்காதீர்கள். பலத்திற்காக கடவுளை சார்ந்திருந்தால், உறுதியாக நிலைத்திருப்பதற்கு தேவையான “இயல்புக்கு மிஞ்சிய வல்லமையை” அவர் உங்களுக்கு தருவார்.—2 கொரிந்தியர் 4:7, NW; 1 பேதுரு 5:10.
முழுக்காட்டுதல் பெறுகையில் நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிறீர்கள். (ஏசாயா 43:10) உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை இது பெரிதும் பாதிக்கும். ‘சொந்தம் கைவிடுவதை’ ஒப்புக்கொடுத்தல் உட்படுத்துகிறது. (மத்தேயு 16:24, NW) நீங்கள் சொந்த குறிக்கோள்களையும் இலட்சியங்களையும் துறந்து, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேட’ வேண்டியிருக்கலாம். (மத்தேயு 6:33) அதற்கான அநேக வாய்ப்புகளை ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் ஏற்படுத்தி தரலாம். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
கடவுளுக்கு முழுநேர சேவை செய்ய வாய்ப்புகள்
● பயனியர் ஊழியம் இந்த வாய்ப்புகளில் ஒன்று. ஒரு பயனியர், நல்ல முன்மாதிரி வகிக்கும் முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர்; அவர் நற்செய்தியைப் பிரசங்கிக்க மாதந்தோறும் குறைந்தபட்சம் 70 மணிநேரம் செலவிடுகிறார். வெளி ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவது, பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்குமான திறமைகளை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவும். அநேக பயனியர்கள், தங்களோடு பைபிள் படிப்பவர்களுக்கு உதவியளித்து, அவர்கள் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாவதைப் பார்க்கும் சந்தோஷத்தை பெற்றிருக்கின்றனர். இந்தளவு மகிழ்ச்சியையும் திருப்தியையும் வேறெந்த வேலையால் தர முடியும்?
அன்றாட செலவுகளை சமாளிக்க பெரும்பாலான பயனியர்கள் பகுதிநேர வேலை செய்கின்றனர். அநேகர் பயனியர் செய்ய முன்னதாகவே திட்டமிட்டு, பள்ளியில் படிக்கையில் அல்லது பெற்றோரிடமிருந்து ஏதேனும் தொழிலை கற்றுக்கொள்கின்றனர். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் ஏதோவொரு பயிற்சியைப் பெறுவது உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் நல்லதாக படலாம்; ஆனால் நிறைய பணம் சம்பாதிப்பதே உங்கள் குறிக்கோளாக இல்லாமல், ஊழியம் செய்வதே, ஒருவேளை முழுநேர ஊழியம் செய்வதே எப்போதும் குறிக்கோளாக இருக்கும்படி நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு பயனியரின் வாழ்க்கையில் முக்கிய இடம் அவரது வேலைக்கல்ல, ஊழியத்துக்கே—உயிரைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவும் ஊழியத்துக்கே! பயனியர் செய்வதை ஏன் உங்கள் இலட்சியமாக வைக்கக் கூடாது? பயனியர் ஊழியம் பெரும்பாலும் மற்ற சிலாக்கியங்களுக்கு வழிவகுக்கிறது. உதாரணத்திற்கு சில பயனியர்கள், ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படும் இடங்களுக்கு குடிமாறி செல்கிறார்கள். இன்னும் மற்றவர்கள் வேறொரு மொழியை கற்றுக்கொண்டு, தங்கள் சபை பிராந்தியத்தில் அம்மொழி பேசுபவர்களிடத்தில் சென்று பிரசங்கிக்கிறார்கள் அல்லது வேறொரு நாட்டிற்குக்கூட சென்று சேவை செய்கிறார்கள். ஆம், பயனியர் ஊழியம் நிச்சயமாகவே இன்பமான, நிறைவான வாழ்க்கைக்கு வழி!
● கிறிஸ்தவ தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி மற்றொரு வாய்ப்பாகும். இந்தப் பள்ளி, தம்பதிகளுக்கு விசேஷ பயிற்சி அளிக்கிறது; யெகோவாவுக்கும் அவரது அமைப்புக்கும் இன்னும் முழுமையாகச் சேவை செய்ய உதவுகிறது. இதில் பட்டம் பெறுகிற பெரும்பாலானோர், தங்களது நாட்டில் தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள். சூழ்நிலை அனுமதித்தால், ஒருசிலர் வேறொரு நாட்டில் சேவை செய்ய நியமிக்கப்படலாம். இதில் பட்டம் பெறுகிறவர்கள் ஒதுக்குப்புற பிராந்தியங்களில் தற்காலிக விசேஷ பயனியர்களாக நியமிக்கப்படலாம். நற்செய்தி சென்றெட்டாத இடங்களில் சென்றெட்டவும் நம் வேலையை விரிவுபடுத்தவும் அது உதவும்.
● மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளி, திருமணமாகாத மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பயிற்றுவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி. மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் உள்ள பொறுப்புகள், அமைப்பு, பொதுப் பேச்சு போன்ற விஷயங்கள் இந்த எட்டு வார கால தீவிர பயிற்சியின்போது சிந்திக்கப்படுகின்றன. சிலர் தங்கள் சொந்த நாடுகளிலேயே சேவிக்கும்படி நியமிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் வெளிநாடுகளில் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
● பெத்தேல் சேவை, யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒன்றில் வாலண்டியராக பணிபுரிவதை அர்த்தப்படுத்துகிறது. பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் சிலர் பைபிள் பிரசுரங்களை தயாரிப்பதில் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றனர். மற்றவர்கள் அதற்கு உதவும் மற்ற வேலைகளை செய்கின்றனர்; உதாரணத்திற்கு கட்டடங்களையும் இயந்திரங்களையும் பராமரிக்கின்றனர், பெத்தேல் குடும்பத்தினரின் சரீர தேவைகளை கவனித்துக்கொள்கின்றனர். இந்த எல்லா நியமிப்புகளுமே யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்ய கிடைக்கும் பாக்கியங்கள். அதோடு, பெத்தேலில் சேவை செய்பவர்கள், தாங்கள் செய்யும் எந்த வேலையும் உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு பயனளிக்கும் என்பதை அறிந்து சந்தோஷப்படுகின்றனர்.
சிலசமயங்களில் விசேஷ திறமைகள் உள்ள சகோதரர்கள் பெத்தேலில் சேவை செய்ய அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் அங்கே சென்ற பிறகுதான் பயிற்சி பெறுகிறார்கள். பெத்தேலில் உள்ளவர்கள் பொருளாதார லாபத்துக்காக சேவை செய்வதில்லை; ஆனால் உணவு, தங்கும் வசதி, சொந்த செலவுகளுக்கான சிறிய தொகை ஆகியவற்றைப் பெற்று திருப்தியாக இருக்கிறார்கள். ஓர் இளைஞர் தன்னுடைய பெத்தேல் சேவையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “இது அருமையான வேலை! பெத்தேல் வாழ்க்கை அவ்வளவு சுலபமல்ல, ஆனால் எத்தனையோ ஆசீர்வாதங்களை அதனால் பெற்றிருக்கிறேன்.”
● சர்வதேச சேவை, கிளை அலுவலகங்களையும் ராஜ்ய மன்றங்களையும் கட்டுவதில் பங்குகொள்ள வாய்ப்பளிக்கிறது. சர்வதேச ஊழியர்கள் என அழைக்கப்படுகிறவர்கள் அப்படிப்பட்ட கட்டுமான பணிக்கு உதவியளிக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். இதுவும் பரிசுத்த சேவையின் ஓர் அம்சம்; இது சாலொமோனின் ஆலயத்தைக் கட்டியவர்களின் பணிக்கு ஒப்பானது. (1 இராஜாக்கள் 8:13-18) பெத்தேல் அங்கத்தினர்களைப் போலவே சர்வதேச ஊழியர்களும் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். யெகோவாவிற்கு துதியுண்டாகும் வகையில், அவருக்கு இவ்விதமாக சேவை செய்ய முன்வருவது இந்த சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
முழு இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்
யெகோவாவுக்கு சேவை செய்வதே உங்கள் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக அமைத்துக் கொள்வதற்கு வழி. கடவுளுக்கு முழுநேர சேவை செய்வதை ஏன் உங்கள் இலட்சியமாக வைக்கக் கூடாது? முழுநேர ஊழியம் செய்வதைப் பற்றி உங்கள் பெற்றோருடனும், சபை மூப்பர்களுடனும், வட்டார கண்காணியுடனும் பேசிப் பாருங்கள். பெத்தேலுக்கு, மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளிக்கு, அல்லது கிறிஸ்த தம்பதிகளுக்கான பைபிள் பள்ளிக்கு செல்ல உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதற்காக வட்டார மாநாடுகளிலும் மாவட்ட மாநாடுகளிலும் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள்.
முழுநேர ஊழியம் செய்ய அல்லது அதற்குரிய தகுதியைப் பெற ஒருவேளை அனைவராலும் முடியாது. சிலசமயங்களில் உடல்நல பிரச்சினைகள், பொருளாதார சூழ்நிலைகள், குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றால் ஒருவர் அதிக நேரம் ஊழியத்தில் செலவிட முடியாமல் போகலாம். இருந்தாலும் ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் பைபிளின் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:37) உங்கள் சூழ்நிலை அனுமதிப்பதற்கு இசைய உங்களாலான சிறந்ததை செய்யும்படியே யெகோவா எதிர்பார்க்கிறார். ஆகவே உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் யெகோவாவின் சேவைக்கு உங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுங்கள். எதார்த்தமான தேவராஜ்ய இலக்குகளை முன் வையுங்கள். ஆம், ‘வாலிபப் பிராயத்திலே உங்கள் சிருஷ்டிகரை நினையுங்கள்,’ அப்போது நித்தியமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!
மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்
4/13