உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lr அதி. 5 பக். 32-36
  • ‘இதுதான் என் மகன்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘இதுதான் என் மகன்’
  • பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இதே தகவல்
  • “இவர் என்னுடைய குமாரன்”
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • இயேசு ஒரு தொழுவத்தில் பிறக்கிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • ஒரு தேவதூதன் மரியாளைச் சந்திக்கிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
lr அதி. 5 பக். 32-36

அதிகாரம் 5

‘இதுதான் என் மகன்’

பிள்ளைகள் நல்லபடியாக நடந்துகொள்ளும்போது பெரியவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். ஒரு குட்டிப் பெண் எதையாவது நன்றாக செய்தால், ‘இவ என்னோட பொண்ணு’ என அவளுடைய அப்பா பெருமையாக சொல்லிக்கொள்வார். அதேபோல் ஒரு சின்னப் பையனும் நல்ல விதமாக நடக்கும்போது ‘இவன் என்னோட மகன்’ என அவனுடைய அப்பா சந்தோஷமாக சொல்வார்.

இயேசு எப்போதுமே தன்னுடைய அப்பாவுக்கு பிடித்த மாதிரிதான் நடந்துகொள்வார். அதனால் அவருடைய அப்பாவுக்கு பெருமை. ஒருமுறை இயேசு தன்னுடைய நண்பர்கள் மூன்று பேருடன் இருந்தார். அப்போது அவருடைய அப்பா என்ன செய்தார் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— ஆமாம், அவர் பரலோகத்திலிருந்து பேசினார்; ‘இதுதான் என்னுடைய அன்பு மகன், எனக்கு பிரியமான மகன்’ என்று சொல்லவே அவ்வளவு தூரத்திலிருந்து பேசினார்.—மத்தேயு 17:5.

அப்பாவின் இஷ்டப்படி நடப்பதில்தான் இயேசுவுக்கு எப்போதும் சந்தோஷம். ஏன் என்று உனக்கு தெரியுமா? ஏனென்றால் இயேசு அவர்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நாம் எதையாவது வெறும் கடமைக்காக செய்தால் அது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் மனப்பூர்வமாக செய்தால் அது சுலபமாக இருக்கும். மனப்பூர்வமாக செய்வது என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?— எதையாவது உண்மையிலேயே விருப்பப்பட்டு செய்வதுதான் அதன் அர்த்தம்.

இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பும், தன்னுடைய அப்பா சொன்னதையெல்லாம் மனப்பூர்வமாக செய்தார். ஏனென்றால் தன்னுடைய அப்பாவாகிய யெகோவா தேவனை அவர் நேசித்தார். இயேசுவுக்கு பரலோகத்தில் அருமையான இடம் இருந்தது, அவர் தன் அப்பாவோடு இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான வேலையை அவருடைய அப்பா கொடுத்தார். அதைச் செய்வதற்காக அவர் பரலோகத்தை விட்டு வர வேண்டியிருந்தது. பூமியில் ஒரு குழந்தையாகப் பிறக்க வேண்டியிருந்தது. இயேசு அதை மனப்பூர்வமாக செய்தார், ஏனென்றால் அவர் அதைச் செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்பினார்.

The angel Gabriel appears to Mary

காபிரியேல் தூதன் மரியாளிடம் என்ன சொன்னார்?

இயேசு பூமியில் ஒரு குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்றால் ஒரு அம்மா தேவை, இல்லையா? அவருடைய அம்மா யார் என்று உனக்குத் தெரியுமா?— அவருடைய பெயர் மரியாள். அவரிடம் பேசுவதற்காக காபிரியேல் என்ற தேவதூதனை யெகோவா பரலோகத்திலிருந்து அனுப்பினார். மரியாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று காபிரியேல் சொன்னார். அந்தக் குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் அந்தக் குழந்தையின் அப்பா யார் தெரியுமா?— அந்தக் குழந்தையின் அப்பா யெகோவா தேவனே என்று காபிரியேல் தூதன் சொன்னார். அதனால்தான் இயேசு கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுவார் என்றும் சொன்னார்.

காபிரியேல் சொன்னதைக் கேட்டபோது மரியாளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறாய்?— ‘நான் இயேசுவோட அம்மாவாக இருக்க மாட்டேன்’ என்று சொல்லியிருப்பாரா? இல்லை, கடவுள் சொன்னபடியே செய்ய மரியாள் உடனடியாக ஒத்துக்கொண்டார். ஆனால் கடவுளுடைய மகன் பரலோகத்தில் அல்லவா இருந்தார், அவரால் எப்படி பூமியில் ஒரு குழந்தையாகப் பிறக்க முடியும்? இயேசு குழந்தையாக பிறந்த விதம், மற்ற குழந்தைகள் பிறக்கும் விதத்திலிருந்து எப்படி வித்தியாசமாக இருந்தது? உனக்கு அது தெரியுமா?—

முதல் மனுஷன் ஆதாமையும் முதல் மனுஷி ஏவாளையும் கடவுள் படைத்தார் என்று நாம் பார்த்தோம் இல்லையா? அவர்கள் அருமையான விதத்தில் ஒன்றுசேரும்படி கடவுள் படைத்தார். இப்படி ஆணும் பெண்ணும் ஒன்றுசேரும்போது பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தை வளர ஆரம்பிக்கும். இது ஒரு அதிசயம் என்று மக்கள் சொல்கிறார்கள்! நீயும் அப்படித்தானே சொல்வாய்?

கடவுள் இதைவிட அதிசயமான ஒன்றை செய்தார். பரலோகத்திலிருந்த தன் மகனின் உயிரை எடுத்து மரியாளின் வயிற்றில் வைத்தார். அதற்கு முன் கடவுள் அப்படிச் செய்ததே இல்லை, அதற்குப் பிறகும் அப்படிச் செய்தது இல்லை. அவர் செய்த அதிசயத்தினால் மரியாளின் வயிற்றில் இயேசு வளர ஆரம்பித்தார். மற்ற குழந்தைகள் எப்படி அம்மாவின் வயிற்றில் வளருமோ அப்படித்தான் அவரும் வளர்ந்தார். அதன் பிறகு யோசேப்பு என்பவரை மரியாள் கல்யாணம் செய்துகொண்டார்.

இயேசு பிறப்பதற்கு நேரம் வந்தது. அப்போது மரியாளும் யோசேப்பும் பெத்லகேம் என்ற ஊருக்கு போயிருந்தார்கள். ஆனால் அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. மரியாளுக்கும் யோசேப்புக்கும் தங்குவதற்கு இடமே கிடைக்கவில்லை. அதனால் மிருகங்கள் இருந்த தொழுவத்தில் அவர்கள் தங்கினார்கள். அங்கேதான் மரியாளுக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையாகிய இயேசுவை தீவனத் தொட்டியில் படுக்க வைத்தார்கள். தீவனத் தொட்டி என்றால், மாடுகளும் மற்ற மிருகங்களும் சாப்பிடுகிற தீவனத்தைப் போட்டு வைக்கும் தொட்டி. இந்தப் படத்தில்கூட அது தெரிகிறது பார்.

Mary and Joseph put Jesus in a manger

இயேசு ஏன் ஒரு தீவனத் தொட்டியில் வைக்கப்பட்டார்?

இயேசு பிறந்த அந்த ராத்திரி நேரத்தில் ஆச்சரியமான காரியங்கள் நடந்தன. பெத்லகேமுக்குப் பக்கத்தில், மேய்ப்பர்கள் சிலருக்கு முன்பாக ஒரு தேவதூதன் தோன்றினார். இயேசு மிகவும் முக்கியமானவர் என்று அவர்களுக்குச் சொன்னார். ‘இதோ! நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லப் போகிறேன். அது எல்லாருக்கும் சந்தோஷமான செய்தி. இன்றைக்கு ஒருவர் பிறந்திருக்கிறார், அவர் மக்களைக் காப்பாற்றுவார்’ என்று சொன்னார்.—லூக்கா 2:10, 11.

The shepherds observe the angels praising God

இந்தத் தேவதூதர்களில் ஒருவர் மேய்ப்பர்களிடம் என்ன சொன்னார்?

பெத்லகேமில் ஒரு தீவனத் தொட்டியில் இயேசு இருப்பதாக அந்தத் தேவதூதன் மேய்ப்பர்களிடம் சொன்னார். பிறகு திடீரென்று பரலோகத்திலிருந்த மற்ற தேவதூதர்களும் தோன்றினார்கள். எல்லா தேவதூதர்களும் சேர்ந்து கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ‘கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், அவருக்கு பிரியமான மனிதர்களுக்கு சமாதானம் கிடைக்கட்டும்’ என்று பாடினார்கள்.—லூக்கா 2:12-14.

பிறகு தேவதூதர்கள் மறைந்துபோனார்கள். மேய்ப்பர்கள் பெத்லகேமுக்குப் போய் இயேசுவைப் பார்த்தார்கள். தாங்கள் கேட்ட நல்ல விஷயங்களை எல்லாம் யோசேப்புக்கும் மரியாளுக்கும் அவர்கள் சொன்னார்கள். அப்போது மரியாளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார். இயேசுவுக்கு அம்மாவாக இருக்க ஒத்துக்கொண்டதை நினைத்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் இல்லையா?

அதன் பிறகு யோசேப்பும் மரியாளும் குழந்தையான இயேசுவோடு நாசரேத் என்ற ஊருக்கு சென்றார்கள். அங்கேதான் இயேசு வளர்ந்தார். அவர் வளர்ந்து பெரியவரான போது, ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்கும் மிகப் பெரிய வேலையைச் செய்ய ஆரம்பித்தார். பூமியில் இயேசுவுக்கு சில வேலைகளை யெகோவா கொடுத்திருந்தார். அந்த வேலைகளில் ஒன்றுதான் கற்றுக்கொடுக்கும் வேலை. இயேசு அதை விருப்பப்பட்டு செய்தார். ஏனென்றால் தன் பரலோகத் தகப்பன்மேல் மிகுந்த பிரியம் வைத்திருந்தார்.

பெரிய போதகராக வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு இயேசு முழுக்காட்டுதல் பெற்றார். முழுக்காட்டுபவராகிய யோவான் என்பவர் யோர்தான் என்ற நதியில் இயேசுவை முழுக்காட்டினார். அதன் பிறகு ஆச்சரியமான ஒன்று நடந்தது! இயேசு தண்ணீரை விட்டு வெளியே வந்தபோது, யெகோவா பரலோகத்திலிருந்து பேசினார். ‘இதுதான் என்னுடைய அன்பு மகன், எனக்கு பிரியமான மகன்’ என்று சொன்னார். (மத்தேயு 3:17) நீ என்னோட செல்லம் என்று சொல்லி அப்பா அம்மா உன்னைக் கொஞ்சும்போது உனக்கு ஒரே குஷியாக இருக்கும்தானே?— அதேபோல் இயேசுவுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும் இல்லையா?

இயேசு எப்போதும் சரியானதையே செய்தார். அவர் வெளி வேஷம் போடவில்லை. ‘நான்தான் கடவுள்’ என்று அவர் மக்களிடம் சொல்லவில்லை. இயேசு கடவுளுடைய மகன் என்றுதான் அழைக்கப்படுவார் என காபிரியேல் தூதன் மரியாளிடம் சொல்லியிருந்தார். இயேசுவும்கூட, தான் கடவுளுடைய மகன் என்றே சொன்னார். தன் அப்பாவைவிட தனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்று அவர் சொல்லவே இல்லை. ‘என் அப்பா என்னைவிட பெரியவர்’ என்றுதான் அவர் சொன்னார்.—யோவான் 14:28.

பரலோகத்தில் இருந்த சமயத்திலும் தன் அப்பா கொடுத்த எல்லா வேலையையும் இயேசு செய்தார். செய்கிறேன் என்று சும்மா சொல்லிவிட்டு, பிறகு வேறு எதையாவது அவர் செய்யவில்லை. அப்பா என்றால் அவருக்கு உயிர். அதனால் அவர் சொல்வதைக் கேட்டு நடந்தார். பிறகு இயேசு பூமிக்கு வந்தார் இல்லையா? பூமியிலும், எதை செய்வதற்காக அவருடைய அப்பா அனுப்பினாரோ அதைத்தான் செய்தார். வேறு எதையாவது செய்துகொண்டு அவர் நேரத்தை வீணாக்கவில்லை. இப்படிப்பட்ட மகன்மேல் யெகோவாவுக்கு பிரியமில்லாமலா இருக்கும்?

நாமும் யெகோவாவைப் பிரியப்படுத்த ஆசைப்படுகிறோம், இல்லையா?— அப்படியென்றால் இயேசுவைப் போல நாமும் கடவுள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். பைபிள் மூலமாக கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் சொல்வதைக் கேட்பதுபோல் சும்மா நடித்துக்கொண்டு, பைபிளில் இல்லாத விஷயங்களை நம்புவது சரியாகுமா? அல்லது, எதைச் செய்யக் கூடாதென்று பைபிள் சொல்கிறதோ அதைச் செய்வது சரியாகுமா?— நாம் உண்மையிலேயே யெகோவாவை நேசித்தோம் என்றால், அவருக்குப் பிரியமாக நடப்பதில்தான் சந்தோஷப்படுவோம்.

இயேசுவைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் நம்ப வேண்டிய விஷயங்களும் சில வசனங்களில் உள்ளன. அதை இப்போது வாசிக்கலாமா? மத்தேயு 7:21-23; யோவான் 4:25, 26; 1 தீமோத்தேயு 2:5, 6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்