அதிகாரம் 15
அன்பைப் பற்றி ஒரு பாடம்
தப்பெண்ணம் என்றால் என்ன தெரியுமா?— ஒருவர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறார் என்பதற்காக அல்லது வேறு பாஷை பேசுகிறார் என்பதற்காக அவரை பிடிக்காமல் போவதே தப்பெண்ணம். ஆகவே ஒருவரைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்வதற்கு முன்பே அவரை வெறுப்பது அல்லது தவறாக நினைப்பதுதான் தப்பெண்ணம்.
ஒருவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்வதற்கு முன்பே அவரை வெறுப்பது சரியா? அல்லது அவர் வித்தியாசமானவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை வெறுப்பது சரியா? நீ என்ன நினைக்கிறாய்?— மற்றவர்களை தவறாக எண்ணுவது சரியல்ல, அது அன்பான செயலும் அல்ல. ஒருவர் நம்மைப் போல் இல்லை என்பதற்காக அவரிடம் அன்பு காட்டாமல் இருக்கக் கூடாது.
இதை கொஞ்சம் யோசித்துப் பார். வேறு நிறத்தவரை அல்லது வேறு பாஷை பேசுபவரை உனக்குத் தெரியுமா?— காயமடைந்ததால் அல்லது ஏதோ வியாதிப்பட்டதால் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பவர்களைக்கூட உனக்கு தெரிந்திருக்கலாம். இப்படி உன்னிலிருந்து வித்தியாசமாக இருப்பவர்களிடம் அன்பாக நடந்துகொள்கிறாயா?—
நம்மைப் போல் இல்லாத வித்தியாசமான ஜனங்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?
பெரிய போதகரான இயேசு கிறிஸ்து சொல்வதைக் கேட்டால் நாம் எல்லாரையுமே அன்பாக நடத்துவோம். ஒருவரின் நாடு எது, அவரது தோல் நிறம் என்ன என்றெல்லாம் நாம் பார்க்க மாட்டோம். மாறாக, அவரிடம் அன்பாக நடந்துகொள்வோம். எல்லாருமே இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் இயேசு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம்.
மற்றவர்கள்மேல் தப்பெண்ணம் கொண்ட ஒரு யூதன் இயேசுவிடம் வந்தான். ‘நித்திய ஜீவனைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். நம்முடைய இனத்தை அல்லது நாட்டை சேர்ந்தவர்களிடம் மட்டும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசுவை சொல்ல வைக்க அவன் நினைத்தான். அது இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆகவே அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனிடம் இன்னொரு கேள்வியைக் கேட்டார். ‘நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுளுடைய சட்டம் சொல்கிறது?’ என கேட்டார்.
‘நாம் யெகோவா தேவனை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும், நம்மைப் போலவே அயலகத்தாரை நேசிக்க வேண்டும்’ என்று அந்த யூதன் சொன்னான். அதற்கு இயேசு, ‘நீ சரியாக சொன்னாய். தொடர்ந்து அதையே செய், நித்திய ஜீவனை பெறுவாய்’ என்று கூறினார்.
ஆனால் வித்தியாசமான ஜனங்களை அன்பாக நடத்த அந்த யூதனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே சாக்குப்போக்கு கண்டுபிடிக்க முயற்சி செய்தான். ‘யார் உண்மையிலேயே என் அயலகத்தார்?’ என்று இயேசுவிடம் கேட்டான். “உன் நண்பர்கள்தான் உன் அயலகத்தார்” என்றோ “உன்னைப் போலவே இருப்பவர்கள்தான் உன் அயலகத்தார்” என்றோ இயேசு சொல்ல வேண்டுமென அவன் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க இயேசு ஒரு கதை சொன்னார். ஒரு யூதனையும் ஒரு சமாரியனையும் பற்றிய அந்தக் கதையை இப்போது கேட்கிறாயா?
ஒரு யூதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்கு நடந்து போய்க் கொண்டிருந்தான். திடீரென்று திருடர்கள் அவனைப் பிடித்து கீழே தள்ளினார்கள். அவன் பணத்தையும் துணிமணிகளையும் பறித்துக் கொண்டார்கள். பிறகு அவனை பயங்கரமாக அடித்து ரோட்டின் ஓரமாக போட்டுவிட்டு போய்விட்டார்கள். அவன் சாகும் நிலையில் அங்கே கிடந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு ஆசாரியர் அந்தப் பக்கமாக வந்தார். பயங்கர காயத்தோடு கிடந்த அந்த மனிதனைப் பார்த்தார். நீ அவனை பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாய்?— அந்த ஆசாரியர் என்ன செய்தார் தெரியுமா? அங்கே நிற்கக்கூட இல்லை. எதிர்பக்கமாக போய் விட்டார். அந்த மனிதனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
அதன் பிறகு இன்னொரு பக்தியுள்ள மனிதர் வந்தார். அவர் ஒரு லேவியர். எருசலேமிலிருந்த ஆலயத்தில் வேலை செய்பவர். அவராவது உதவி செய்தாரா?— இல்லை. அவரும் அந்த ஆசாரியரைப் போலவே வேறு பக்கமாக போய்விட்டார்.
கடைசியாக ஒரு சமாரியர் வந்தார். அவர் அந்த சாலையின் வளைவில் வருவது படத்தில் தெரிகிறது அல்லவா?— மிகவும் காயப்பட்டுக் கிடந்த யூதனை அவர் பார்த்தார். பொதுவாக சமாரியர்களுக்கும் யூதர்களுக்கும் ஒருவரையொருவர் கண்டாலே பிடிக்காது. (யோவான் 4:9) அதனால் இந்தச் சமாரியரும் உதவி செய்யாமல் போய்விட்டாரா? ‘நான் எதற்காக இந்த யூதனுக்கு உதவ வேண்டும்? நான் அடிபட்டு கிடந்தால் அவன் எனக்கு உதவியா செய்யப் போகிறான்’ என்று நினைத்தாரா?
அந்தச் சமாரியர்தான் நல்ல அயலகத்தார் என்று எப்படி சொல்லலாம்??
இல்லை. ரோட்டின் ஓரமாகக் கிடந்த அந்த மனிதனைப் பார்த்து அவர் மிகவும் பரிதாபப்பட்டார். செத்தால் சாகட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிடுவது சரியல்ல என்று நினைத்தார். ஆகவே தான் சவாரி செய்த விலங்கிலிருந்து கீழே இறங்கி, அந்த மனிதன் பக்கத்தில் சென்றார். அவன் காயங்கள் மீது எண்ணெய்யும் திராட்சரசமும் ஊற்றினார். காயங்கள் சீக்கிரமாக ஆறுவதற்காக அவ்வாறு செய்தார். அதன்பின் காயங்களுக்கு துணியால் கட்டுப்போட்டார்.
பிறகு காயப்பட்ட மனிதனை அந்தச் சமாரியர் மெதுவாக தூக்கி தன் விலங்கின் மீது ஏற்றினார். பிறகு ஒரு சத்திரத்திற்கு அதாவது சிறிய லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவன் தங்குவதற்கு ஏற்பாடு செய்து, நன்றாக கவனித்துக் கொண்டார்.
இப்போது இயேசு ஒரு கேள்வியைக் கேட்டார். ‘இந்த மூன்று பேரில் யாரை நல்ல அயலகத்தார் என்று நீ சொல்வாய்?’ என தம்முடன் பேசிக்கொண்டிருந்த அந்த யூதனிடம் கேட்டார். நீ என்ன சொல்வாய்? நல்ல அயலகத்தார் ஆசாரியரா, லேவியரா, அல்லது சமாரியரா?—
‘காயப்பட்டவனுக்கு உதவி செய்தவனே நல்ல அயலகத்தார்’ என்று அந்த மனிதன் கூறினான். அதற்கு இயேசு, ‘சரியாக சொன்னாய். நீயும் போய் அதுபோலவே செய்’ என்று கூறினார்.—லூக்கா 10:25-37.
அது அருமையான கதை அல்லவா? நம் அயலகத்தார் யார் என்று அது தெளிவாக காட்டுகிறது. அவர்கள் நம் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல. நம்மைப் போலவே நிறமுள்ளவர்கள் அல்லது நாம் பேசும் அதே பாஷையை பேசுபவர்கள் மட்டுமே நம் அயலகத்தார் அல்ல. மக்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பார்ப்பதற்கு எப்படி இருந்தாலும், என்ன பாஷை பேசினாலும் நாம் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுத்தார்.
யெகோவா தேவன் இப்படித்தான் அன்பாக நடந்துகொள்கிறார். அவரிடம் எந்தத் தப்பெண்ணமும் இல்லை. ‘பரலோகத்தில் இருக்கும் உங்கள் தந்தை கெட்டவர்களுக்கும் நல்லவர்களுக்கும் தன்னுடைய சூரியனை உதிக்கப் பண்ணுகிறார், அதேபோல் நல்லவர்களுக்கும் சரி கெட்டவர்களுக்கும் சரி மழையைத் தருகிறார்’ என்று இயேசு சொன்னார். ஆகவே கடவுளைப் போல் நாமும் எல்லாரையும் அன்பாக நடத்த வேண்டும்.—மத்தேயு 5:44-48.
நீ எப்படி நல்ல அயலகத்தாராக இருக்கலாம்?
எனவே, யாராவது காயப்பட்டிருப்பதை நீ பார்த்தால் என்ன செய்வாய்?— அவர் வேறு நாட்டை சேர்ந்தவராக அல்லது வேறு நிறத்தவராக இருந்தால் என்ன செய்வாய்? அவரும் உன் அயலகத்தார்தான். ஆகவே நீ அவருக்கு உதவ வேண்டும். நீ சிறுபிள்ளையாக இருப்பதால் உதவ முடியாது என்று நினைத்தால் பெரியவர்கள் யாரிடமாவது உதவி கேட்கலாம். அல்லது ஒரு போலீஸ்காரரையோ ஸ்கூல் டீச்சரையோ உதவிக்காக கூப்பிடலாம். அப்போதுதான் அந்தச் சமாரியரைப் போலவே நீயும் அன்பாக நடந்துகொள்வாய்.
நாம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று பெரிய போதகர் விரும்புகிறார். மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவேதான் அன்பான சமாரியரைப் பற்றிய கதையைச் சொன்னார்.
இனம், நாடு என்றெல்லாம் பார்க்காமல் எல்லாரிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை சில வசனங்களும் சொல்கின்றன. அதை வாசிக்கலாமா? நீதிமொழிகள் 19:22; அப்போஸ்தலர் 10:34, 35; 17:26.