அதிகாரம் 20
எல்லாவற்றிலும் முந்திக்கொள்ள உனக்கு ஆசையா?
எல்லாவற்றிலும் முந்திக்கொள்ள ஆசைப்படும் பிள்ளையை உனக்குத் தெரியுமா?— அவன் க்யூவில் நிற்கும்போது யாரையாவது தள்ளிவிட்டுவிட்டு முன்னால் போய் நிற்பான். அதை நீ பார்த்திருக்கிறாயா?— பெரியவர்கள்கூட முதல் இடங்களில், அதாவது மிக முக்கியமான இடங்களில் இருக்க முயன்றதை பெரிய போதகர் பார்த்தார். அவருக்கு அது பிடிக்கவில்லை. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
எல்லாவற்றிலும் முந்திக்கொள்ள முயலுபவர்களை பார்த்திருக்கிறாயா?
பெரிய விருந்திற்காக ஒரு பரிசேயரின் வீட்டுக்கு இயேசு அழைக்கப்பட்டிருந்தார் என்று பைபிள் சொல்கிறது. அந்தப் பரிசேயர் முக்கியமான மதத் தலைவர். இயேசு அங்கே போன பிறகு, மற்ற விருந்தாளிகள் வருவதையும் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுப்பதையும் கவனிக்க ஆரம்பித்தார். ஆகவே விருந்தாளிகளிடம் அவர் ஒரு கதை சொன்னார். அதைக் கேட்க உனக்கு விருப்பமா?—
‘நீங்கள் ஒரு கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டால், சிறந்த இடத்தில் அல்லது மிக முக்கியமான இடத்தில் போய் உட்காராதீர்கள்’ என்று இயேசு சொன்னார். ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?— அதை அவரே விளக்கினார். இன்னும் முக்கியமானவர் யாரேனும் அழைக்கப்பட்டிருக்கலாம். ஆகவே விருந்து கொடுப்பவர் வந்து, ‘இவருக்கு இடம் கொடு, நீ அங்கே போ’ என்பார். இந்தப் படத்தில்கூட அது தெரிகிறது பார். அப்போது இந்த விருந்தாளிக்கு எப்படி இருக்கும்?— வெட்கமாக இருக்கும், ஏனென்றால் அவர் எழுந்து தாழ்ந்த இடத்திற்கு போவதை மற்ற விருந்தாளிகள் எல்லாரும் பார்ப்பார்கள்.
மிக முக்கியமான இடத்தை விரும்புவது சரியல்ல என்று இயேசு காட்டினார். ஆகவே அவர் இப்படிச் சொன்னார்: ‘நீங்கள் ஒரு கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டால், மிகத் தாழ்ந்த இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்தவர் வந்து, “நண்பரே, சிறந்த இடத்திற்கு வாருங்கள்” என்று கூப்பிடுவார். அப்போது மற்ற விருந்தாளிகளுக்கு முன்பு நீங்கள் சிறந்த இடத்திற்கு எழுந்து செல்வது பெருமையாக இருக்கும்.’—லூக்கா 14:1, 7-11.
முக்கியமான அல்லது முதல் இடங்களை விரும்புகிறவர்களைக் குறித்து இயேசு என்ன பாடம் கற்பித்தார்?
இயேசு சொன்ன கதையின் கருத்து உனக்குப் புரிகிறதா?— இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம், அப்போது உனக்கு நன்றாக புரியும். கூட்டம் நிரம்பி வழியும் ஒரு பஸ்ஸில் நீ ஏறுவதாக வைத்துக்கொள். நீ முண்டியடித்துக்கொண்டு சீட் பிடித்து உட்கார்ந்துவிட்டு, பெரியவர் யாரையேனும் நிற்க விடலாமா?— நீ அப்படிச் செய்வது இயேசுவிற்கு பிடிக்குமா?—
நாம் என்ன செய்தாலும் இயேசுவிற்கு கவலையே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். நீயும் அப்படி நினைக்கிறாயா?— பரிசேயரின் வீட்டில் இயேசு ஒரு பெரிய விருந்திற்கு போனபோது, ஜனங்கள் எந்தெந்த இடங்களில் உட்கார்ந்தார்கள் என்பதை அவர் கவனித்தார். இப்போது நாம் செய்வதையும் அப்படித்தானே அக்கறையோடு கவனிப்பார்?— அதுவும் இப்போது இயேசு பரலோகத்தில் இருப்பதால் அங்கிருந்து நம்மை நன்றாகவே பார்க்க முடியும்.
ஒருவர் முந்திக்கொள்ள முயற்சி செய்யும்போது, பிரச்சினைகள் எழும். வாய்ச்சண்டை ஏற்படும், மற்றவர்களுக்கு கோபம் வரும். சிலசமயம் பிள்ளைகள் பஸ்ஸில் போகும்போது அப்படித்தான் நடக்கிறது. பஸ் வந்து நின்றவுடனேயே முதலில் போய் சீட் பிடிக்க பிள்ளைகள் அடித்துப்பிடித்து ஏறுகிறார்கள். ஜன்னல் ஓரமாக இருக்கும் நல்ல சீட்டுகளைப் பிடிக்க முயலுகிறார்கள். அப்போது என்ன நடக்கிறது?— ஒருவரையொருவர் கோபித்துக் கொள்கிறார்கள்.
முந்திக்கொள்வதால் நிறைய பிரச்சினைகள் வரும். இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கும் அப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தன. இந்தப் புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, யார் மிக முக்கியமானவர் என்று அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டார்கள். அப்போது இயேசு என்ன செய்தார் என்று ஞாபகம் இருக்கிறதா?— ஆமாம், அவர்களை திருத்தினார். ஆனால் இன்னொரு முறை மறுபடியும் அவர்கள் சண்டை போட்டார்கள். அந்தச் சண்டை எப்படி ஆரம்பித்தது என்று பார்க்கலாம்.
அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் இயேசுவுடன் கடைசி முறையாக எருசலேம் நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். இயேசு தன் ராஜ்யத்தைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு ராஜாக்களாக ஆட்சி செய்வதைப் பற்றி யாக்கோபும் யோவானும் யோசிக்க ஆரம்பித்தார்கள். அதைப் பற்றி தங்கள் அம்மா சலோமேயிடமும் பேசினார்கள். (மத்தேயு 27:56; மாற்கு 15:40) ஆகவே அவர்கள் எருசலேமுக்கு போகும் வழியிலே சலோமே இயேசுவிடம் போய், அவர்முன் தலை வணங்கி, ஒரு உதவி கேட்டாள்.
அதற்கு இயேசு, “உனக்கு என்ன வேண்டும்”? என்று அவளிடம் கேட்டார். ‘உங்கள் ராஜ்யத்தில் என்னுடைய ஒரு மகன் உங்கள் வலது பக்கத்திலும் இன்னொருவன் இடது பக்கத்திலும் உட்கார வேண்டும்’ என்று அவள் கேட்டாள். யாக்கோபும் யோவானும் தங்கள் அம்மாவை அனுப்பி இப்படி கேட்ட விஷயம் மற்ற பத்து அப்போஸ்தலர்களுக்குத் தெரிந்தபோது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறாய்?—
சலோமே இயேசுவிடம் என்ன கேட்கிறாள், அதனால் என்ன நடக்கிறது?
ஆமாம், யாக்கோபு மீதும் யோவான் மீதும் அவர்களுக்கு எரிச்சல் வந்தது. ஆகவே இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்கள் எல்லாருக்கும் நல்ல புத்திமதி கொடுத்தார். தேசத் தலைவர்கள்தான் முக்கியமான ஆட்களாக அதிகாரம் பெற்றிருக்க ரொம்ப விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல பெரிய பதவியில் இருக்க வேண்டும் என்றும் எல்லாரும் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஆனால் தன் சீஷர்கள் அப்படி இருக்கக் கூடாது என்று இயேசு சொன்னார். ‘உங்களில் முதன்மையாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார். இதை யோசித்துப் பார்!—மத்தேயு 20:20-28.
ஒரு அடிமை என்ன செய்வான் தெரியுமா?— மற்றவர்களுக்கு வேலை செய்வான், மற்றவர்கள் தனக்கு வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். அவன் முதல் இடத்தை அல்ல, ஆனால் மிகத் தாழ்ந்த இடத்தையே தேர்ந்தெடுப்பான். மிக முக்கியமானவன் என்றல்ல, ஆனால் மிக சாதாரணமானவன் என்றே தன்னை கருதுவான். இயேசு சொன்னதையும் நினைத்துப் பார்; முதன்மையாக இருக்க விரும்புகிறவர்கள் மற்றவர்களுக்கு அடிமைகள் போல் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்று நினைக்கிறாய்?— மிக முக்கியமான இடம் எஜமானுக்கா தனக்கா என்று அடிமை அவரோடு வாக்குவாதம் செய்வானா? இருவரில் யார் முதலில் சாப்பிட வேண்டும் என்பதைக் குறித்து சண்டை போடுவானா? நீ என்ன நினைக்கிறாய்?— அடிமை எப்போதுமே தன் எஜமானுக்குத்தான் முக்கியத்துவம் தருவான் என்று இயேசு விளக்கினார்.—லூக்கா 17:7-10.
ஆகவே முதன்மையாக இருக்க முந்துவதற்கு பதிலாக நாம் என்ன செய்ய வேண்டும்?— ஆமாம், நாம் அடிமைகள் போல் மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும். அப்படியென்றால் மற்றவர்களுக்குத்தான் முதல் இடம் தர வேண்டும். அதாவது, மற்றவர்களே நம்மைவிட முக்கியமானவர்கள் என்று கருத வேண்டும். என்னென்ன விதங்களில் மற்றவர்களுக்கு முதல் இடம் தரலாம் என்று நீ நினைக்கிறாய்?— 40, 41 பக்கங்களை மறுபடியும் பார்க்கலாமா? எந்தெந்த விதங்களில் மற்றவர்களுக்கு வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு முதல் இடம் தரலாம் என மறுபடியும் படித்துப் பார்க்கலாமே.
பெரிய போதகர் மற்றவர்களுக்கு வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு முதல் இடம் தந்தார். அது உனக்கு ஞாபகம் இருக்கும். அப்போஸ்தலர்களோடு இருந்த கடைசி சாயங்கால வேளையிலும் அவர் தாழக் குனிந்து அவர்களது பாதங்களைக் கழுவினார். நாமும் மற்றவர்களுக்கு வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு முதல் இடம் தந்தால் பெரிய போதகரும் அவரது தந்தை யெகோவா தேவனும் சந்தோஷப்படுவார்கள்.
நம்மைவிட மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி உற்சாகப்படுத்தும் இன்னும் சில பைபிள் வசனங்களை இப்போது வாசிக்கலாமா? லூக்கா 9:48; ரோமர் 12:3; பிலிப்பியர் 2:3, 4.