அதிகாரம் 21
நாம் பெருமையடிக்கலாமா?
பெருமையடிப்பது என்றால் என்ன? உனக்குத் தெரியுமா?— நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். உனக்கு சரியாக செய்யத் தெரியாத எதையாவது செய்ய முயற்சி செய்திருக்கிறாயா? ஒரு ஃபுட்பாலை உதைக்க நீ முயற்சி செய்திருக்கலாம். அல்லது ஸ்கிப்பிங் ஆடவும் முயற்சி செய்திருக்கலாம். அப்போது யாராவது உன்னைப் பார்த்து “ஹா! ஹா! ஹா!” என்று சிரித்து, “அதை நான் எவ்வளவு ஈஸியாக செய்து காட்டுகிறேன் பார்” என்று சொன்னது உண்டா?— அப்படி சொன்னபோது அவன் உண்மையில் என்ன செய்தான் தெரியுமா? பெருமையடித்துக்கொண்டான்.
மற்றவர்கள் அப்படி பெருமையடிக்கும்போது உனக்கு எப்படி இருக்கும்? உனக்கு அது பிடிக்குமா?— அப்படியென்றால் நீ பெருமையடித்துக் கொள்ளும்போது மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?— “நான் உன்னைவிட உசத்தி” என்று யாரிடமாவது சொல்வது அன்பான காரியமா?— அப்படிச் சொல்பவர்களை யெகோவா விரும்புகிறாரா?—
மற்றவர்களைவிட தங்களை மேலானவர்களாக காட்டிக்கொண்ட மக்களை பெரிய போதகர் அறிந்திருந்தார். அவர்கள் தங்களைப் பற்றி பெருமையடித்தார்கள். மற்ற எல்லாரையும் மட்டமாக நினைத்தார்கள். ஆகவே ஒருநாள் இயேசு அவர்களுக்கு ஒரு கதை சொன்னார். அதன் மூலம் பெருமையடிப்பது எவ்வளவு தவறு என்று காட்டினார். அந்தக் கதையை இப்போது கேட்கலாம்.
அந்தக் கதையில் வருவது, ஒரு பரிசேயனும் ஒரு வரி வசூலிப்பவனும். பரிசேயர்கள் என்பவர்கள் மதத் தலைவர்கள். மற்ற ஜனங்களைவிட ரொம்ப பக்தியுள்ளவர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டவர்கள். இயேசுவின் கதையில் வரும் பரிசேயன் ஜெபிப்பதற்காக எருசலேமிலிருந்த கடவுளுடைய ஆலயத்திற்கு போனான்.
கடவுளுக்கு ஏன் வரி வசூலிப்பவனை பிடித்திருந்தது, ஆனால் பரிசேயனைப் பிடிக்கவில்லை?
வரி வசூலிப்பவன் ஒருவனும் ஜெபிப்பதற்காக அந்த ஆலயத்திற்குப் போனான். ஜனங்கள் நிறைய பேருக்கு வரி வசூலிப்பவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. தங்களை அவர்கள் ஏமாற்றுவதாக நினைத்தார்கள். வரி வசூலிப்பவர்கள் எல்லாருமே எப்போதும் நேர்மையாக நடக்கவில்லை என்பது உண்மைதான்.
ஆலயத்தில் பரிசேயன் கடவுளிடம் ஜெபித்தான்; ‘கடவுளே, மற்ற ஜனங்களைப் போல் நான் பாவியாக இல்லாததற்கு நன்றி. நான் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை, கெட்ட காரியங்களையும் செய்வதில்லை. அதோ, அங்கே நிற்கிறானே வரி வசூலிப்பவன், அவனைப் போல் நான் இல்லை. நான் ரொம்ப நல்லவன். உங்களைப் பற்றி அதிக நேரம் தியானிப்பதற்காகவே வாரத்தில் இரு முறை நான் விரதம் இருக்கிறேன். எனக்கு கிடைக்கும் எல்லா பொருளிலும் பத்தில் ஒரு பாகத்தை நான் ஆலயத்திற்குக் கொடுக்கிறேன்’ என்றான். இதிலிருந்து என்ன தெரிகிறது? மற்றவர்களைவிட தான் உசத்தி என்று பரிசேயன் நினைத்தது தெளிவாக தெரிகிறது அல்லவா?— இப்படி அவன் நினைத்தது மட்டுமல்லாமல் அதை கடவுளிடமும் சொன்னான்.
ஆனால் வரி வசூலிப்பவன் அப்படி இல்லை. ஜெபம் செய்யும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூட அவனுக்கு தைரியம் வரவில்லை. தூரத்தில் நின்று தலை குனிந்து ஜெபம் செய்தான். தன் பாவங்களுக்காக மிகவும் வருத்தப்பட்டான், வேதனையில் தன் நெஞ்சிலே அடித்துக் கொண்டான். தான் எவ்வளவு நல்லவன் என்றெல்லாம் கடவுளிடம் சொல்லவில்லை. மாறாக, ‘கடவுளே, இந்தப் பாவிக்கு இரக்கம் காட்டுங்கள்’ என்று கெஞ்சினான்.
இந்த இரண்டு பேரில் யார் கடவுளுக்குப் பிரியமானவன் என்று நினைக்கிறாய்? தான் ரொம்ப நல்லவன் என்று நினைத்த பரிசேயனா? அல்லது தன் பாவங்களுக்காக மிகவும் வருத்தப்பட்ட வரி வசூலிப்பவனா?—
அந்த வரி வசூலிப்பவனே கடவுளுக்குப் பிரியமானவன் என்று இயேசு சொன்னார். ஏன்? ‘ஏனென்றால் மற்றவர்களைவிட மேலானவனாக தன்னைக் காட்ட முயற்சி செய்பவன் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னை தாழ்ந்தவனாக நினைப்பவன் உயர்த்தப்படுவான்’ என்று இயேசு விளக்கினார்.—லூக்கா 18:9-14.
இயேசு அந்தக் கதையில் என்ன பாடத்தை கற்பித்தார்?— மற்றவர்களைவிட மேலானவர்களாக நம்மை நினைப்பது தவறு என்ற பாடத்தைக் கற்பித்தார். நம்மை உயர்ந்தவர்களாக நினைப்பதை நாம் ஒருவேளை வாய்விட்டு சொல்ல மாட்டோம்; இருந்தாலும் நாம் நடந்துகொள்ளும் விதமே அதைக் காட்டலாம். நீ எப்போதாவது அந்த மாதிரி நடந்திருக்கிறாயா?— அப்போஸ்தலன் பேதுருவுடைய உதாரணத்தைப் பார்க்கலாம்.
இயேசு, தான் கைது செய்யப்படும்போது எல்லா அப்போஸ்தலர்களும் தன்னை விட்டுவிட்டு போய்விடுவார்கள் என்று சொன்னார். உடனே பேதுரு, ‘மற்ற எல்லாரும் உங்களை விட்டுவிட்டாலும் நான் ஒருகாலும் உங்களை விட்டுப் போக மாட்டேன்!’ என்று பெருமையடித்தார். ஆனால் அவர் தப்புக்கணக்கு போட்டார். அவருக்கு அளவுக்கதிகமான தன்னம்பிக்கை இருந்தது. பிற்பாடு அவர் இயேசுவை உண்மையிலேயே விட்டுவிட்டார். இருந்தாலும் மறுபடியும் இயேசுவிடம் திரும்பினார். இதைப் பற்றி 30-ஆம் அதிகாரத்தில் நாம் படிப்போம்.—மத்தேயு 26:31-33.
இப்போது இந்தக் காலத்து உதாரணத்திற்கு வரலாம். ஒருவேளை ஸ்கூலில் உன்னிடமும் இன்னொரு பிள்ளையிடமும் சில கேள்விகள் கேட்கப்படுவதாக வைத்துக்கொள். நீ டக் டக்கென்று பதில் சொல்லிவிடலாம், ஆனால் அந்தப் பிள்ளையோ பதில் தெரியாமல் முழிக்கலாம். அப்போது நீ என்ன செய்வாய்? உனக்கு பதில்கள் தெரிவதால் நீ சந்தோஷப்படுவாய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பதில் சொல்ல கொஞ்சம் கஷ்டப்படும் அந்தப் பிள்ளையோடு உன்னை ஒப்பிடுவது அன்பான காரியமாக இருக்குமா?— நீ ரொம்ப அறிவாளி போல் அந்தப் பிள்ளையை மட்டமாக நடத்துவது சரியாகுமா?—
பரிசேயன் அப்படித்தான் செய்தான். வரி வசூலிப்பவனைவிட தான் உயர்ந்தவன் என்று நினைத்து பெருமையடித்தான். ஆனால் அந்தப் பரிசேயன் நினைத்தது தவறு என்று பெரிய போதகர் சொன்னார். ஒருவரால் மற்றவர்களைவிட எதையாவது நன்றாக செய்ய முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர் மற்றவர்களைவிட மேலானவர் என்று சொல்ல முடியாது.
மற்றவர்களைவிட உனக்கு நிறைய தெரிந்திருந்தால் நீ உசத்தி என்று அர்த்தமா?
ஆகவே நாம் மற்றவர்களைவிட அறிவாளிகளாக இருந்தால், பெருமையடிப்பது நியாயமா?— இதைக் கொஞ்சம் யோசித்துப் பார். நம் மூளையை நாமே உண்டாக்கினோமா?— இல்லை, கடவுள்தான் நம் ஒவ்வொருவருக்கும் மூளையைக் கொடுத்திருக்கிறார். அதோடு, நிறைய விஷயங்களை மற்றவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம். ஒருவேளை அவற்றை புத்தகங்களில் படித்துத் தெரிந்திருப்போம். அல்லது யாராவது நம்மிடம் சொல்லியிருக்கலாம். ஒருவேளை நாமே எதையாவது கண்டுபிடித்திருந்தாலும் நம்மால் எப்படி அதை செய்ய முடிந்தது?— ஆமாம், கடவுள் கொடுத்த மூளையின் உதவியால்தான் செய்ய முடிந்தது.
ஒருவர் கடினமாக முயற்சி செய்யும்போது, அவரை ஊக்கப்படுத்தும் விதமாக பேசுவதுதான் அன்பான காரியம். உதாரணத்திற்கு அவர் செய்தது உனக்குப் பிடித்திருப்பதாக சொல்லலாம். இன்னும் நன்றாக செய்ய அவருக்கு நீ உதவியும் செய்யலாம். மற்றவர்கள் உனக்கு அப்படி செய்ய வேண்டும் என்றுதானே நீ விரும்புவாய்?—
Why is it wrong to brag if we are stronger than another person?
சிலர் மற்றவர்களைவிட பலசாலிகள். உன் அண்ணனையோ அக்காவையோவிட நீ பலசாலியாக இருந்தால் பெருமையடிக்கலாமா?— கூடாது. நாம் சாப்பிடும் உணவுதான் நம் பலத்திற்குக் காரணம். அந்த உணவைத் தரும் செடிகொடி மரங்கள் வளருவதற்குத் தேவையான சூரிய ஒளியையும் மழையையும் மற்ற எல்லாவற்றையும் தருவது கடவுள்தான், இல்லையா?— ஆகவே நாம் பலசாலிகளாக இருந்தால் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.—அப்போஸ்தலர் 14:16, 17.
ஒருவர் பெருமையடிப்பதைக் கேட்க யாருக்குமே பிடிக்காது இல்லையா?— ஆகவே இயேசு சொன்னதை நாம் ஞாபகத்தில் வைக்கலாம்; ‘மற்றவர்கள் உனக்கு செய்ய விரும்புவதையே நீயும் அவர்களுக்கு செய்’ என்று அவர் சொன்னார். நாம் அப்படிச் செய்தால், பெரிய போதகர் சொன்ன கதையில் வந்த பரிசேயனைப் போல் ஒருபோதும் நம்மைப் பற்றி பெருமையடிக்க மாட்டோம்.—லூக்கா 6:31.
ஒரு சந்தர்ப்பத்தில், இயேசுவை நல்லவர் என்று ஒருவன் அழைத்தான். அதற்கு இயேசு ‘ஆமாம் நான் நல்லவர்’ என்று சொன்னாரா?— இல்லை, அப்படிச் சொல்லவில்லை. மாறாக, ‘கடவுளைத் தவிர வேறு யாருமே நல்லவர் இல்லை’ என்று சொன்னார். (மாற்கு 10:18) பெரிய போதகர் பரிபூரணராக இருந்தபோதிலும் தன்னைப் பற்றி பெருமையாக பேசவில்லை. மாறாக தன் தந்தை யெகோவாவைப் பற்றியே எப்போதும் புகழ்ந்து பேசினார்.
நாமும் யாரைப் பற்றியாவது பெருமையாக பேச முடியுமா?— முடியும். நம்மைப் படைத்த யெகோவா தேவனைப் பற்றி பெருமையாக பேச முடியும். சூரியன் மறையும் அழகிய காட்சியை அல்லது வேறு ஏதாவது அதிசய படைப்பைப் பார்க்கும்போது ‘நம்முடைய அருமையான கடவுள் யெகோவாதான் இதை உண்டாக்கியிருக்கிறார்!’ என்று நாம் யாரிடமாவது சொல்லலாம். யெகோவா ஏற்கெனவே செய்திருக்கும் அருமையான காரியங்களையும் இனி செய்யப் போகிற காரியங்களையும் பற்றி நாம் மற்றவர்களிடம் எப்போதும் தயங்காமல் பேசுவோமாக.
இந்தப் பையன் எதைப் பற்றி பெருமையடிக்கிறான்?
பெருமையடிப்பது பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்; நம்மைப் பற்றி பெருமையடிப்பதை எப்படி தவிர்க்கலாம் என்று சில வசனங்களிலிருந்து கற்றுக்கொள்ளலாம். நீதிமொழிகள் 16:5, 18; எரேமியா 9:23, 24; 1 கொரிந்தியர் 4:7; 13:4.