அதிகாரம் 27
உன் கடவுள் யார்?
உன் கடவுள் யார் என்ற கேள்வி ஏன் முக்கியமானது?— ஏனென்றால் மக்கள் ஏராளமான கடவுட்களை வணங்குகிறார்கள். (1 கொரிந்தியர் 8:5) பிறந்ததிலிருந்தே நடக்க முடியாமல் இருந்த ஒருவனை குணப்படுத்த அப்போஸ்தலன் பவுலுக்கு யெகோவா சக்தி அளித்தார். அதைப் பார்த்த மக்கள், ‘கடவுட்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கிறார்கள்!’ என்று சத்தமிட்டார்கள். மக்கள், பவுலையும் அவரது நண்பர் பர்னபாவையும் கடவுட்களாக வணங்க விரும்பினார்கள். பவுலை மெர்க்கூரி என்றும் பர்னபாவை யூப்பித்தர் என்றும் அழைத்தார்கள். அவை பொய்க் கடவுட்களின் பெயர்கள்.
ஆனால் பவுலும் பர்னபாவும், தங்களை வணங்குவதற்கு மக்களை அனுமதிக்கவில்லை. அந்தக் கூட்டத்தாரின் நடுவே ஓடிச்சென்று, ‘இந்த வீணான காரியங்களை விட்டுவிட்டு உயிருள்ள கடவுளிடம் திரும்புங்கள்’ என்று சொன்னார்கள். (அப்போஸ்தலர் 14:8-15) எல்லாவற்றையும் உண்டாக்கிய ‘உயிருள்ள கடவுள்’ யார்?— ஆமாம், யெகோவா தேவனே. அவர் ‘பூமி அனைத்திலும் மிகப் பெரியவர்.’ இயேசு அவரை ‘ஒரே உண்மையான கடவுள்’ என்று அழைத்தார். ஆகவே யாருக்கு மட்டுமே வணக்கத்தை பெறும் உரிமை உண்டு?— யெகோவாவுக்கு மட்டுமே உண்டு!—சங்கீதம் 83:17; யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 4:11.
பவுலும் பர்னபாவும், தங்களை வணங்குவதற்கு ஏன் மக்களை அனுமதிக்கவில்லை?
உலகில் மிக அதிகமானவர்கள் ‘ஒரே உண்மையான கடவுளை’ விட்டுவிட்டு வேறு கடவுட்களை வணங்குகிறார்கள். மரம், கல், உலோகம் போன்றவற்றால் செய்யப்படும் பொருட்களை அவர்கள் வணங்குகிறார்கள். (யாத்திராகமம் 32:4-7; லேவியராகமம் 26:1; ஏசாயா 44:14-17) பேரும் புகழும் பெறுகிற மனிதர்கள்கூட சிலசமயம் கடவுட்கள், நட்சத்திரங்கள், அல்லது தெய்வப் பிறவிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அளவுக்கதிக மதிப்பு கொடுப்பது சரியா?—
சவுல், அப்போஸ்தலனாகிய பவுலாக மாறிய பிறகு இப்படி எழுதினார்: ‘இந்த உலகத்தின் கடவுள் மக்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான்.’ (2 கொரிந்தியர் 4:4) இந்தக் கடவுள் யார்?— ஆமாம், அவன் பிசாசாகிய சாத்தானே! மக்கள் மற்ற ஆட்களையும் பொருட்களையும் வணங்கும்படி சாத்தான் செய்திருக்கிறான்.
காலில் விழுந்து தன்னை வணங்கும்படி இயேசுவிடம் சாத்தான் சொன்னபோது இயேசு பதிலுக்கு என்ன சொன்னார்?— ‘உன் கடவுளாகிய யெகோவாவை வணங்க வேண்டும், அவருக்கு மட்டுமே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என்று சொன்னார். (மத்தேயு 4:10) ஆகவே யெகோவாவுக்கு மட்டும்தான் வணக்கம் சொந்தம் என்பதை இயேசு தெளிவாக காட்டினார். இதை அறிந்திருந்த சில இளைஞர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்களது பெயர் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ.
இந்த இளம் எபிரெயர்கள் கடவுளுடைய தேசமாகிய இஸ்ரவேலை சேர்ந்தவர்கள். அவர்கள் பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே நேபுகாத்நேச்சார் என்ற ராஜா தங்கத்தில் ஒரு பெரிய சிலையை செய்து வைத்தார். இசை ஆரம்பித்தவுடன் எல்லாரும் அந்த சிலைக்கு முன்பாக விழுந்து வணங்க வேண்டும் என்று ஒருநாள் அவர் கட்டளையிட்டார். ‘கீழே விழுந்து வணங்காதவர்கள் எல்லாரும் எரிகிற நெருப்புச் சூளையில் போடப்படுவார்கள்’ என்றும் எச்சரித்தார். நீ அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?—
இவர்கள் ஏன் சிலையை வணங்க மறுக்கிறார்கள்?
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவரும் மற்ற எல்லா விஷயங்களிலும் ராஜா சொன்னதைக் கேட்டு நடந்தார்கள். ஆனால் சிலையை மட்டும் வணங்க மறுத்துவிட்டார்கள். ஏன் தெரியுமா?— ஏனென்றால் கடவுளுடைய சட்டம் இப்படி சொன்னது: ‘என்னைத் தவிர வேறு கடவுட்களை நீ வைத்துக்கொள்ளக் கூடாது. நீ ஒரு சிலை செய்து அதை வணங்கக்கூடாது.’ (யாத்திராகமம் 20:3-5) ஆகவே சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும் யெகோவாவின் கட்டளைக்கே கீழ்ப்படிந்தார்கள், ராஜாவின் கட்டளைக்கு அல்ல.
ராஜா மிகவும் கோபமடைந்தார். ஆகவே அந்த மூன்று இளம் எபிரெயர்களையும் அழைத்துவரச் சொன்னார். ‘என் கடவுட்களை நீங்கள் வணங்காதது உண்மையா?’ என்று அவர்களிடம் கேட்டார். பிறகு, ‘இன்னொரு வாய்ப்பு தருகிறேன். இப்போது நீங்கள் இசையைக் கேட்கும்போது நான் செய்து வைத்திருக்கும் சிலைக்கு முன்பாக விழுந்து வணங்க வேண்டும். வணங்காவிட்டால் எரிகிற நெருப்புச் சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். எந்தத் தெய்வம் என்னிடமிருந்து உங்களை காப்பாற்றப் போகிறது என்று நானும் பார்க்கிறேன்’ என்றார்.
அப்போது அந்த இளம் எபிரெயர்கள் என்ன செய்திருப்பார்கள்? நீ என்ன செய்திருப்பாய்?— அவர்கள் ராஜாவிடம் இப்படி சொன்னார்கள்: ‘நாங்கள் வணங்கும் கடவுள் எங்களை காப்பாற்றும் சக்தி படைத்தவர். ஆனால் அவர் எங்களைக் காப்பாற்றாவிட்டாலும், உங்கள் கடவுட்களை நாங்கள் வணங்க மாட்டோம். உங்கள் தங்கச் சிலைக்கு முன்பாக விழுந்து வணங்க மாட்டோம்.’
இதைக் கேட்ட ராஜாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘நெருப்புச் சூளையை ஏழு மடங்கு அதிக சூடாக்குங்கள்!’ என்று ஆணையிட்டார். பிறகு சாத்ராக்கையும் மேஷாக்கையும் ஆபேத்நேகோவையும் கட்டி சூளைக்குள் தூக்கி எறியும்படி பலசாலியான தன் ஆட்களுக்கு கட்டளையிட்டார்! சூளை அவ்வளவு சூடாக இருந்ததால் அவர்களை தூக்கிச் சென்ற ராஜாவின் ஆட்களே செத்துப்போனார்கள்! அந்த மூன்று எபிரெயர்களுக்கு என்ன ஆனது?
சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும் தொப்பென்று நெருப்புக்குள் போய் விழுந்தார்கள். ஆனால் அதன் பிறகு எழுந்து நின்றார்கள்! அவர்களுக்கு தீக் காயமே ஏற்படவில்லை. அவர்களுடைய கட்டுகளும் அவிழ்ந்து போயின. இது எப்படி நடந்தது?— ராஜா சூளைக்குள் எட்டிப் பார்த்ததும் பயந்துபோனார். ‘நாம் மூன்று பேரைத்தானே சூளைக்குள் போட்டோம்?’ என்று தன் ஆட்களிடம் கேட்டார். ‘ஆமாம் ராஜாவே’ என்று அவர்கள் சொன்னார்கள்.
யெகோவா எவ்வாறு தன் ஊழியர்களை நெருப்புச் சூளையிலிருந்து காப்பாற்றினார்?
‘ஆனால் இங்கே பாருங்கள்! நான்கு பேர் சூளைக்குள் நடந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு ஒன்றுமே ஆகவில்லை’ என்று ஆச்சரியப்பட்டார் ராஜா. அந்த நான்காவது ஆள் யார் தெரியுமா?— யெகோவாவின் தேவதூதரே அவர். அந்த மூன்று எபிரெயர்களையும் காப்பாற்றியது அவரே.
இதைப் பார்த்த ராஜா நெருப்புச் சூளையின் கதவு பக்கத்தில் வந்து, ‘உன்னதமான கடவுளுடைய ஊழியக்காரர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவே, வெளியே வாருங்கள்!’ என்று சத்தமிட்டார். அவர்கள் ஒரு சின்னக் காயமும் இல்லாமல் வெளியே வந்ததை எல்லாரும் பார்த்தார்கள். புகை வாடைகூட அவர்கள்மேல் வீசவில்லை. ஆகவே ராஜா இப்படி சொன்னார்: ‘சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியவர்களின் கடவுள் புகழப்படுவாராக. அவர்கள் வேறு எந்தக் கடவுளையும் வணங்காமல் தன்னை மட்டுமே வணங்கியதால் தன் தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார்.’—தானியேல், அதிகாரம் 3.
இன்று மக்கள் எதையெல்லாம் வணங்குகிறார்கள்?
இந்தச் சம்பவத்திலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். இன்றும் மக்கள் சிலைகளை, படங்களை, அல்லது மற்ற உருவங்களை வணங்குகிறார்கள். “சிலுவையைப் போல தேசியக் கொடியும் புனிதமானது” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. (த என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா) மரம், கல், உலோகம், துணி ஆகிய எதிலும் உருவங்கள் செய்யப்படலாம். ஆரம்பத்தில் இயேசுவின் சீஷர்களாக இருந்தவர்கள் ரோம அரசரை வணங்க மறுத்தனர். அது ‘கொடியை வணங்க மறுப்பதற்கு அல்லது தேசிய உறுதிமொழி சொல்ல மறுப்பதற்கு’ சமம் என்று சரித்திர ஆசிரியர் டானியேல் பி. மானிக்ஸ் கூறினார்.
ஆகவே துணி, மரம், கல், உலோகம் என எதில் ஒரு உருவம் செய்யப்படுகிறது என்பது கடவுளுக்கு முக்கியமா? நீ என்ன நினைக்கிறாய்?— யெகோவாவை சேவிப்பவர்கள் அப்படிப்பட்ட ஒரு சிலையை வணங்குவது சரியா?— சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியவர்கள் அதை வணங்கவில்லை. ஆகவே யெகோவா அவர்களைக் குறித்து சந்தோஷப்பட்டார். நீ எப்படி அவர்களைப் போல நடந்துகொள்ளலாம்?—
யெகோவாவை சேவிப்பவர்கள் வேறு எந்த மனிதனையோ பொருளையோ வணங்கக் கூடாது. இதைப் பற்றி வசனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம். யோசுவா 24:14, 15, 19-22; ஏசாயா 42:8; 1 யோவான் 5:21; வெளிப்படுத்துதல் 19:10.