உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lr அதி. 30 பக். 157-161
  • நம் பயத்தை ஒழிக்க உதவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் பயத்தை ஒழிக்க உதவி
  • பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இதே தகவல்
  • மன்னிக்கக் கற்றுக்கொண்டார்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • எஜமானரிடமிருந்து மன்னிக்க கற்றுக்கொண்டார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • சோதனைகள் மத்தியிலும் உண்மையாய் இருந்தார்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுகிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
மேலும் பார்க்க
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
lr அதி. 30 பக். 157-161

அதிகாரம் 30

நம் பயத்தை ஒழிக்க உதவி

யெகோவாவை சேவிப்பது உனக்கு சுலபமாக இருக்கிறதா?— அது சுலபமாக இருக்கும் என்று பெரிய போதகர் சொல்லவில்லை. அவர் கொல்லப்படுவதற்கு முந்தின ராத்திரி தன் அப்போஸ்தலர்களிடம் இப்படி சொன்னார்: ‘உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்பே என்னை வெறுத்துவிட்டது என்பதை அறியுங்கள்.’—யோவான் 15:18.

இயேசுவை விட்டு ஒருபோதும் விலகப் போவதில்லை என்று பேதுரு பெருமையடித்தார். ஆனால் இயேசுவை தனக்குத் தெரியாது என்று அதே ராத்திரி மூன்று முறை அவர் சொல்வார் என இயேசு கூறினார். பேதுரு அதைத்தான் செய்தார்! (மத்தேயு 26:31-35, 69-75) அப்படியொரு காரியத்தை பேதுரு ஏன் செய்தார்?— அதற்குக் காரணம் அவரது பயம். மற்ற அப்போஸ்தலர்களுக்கும் பயம் இருந்தது.

அப்போஸ்தலர்கள் ஏன் பயப்பட்டார்கள் தெரியுமா?— அவர்கள் மிக முக்கியமான ஒன்றை செய்ய தவறினார்கள். இதைப் பற்றி தெரிந்துகொள்வது, மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி என்ன செய்தாலும் சரி யெகோவாவை மட்டுமே சேவிக்க நமக்கு உதவியாக இருக்கும். ஆனால் முதலில், இயேசு தன் அப்போஸ்தலர்களோடு இருந்த கடைசி ராத்திரியில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

முதலில் அவர்கள் பஸ்காவை கொண்டாடினார்கள். பஸ்கா என்பது ஒவ்வொரு வருடமும் அவர்கள் கொண்டாடிய பண்டிகை, அந்த சமயத்தில் விசேஷ விருந்து சாப்பிட்டார்கள். கடவுளுடைய மக்கள் எகிப்திலிருந்து விடுதலையானதை அது ஞாபகப்படுத்தியது. பஸ்கா கொண்டாடிய பிறகு இயேசு இன்னொரு விசேஷ விருந்தை ஆரம்பித்து வைத்தார். அது இயேசுவைப் பற்றி நினைத்துப் பார்க்க எப்படி உதவுகிறது என்பதை பிற்பாடு விளக்கமாக படிப்போம். அந்த விருந்துக்குப் பிறகு இயேசு தன் அப்போஸ்தலர்களை உற்சாகப்படுத்திப் பேசினார். பிறகு கெத்செமனே தோட்டத்திற்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார். அது அவர்களுக்குப் பிடித்தமான இடம் என்பதால் அடிக்கடி அங்கே போனது உண்டு.

இயேசு ஜெபம் செய்வதற்காக அந்தத் தோட்டத்தில் தனிமையான ஒரு இடத்திற்குப் போனார். விழித்திருந்து ஜெபம் செய்யும்படி பேதுருவிடமும் யாக்கோபிடமும் யோவானிடமும் சொன்னார். ஆனால் அவர்கள் தூங்கிவிட்டார்கள். மூன்று முறை இயேசு ஜெபம் செய்ய தனியே சென்றார். ஆனால் மூன்று முறை திரும்பி வந்து பார்த்தபோதும் பேதுருவும் மற்றவர்களும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்! (மத்தேயு 26:36-47) அவர்கள் ஏன் விழித்திருந்து ஜெபம் செய்ய வேண்டியிருந்தது தெரியுமா?— இதைப் பற்றி இப்போது பேசலாம்.

Jesus finds Peter, James, and John sleeping in the garden of Gethsemane

பேதுருவும் யாக்கோபும் யோவானும் ஏன் விழித்திருக்க வேண்டியிருந்தது?

அன்று சாயங்காலத்தில் இயேசுவும் மற்ற அப்போஸ்தலர்களும் பஸ்கா கொண்டாடியபோது யூதாஸ் காரியோத்தும் இருந்தான். அவன் ஒரு திருடனாக ஆனது உனக்கு நினைவிருக்கும். இப்போது அவன் ஒரு துரோகி ஆகிவிட்டிருந்தான். இயேசு தன் அப்போஸ்தலர்களோடு கெத்செமனே தோட்டத்தில் அடிக்கடி கூடிய இடம் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே இயேசுவை கைது செய்ய அந்த இடத்திற்கு அவன் காவலாளிகளை கூட்டிக் கொண்டு வந்தான். அவர்கள் அங்கு வந்தபோது “யாரைத் தேடுகிறீர்கள்”? என்று இயேசு கேட்டார்.

“இயேசுவை” என்று அவர்கள் பதிலளித்தார்கள். இயேசு பயமே இல்லாமல், ‘நான்தான் அவர்’ என்று கூறினார். இயேசுவின் தைரியத்தைக் கண்டு அந்தக் காவலாளிகள் ஆச்சரியத்தில் பின்னுக்குப் போய் கீழே விழுந்தார்கள். பிறகு இயேசு, ‘என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்றால் என் அப்போஸ்தலர்களைப் போக விடுங்கள்’ என்று சொன்னார்.—யோவான் 18:1-9.

காவலாளிகள் இயேசுவைப் பிடித்து அவரது கைகளைக் கட்டியபோது அப்போஸ்தலர்கள் பயந்து ஓடினார்கள். என்ன நடக்கிறது என்று பார்க்க பேதுருவும் யோவானும் விரும்பியதால் தூரத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். கடைசியில், இயேசு பிரதான ஆசாரியரான காய்பாவின் வீட்டிற்கு கொண்டு போகப்பட்டார். யோவானுக்கு பிரதான ஆசாரியர் பழக்கமானவர் என்பதால், வாசலைக் காவல் காத்த வேலைக்காரி அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தாள்.

விசாரணை நடத்துவதற்காக ஆசாரியர்கள் எல்லாரும் ஏற்கெனவே காய்பாவின் வீட்டில் கூடியிருந்தார்கள். இயேசுவைக் கொல்வதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். ஆகவே அவரைப் பற்றி பொய் சாட்சிகளைச் சொல்ல சிலரை அழைத்து வந்தார்கள். அங்கிருந்தவர்கள் இயேசுவை குத்தினார்கள், அறைந்தார்கள். இதெல்லாம் நடந்தபோது பேதுரு அந்த வீட்டின் வாசல் பக்கம்தான் இருந்தார்.

பேதுருவையும் யோவானையும் உள்ளே விட்ட வேலைக்காரி, பேதுருவை கவனித்தாள். பிறகு ‘நீயும் இயேசுவோடு இருந்தாயே!’ என்றாள். ஆனால் இயேசுவை தனக்கு தெரியாது என்று பேதுரு சொன்னார். அதன் பிறகு இன்னொரு பெண் பேதுருவைப் பார்த்து, ‘இவனும் இயேசுவோடு இருந்தான்’ என்று எல்லாரிடமும் சொன்னாள். மறுபடியும், இயேசுவை தனக்கு தெரியவே தெரியாது என்று பேதுரு சொன்னார். இன்னும் சிறிது நேரம் கழித்து ஒரு கூட்டத்தார் அவரைப் பார்த்து, ‘நிச்சயமாக நீயும் அவர்களில் ஒருவன்’ என்றார்கள். மூன்றாவது முறையாக, ‘அந்த மனிதனை எனக்குத் தெரியாது!’ என்று சொல்லி மறுத்தார். தான் உண்மையைச் சொல்வதாக சத்தியமும் செய்தார். அப்போது இயேசு அவரை திரும்பிப் பார்த்தார்.—மத்தேயு 26:57-75; லூக்கா 22:54-62; யோவான் 18:15-27.

When Peter denies knowing Jesus for the third time, Jesus looks straight at him

பேதுரு ஏன் மிகவும் பயப்பட்டு இயேசுவை தெரியாது என்று பொய் சொன்னார்?

பேதுரு ஏன் பொய் சொன்னார் தெரியுமா?— ஏனென்றால் அவர் பயந்துவிட்டார். ஆனால் அவர் ஏன் பயந்துவிட்டார்? தைரியத்தைப் பெற எதைச் செய்யத் தவறினார்? இதை யோசித்துப் பார். தைரியம் பெற இயேசு என்ன செய்தார்?— அவர் கடவுளிடம் ஜெபம் செய்தார். அதனால் கடவுள் அவருக்கு தைரியம் கொடுத்தார். ஜெபம் செய்து விழித்திருக்கும்படி பேதுருவிடம் இயேசு மூன்று முறை சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் என்ன நடந்தது?—

மூன்று முறையும் பேதுரு தூங்கிவிட்டார். அவர் ஜெபம் செய்து விழித்திருக்கவில்லை. ஆகவே இயேசு கைது செய்யப்பட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தார். பிற்பாடு விசாரணை நடந்த சமயத்தில் எதிரிகள் இயேசுவை அடித்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டபோது பேதுரு பயந்தார். ஆனால் எதை எதிர்பார்க்கும்படி ஒருசில மணிநேரத்திற்கு முன்பு இயேசு அப்போஸ்தலர்களிடம் சொன்னார்?— உலகம் தன்னை வெறுத்ததைப் போலவே அவர்களையும் வெறுக்கும் என்பதை எதிர்பார்க்கும்படி சொன்னார்.

A boy is not afraid when his classmates ask him why he doesn’t celebrate Christmas

பேதுருவைப் போன்ற நிலைமை உனக்கு எப்போது வரலாம்?

பேதுருவிற்கு நடந்தது போலவே நமக்கும் என்ன நடக்கலாம் என இப்போது யோசித்துப் பார்க்கலாம். நீ உன் க்ளாஸில் இருப்பதாக வைத்துக்கொள். கொடியை வணங்காதவர்களை அல்லது கிறிஸ்மஸ் கொண்டாடாதவர்களைப் பற்றி மற்ற பிள்ளைகள் குறை சொல்லலாம். அப்போது ஒரு பிள்ளை உன்னைப் பார்த்து, ‘நீயும் கொடிக்கு சல்யூட் செய்ய மாட்டாய் தானே?’ என்று கேட்கலாம். அல்லது ‘நீ கிறிஸ்மஸ்கூட கொண்டாட மாட்டாய் என்று கேள்விப்பட்டோமே!’ என மற்றவர்கள் சொல்லலாம். அப்போது உண்மையைச் சொல்ல நீ பயப்படுவாயா?— பேதுருவைப் போல் பொய் சொல்வாயா?—

பிற்பாடு, இயேசுவை தெரியாது என்று சொன்னதற்காக பேதுரு மிகவும் வருத்தப்பட்டார். தான் செய்த தவறை உணர்ந்தபோது வெளியே போய் அழுதார். ஆமாம், அவர் மனம் திருந்தி மறுபடியும் இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தார். (லூக்கா 22:32) இதை யோசித்துப் பார். பேதுருவைப் போல் ரொம்பவே பயப்பட்டு பொய் சொல்லிவிடாதிருக்க எது நமக்கு உதவும்?— பேதுரு ஜெபம் செய்து விழித்திருக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்துக் கொள். ஆகவே பெரிய போதகரின் சீஷராக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?—

உதவிக்காக நாம் யெகோவாவிடம் கண்டிப்பாக ஜெபம் செய்ய வேண்டும். இயேசு ஜெபம் செய்தபோது கடவுள் அவருக்காக என்ன செய்தார் தெரியுமா?— அவரை பலப்படுத்த ஒரு தேவதூதரை அனுப்பினார். (லூக்கா 22:43) கடவுளுடைய தூதர்கள் நமக்கு உதவி செய்ய முடியுமா?— ‘யெகோவாவுக்கு பயந்தவர்களை அவரது தூதர் சூழ்ந்து காப்பாற்றுகிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:7) ஆனால் கடவுளுடைய உதவியைப் பெற நாம் ஜெபிப்பது மட்டும் போதாது. வேறு எதையும் செய்ய வேண்டும் தெரியுமா?— விழித்திருக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்னார். அதைச் செய்ய எது உதவும் என்று நீ நினைக்கிறாய்?—

நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களில் என்ன சொல்லப்படுகிறது என்பதை நாம் கவனமாக கேட்க வேண்டும். பைபிளில் நாம் வாசிக்கும் விஷயங்களுக்கும் கவனம் செலுத்த வேண்டும். தவறாமல் யெகோவாவிடம் ஜெபம் செய்து, அவரை சேவிக்க நமக்கு உதவுமாறு கேட்க வேண்டும். அப்படிச் செய்தால் நம் பயங்களை ஒழிக்க நமக்கு உதவி கிடைக்கும். அதோடு, பெரிய போதகரையும் அவரது அப்பாவையும் பற்றி மற்றவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போது சந்தோஷப்படுவோம்.

மற்றவர்களைக் கண்டு பயப்பட்டு சரியானதை செய்யாமல் இருந்துவிடக்கூடாது. ஒருபோதும் அப்படி செய்யாதிருக்க இந்த வசனங்கள் உதவும். நீதிமொழிகள் 29:25; எரேமியா 26:12-15, 20-24; யோவான் 12:42, 43.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்