உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lr அதி. 37 பக். 192-196
  • யெகோவாவையும் அவரது மகனையும் நினைத்துப் பார்ப்பது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவையும் அவரது மகனையும் நினைத்துப் பார்ப்பது
  • பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இதே தகவல்
  • நினைவுகூர நமக்கு உதவிசெய்வதற்கு ஒரு சாப்பாடு
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • ‘என் நினைவாக இதைச் செய்யுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • கர்த்தருடைய இராப் போஜனத்தை ஏன் ஆசரிக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • அவர் ஏன் மிக முக்கியமானவர்
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
lr அதி. 37 பக். 192-196

அதிகாரம் 37

யெகோவாவையும் அவரது மகனையும் நினைத்துப் பார்ப்பது

ஒருவர் ரொம்ப அருமையான ஒரு பரிசை உனக்குக் கொடுப்பதாக வைத்துக்கொள். உனக்கு எப்படி இருக்கும்?— வெறுமனே தாங்க்யூ என்று சொல்லிவிட்டு, பிறகு பரிசு கொடுத்தவரை சுத்தமாக மறந்துவிடுவாயா? அல்லது அவரையும் அவர் செய்ததையும் எப்போதும் நினைத்துப் பார்ப்பாயா?—

யெகோவா தேவன் நமக்கு அருமையான ஒரு பரிசை கொடுத்தார். அதாவது, நமக்காக உயிரைக் கொடுக்க தனது மகனையே இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு ஏன் நமக்காக சாக வேண்டியிருந்தது தெரியுமா?— இதை நாம் புரிந்துகொள்வது ரொம்ப முக்கியம்.

23-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, கடவுளுடைய பரிபூரண சட்டத்தை மீறியபோது ஆதாம் பாவம் செய்தான். நம் முதல் தகப்பனாகிய அவனிடமிருந்து நம் எல்லாருக்கும் பாவம் வந்தது. ஆகவே நமக்கு என்ன தேவை என்று நினைக்கிறாய்?— நமக்கு ஒரு புதிய தகப்பன் தேவை; அந்தத் தகப்பன் பூமியில் பரிபூரணமாக வாழ்ந்திருக்க வேண்டும். யார் அப்படிப்பட்ட தகப்பனாக இருக்க முடியும் என்று நினைக்கிறாய்?— இயேசுவினால் முடியும்.

ஆதாமுக்கு பதிலாக நம் தகப்பனாக ஆவதற்கு இயேசுவை இந்தப் பூமிக்கு யெகோவா அனுப்பினார். ‘முதல் மனிதன் ஆதாம் உயிருள்ள ஆத்துமா ஆனான். கடைசி ஆதாம் உயிர் அளிக்கும் ஆவி ஆனார்’ என பைபிள் சொல்கிறது. முதல் ஆதாம் யார் தெரியுமா?— மண்ணிலிருந்து கடவுள் உண்டாக்கிய மனிதன்தான் அவன். அப்படியென்றால் இரண்டாம் ஆதாம் யார்?— அவர் இயேசு. இதை பைபிள் இவ்வாறு விளக்குகிறது: ‘முதல் மனிதர் [ஆதாம்] பூமியிலிருந்து வந்தவர், மண்ணினால் உண்டானவர்; இரண்டாம் மனிதர் [இயேசு] வானத்திலிருந்து வந்தவர்.’—1 கொரிந்தியர் 15:45, 47; ஆதியாகமம் 2:7.

பரலோகத்திலிருந்த இயேசுவின் உயிரை மரியாளின் வயிற்றுக்குள் கடவுள் வைத்தார்; ஆகவே ஆதாமின் பாவம் இயேசுவிடம் துளியும் இருக்கவில்லை. இதனால்தான் அவர் பரிபூரண மனிதனாக இருந்தார். (லூக்கா 1:30-35) மேலும், அவர் பிறந்தபோது, ‘இன்று ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்’ என ஒரு தேவதூதர் மேய்ப்பர்களிடம் சொன்னார். (லூக்கா 2:11) ஆனால் நமக்கு இரட்சகராக இருப்பதற்கு குழந்தை இயேசு முதலில் என்ன செய்ய வேண்டியிருந்தது?— அவர் வளர்ந்து, ஆதாமைப் போலவே பெரிய ஆளாக வேண்டியிருந்தது. அப்போது அவர் ‘இரண்டாம் ஆதாமாக’ ஆவார்.

நம் இரட்சகரான இயேசு ‘நித்திய பிதாவாகவும்’ ஆவார். பைபிள் அவரை அப்படி அழைக்கிறது. (ஏசாயா 9:6, 7) ஆமாம், பாவம் செய்து அபூரணமடைந்த ஆதாமுக்குப் பதிலாக பரிபூரண இயேசு நம் தகப்பனாக ஆக முடியும். இந்த விதத்தில் ‘இரண்டாம் ஆதாமை’ நம் தகப்பனாக ஏற்றுக்கொள்ள முடியும். அதேசமயத்தில் இயேசுவுக்கு தகப்பன் யெகோவா தேவன் என்பதில் சந்தேகமில்லை.

Adam and Jesus

ஆதாமும் இயேசுவும் எந்த விதத்தில் ஒரேமாதிரி இருந்தார்கள், அப்படி இருந்தது ஏன் ரொம்ப முக்கியமாக இருந்தது?

இயேசுவைப் பற்றி கற்றுக்கொள்வதன் மூலம் அவரை நம் இரட்சகராக ஏற்கலாம். நாம் எதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— ஆதாமிடமிருந்து பெற்றிருக்கும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நாம் காப்பாற்றப்பட வேண்டும். வளர்ந்து பெரியவரான இயேசு நமக்காக தியாகம் செய்த பரிபூரண உயிர், மீட்கும்பொருள் என்று அழைக்கப்படுகிறது. நம் பாவங்களை நீக்குவதற்காக யெகோவா அந்த மீட்கும்பொருளை அளித்தார்.—மத்தேயு 20:28; ரோமர் 5:8; 6:23.

கடவுளும் அவருடைய மகனும் நமக்காக செய்திருப்பதை நாம் கண்டிப்பாக மறக்க விரும்புவதில்லை, இல்லையா?— அதை நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு விசேஷ வழியை இயேசு தன் சீஷர்களுக்குக் காட்டினார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

எருசலேமில் ஒரு வீட்டின் மாடியில் நீ இருப்பதாக நினைத்துக் கொள். அது ராத்திரி நேரம். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் ஒரு மேஜையை சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். நெருப்பில் சுடப்பட்ட ஆட்டுக்கறி கொஞ்சமும், அப்பங்களும், சிவப்பு திராட்சரசமும் அந்த மேஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விசேஷ உணவு சாப்பிடுகிறார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா?—

நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு யெகோவா செய்ததை நினைத்துப் பார்க்க அந்த உணவு உதவியது. அவரது மக்களான இஸ்ரவேலர்கள் அப்போது எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள். ‘ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் ரத்தத்தை தங்கள் வாசல் கதவு நிலைக்கால்களில் தெளிக்க வேண்டும்’ என்று அவர்களிடம் யெகோவா சொன்னார். பிறகு ‘வீட்டிற்கு உள்ளே போய் ஆட்டுக் கறியை சாப்பிடுங்கள்’ என்றும் கூறினார்.

An Israelite boy watches his father put lamb’s blood on the doorposts of their house

ஆட்டுக்குட்டியின் ரத்தம் எப்படி இஸ்ரவேலர்களை பாதுகாத்தது?

இஸ்ரவேலர்கள் அப்படி செய்தார்கள். அதே இரவில் கடவுளுடைய தேவதூதர் எகிப்து தேசத்தின் வழியே சென்றார். முக்கால்வாசி வீடுகளிலிருந்த மூத்த பிள்ளையை அந்த தூதர் கொன்றார். ஆனால் எந்தெந்த வாசல் கதவு நிலைக்கால்களில் ஆட்டின் ரத்தத்தைப் பார்த்தாரோ அந்தந்த வீடுகளைத் தாண்டி சென்றார். அந்த வீடுகளிலிருந்த பிள்ளைகள் யாரும் இறக்கவில்லை. யெகோவாவின் தூதர் இவ்வாறு செய்ததைக் கண்டு எகிப்தின் ராஜா பார்வோன் பயந்துபோனார். ஆகவே, ‘உங்களை விட்டுவிடுகிறேன், எகிப்திலிருந்து போய்விடுங்கள்!’ என்று இஸ்ரவேலர்களிடம் கூறினார். உடனடியாக அவர்கள் தங்கள் சாமான்களை ஒட்டகங்கள் மீதும் கழுதைகள் மீதும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.

இவ்வாறு யெகோவா தன் மக்களை விடுவித்த விதத்தை அவர்கள் மறக்கக்கூடாது என்பதற்காக, ‘இன்றிரவு சாப்பிட்ட விதமாகவே ஒவ்வொரு வருடமும் சாப்பிட வேண்டும்’ என்று அவர் சொன்னார். இந்த விசேஷ சாப்பாட்டை அவர்கள் பஸ்கா என்று அழைத்தார்கள். அன்று இரவு கடவுளுடைய தூதர், ரத்தம் தெளிக்கப்பட்ட வீடுகளை ‘கடந்து போனார்.’—யாத்திராகமம் 12:1-13, 24-27, 31.

பஸ்கா சாப்பாட்டை சாப்பிடும்போது இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அதை நினைத்துப் பார்க்கிறார்கள். அதன் பிறகு இயேசு ரொம்ப முக்கியமான ஒன்றை செய்கிறார். ஆனால் அதற்கு முன்பு, துரோகியான அப்போஸ்தலன் யூதாஸை வெளியே அனுப்பி விடுகிறார். பிறகு இயேசு ஒரு அப்பத்தை எடுத்து, ஜெபம் செய்து, அதைப் பிட்டு, தன் சீஷர்களுக்குக் கொடுக்கிறார். ‘வாங்கி சாப்பிடுங்கள்’ என்று சொல்கிறார். பிறகு, ‘நான் உங்களுக்காக சாகும்போது கொடுக்கும் என் உடலை இந்த அப்பம் குறிக்கிறது’ என்கிறார்.

அடுத்ததாக இயேசு ஒரு கப் திராட்சரசத்தை எடுக்கிறார். மறுபடியும் ஜெபம் செய்து கடவுளுக்கு நன்றி சொன்ன பிறகு எல்லாருக்கும் கொடுக்கிறார். ‘எல்லாரும் இதை வாங்கிக் குடியுங்கள்’ என்கிறார். பின்பு, ‘இந்த திராட்சரசம் என் ரத்தத்தைக் குறிக்கிறது. பாவங்களிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக நான் சீக்கிரத்தில் என் ரத்தத்தை சிந்தப் போகிறேன். என் நினைவாக இதை செய்து கொண்டிருங்கள்’ என்கிறார்.—மத்தேயு 26:26-28; 1 கொரிந்தியர் 11:23-26.

Jesus passes red wine to his apostles

இயேசு திராட்சரசத்திற்கு ஒப்பிட்ட அவரது ரத்தம் நமக்கு என்ன செய்ய முடியும்?

தன் நினைவாக சீஷர்கள் இதை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு சொன்னதை கவனித்தாயா?— அவர்கள் இனிமேலும் பஸ்கா கொண்டாட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக வருடத்திற்கு ஒருமுறை இந்த விசேஷ உணவை சாப்பிட்டு இயேசுவையும் அவரது மரணத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இது கர்த்தரின் இராப்போஜனம் என்று அழைக்கப்படுகிறது. அதை நினைவு ஆசரிப்பு என்றும் நாம் இன்று அழைக்கிறோம். ஏன் தெரியுமா?— ஏனென்றால் நமக்காக இயேசுவும் அவரது தகப்பன் யெகோவா தேவனும் செய்திருப்பதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது.

அப்பம், இயேசுவின் உடலை நம் நினைவுக்கு கொண்டுவர வேண்டும். நாம் நித்திய ஜீவனை பெறுவதற்காக அவர் அந்த உடலை தியாகம் செய்ய தயாராக இருந்தார். சிவப்பு திராட்சரசம் எதை நினைவுபடுத்த வேண்டும்?— இயேசு சிந்திய ரத்தத்தின் மதிப்பை நமக்கு நினைவுபடுத்த வேண்டும். அது, எகிப்தில் தெளிக்கப்பட்ட பஸ்கா ஆட்டின் ரத்தத்தைவிட அதிக மதிப்புமிக்கது. ஏன் என்று உனக்குத் தெரியுமா?— ஏனென்றால் இயேசுவின் ரத்தம் நம் பாவங்களை மன்னிக்கும் என்று பைபிள் சொல்கிறது. நம்முடைய எல்லா பாவங்களும் நீக்கப்பட்ட பிறகு, வியாதிப்பட்டு வயதாகி சாக மாட்டோம். நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ளும்போது நாம் இதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

நினைவு ஆசரிப்பின்போது எல்லாருமே அப்பத்தை சாப்பிட்டு திராட்சரசத்தை குடிக்க வேண்டுமா?— அப்படி சாப்பிட்டு குடிப்பவர்களிடம், ‘நீங்கள் என் ராஜ்யத்தில் இருப்பீர்கள், பரலோகத்தில் என்னோடு சிங்காசனங்களில் அமருவீர்கள்’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 22:19, 20, 30) அவர்கள் பரலோகத்திற்கு சென்று இயேசுவோடு ராஜாக்களாக இருப்பார்கள் என்பதை இது அர்த்தப்படுத்தியது. ஆகவே பரலோகத்தில் இயேசுவோடு ஆட்சி செய்யும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அப்பத்தையும் திராட்சரசத்தையும் சாப்பிட வேண்டும்.

ஆனால் அப்பத்தையும் திராட்சரசத்தையும் சாப்பிடாதவர்கள்கூட நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள வேண்டும். ஏன் தெரியுமா?— ஏனென்றால் நமக்காகவும் இயேசு தன் உயிரைக் கொடுத்தார். அதை நாம் மறக்கவில்லை என்பதை நினைவு ஆசரிப்புக்கு செல்வதன் மூலம் காட்டுகிறோம். கடவுளுடைய அருமையான அந்தப் பரிசை நினைத்துப் பார்ப்பதை காட்டுகிறோம்.

இயேசுவின் மீட்கும்பொருள் எவ்வளவு முக்கியம் என்பதை சில வசனங்கள் காட்டுகின்றன. அதை இப்போது படிக்கலாம். 1 கொரிந்தியர் 5:7; எபேசியர் 1:7; 1 தீமோத்தேயு 2:5, 6; 1 பேதுரு 1:18, 19.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்