அதிகாரம் 39
கடவுள் தன் மகனை நினைத்துப் பார்க்கிறார்
இயேசு தன் நண்பர் லாசரு இறந்தபோது அழுதார். அதேவிதமாக இயேசு துடிதுடித்து செத்தபோது யெகோவா மனவருத்தப்பட்டிருப்பாரா? நீ என்ன நினைக்கிறாய்?— கடவுளின் ‘மனம் புண்படும்’ என்றும், நடக்கும் காரியங்களைப் பார்த்து அவர் ‘மனவேதனைப்படுகிறார்’ என்றும் பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 78:40, 41; யோவான் 11:35.
அன்பு மகன் இறப்பதைப் பார்த்தபோது யெகோவா எந்தளவு வேதனைப்பட்டிருப்பார் என்று உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா?— கடவுள் தன்னை ஒருபோதும் மறக்க மாட்டார் என இயேசு நம்பிக்கையோடு இருந்தார். ஆகவேதான், ‘பிதாவே உம்முடைய கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ என்று கடைசியாக சொல்லி உயிரை விட்டார்.—லூக்கா 23:46.
கடவுள் தன்னை உயிர்த்தெழுப்புவார் என்பதை இயேசு உறுதியாக நம்பினார். ‘பாதாளத்திலே,’ அல்லது கல்லறையிலே தன்னை நிரந்தரமாக விட்டுவிட மாட்டார் என்பது அவருக்கு நிச்சயமாக தெரியும். இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, அவரைப் பற்றி பைபிளில் எழுதியிருந்ததை அப்போஸ்தலன் பேதுரு எடுத்துக் காட்டினார். ‘அவருடைய ஆத்துமா பாதாளத்தில் விடப்படவில்லை, அவருடைய மாம்சம் அழிவைக் காணவில்லை’ என்றார். (அப்போஸ்தலர் 2:31; சங்கீதம் 16:10) இயேசுவின் உடல் அழியும்வரை, அதாவது அழுகி நாற்றம் அடிக்கும்வரை கல்லறையில் விடப்படவில்லை.
இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, தான் ரொம்ப காலம் இறந்த நிலையிலேயே இருக்க மாட்டார் என்பதையும் சீஷர்களிடம் சொல்லியிருந்தார். தான் ‘கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்படப் போவதை’ அவர்களுக்கு விளக்கினார். (லூக்கா 9:22) ஆகவே இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டபோது சீஷர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் ஆச்சரியப்பட்டார்களா?— அதை இப்போது பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணி இருக்கும். அப்போது பெரிய போதகர் கழுமரத்தில் இறந்தார். யூத நீதிமன்றத்தின் ஒரு பணக்கார உறுப்பினரான யோசேப்பு இயேசுவின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்; ஆனால் அதை வெளியே யாரிடமும் சொல்லவில்லை. இயேசு இறந்ததைக் கேள்விப்பட்டபோது அவர் ரோம ஆளுநர் பிலாத்துவிடம் சென்றார். கழுமரத்திலிருந்து இயேசுவின் உடலை இறக்கி அதை அடக்கம் செய்ய அனுமதி கேட்டார். பிற்பாடு இயேசுவின் உடலை ஒரு தோட்டத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கே ஒரு கல்லறை இருந்தது. இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்படும் இடம்தான் கல்லறை.
இயேசுவின் உடல் கல்லறையில் வைக்கப்பட்ட பிறகு ஒரு பெரிய கல்லால் அது மூடப்பட்டது. மூன்றாம் நாள் வந்தது. அது ஞாயிற்றுக்கிழமை. இன்னும் விடியாததால் இருட்டாக இருந்தது. கல்லறையை சிலர் காவல் காத்து வந்தார்கள். இந்தக் காவலாளிகளை பிரதான ஆசாரியர்கள் அனுப்பியிருந்தார்கள். ஏன் தெரியுமா?—
தான் உயிர்த்தெழுப்பப்படப் போவதைப் பற்றி இயேசு சொன்னதை ஆசாரியர்களும் கேட்டிருந்தார்கள். ஆகவே சீஷர்கள் அவரது உடலை திருடி பின்பு அவர் உயிர்த்தெழுந்துவிட்டதாக சொல்லக் கூடாது என்பதற்காக அந்த ஆசாரியர்கள் காவலாளிகளை அனுப்பியிருந்தார்கள். அப்போது திடீரென்று நிலம் கிடுகிடுவென ஆட ஆரம்பித்தது. அந்த இருட்டில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அது யெகோவாவின் தூதர்! காவலாளிகள் மிகவும் பயந்துபோய் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றார்கள். தூதர் கல்லறைக்குச் சென்று கல்லை தள்ளினார். கல்லறை காலியாக இருந்தது!
கல்லறை ஏன் காலியாக இருக்கிறது? என்ன நடந்துவிட்டது?
ஆம், அப்போஸ்தலன் பேதுரு பிற்பாடு சொன்ன விதமாகவே, “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்.” (அப்போஸ்தலர் 2:32) இயேசுவுக்கு கடவுள் புதிய உடலைக் கொடுத்தார். அவர் பூமிக்கு வருவதற்கு முன்பு இருந்த உடலைப் போலவே அது இருந்தது. தேவதூதர்களுக்கு இருப்பதைப் போன்ற ஆவி உடலோடு அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார். (1 பேதுரு 3:18) என்றாலும் மக்கள் பார்ப்பதற்காக இயேசு மனித உடலை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் அப்படி செய்தாரா?— அதைப் பார்க்கலாம்.
மெல்ல விடிந்துகொண்டிருந்தது. காவலாளிகள் சென்று விட்டனர். மகதலேனா மரியாளும் இயேசுவின் சீஷர்களாக இருந்த மற்ற பெண்களும் கல்லறைக்கு சென்று கொண்டிருந்தார்கள். ‘கல்லை நமக்காக யார் புரட்டித் தள்ளுவார்கள்’ என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். (மாற்கு 16:3) ஆனால் அவர்கள் கல்லறைக்கு சென்ற போது கல் ஏற்கெனவே தள்ளப்பட்டிருந்தது. கல்லறை காலியாக இருந்தது! இயேசுவின் உடலைக் காணவில்லை! உடனடியாக இயேசுவின் அப்போஸ்தலர்களைத் தேடி மகதலேனா மரியாள் ஓடினாள்.
மற்ற பெண்கள் கல்லறைக்குப் பக்கத்திலேயே நின்றார்கள். ‘இயேசுவின் உடலுக்கு என்னவாகியிருக்கும்?’ என்று அவர்கள் யோசித்தார்கள். திடீரென, பிரகாசமான உடையில் இருவர் தோன்றினார்கள். அவர்கள் தேவதூதர்கள்! அவர்கள் அந்தப் பெண்களிடம், ‘ஏன் இயேசுவை இங்கே தேடுகிறீர்கள்? அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். சீக்கிரமாக போய் அவரது சீஷர்களுக்கு சொல்லுங்கள்’ என்றார்கள். அந்தப் பெண்கள் எவ்வளவு வேகமாக ஓடியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்! வழியே ஒருவர் அவர்களை சந்தித்தார். அவர் யார் தெரியுமா?—
அவர் இயேசுதான், மனித உடலில் தோன்றினார்! அவரும் அந்தப் பெண்களிடம் ‘என் சீஷர்களிடம் போய் சொல்லுங்கள்’ என்றார். அந்தப் பெண்களுக்கு ஒரே சந்தோஷம். அவர்கள் சீஷர்களை சந்தித்து, ‘இயேசு உயிரோடு இருக்கிறார்! நாங்கள் அவரைப் பார்த்தோம்!’ என்றார்கள். கல்லறை காலியாக இருந்ததைப் பற்றி பேதுருவிடமும் யோவானிடமும் மரியாள் ஏற்கெனவே சொல்லியிருந்தாள். ஆகவே அவர்கள் அதைப் பார்க்க ஓடினார்கள். இந்தப் படத்தில்கூட அது தெரிகிறது பார். இயேசுவின் உடலில் சுற்றப்பட்டிருந்த துணிகளை அவர்கள் பார்த்தார்கள், ஆனால் என்ன நடந்தது என்றே அவர்களுக்கு புரியவில்லை. இயேசு மறுபடியும் உயிரோடு இருக்கிறார் என்று அவர்களால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அந்தளவுக்கு அது அற்புதமான ஒன்றாக இருந்தது.
பேதுருவும் யோவானும் எதைப் பற்றி யோசிக்கிறார்கள்?
பிற்பாடு அதே ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு தன் சீஷர்கள் இருவர் முன்பாக தோன்றினார்; அவர்கள் எம்மாவு என்ற கிராமத்திற்கு நடந்துபோய் கொண்டிருந்தார்கள். இயேசுவும் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவர்களோடு சேர்ந்து நடந்தார். ஆனால் அவர்தான் இயேசு என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் இயேசு வேறொரு மனித உருவில் வந்திருந்தார். அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டு ஜெபம் செய்தபோதுதான் அவர் யார் என்று அவர்களுக்கு புரிந்தது. சீஷர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு இதைப் பற்றி சொல்வதற்காக பல கிலோமீட்டர் தூரத்திலிருந்த எருசலேமிற்கு வேகவேகமாக போனார்கள்! ஒருவேளை இதற்கு கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான், உயிரோடு இருப்பதைக் காட்ட பேதுருவுக்கு முன்பாக இயேசு தோன்றியிருக்கலாம்.
பிறகு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் அநேக சீஷர்கள் ஒரு அறையில் கூடியிருந்தார்கள். கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. திடீரென்று, அவர்கள் நடுவில் இயேசு தோன்றினார்! இப்போது, பெரிய போதகர் உண்மையிலேயே உயிரோடு இருப்பது அவர்களுக்கு புரிந்தது. அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்!—மத்தேயு 28:1-15; லூக்கா 24:1-49; யோவான் 19:38–20:21.
நாற்பது நாட்களுக்கு இயேசு வித்தியாசமான மனித உடல்களில் சீஷர்களுக்கு முன் தோன்றி, தான் உயிரோடு இருப்பதைக் காட்டினார். பிறகு பூமியை விட்டு, மறுபடியும் தன் தகப்பனிடம் பரலோகத்திற்குச் சென்றார். (அப்போஸ்தலர் 1:9-11) இயேசுவை கடவுள் உயிர்த்தெழுப்பிவிட்டதைப் பற்றி சீஷர்கள் எல்லாருக்கும் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆசாரியர்கள் அவர்களை அடித்து, சிலரை கொலை செய்தபோதும் அவர்கள் தொடர்ந்து பிரசங்கித்தார்கள். தாங்கள் இறந்தாலும், கடவுள் தன் மகனை நினைத்துப் பார்த்த விதமாகவே தங்களையும் நினைத்துப் பார்ப்பார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட நாளில் இன்று அநேகர் எதைப் பற்றி நினைக்கிறார்கள்? ஆனால் நீ எதைப் பற்றி நினைக்கிறாய்?
இயேசுவை ஆரம்பத்தில் பின்பற்றியவர்கள் இன்று உள்ள அநேகரிலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருந்தார்கள்! உலகின் சில பாகங்களில் உள்ள மக்கள், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட நாளில், ஈஸ்டர் முயல்களையும் கலர் கலரான ஈஸ்டர் முட்டைகளையும் பற்றித்தான் நினைக்கிறார்கள். ஆனால் ஈஸ்டர் முயல்களையும் முட்டைகளையும் பற்றி பைபிள் ஒன்றுமே சொல்வதில்லை. கடவுளை சேவிப்பதைப் பற்றித்தான் அது சொல்கிறது.
கடவுள் தன் மகனை உயிர்த்தெழுப்பிய அற்புதத்தைப் பற்றி மற்றவர்களுக்கு நாம் சொல்லலாம்; அப்படி செய்தால் இயேசுவின் சீஷர்களைப் போல் இருப்போம். நம்மை கொல்லப்போவதாக மக்கள் சொன்னாலும் நாம் ஒருபோதும் பயப்பட வேண்டியது இல்லை. அப்படியே நாம் இறந்தாலும் இயேசுவைப் போலவே நம்மையும் யெகோவா நினைவில் வைத்து உயிர்த்தெழுப்புவார்.
கடவுள் தன்னை சேவிப்போரை நினைவில் வைத்து, அவர்களை உயிர்த்தெழுப்புவார் என்பது சந்தோஷமான விஷயம் அல்லவா?— இதையெல்லாம் அறிந்திருப்பதால், கடவுளை நாம் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்பதையும் அறிய நாம் விரும்ப வேண்டும். உண்மையிலேயே நம்மால் கடவுளை சந்தோஷப்படுத்த முடியும் என்பது உனக்குத் தெரியுமா?— அடுத்ததாக இதைப் பற்றி பேசலாம்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் நம் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்த வேண்டும். இப்போது சில வசனங்களை வாசிக்கலாம். அப்போஸ்தலர் 2:22-36; 4:18-20; 1 கொரிந்தியர் 15:3-8, 20-23.