பிற்சேர்க்கை
நியாயத்தீர்ப்பு நாள்—அது என்ன?
நியாயத்தீர்ப்பு நாள் என்றதுமே உங்கள் மனதிற்கு என்ன வருகிறது? கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்னால் கோடிக்கணக்கானோர் ஒருவருக்குப் பின் ஒருவராக நிறுத்தப்படுவார்கள். அங்கே, ஒவ்வொரு நபருக்கும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும். பரலோகத்தில் வாழும்படி சிலர் ஆசீர்வதிக்கப்படுவார்கள், மற்றவர்கள் நித்திய வாதனையை அனுபவிக்கும்படி சபிக்கப்படுவார்கள்—இப்படித்தான் அநேகர் நினைக்கிறார்கள். ஆனால், நியாயத்தீர்ப்பு நாளை பைபிள் ரொம்பவே வித்தியாசமான காலமாக வர்ணிக்கிறது. பயந்து நடுங்க வைக்கும் ஒரு காலமாக அல்ல, ஆனால் நம்பிக்கையையும் மீட்பையும் அளிக்கிற ஒரு காலமாக அதை வர்ணிக்கிறது.
நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துதல் 20:11, 12-ல் இவ்வாறு விவரிக்கிறார்: “பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” இங்கே விவரிக்கப்பட்டுள்ள நியாயாதிபதி யார்?
யெகோவா தேவன்தான் மனிதகுலத்தின் ஒப்பற்ற நியாயாதிபதி. என்றாலும், நியாயத்தீர்ப்பு செய்கிற வேலையை அவர் வேறொருவருக்குக் கொடுத்திருக்கிறார். அப்போஸ்தலர் 17:31-ன்படி, அவர் “ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துதான் நியமிக்கப்பட்ட அந்த நியாயாதிபதி. (யோவான் 5:22) ஆனால், நியாயத்தீர்ப்பு நாள் எப்போது ஆரம்பமாகும்? அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?
அர்மகெதோன் யுத்தத்தில் சாத்தானின் ஒழுங்குமுறை அழிக்கப்பட்ட பிறகு நியாயத்தீர்ப்பு நாள் ஆரம்பிக்குமென்று வெளிப்படுத்துதல் புத்தகம் காண்பிக்கிறது.a (வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:19–20:3) அர்மகெதோனுக்குப் பின், சாத்தானும் அவனுடைய பேய்களும் ஆயிரம் வருடங்களுக்குப் பாதாளத்திலே சிறைப்படுத்தப்படுவார்கள். அந்தச் சமயத்தில், கிறிஸ்துவின் உடன் சுதந்தரரான 1,44,000 பேர் பரலோகத்தில் நியாயாதிபதிகளாக இருந்து, ‘அவருடனேகூட ஆயிரம் வருஷம்’ அரசாளுவார்கள். (வெளிப்படுத்துதல் 14:1-3; 20:1-4; ரோமர் 8:17) நியாயத்தீர்ப்பு நாள் என்பது வெறும் 24 மணிநேரத்திற்குள் அவசர அவசரமாக நியாயத்தீர்ப்பு நடந்தேறும் ஒரு காலப்பகுதி அல்ல. மாறாக, அது ஓராயிரம் வருடங்களுக்கு நீடிக்கும்.
அந்த ஆயிரவருட காலத்தின்போது, இயேசு கிறிஸ்து ‘உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்ப்பார்.’ (2 தீமோத்தேயு 4:1) ‘உயிரோடிருக்கிறவர்கள்’ அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கிற ‘திரள்கூட்டத்தாரைக்’ குறிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-17) ‘மரித்தோர் தேவனுக்கு முன்பாக நிற்பதையும்’ அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார். இயேசு வாக்குக் கொடுத்தபடியே, உயிர்த்தெழுதல் மூலம் ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [கிறிஸ்துவுடைய] சத்தத்தைக் கேட்டு . . . எழுந்திருப்பார்கள்.’ (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) ஆனால், எதன் அடிப்படையில் எல்லாரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
அப்போஸ்தலன் யோவான் பார்த்த தரிசனத்தில், “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன,” அதோடு, “அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” இந்தப் புஸ்தகங்கள் மக்களுடைய கடந்தகால செயல்களைப் பற்றிய பதிவுகளா? இல்லை, இறப்பதற்கு முன் செய்த காரியங்களின் அடிப்படையில் மக்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள். அது நமக்கு எப்படித் தெரியும்? பைபிளே இவ்வாறு சொல்கிறது: “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.” (ரோமர் 6:7) இப்படியாக, உயிர்த்தெழுப்பப்படுவோர் முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்ட நிலையில் ஜீவனடைவார்கள். எனவே அந்தப் புஸ்தகங்கள், கடவுள் நம்மிடமிருந்து மேலுமாக எதிர்பார்ப்பவற்றையே அடையாளப்படுத்த வேண்டும். அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கிறவர்களும் உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களும் என்றென்றும் வாழ்வதற்காகக் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அந்த ஆயிரவருட காலப்பகுதியில் யெகோவா புதிதாகக் கொடுக்கப் போகிற எல்லாக் கட்டளைகளுக்கும்கூட கீழ்ப்படிய வேண்டும். ஆகையால், நியாயத்தீர்ப்பு நாளின்போது அவர்கள் செய்யும் காரியங்களின் அடிப்படையிலேயே நியாயத்தீர்ப்பு வழங்கப்படும்.
நியாயத்தீர்ப்பு நாளில், கோடிக்கணக்கானோர் கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதற்கிசைய வாழ்வதற்கான வாய்ப்பை முதன்முதலாகப் பெறுவார்கள். அப்படியென்றால் மிகப் பெரியளவில் கல்வி புகட்டும் வேலை நடைபெறப் போகிறது. ஆம், அச்சமயத்தில் “பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) என்றாலும், எல்லாருமே கடவுளுடைய சித்தத்திற்கு இசைய வாழ விரும்ப மாட்டார்கள். ஏசாயா 26:10 இவ்வாறு சொல்கிறது: “துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறான்.” இத்தகைய துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பு நாளின்போது நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—ஏசாயா 65:20.
மீதமுள்ளவர்கள் நியாயத்தீர்ப்பு நாள் முடிவடைவதற்குள் பரிபூரணர்களாக முழுமையான அர்த்தத்தில் ‘உயிரடைந்திருப்பார்கள்.’ (வெளிப்படுத்துதல் 20:5) இவ்வாறு நியாயத்தீர்ப்பு நாளின்போது மனிதகுலம் ஆரம்பத்தில் இருந்தது போன்ற பரிபூரண நிலைக்குக் கொண்டு வரப்படும். (1 கொரிந்தியர் 15:24-28) அதன் பிறகு, இறுதியாக ஒரு சோதனை வரும். சாத்தான் விடுதலையாக்கப்படுவான், அப்போது கடைசியாக இன்னும் ஒரேதரம் மனிதகுலத்தை மோசம்போக்குவதற்கு அவன் அனுமதிக்கப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:3, 7-10) அவனை எதிர்த்து நிற்பவர்கள் பைபிள் அளிக்கிற பின்வரும் வாக்குறுதியின் பூரண நிறைவேற்றத்தை அனுபவிப்பார்கள்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) ஆம், விசுவாசமிக்க எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு நாள் ஓர் ஆசீர்வாதமாகவே அமையும்!
a அர்மகெதோனைக் குறித்து, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் தொகுதி 1-ல், பக்கங்கள் 594-5, 1037-8-யும் ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புத்தகத்தில் 20-ம் அதிகாரத்தையும் தயவுசெய்து பார்க்கவும். இவ்விரண்டு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.