உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lv அதி. 5 பக். 57-70
  • உலகத்திலிருந்து விலகியிருப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்திலிருந்து விலகியிருப்பது எப்படி?
  • ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய அரசாங்கத்திற்கு விசுவாசம், உலக அரசாங்கத்திற்கு நடுநிலை
  • “உலகத்தின் சிந்தையை” எதிர்த்தல்
  • ஆடை அலங்காரத்தில் கண்ணியம்
  • வாழ்க்கையை எளிமையாக வைத்தல்
  • “முழு கவசத்தையும்” போட்டுக்கொள்ளுதல்
  • உங்கள் நம்பிக்கையைக் குறித்து பதில் சொல்ல தயாராயிருங்கள்
  • உலகத்திலிருந்து பிரிந்திருப்பது எப்படி?
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • கடைசி நாட்களில் நடுநிலைமை வகிக்கும் கிறிஸ்தவர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • தப்பிப்பிழைப்போர் ‘உலகத்தின் பாகமாக’ இருக்கக்கூடாது
    உண்மையான சமாதானம்
  • உடையும் தோற்றமும்​—ஏன் கவனம் தேவை?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
lv அதி. 5 பக். 57-70
யெகோவாவின் சாட்சிகள் சேர்ந்து ஃபோட்டோ எடுக்கிறார்கள்

அதிகாரம் 5

உலகத்திலிருந்து விலகியிருப்பது எப்படி?

‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை.’ —யோவான் 15:19.

1. பூமியில் வாழ்ந்த கடைசி இரவில் இயேசு எதை வலியுறுத்தினார்?

இயேசுவுக்குத் தனது சீஷர்களின் எதிர்கால நலனில் ஆழ்ந்த அக்கறை இருந்தது. அதனால்தான், பூமியில் வாழ்ந்த கடைசி இரவில் அவர்களுக்காக தனது தகப்பனிடம் இவ்வாறு ஜெபம் செய்தார்: “நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்கவில்லை, பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” (யோவான் 17:15, 16) சீஷர்கள்மீது இயேசுவுக்கு இருந்த அளவிலா அன்பை இந்த ஜெபம் எதிரொலிக்கிறது. அதோடு, ‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை’ என்று சீஷர்கள் சிலரிடம் சற்று முன்பு அவர் சொன்ன வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. (யோவான் 15:19) ஆம், தனது சீஷர்கள் இந்த உலகத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதற்கு இயேசு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்!

2. ‘உலகம்’ என்று இயேசு சொன்னது யாரைக் குறிக்கிறது?

2 ‘உலகம்’ என இயேசு சொன்னது கடவுளிடமிருந்து விலகியிருக்கிற எல்லா மனிதர்களையும் குறிக்கிறது; இவர்கள் சாத்தானுடைய ஆதிக்கத்தின்கீழ் இருக்கிறார்கள், அவனைப்போல் தன்னலத்திலும் அகந்தையிலும் ஊறிப்போயிருக்கிறார்கள். (யோவான் 14:30; எபேசியர் 2:2; 1 யோவான் 5:19) அதனால்தான், “உலக நட்பு கடவுளுக்குப் பகை” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:4) அப்படியானால், கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க விரும்புகிறவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டே எப்படி அதிலிருந்து விலகியிருக்க முடியும்? அதற்கு ஐந்து வழிகளைச் சிந்திப்போம்: கடவுளுடைய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதோடு உலக அரசியலில் நடுநிலை வகிக்க வேண்டும்; உலகத்தின் சிந்தையை எதிர்க்க வேண்டும்; ஆடை அலங்காரத்தில் கண்ணியம் காக்க வேண்டும்; வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும்; கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

கடவுளுடைய அரசாங்கத்திற்கு விசுவாசம், உலக அரசாங்கத்திற்கு நடுநிலை

3. (அ) இயேசு ஏன் அரசியலில் தலையிடவில்லை? (ஆ) பரலோக நம்பிக்கையுள்ள இயேசுவின் சீஷர்களைத் தூதுவர்கள் என ஏன் சொல்கிறோம்? (அடிக்குறிப்பையும் காண்க.)

3 இயேசு பூமியில் வாழ்ந்தபோது அரசியலில் தலையிடவில்லை, மாறாக எதிர்காலத்தில் தான் ஆளப்போகும் அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்பதிலேயே முழுக் கவனம் செலுத்தினார். (தானியேல் 7:13, 14; லூக்கா 4:43; 17:20, 21) எனவேதான், ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிடம், “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று சொன்னார். (யோவான் 18:36) கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் விசுவாசமாக இருக்கிறார்கள்; அந்த அரசாங்கத்தைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கிறார்கள். (மத்தேயு 24:14) எனவேதான் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் கிறிஸ்துவின் சார்பில் தூதுவர்களாக இருக்கிறோம். ‘கடவுளோடு சமரசமாகுங்கள்’ என்று கிறிஸ்துவின் சார்பில் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.”a—2 கொரிந்தியர் 5:20.

4. உண்மைக் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளுடைய அரசாங்கத்திற்கு எப்படி விசுவாசமாக இருக்கிறார்கள்? (பக்கம் 60-ல் உள்ள பெட்டியைக் காண்க.)

4 வேறொரு அரசுக்கு அல்லது நாட்டுக்குப் பிரதிநிதிகளாக இருப்பவர்களே தூதுவர்கள்; அதனால், அவர்கள் எந்த நாட்டில் குடியிருக்கிறார்களோ அந்த நாட்டின் விவகாரங்களில் நடுநிலை வகிப்பார்கள். ஆனால், எந்த நாட்டின் பிரதிநிதிகளாக இருக்கிறார்களோ அந்த நாட்டின் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்துவின் சீஷர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுடைய “குடியுரிமை பரலோகத்தில் இருக்கிறது.” (பிலிப்பியர் 3:20) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இவர்கள் முழுமூச்சாய் அறிவிப்பதால், கிறிஸ்துவின் ‘வேறே ஆடுகளான’ லட்சோபலட்சம் பேர் ‘கடவுளோடு சமரசமாகி’ வந்திருக்கிறார்கள். (யோவான் 10:16; மத்தேயு 25:31-40) இந்த வேறே ஆடுகள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இந்த இரு தொகுதியினரும் ஒன்றுபட்ட மந்தையாக மேசியாவால் ஆளப்படும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்; அதனால், உலக அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிக்கிறார்கள்.—ஏசாயா 2:2-4-ஐ வாசியுங்கள்.

5. உண்மைக் கிறிஸ்தவர்களும் பூர்வ இஸ்ரவேலரும் எப்படி வேறுபடுகிறார்கள், இந்த வேறுபாட்டை எப்படிக் காணலாம்?

5 உண்மைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு விசுவாசமாய் இருக்கிறார்கள் என்று பார்த்தோம். என்றாலும், அவர்கள் நடுநிலை வகிப்பதற்கு அது மட்டுமே காரணம் அல்ல. பூர்வகால இஸ்ரவேலருக்கு தேசிய எல்லைகளைக் கடவுள் வரையறுத்துக் கொடுத்திருந்தார், ஆனால் உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நமக்கு அதுபோன்ற தேசிய எல்லைகள் எதுவும் இல்லை. நாம் சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கிறோம். (மத்தேயு 28:19; 1 பேதுரு 2:9) எனவே, உள்நாட்டு அரசியல் கட்சிகளை நாம் ஆதரித்தால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நம்மால் தயக்கமின்றி பேச முடியாது, நம் கிறிஸ்தவ ஒற்றுமையும் குலைக்கப்படும். (1 கொரிந்தியர் 1:10) அதுமட்டுமல்ல, போர்க்காலங்களில் நம் அன்புக்குரிய சக விசுவாசிகளையே எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்போம். (யோவான் 13:34, 35; 1 யோவான் 3:10-12) வாளை கையில் எடுக்க வேண்டாம் என இயேசு தன் சீஷர்களிடம் சொன்னது எவ்வளவு சரியாக இருக்கிறது! சொல்லப்போனால், எதிரிகளையும் நேசிக்க வேண்டும் என்றல்லவா அவர் சொன்னார்.—மத்தேயு 5:44; 26:52; “நான் நடுநிலை வகிக்கிறேனா?” என்ற பெட்டியைப் பக்கம் 61-ல் காண்க.

6. கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதால் அரசனுக்கு எதை மட்டுமே கொடுக்க வேண்டும்?

6 உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு மனிதனுக்கோ தேசத்திற்கோ மனித அமைப்பிற்கோ அல்ல, கடவுளுக்கே நம்மை அர்ப்பணித்திருக்கிறோம். “நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் கிடையாது. ஏனென்றால், நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்” என்று 1 கொரிந்தியர் 6:19, 20 சொல்கிறது. இயேசுவின் சீஷர்கள் “அரசனுடையதை” அரசனுக்குக் கொடுக்கிறார்கள்; அதாவது, அரசனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையையும் வரியையும் கொடுக்கிறார்கள்; அதோடு, கடவுளுடைய சட்டங்களுக்கு முரண்படாத அரசு சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். அதேசமயத்தில் “கடவுளுடையதைக் கடவுளுக்கும்” கொடுக்கிறார்கள். (மாற்கு 12:17; ரோமர் 13:1-7) கடவுளை வணங்குவதும், அவர்மேல் உள்ளப்பூர்வமான அன்பு காட்டுவதும், அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதும் இதில் அடங்கும். தேவைப்பட்டால், கடவுளுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.—லூக்கா 4:8; 10:27; அப்போஸ்தலர் 5:29-ஐயும் ரோமர் 14:8-ஐயும் வாசியுங்கள்.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் நடுநிலை

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அரசியலில் நடுநிலை வகித்தார்கள், போர்களில் ஈடுபட மறுத்தார்கள் என்பதற்கு வரலாறு ஏராளமான சான்றளிக்கிறது. இதைக் குறித்து கிறிஸ்தவத்தின் ஆரம்பம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “அரசியல் விவகாரங்களில் தலையிட வேண்டுமென்ற எண்ணம் தங்களுக்குக் கொஞ்சம்கூட வந்துவிடக் கூடாது என்பதில் கிறிஸ்தவத்தைத் தோற்றுவித்தவர்கள் மிக எச்சரிக்கையாய் இருந்தார்கள்.” நாகரீகத்தை நோக்கி என்ற ஆங்கிலப் புத்தகமும் இதே கருத்தைத் தெரிவிக்கிறது: “புறமத ஆட்சியாளர்கள் ஆரம்பகால கிறிஸ்தவத்தை தவறாகப் புரிந்துகொண்டனர், அதை ஆதரிக்க மறுத்தனர். . . . ரோம குடிமக்கள் செய்ய வேண்டிய சில பணிகளைக் கிறிஸ்தவர்கள் செய்ய மறுத்தனர். . . . அவர்கள் எந்தவொரு அரசியல் பதவியும் வகிக்கவில்லை.”

ஆரம்பகால கிறிஸ்தவத்தையும் ராணுவ சேவையையும் பற்றி ஜெர்மன் இறையியலாளர் பீட்டர் மைன்ஹோல்ட் இவ்வாறு கூறினார்: “ஒருவர் கிறிஸ்தவராகவும் அதேசமயம் படைவீரராகவும் இருக்க முடியாது.” போரும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஜோனத்தன் டைமன்ட் ஒரு கட்டுரை எழுதினார்; இயேசு இறந்த பிறகு சில காலத்திற்கு அவருடைய சீஷர்கள், “[போரில்] ஈடுபட மறுத்தார்கள்; அதற்காக அவதூறு, சிறை தண்டனை, மரண தண்டனை என எதையும் சந்திக்கத் தயாராய் இருந்தார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். “இந்த உண்மைகளை யாராலும் மறுக்க முடியாது” என்றும் அவர் எழுதினார். “கிறிஸ்தவம் கறைபடத் தொடங்கியபோது”தான் கிறிஸ்தவர்கள் போர் வீரர்களாய் ஆனார்கள் என்றார் மற்றொரு எழுத்தாளர்.

“உலகத்தின் சிந்தையை” எதிர்த்தல்

7, 8. ‘உலகச் சிந்தை’ என்றால் என்ன, இந்தச் சிந்தை கீழ்ப்படியாத மனிதர்களுக்குள் எப்படிச் ‘செயல்படுகிறது’?

7 இந்த உலகத்தின் தீய சிந்தையை எதிர்ப்பதன் மூலமும் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்திலிருந்து விலகியிருக்கிறார்கள். “நாம் இந்த உலகத்தின் சிந்தையைப் பெறவில்லை, கடவுளுடைய சக்தியைத்தான் பெற்றிருக்கிறோம்” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 2:12) “ஒருகாலத்தில் நீங்கள் இந்த உலகம் போகிற போக்கில் போய்க்கொண்டிருந்தீர்கள்; காற்றுபோல் நம்மைச் சூழ்ந்திருக்கிற உலகச் சிந்தையை, அதாவது கீழ்ப்படியாதவர்களிடம் இப்போது செயல்படுகிற சிந்தையை, ஆளுகிறவனுடைய விருப்பத்தின்படி வாழ்ந்துகொண்டிருந்தீர்கள்” என்று எபேசியர்களிடம் பவுல் சொன்னார்.—எபேசியர் 2:2, 3.

8 உலக “சிந்தை” கடவுளுக்குக் கீழ்ப்படியாதிருக்க ஒருவரை உந்துவிக்கிறது. அது ‘உடலின் ஆசையையும், கண்களின் ஆசையையும்’ தூண்டிவிடுகிறது. (1 யோவான் 2:16; 1 தீமோத்தேயு 6:9, 10) இந்தச் சிந்தை, பாவ இச்சைக்குத் தீனி போடுகிறது, வஞ்சகமாகச் செயல்படுகிறது, பலமாகச் செல்வாக்கு செலுத்துகிறது, காற்றுபோல் எங்கும் பரவியிருக்கிறது; இப்படி இந்த உலகையே ‘ஆளுகிறது.’ இந்தச் சிந்தை ஒருவருக்குள் எப்படிச் ‘செயல்படுகிறது’? கடவுள் வெறுக்கிற குணங்களை, அதாவது சுயநலம், அகம்பாவம், லட்சிய வெறி, ஒழுக்க விஷயத்தில் தன்னிஷ்ட போக்கு, கீழ்ப்படியாமை ஆகிய குணங்களைக் கொஞ்சம்கொஞ்சமாக ஊட்டி வளர்ப்பதன் மூலம் செயல்படுகிறது.b சுருங்கச் சொன்னால், இவ்வுலகச் சிந்தை ஒருவருடைய இதயத்திற்குள் சாத்தானுடைய குணங்களைப் படிப்படியாக வளர்க்கிறது.—யோவான் 8:44; அப்போஸ்தலர் 13:10; 1 யோவான் 3:8, 10.

9. உலகத்தின் தீய சிந்தை உங்கள் மனதிலும் இதயத்திலும் என்னென்ன வழிகளில் ஊடுருவலாம்?

9 உலகத்தின் சிந்தை உங்கள் மனதிலும் இதயத்திலும் வேர்விட முடியுமா? நீங்கள் சற்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் வேர்விட முடியும். (நீதிமொழிகள் 4:23-ஐ வாசியுங்கள்.) இந்தச் சிந்தை பெரும்பாலும் வஞ்சகமாகச் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கலாம்; நல்லவர்களாகத் தெரிகிற, ஆனால் யெகோவாவை நேசிக்காத நண்பர்கள் மூலம் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கலாம். (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33) ஆட்சேபணைக்குரிய புத்தகங்கள், ஆபாசக் காட்சிகளையோ விசுவாசதுரோகக் கருத்துகளையோ பரப்பும் இணையதளங்கள், தரங்கெட்ட பொழுதுபோக்குகள், போட்டி மனப்பான்மையைத் தூண்டும் விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலமும் இந்தத் தீய சிந்தை உங்களுக்குள் ஊடுருவலாம். சொல்லப்போனால், சாத்தானின் சிந்தையை அல்லது அவனுடைய உலகத்தின் சிந்தையைப் பரப்புகிற எவர் மூலமாகவோ எதன் மூலமாகவோ அது உங்களுக்குள் ஊடுருவலாம்.

10. இவ்வுலகச் சிந்தையை நாம் எப்படி எதிர்க்கலாம்?

10 நயவஞ்சகமிக்க இவ்வுலகச் சிந்தையை எதிர்த்து, கடவுளுடைய அன்புக்கு நாம் பாத்திரமானவர்களாக இருப்பது எப்படி? ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு யெகோவா செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அதோடு, அவருடைய சக்திக்காக எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும். பிசாசையும் அவனுடைய ஆதிக்கத்திலுள்ள இந்தப் பொல்லாத உலகையும்விட யெகோவா மகா சக்தி படைத்தவர். (1 யோவான் 4:4) அப்படியானால், யெகோவாவிடம் ஜெபம் செய்வதன் மூலம் அவரிடம் நெருங்கியிருப்பது எவ்வளவு முக்கியம்!

நான் நடுநிலை வகிக்கிறேனா?

ஒரு மாணவன் தன் நம்பிக்கைகளைப் பற்றி ஆசிரியரிடம் சொல்கிறான்

நியமம்: “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.”—யோவான் 18:36.

இதோ சில கேள்விகள்

  • கொடி வணக்கம் ஒருவகையான சிலை வழிபாடு என நான் எப்படி விளக்குவேன்?c—யாத்திராகமம் 20:4, 5; 1 யோவான் 5:21.

  • சில தேசிய நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை என்பதை மற்றவர்களுக்கு எப்படி மரியாதையுடன் விளக்குவேன்?—1 பேதுரு 3:15.

  • நான் ஏன் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிப்பதில்லை, எந்தவொரு ராணுவ சேவையிலும் ஈடுபடுவதில்லை என்பதற்கு என்ன காரணங்கள் சொல்வேன்?—யோவான் 13:34; 1 யோவான் 3:10-12.

ஆடை அலங்காரத்தில் கண்ணியம்

11. உடை விஷயத்தில், உலகச் சிந்தை எப்படிச் செல்வாக்கு செலுத்துகிறது?

11 ஒருவரிடம் எப்படிப்பட்ட “சிந்தை” இருக்கிறது என்பது அவருடைய உடையிலும் அலங்காரத்திலும் தனிப்பட்ட சுத்தத்திலும் வெளிப்படையாகத் தெரிகிறது. பல நாடுகளில், உடை பாணிகள் மிகவும் தரங்கெட்டுப் போய்விட்டன. அதனால்தான், “விலைமாதர்களுக்கும் குடும்பப் பெண்களுக்கும் வித்தியாசமே தெரியாமல் போய்விட்டது” என்று சொன்னார் ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளர். பருவ வயதைத் தொடாத சிறுமிகளும்கூட கவர்ச்சிக் கன்னிகளாக வலம்வரவே விரும்புகிறார்கள். “ஆடை குறையக்குறைய, கண்ணியம் காற்றில் பறந்துவிட்டது” என்கிறது ஒரு செய்தித்தாள் அறிக்கை. அலங்கோலமாக உடை உடுத்துவது மற்றொரு பாணியாக இருக்கிறது. இது கலக மனப்பான்மையை, கண்ணியக் குறைவை, சுயமரியாதை இல்லாமையைக் காட்டுகிறது.

12, 13. உடையிலும் தோற்றத்திலும் நாம் பின்பற்ற வேண்டிய நியமங்கள் யாவை?

12 யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் அனைவரும் அழகாகத் தோற்றமளிக்க விரும்புகிறோம். அப்படியானால், நம் உடை நேர்த்தியாக, சுத்தமாக, ரசனையுள்ளதாக, சூழ்நிலைக்குத் தக்கதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் “நல்ல செயல்களால்” மட்டுமல்ல “அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும்” நம்மை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்; “கடவுள்பக்தி உள்ள” எல்லாருக்குமே இது பொருந்தும்—ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. ஆம், நம்முடைய முக்கிய நோக்கம் “கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக” இருப்பதே, மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்புவது அல்ல. (1 தீமோத்தேயு 2:9, 10; யூதா 21) “இதயத்தில் மறைந்திருக்கிற . . . குணம்தான்” நமக்குச் சிறந்த அலங்காரமாக இருக்க வேண்டும். ஏனென்றால், “அதுதான் கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்புள்ளது.”—1 பேதுரு 3:3, 4.

13 நம் உடையையும் தோற்றத்தையும் பார்த்து மற்றவர்கள் உண்மை வணக்கத்திடம் கவர்ந்திழுக்கப்படலாம் என்பதை மனதில் வைத்திருங்கள். ‘அடக்கம்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை தார்மீக அர்த்தத்தில் பயபக்தியுடன் நடப்பதையும், மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு காட்டுவதையும் குறிக்கிறது. எனவே, உடை உடுத்தும் விஷயத்தில் நம் உரிமைகளை வலியுறுத்திக் கொண்டிருக்காமல் மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் புகழ் சேர்க்க நாம் விரும்புகிறோம்; அதோடு, ‘எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்வதன்’ மூலம் அவருடைய ஊழியர்களாக நம்மைச் சிபாரிசு செய்ய விரும்புகிறோம்.—1 கொரிந்தியர் 4:9; 10:31; 2 கொரிந்தியர் 6:3, 4; 7:1.

இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அடக்கமாக உடை உடுத்திக்கொண்டு ஊழியம் செய்கிறார்கள்

என் தோற்றம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறதா?

14. தோற்றத்தையும் சுத்தத்தையும் பொறுத்தவரை, நாம் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

14 வெளி ஊழியத்தில் அல்லது சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது நம் ஆடை அலங்காரத்திற்கும் தனிப்பட்ட சுத்தத்திற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே, உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் தோற்றம் அநாவசியமாக மற்றவர்களின் கவனத்தை என் பக்கம் திருப்புகிறதா? நான் சுத்தமாக இல்லாதிருப்பது மற்றவர்களை முகம்சுளிக்க வைக்கிறதா? சபையில் சேவை செய்யத் தகுதிபெறுவதைவிட இப்படிப்பட்ட விஷயங்களில் என் உரிமைகளை நான் பெரிதாய் நினைக்கிறேனா?’—பிலிப்பியர் 4:5; 1 பேதுரு 5:6.

15. உடை, அலங்காரம், சுத்தம் போன்ற விஷயங்களில் பைபிள் ஏன் நமக்கு விலாவாரியான சட்டங்களைத் தருவதில்லை?

15 உடை, அலங்காரம், சுத்தம் போன்ற விஷயங்களில் பைபிள் நமக்கு விலாவாரியான சட்டங்களைத் தருவதில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையையோ சிந்திக்கும் திறனையோ நம்மிடமிருந்து பறித்துக்கொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புவதில்லை. மாறாக, நாம் முதிர்ச்சியடைந்து, பைபிள் நியமங்களின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்; அதோடு, ‘சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க நம்முடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவிக்க’ வேண்டுமெனவும் அவர் விரும்புகிறார். (எபிரெயர் 5:14) மிக முக்கியமாக, அவர் மீதும் மற்றவர்கள் மீதும் உள்ள அன்பே நம்மை உந்துவிக்கும் சக்தியாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். (மாற்கு 12:30, 31-ஐ வாசியுங்கள்.) யெகோவா வைத்திருக்கிற வரம்புக்குள்ளேயே நாம் விதவிதமாக உடை அணிந்துகொள்ளலாம், அலங்காரம் செய்துகொள்ளலாம். யெகோவாவின் மக்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி, அவர்கள் ஒன்றுகூடி வரும்போது வண்ண வண்ண ஆடைகளில் காட்சியளிக்கிறார்கள்.

வாழ்க்கையை எளிமையாக வைத்தல்

16. உலகச் சிந்தை இயேசுவின் போதனைக்கு எப்படி முரணாக இருக்கிறது, என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

16 இந்த உலகத்தின் சிந்தை வஞ்சகமானது; பணமும் பொருளும் இருந்தால்தான் சந்தோஷத்தைப் பெற முடியும் என்ற எண்ணத்தை லட்சோபலட்சம் மக்களின் மனதில் அது விதைத்திருக்கிறது. ஆனால், “ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:15) அதே சமயத்தில், நாம் துறவியைப் போல் வாழ வேண்டுமென்று அவர் சொல்லவில்லை. உண்மையான சந்தோஷத்தைப் பெறுவதற்கு ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்க’ வேண்டும், வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும், அதாவது ஆன்மீக விஷயங்களில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும், என அவர் கற்பித்தார். (மத்தேயு 5:3; 6:22, அடிக்குறிப்பு) எனவே, உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இயேசுவின் போதனைகளை நான் உண்மையிலேயே நம்புகிறேனா, அல்லது ‘பொய்க்குத் தகப்பன்’ என்மீது செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறேனா? (யோவான் 8:44) என் பேச்சு, லட்சியம், விருப்பம், வாழ்க்கை முறை எதை வெளிப்படுத்துகிறது?’—லூக்கா 6:45; 21:34-36; 2 யோவான் 6.

17. வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்பவர்களுக்குக் கிடைக்கும் சில நன்மைகளைக் குறிப்பிடுங்கள்.

17 “ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என இயேசு சொன்னார். (மத்தேயு 11:19) வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்பவர்களுக்குக் கிடைக்கும் சில நன்மைகளைக் கவனியுங்கள். கடவுளுக்குச் சேவை செய்வதால் அவர்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. (மத்தேயு 11:29, 30) அநாவசியமான கவலைகளைத் தவிர்ப்பதால் உள ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) அடிப்படைத் தேவைகளுடன் திருப்தியாக இருப்பதால், குடும்பத்தினரோடும் சக கிறிஸ்தவர்களோடும் அவர்களால் அதிக நேரம் செலவிட முடிகிறது; அவர்களுக்கு நிம்மதியான தூக்கமும் கிடைக்கிறது. (பிரசங்கி 5:12) மற்றவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவியை செய்வதால் அவர்களுக்குப் பெருமகிழ்ச்சி கிடைக்கிறது. (அப்போஸ்தலர் 20:35) அவர்களுடைய ‘நம்பிக்கை அதிகமதிகமாகப் பலப்படுகிறது.’ அவர்களுக்கு மன சமாதானமும் திருப்தியும் கிடைக்கிறது. (ரோமர் 15:13; மத்தேயு 6:31, 32) இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் விலைமதிக்க முடியாதவை, அல்லவா?

“முழு கவசத்தையும்” போட்டுக்கொள்ளுதல்

18. நம் எதிரியைப் பற்றி, அவன் தாக்கும் முறைகளைப் பற்றி, நாம் ‘போராட வேண்டிய’ விதத்தைப் பற்றி பைபிள் எப்படி விவரிக்கிறது?

18 இன்று கிறிஸ்தவர்கள்மீது சாத்தான் ஆன்மீக ரீதியில் தாக்குதல் நடத்துகிறான்; அவர்களுடைய சந்தோஷத்தை மட்டுமல்ல, முடிவில்லாத வாழ்வு எனும் நம்பிக்கையையும் பறிக்கப் பார்க்கிறான். ஆனால், கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள் ஆன்மீகப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள். (1 பேதுரு 5:8) “மனிதர்களோடு அல்ல, அரசாங்கங்களோடும், அதிகாரிகளோடும், இந்த இருண்ட உலகத்தின் தலைவர்களோடும், பரலோகத்தில் இருக்கிற பொல்லாத தூதர் கூட்டத்தோடும் நாம் போராட வேண்டியிருக்கிறது” என்று பவுல் சொன்னார். (எபேசியர் 6:12) “போராட வேண்டியிருக்கிறது” என்று சொல்லும்போது, எதிரியிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்துகொண்டு, அதாவது பதுங்கு குழியில் இருந்துகொண்டு, துப்பாக்கிகளையோ பீரங்கிகளையோ பயன்படுத்திச் சண்டை போட வேண்டியிருப்பதைக் குறிப்பதில்லை; மாறாக, நேருக்கு நேர் நின்று சண்டை போட வேண்டியிருப்பதைக் குறிக்கிறது. அதோடு, ‘அரசாங்கங்கள்,’ ‘அதிகாரிகள்,’ ‘உலகத்தின் தலைவர்கள்’ என்ற வார்த்தைகள், பொல்லாத தூதர்களின் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு, கனகச்சிதமாக நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

19. கிறிஸ்தவர்கள் போட்டுக்கொள்ள வேண்டிய ஆன்மீகக் கவசத்தை விவரியுங்கள்.

19 மனிதர்களாகிய நமக்குப் பலவீனங்களும் குறைபாடுகளும் இருந்தாலும்கூட நாம் வெற்றிபெற முடியும். எப்படி? ‘கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்வதன்’ மூலமே. (எபேசியர் 6:13) அந்தக் கவசத்தைக் குறித்து எபேசியர் 6:14-18 இப்படி விவரிக்கிறது: “அதனால், சத்தியத்தை உங்கள் இடுப்புவாராகக் கட்டிக்கொண்டும், நீதியை மார்புக் கவசமாகப் போட்டுக்கொண்டும், சமாதானத்தின் நல்ல செய்தியைக் காலணியாகப் போட்டுக்கொண்டும் உறுதியாக நில்லுங்கள். இவை எல்லாவற்றோடும்கூட, பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைப்பதற்காக, விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அதோடு, மீட்பைத் தலைக்கவசமாக [அதாவது, நம்பிக்கையாக] அணிந்துகொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை வாளாக எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளுடைய சக்தியின் உதவியால் எல்லா விதமான ஜெபங்களையும் மன்றாட்டுகளையும் ஏறெடுங்கள்.”

20. போர் வீரர்களின் போருக்கும் நம் போராட்டத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

20 இந்த ஆன்மீகக் கவசம் கடவுள் தந்த பரிசு; அதை நாம் எப்போதும் அணிந்திருந்தால் பாதுகாப்பாக இருப்போம். போர்வீரர்கள் போர் நடக்கும் சமயத்தில்தான் போரில் ஈடுபடுவார்கள்; கிறிஸ்தவர்களோ அனுதினமும் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்; அதுவும் சாத்தானுடைய உலகம் அழிக்கப்பட்டு, பொல்லாத தூதர்கள் அனைவரும் அதலபாதாளத்தில் தள்ளப்படும்வரை இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். (வெளிப்படுத்துதல் 12:17; 20:1-3) எனவே, நீங்கள் ஏதாவது பலவீனத்துடனோ கெட்ட ஆசைகளுடனோ போராடிக் கொண்டிருந்தால் மனம் தளர்ந்துவிடாதீர்கள். ஏனென்றால், நாம் எல்லாருமே யெகோவாவுக்கு உண்மையாய் இருக்க நம்மை ‘அடக்கியொடுக்க’ வேண்டியுள்ளது. (1 கொரிந்தியர் 9:27) சொல்லப்போனால், நாம் போராடவில்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும்!

21. நாம் என்ன செய்தால் மட்டுமே ஆன்மீகப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும்?

21 அதோடு, நம் சொந்த பலத்தினால் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியாது. அதனால்தான், “எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளுடைய சக்தியின் உதவியால்” ஜெபம் செய்யும்படி பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். அதேசமயத்தில், யெகோவாவின் வார்த்தையைப் படிப்பதன் மூலம் அவருக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்; நம்மோடு போராட்டத்தில் ஈடுபடுகிற சக ‘வீரர்களுடன்’ எல்லா சமயத்திலும் ஒன்றுகூடி வருவதன் மூலமும் அவருக்கு நாம் செவிகொடுக்க வேண்டும். (பிலேமோன் 2; எபிரெயர் 10:24, 25) இவை அனைத்தையும் உண்மையோடு செய்பவர்களால் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும்; அதுமட்டுமல்ல, தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து கேள்வி கேட்பவர்களுக்குத் தைரியமாகப் பதில் சொல்லவும் முடியும்.

உங்கள் நம்பிக்கையைக் குறித்து பதில் சொல்ல தயாராயிருங்கள்

22, 23. (அ) நம் நம்பிக்கையைக் குறித்து கேள்வி கேட்கிறவர்களுக்கு எல்லா சமயங்களிலும் பதில் சொல்ல நாம் ஏன் தயாராய் இருக்க வேண்டும், என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எந்த விஷயத்தைச் சிந்திப்போம்?

22 ‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததால் . . . உலகம் உங்களை வெறுக்கிறது’ என்று இயேசு சொன்னார். (யோவான் 15:19) எனவே, நம் நம்பிக்கையைக் குறித்து கேள்வி கேட்பவர்களிடம் நாம் மரியாதையோடும் சாந்தத்தோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். (1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள்.) உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பொதுவாக எல்லாரும் ஏற்றுக்கொள்கிற ஒரு கருத்தை ஏன் யெகோவாவின் சாட்சிகள் சில சமயங்களில் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நான் புரிந்திருக்கிறேனா? பொதுவான ஒரு கருத்தை நான் ஏற்காதபோது, பைபிளும் உண்மையுள்ள அடிமையும் சொல்வதுதான் சரி என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேனா?’ (மத்தேயு 24:45; யோவான் 17:17) யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில், மற்றவர்களிலிருந்து வித்தியாசமாய் இருக்கத் தயாராக இருக்கிறேனா, அதைப் பெருமையாகவும் நினைக்கிறேனா?—சங்கீதம் 34:2; மத்தேயு 10:32, 33.

23 என்றாலும், உலகத்திலிருந்து விலகியிருக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்திற்கு பல வழிகளில் மறைமுகமாக சோதனை வருகிறது. உதாரணமாக, முன்பு குறிப்பிட்டபடி, தரங்கெட்ட பொழுதுபோக்கின் வாயிலாக கடவுளுடைய ஊழியர்களை உலகத்தின் பக்கம் கவர்ந்திழுக்க சாத்தான் முயல்கிறான். அப்படியானால், நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கிற பொழுதுபோக்கை, நம் சுத்தமான மனசாட்சியைப் பாதிக்காத பொழுதுபோக்கை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? அடுத்த கட்டுரையில் பதிலைப் பார்ப்போம்.

a கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு பரலோக நம்பிக்கையுள்ள சீஷர்களின் சபையை இயேசு ஆளுகிறார். (கொலோசெயர் 1:13) 1914-ல் “உலகத்தின் அரசாங்கம்” இயேசுவுக்குச் சொந்தமானது. எனவே, பரலோக நம்பிக்கையுள்ள சீஷர்கள் மேசியாவால் ஆளப்படும் அரசாங்கத்தின் தூதுவர்களாகவும் இருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 11:15.

b வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 389-393-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

c பிற்சேர்க்கையில் பக்கங்கள் 243-246-ஐக் காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்