அதிகாரம் 7
உயிரைக் கடவுள் மதிக்கிறார் —நீங்கள்?
“உயிரின் ஊற்று நீங்கள்தான்.” —சங்கீதம் 36:9.
1, 2. கடவுள் கொடுத்திருக்கும் எந்தப் பரிசு இன்று நமக்குப் பயனுள்ளதாய் இருக்கிறது, ஏன் அப்படிச் சொல்கிறோம்?
நம் பரலோகத் தகப்பன் நமக்கு அருமையான பரிசுகள் தந்திருக்கிறார். ஆம், உயிரை, அவருடைய குணங்களை வெளிக்காட்டும் திறமையை, புத்திக்கூர்மையைத் தந்திருக்கிறார். (ஆதியாகமம் 1:27) புத்திக்கூர்மை என்ற இந்த அருமையான பரிசை பெற்றிருப்பதால் பைபிள் நியமங்களின் மதிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கும்போது, ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ளவர்களாய் ஆகிறோம். ஆம், யெகோவாவை நேசிக்கிறவர்களாகவும், ‘தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவித்தவர்களாகவும்’ ஆகிறோம்.—எபிரெயர் 5:14.
2 பைபிள் நியமங்களை நாம் புரிந்துகொள்வது இன்று மிகமிக முக்கியம். உலகம் அதிக சிக்கலாகியிருப்பதால், வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற சட்டங்களை இயற்றுவது கடினம். இதை நன்கு புரிந்துகொள்வதற்கு மருத்துவத் துறையை எடுத்துக்கொள்வோம்; முக்கியமாக, இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளையும், இரத்தத்தை உட்படுத்தும் சிகிச்சை முறைகளையும் எடுத்துக்கொள்வோம். யெகோவாவுக்குக் கீழ்ப்படிய விரும்பும் நம் அனைவருக்கும் இது மிகவும் முக்கியமான விஷயம். இரத்தத்தைப் பற்றிய பைபிள் நியமங்களைப் புரிந்துகொண்டால்தான் மனசாட்சியை உறுத்தாத தீர்மானங்களையும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரராயிருக்க உதவும் ஞானமான தீர்மானங்களையும் நம்மால் எடுக்க முடியும். (நீதிமொழிகள் 2:6-11) அந்த நியமங்கள் சிலவற்றை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
உயிரும் இரத்தமும் புனிதமானது
3, 4. இரத்தத்தின் புனிதத்தன்மையைப் பற்றி பைபிள் முதன்முதலில் எப்போது குறிப்பிட்டது, இது எந்த நியமங்களின் அடிப்படையில் உள்ளது?
3 ஆபேலை காயீன் கொலை செய்தபின், உயிருக்கும் இரத்தத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பையும் அவற்றின் புனிதத்தன்மையையும் யெகோவா முதன்முதலில் தெரிவித்தார். “இதோ! உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது” என்று காயீனிடம் கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 4:10) யெகோவாவின் பார்வையில், ஆபேலின் இரத்தம் அவருடைய உயிரைப் பிரதிநிதித்துவம் செய்தது. ஒரு கருத்தில், ஆபேலின் இரத்தம் பழிவாங்கும்படி கடவுளிடம் கூக்குரலிட்டது.—எபிரெயர் 12:24.
4 நோவா காலத்து பெருவெள்ளத்திற்குப் பிறகு, இறைச்சி சாப்பிட மனிதர்களைக் கடவுள் அனுமதித்தார். ஆனால், இரத்தத்தைச் சாப்பிட அனுமதிக்கவில்லை. “இறைச்சியை நீங்கள் இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது; ஏனென்றால், இரத்தம்தான் உயிர். நீங்கள் கொலை செய்யப்பட்டால், உங்கள் உயிருக்காக நான் பழிவாங்குவேன்” என்று கடவுள் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 9:4, 5) நோவாவின் வம்சத்தில் வந்த நம் அனைவருக்கும் இந்தக் கட்டளை பொருந்தும். ஆதியில் காயீனிடம் கடவுள் சொன்ன வார்த்தைகளில் மறைந்திருக்கும் நியமத்தை இந்தக் கட்டளை வலியுறுத்துகிறது; அதாவது இரத்தம் உயிரினங்களின் உயிரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை இது வலியுறுத்துகிறது. உயிரையும் இரத்தத்தையும் அவமதிக்கிற அனைவரிடமும் உயிரின் ஊற்றுமூலரான யெகோவா கணக்குக் கேட்பார் என்ற நியமத்தையும் இந்தக் கட்டளை ஊர்ஜிதப்படுத்துகிறது.—சங்கீதம் 36:9.
5, 6. இரத்தம் புனிதமானது, அருமையானது என்பதை மோசேயின் சட்டம் எப்படி எடுத்துக்காட்டியது? (பக்கம் 90-ல் உள்ள பெட்டியையும் காண்க.)
5 இரத்தம் உயிரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, புனிதமானது என்பதை மோசேயின் திருச்சட்டமும் எடுத்துக்காட்டியது. “உங்களில் யாராவது . . . இரத்தத்தைச் சாப்பிட்டால் நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன். ஏனென்றால், உயிரினங்களின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. பாவப் பரிகாரம் செய்வதற்காக மட்டும் நீங்கள் பலிபீடத்தில் இரத்தத்தைச் செலுத்தலாம் என்ற கட்டளையை நான் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால், இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்கிறது, அதில்தான் உயிர் இருக்கிறது” என்று லேவியராகமம் 17:10, 11 சொல்கிறது.a—“பாவப் பரிகாரம் செய்யும் இரத்தம்” என்ற பெட்டியைப் பக்கம் 88-ல் காண்க.
6 இஸ்ரவேலர் பலி செலுத்துவதற்காக ஒரு மிருகத்தைக் கொன்றால், அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளிக்க வேண்டியிருந்தது; உணவுக்காக கொன்றால், அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டியிருந்தது. இப்படிச் செய்தபோது, அடையாள அர்த்தத்தில், உயிர் அதன் ஊற்றுமூலரிடமே திரும்பக் கொடுக்கப்பட்டது. (உபாகமம் 12:16; எசேக்கியேல் 18:4) இஸ்ரவேலர் அந்த மிருகத்தின் ஒவ்வொரு திசுவிலிருந்தும் இரத்தத்தை நீக்க வேண்டுமென யெகோவா சட்டம் போடவில்லை என்பதைக் கவனியுங்கள். ஆனால், ஓர் இஸ்ரவேலர் ஒரு மிருகத்தை சரியான முறையில் வெட்டிக் கொன்று அதிலிருந்து இரத்தத்தை நீக்கியபோது, உயிரின் ஊற்றுமூலருக்கு மதிப்பு காட்டினார்; அதனால் சுத்தமான மனசாட்சியோடு அதைச் சாப்பிட்டார்.
7. இரத்தத்தின் புனிதத்தன்மைக்கு தாவீது எப்படி மதிப்பு காட்டினார்?
7 கடவுளுடைய ‘இதயத்துக்குப் பிடித்தமானவனாக இருந்த’ தாவீது, இரத்தத்தைப் பற்றி கடவுளுடைய சட்டத்தில் பொதிந்துள்ள நியமங்களைப் புரிந்து வைத்திருந்தார். (அப்போஸ்தலர் 13:22) ஒரு சமயத்தில் தாவீது மிகவும் தாகமாயிருந்தபோது, அவருடைய வீரர்கள் மூவர் விரோதியின் முகாமுக்குள் துணிந்து சென்று, அங்கிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அவருக்குக் கொடுத்தார்கள். அப்போது தாவீது என்ன செய்தார்? “எனக்காக உயிரையே பணயம் வைத்துப் போன என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா?” என்று கேட்டார். தாவீதைப் பொறுத்தவரை, அந்தத் தண்ணீரைக் குடிப்பது தன்னுடைய வீரர்களின் இரத்தத்தைக் குடிப்பதற்குச் சமமாக இருந்தது. ஆகவே, தாகமாயிருந்தபோதிலும் அதை “யெகோவாவுக்காகக் கீழே ஊற்றிவிட்டார்.”—2 சாமுவேல் 23:15-17.
8, 9. கிறிஸ்தவ சபை உருவானபோது உயிரையும் இரத்தத்தையும் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டம் மாறிவிட்டதா? விளக்கவும்.
8 ஏற்கெனவே பார்த்தபடி, இரத்தத்தைச் சாப்பிட வேண்டாம் என்று நோவாவிடம் யெகோவா கட்டளையிட்டார்; இதே கட்டளை 900 ஆண்டுகளுக்குப் பிறகு மோசேயின் திருச்சட்டத்தில் மறுபடியும் சொல்லப்பட்டது. அந்தத் திருச்சட்டம் கொடுக்கப்பட்டு 1,500 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் இரத்தத்தைப் பற்றிய யெகோவாவின் கருத்து மாறவில்லை. ஏனென்றால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் ஆளும் குழுவை இவ்வாறு எழுதும்படி கடவுள் தூண்டினார்: “முக்கியமான இந்த விஷயங்களைத் தவிர வேறு எதையும் உங்கள்மேல் சுமத்தக் கூடாதென்று கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்: உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும் இரத்தத்துக்கும் நெரித்துக் கொல்லப்பட்டதற்கும் பாலியல் முறைகேட்டுக்கும் தொடர்ந்து விலகியிருங்கள்.”—அப்போஸ்தலர் 15:28, 29.
9 ஆம், இரத்தம் புனிதமானது என்பதையும், அதைத் துஷ்பிரயோகம் செய்தால், சிலை வழிபாடு, பாலியல் முறைகேடு போன்ற மோசமான பாவங்களில் ஈடுபட்டதற்குச் சமமாக இருக்கும் என்பதையும் ஆரம்பகால ஆளும் குழுவினர் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுடைய கருத்தை இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, பைபிள் நியமங்களின் அடிப்படையில் இவர்கள் சிந்தித்துச் செயல்படுவதால் இரத்தம் தொடர்பான விஷயத்தில் யெகோவாவுக்குப் பிரியமாகத் தீர்மானம் எடுக்கிறார்கள்.
மருத்துவத்தில் இரத்தம்
இரத்தத்தின் சிறு கூறுகளைப் பற்றிய என் தீர்மானத்தை மருத்துவரிடம் எப்படி விளக்குவேன்?
10, 11. (அ) இரத்தத்தையும் அதன் முக்கிய பாகங்களையும் ஏற்றுக்கொள்வதைக் குறித்து யெகோவாவின் சாட்சிகளுடைய கருத்து என்ன? (ஆ) இரத்தத்தோடு சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களில் கிறிஸ்தவர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்?
10 ‘இரத்தத்துக்கு விலகியிருப்பது’ என்றால் என்ன என்பதை யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள், எனவேதான், பிறருடைய இரத்தத்தை அவர்கள் ஏற்றிக்கொள்வதும் இல்லை, தங்கள் சொந்த இரத்தத்தைச் சேமித்து வைத்து பின்பு உபயோகிப்பதும் இல்லை, அதை மற்றவர்களுக்குத் தானம் செய்வதும் இல்லை. கடவுளுடைய சட்டத்துக்கு அவர்கள் மதிப்பு கொடுப்பதால், இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை; அதாவது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.
11 இந்த முக்கிய பாகங்கள் இன்று அதிநவீன முறைகளின் மூலம் சிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சிறு கூறுகளை ஒரு கிறிஸ்தவர் ஏற்றுக்கொள்ளலாமா? இந்தச் சிறு கூறுகளை அவர் ‘இரத்தமாக’ கருதுகிறாரா? இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட தீர்மானம் எடுக்க வேண்டும். அதேபோல், இரத்தத்தைச் சுத்தப்படுத்துதல் (hemodialysis), இரத்தச் செறிவைக் குறைத்தல் (hemodilution), இரத்தச் சுத்திகரிப்பு (cell salvage) போன்ற சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதைப் பொருத்ததிலும் ஒருவர் தனிப்பட்ட தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த மூன்று சிகிச்சை முறைகளிலும் ஒருவருடைய சொந்த இரத்தம்தான் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அதைச் சேமித்து வைத்துப் பயன்படுத்தக்கூடாது.—பக்கங்கள் 246-249-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.
12. மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை நாம் எப்படிக் கருத வேண்டும், கையாள வேண்டும்?
12 தனிப்பட்ட தீர்மானத்திற்குரிய விஷயங்களை யெகோவா அற்பமாகக் கருதுகிறாரா? இல்லை; ஏனென்றால், நம்முடைய சிந்தனைகளையும் உள்ளெண்ணங்களையும் அவர் ஊடுருவிப் பார்க்கிறார். (நீதிமொழிகள் 17:3; 24:12-ஐ வாசியுங்கள்.) எனவே, ஒரு மருந்தை அல்லது சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதற்குமுன் அதைப் பற்றி தீர ஆராய வேண்டும், வழிநடத்துதல் கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். பின்பு, பைபிள் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி தீர்மானம் செய்ய வேண்டும். (ரோமர் 14:2, 22, 23) மற்றவர்கள் தங்களுடைய தீர்மானத்தை நம்மீது திணிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. அதோடு, “என்னுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று நாமும் மற்றவர்களிடம் கேட்கக்கூடாது. இப்படிப்பட்ட விஷயங்களில் ஒவ்வொருவரும் ‘அவரவர் பாரத்தைச் சுமக்க’ வேண்டும்.b—கலாத்தியர் 6:5; ரோமர் 14:12; “இரத்தத்தைப் புனிதமாய்க் கருதுகிறேனா?” என்ற பெட்டியைப் பக்கம் 93-ல் காண்க.
யெகோவாவின் சட்டங்கள் தகப்பனைப் போன்ற அன்பை வெளிப்படுத்துகின்றன
13. யெகோவாவின் சட்டங்களும் நியமங்களும் அவரை எப்படிப்பட்டவராகச் சித்தரிக்கின்றன? விளக்கவும்.
13 பைபிளில் உள்ள சட்டங்களும் நியமங்களும் யெகோவாவை ஞானமுள்ள சட்ட இயற்றுநராகவும், தனது பிள்ளைகளின் நலனில் ஆழ்ந்த அக்கறையுடைய ஓர் அன்புள்ள தகப்பனாகவும் சித்தரிக்கின்றன. (சங்கீதம் 19:7-11) ‘இரத்தத்துக்கு விலகியிருக்க’ வேண்டும் என்ற சட்டம் நம் ஆரோக்கியத்திற்காக கொடுக்கப்படவில்லை என்றாலும், இரத்தமேற்றுதலால் வரும் வியாதிகளிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கிறது. (அப்போஸ்தலர் 15:20) சொல்லப்போனால், இரத்தமில்லா சிகிச்சையை நவீன மருத்துவத்தின் “உயர்தர சிகிச்சை” என்று மருத்துவத் துறையிலுள்ள அநேகர் அழைக்கிறார்கள். மருத்துவத் துறையின் இந்த முன்னேற்றங்கள் எல்லாம் யெகோவாவின் அபார ஞானத்தையும் தகப்பனைப் போல் அவர் நம்மீது வைத்திருக்கும் அலாதிப் பிரியத்தையும் நமக்கு நினைப்பூட்டுகின்றன.—ஏசாயா 55:9-ஐ வாசியுங்கள்; யோவான் 14:21, 23.
14, 15. (அ) இஸ்ரவேலர்மீது யெகோவா மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பதற்கு எந்தச் சட்டங்கள் அத்தாட்சி அளிக்கின்றன? (ஆ) பாதுகாப்புக்காக கடவுள் தந்த சட்டங்களில் பொதிந்துள்ள நியமங்களை இன்று நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?
14 பூர்வ இஸ்ரவேலருடைய நலனில் யெகோவா மிகுந்த அக்கறை காட்டினார் என்பதற்கு அவருடைய அநேக சட்டங்கள் அத்தாட்சி அளிக்கின்றன. உதாரணமாக, விபத்து ஏற்படாதிருக்க இஸ்ரவேலர் தங்கள் வீட்டு மாடியைச் சுற்றி கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டுமென்று யெகோவா கட்டளையிட்டார். ஏனென்றால், இஸ்ரவேலர் மேல் மாடியை அதிகமாகப் புழங்கினார்கள். (உபாகமம் 22:8; 1 சாமுவேல் 9:25, 26; நெகேமியா 8:16; அப்போஸ்தலர் 10:9) ஒருவரிடம் அடங்காத காளை இருந்தால் அதைக் கட்டிப்போட வேண்டுமென்றும் கடவுள் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 21:28, 29) இந்தக் கட்டளைகளை ஓர் இஸ்ரவேலன் அசட்டை செய்தபோது பிறர் நலனில் தனக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டினார்; சில சமயங்களில், இரத்தப்பழிக்கும் ஆளானார்.
15 இந்தச் சட்டங்களில் பொதிந்துள்ள நியமங்களை இன்று நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்? உங்கள் வாகனத்தையும், நீங்கள் வாகனம் ஓட்டும் முறையையும், நீங்கள் வளர்க்கும் விலங்குகளையும், உங்கள் வீட்டையும், நீங்கள் வேலை செய்யும் இடத்தையும், தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கையும் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சில நாடுகளில், பெரும்பாலான இளைஞர்கள் விபத்துகளால்தான் சாகிறார்கள். ஏனென்றால், ஆபத்தான காரியங்களில் அவர்கள் துணிந்து இறங்குகிறார்கள். ஆனால், கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க விரும்பும் இளைஞர்கள் உயிரை உயர்வாய் மதிக்கிறார்கள், அவர்கள் ‘த்ரில்’லுக்காக ஆபத்தை விலைக்கு வாங்குவதில்லை. இளமை துடிப்போடு இருப்பதால், ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என அவர்கள் முட்டாள்தனமாக நினைப்பதில்லை. அவர்கள் தீங்கு விளைவிக்கும் எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் இளமைக் காலத்தை சந்தோஷமாகக் கழிக்கிறார்கள்.—பிரசங்கி 11:9, 10.
16. கருக்கலைப்பு தவறென பைபிளிலுள்ள எந்த நியமம் சுட்டிக்காட்டுகிறது? (அடிக்குறிப்பையும் காண்க.)
16 தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவும் கடவுளுடைய பார்வையில் மதிப்புள்ளது. பூர்வ இஸ்ரவேலில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு யாராவது கேடு விளைவித்து அவளோ அவள் குழந்தையோ இறந்துவிட்டால், கேடு விளைவித்த அந்த நபரைக் கொலைகாரனாகக் கடவுள் கருதினார். அவன் “உயிருக்கு உயிர்” கொடுக்க வேண்டியிருந்தது.c (யாத்திராகமம் 21:22, 23-ஐ வாசியுங்கள்.) இன்றைக்கு ஒழுக்கங்கெட்ட நடத்தையினாலும் சுயநலத்தினாலும் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிலடங்கா கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. அதைப் பார்க்கும்போது யெகோவாவின் மனம் எந்தளவு வேதனைப்படும் என எண்ணிப் பாருங்கள்.
17. கடவுளுடைய நெறிமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு ஒரு பெண் கருக்கலைப்பு செய்திருந்தால் அவருக்கு நீங்கள் எப்படி ஆறுதல் சொல்வீர்கள்?
17 பைபிள் சத்தியங்களைப் படிப்பதற்கு முன்பு ஒரு பெண் கருக்கலைப்பு செய்திருக்கிறாள் என வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைக் கடவுள் மன்னிக்கவே மாட்டாரா? இல்லை! ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தினால், இயேசு சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் யெகோவாவிடமிருந்து அவர் மன்னிப்பு பெற முடியும். (சங்கீதம் 103:8-14; எபேசியர் 1:7) ஆம், “நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் மனம் திருந்தும்படி அழைக்க வந்திருக்கிறேன்” என்று கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார்.—லூக்கா 5:32.
வன்மம் வைக்காதீர்கள்!
18. எண்ணற்றோர் கொல்லப்படுவதற்கு எது முக்கிய காரணமென பைபிள் சுட்டிக்காட்டுகிறது?
18 நாம் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருந்தால் மட்டுமே போதாது; கெடுதல் செய்வதற்குக் காரணமாயிருக்கும் வன்மத்தை நம் இதயத்திலிருந்து வேரோடு பிடுங்கியெறியவும் வேண்டும் என யெகோவா விரும்புகிறார். ஏனென்றால், இந்த வன்மம்தான் எண்ணற்றவர்களின் உயிரைக் குடித்திருக்கிறது. “தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 3:15) அப்படிப்பட்ட மனிதன் தன் சகோதரனை வெறுமனே பகைப்பதில்லை, அவன் சாக வேண்டுமென விரும்புகிறான். தன் சகோதரனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதன் மூலமோ அவன்மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டுவதன் மூலமோ தன் பகையை வெளிப்படுத்துகிறான். ஒருவேளை அந்தப் பொய்க் குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தெய்வ தண்டனை பெறலாம். (லேவியராகமம் 19:16; உபாகமம் 19:18-21; மத்தேயு 5:22) ஆகவே, இதயத்திலிருந்து வன்மத்தை முளையிலேயே கிள்ளியெறிய முயற்சி செய்வது எவ்வளவு முக்கியம்!—யாக்கோபு 1:14, 15; 4:1-3.
19. பைபிள் நியமங்களால் வழிநடத்தப்படுகிற ஒருவர் சங்கீதம் 11:5 மற்றும் பிலிப்பியர் 4:8, 9-ஐ எப்படிக் கருத வேண்டும்?
19 கடவுளைப் போல் உயிரை மதிப்பவர்களும் அவருடைய அன்புக்குப் பாத்திரமாய் இருக்க விரும்புகிறவர்களும் எல்லா வகை வன்முறையையும் அடியோடு தவிர்க்கிறார்கள். “வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் [யெகோவா] வெறுக்கிறார்” என சங்கீதம் 11:5 சொல்கிறது. இது கடவுளுடைய சுபாவத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு வாசகம் மட்டுமல்ல; நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு நியமமாகவும் இருக்கிறது. வன்முறைக்கு வித்திடும் எல்லா வகை பொழுதுபோக்கையும் தவிர்க்கும்படி கடவுளை நேசிப்போரை இந்த நியமம் தூண்டுகிறது. அதுபோலவே, யெகோவா “சமாதானத்தின் கடவுள்” என்ற வாசகம் சமாதானத்திற்கு வழிவகுக்கும் விஷயங்களால் தங்கள் மனதையும் இதயத்தையும் நிரப்பும்படி அவருடைய ஊழியர்களைத் தூண்டுகிறது; ஆம், விரும்பத்தக்க, ஒழுக்கமான, பாராட்டுக்குரிய விஷயங்களால் மனதை நிரப்பும்படி தூண்டுகிறது.—பிலிப்பியர் 4:8, 9-ஐ வாசியுங்கள்.
இரத்தப்பழி சுமக்கும் அமைப்புகளிலிருந்து விலகியிருங்கள்
20-22. இந்த உலகத்தைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்களின் நிலைநிற்கை என்ன, ஏன்?
20 கடவுளுடைய பார்வையில், சாத்தானுடைய முழு உலகமும் இரத்தப்பழி சுமந்திருக்கிறது. பைபிளில் மூர்க்க மிருகங்களாகச் சித்தரிக்கப்படும் அரசியல் அமைப்புகள் லட்சோபலட்சம் மக்களைக் கொன்று குவித்திருக்கின்றன. ஏன், யெகோவாவின் ஊழியர்கள் பலரையும் கொன்று குவித்திருக்கின்றன. (தானியேல் 8:3, 4, 20-22; வெளிப்படுத்துதல் 13:1, 2, 7, 8) வர்த்தகத் துறையும் விஞ்ஞானத் துறையும் இந்த மூர்க்க மிருகத்துடன் கைகோர்த்துக்கொண்டு படுபயங்கரமான ஆயுதங்களைத் தயாரித்திருக்கின்றன, இதன் மூலம் கோடிகோடியாக லாபம் ஈட்டியிருக்கின்றன. “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்பது எவ்வளவு உண்மை!—1 யோவான் 5:19.
21 இயேசுவின் சீஷர்கள் “இந்த உலகத்தின் பாகமாக இல்லை.”d அரசியலிலும் போரிலும் அவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள்; அதனால்தான், தனிப்பட்டவர்களாகவும் சரி ஒரு சமுதாயமாகவும் சரி, எந்தவித இரத்தப்பழிக்கும் ஆளாகாமல் இருக்கிறார்கள். (யோவான் 15:19; 17:16) அவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் துன்புறுத்தப்பட்டாலும் வன்முறையைக் கையில் எடுப்பதில்லை. மாறாக, விரோதிகளிடமும் அன்பு காட்டுகிறார்கள், அவர்களுக்காக ஜெபமும் செய்கிறார்கள்.—மத்தேயு 5:44; ரோமர் 12:17-21.
22 முக்கியமாக, பொய் மதப் பேரரசான ‘மகா பாபிலோனுடன்’ உண்மைக் கிறிஸ்தவர்கள் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை. வேறெந்த அமைப்புகளையும்விட இந்த மகா பாபிலோனே இரத்தப்பழி நிறைந்தவள்! “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய இரத்தமும் அவளிடம் காணப்பட்டது” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. ஆகவே, “என் மக்களே, . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று அது நம்மை எச்சரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:6; 18:2, 4, 24.
23. மகா பாபிலோனைவிட்டு விலகுவது என்றால் என்ன?
23 மகா பாபிலோனைவிட்டு விலகுவது என்பது பொய் மதத்தோடுள்ள தொடர்பை துண்டித்துக்கொள்வதை மட்டுமே குறிப்பதில்லை. பொய் மதங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிற அல்லது வெளிப்படையாக ஆதரிக்கிற எல்லா தீய பழக்கங்களையும் விட்டுவிலகுவதைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, பாலியல் முறைகேடு, அரசியல் ஈடுபாடு, பொருளாசை போன்றவற்றை அடியோடு தவிர்ப்பதைக் குறிக்கிறது. (சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்; வெளிப்படுத்துதல் 18:7, 9, 11-17) இவை எண்ணற்றோரின் உயிரைக் காவு வாங்கியிருக்கின்றன!
24, 25. (அ) இரத்தப்பழிக்கு ஆளான ஒருவர் மனம் திருந்தும்போது, எதன் அடிப்படையில் கடவுள் அவருக்குக் கருணை காட்டுகிறார்? (ஆ) பூர்வ இஸ்ரவேலில் இருந்த எந்த ஏற்பாட்டை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது?
24 உண்மைக் கடவுளை வணங்க ஆரம்பிப்பதற்கு முன்பு, ஏதோவொரு விதத்தில், நாம் ஒவ்வொருவரும் சாத்தானுடைய அமைப்புக்கு ஆதரவு அளித்திருக்கலாம், அதன் மூலம் ஓரளவு இரத்தப்பழிக்கு ஆளாகியிருக்கலாம். என்றாலும், நம் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்து, கிறிஸ்துவின் மீட்புப் பலியில் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு, நம்மையே கடவுளுக்கு அர்ப்பணித்திருப்பதால் இப்போது அவருடைய கருணையையும் ஆன்மீகப் பாதுகாப்பையும் பெற்றிருக்கிறோம். (அப்போஸ்தலர் 3:19) இந்தப் பாதுகாப்பு, பூர்வ இஸ்ரவேலில் இருந்த அடைக்கல நகரங்களின் ஏற்பாட்டை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.—எண்ணாகமம் 35:11-15; உபாகமம் 21:1-9.
25 இந்த அடைக்கல நகரங்களின் ஏற்பாடு எப்படிப் பயனளித்தது? ஓர் இஸ்ரவேலன் தெரியாத்தனமாக யாரையாவது கொலை செய்துவிட்டால், ஓர் அடைக்கல நகரத்திற்கு ஓடிப்போக வேண்டும். நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய பிறகு, அந்த நபர் அடைக்கல நகரத்திலேயே தங்கியிருக்க வேண்டும். தலைமைக் குரு இறந்த பிறகு, அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியிருக்கலாம். கடவுளின் கருணைக்கும் மனித உயிர்மீது அவர் வைத்திருக்கும் பெருமதிப்புக்கும் இது தலைசிறந்த எடுத்துக்காட்டு! இன்று, கிறிஸ்துவின் மீட்புப் பலியின் அடிப்படையில் கடவுள் செய்திருக்கும் ஏற்பாடு பூர்வ அடைக்கல நகரங்களின் ஏற்பாட்டைப் போல இருக்கிறது; உயிரையும் இரத்தத்தையும் புனிதமாகக் கருத வேண்டும் என்ற கடவுளுடைய கட்டளையை நாம் தெரியாத்தனமாக மீறிவிட்டால், இந்த ஏற்பாடு மரண தண்டனையிலிருந்து நம்மைத் தப்புவிக்கிறது. இந்த ஏற்பாட்டை நீங்கள் உயர்வாய் மதிக்கிறீர்களா? அப்படியென்றால், அதை நீங்கள் எப்படிக் காட்டலாம்? அதற்கு ஒரு வழி, பாதுகாப்புக்காகக் கடவுள் செய்திருக்கும் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள மற்றவர்களையும் அழைப்பதே. முக்கியமாக, “மிகுந்த உபத்திரவம்” நெருங்கி வருவதால் இவ்வாறு அழைப்பது ரொம்பவே அவசியம்.—மத்தேயு 24:21; 2 கொரிந்தியர் 6:1, 2.
உயிருக்கு மதிப்பு காட்டுங்கள் —நல்ல செய்தியை அறிவிப்பதன் மூலம்
26-28. இன்று நம் நிலைமை எசேக்கியேல் தீர்க்கதரிசியின் நிலைமைக்கு எப்படி ஒத்திருக்கிறது, கடவுளுடைய அன்புக்கு நாம் எப்படிப் பாத்திரராய் இருக்கலாம்?
26 கடவுளுடைய மக்களின் இன்றைய நிலைமை எசேக்கியேல் தீர்க்கதரிசியின் நிலைமையை நினைவுபடுத்துகிறது; ஆன்மீக ரீதியில் காவல்காரனாக, யெகோவா விடுத்த எச்சரிக்கைகளை இஸ்ரவேல் வீட்டாருக்கு அவர் அறிவித்து வந்தார்; இதற்காகவே கடவுள் அவரை நியமித்திருந்தார். “என்னிடமிருந்து எச்சரிப்பு செய்தியைக் கேட்டதும் நீ அதை அவர்களிடம் சொல்ல வேண்டும்” என்று கடவுள் சொன்னார். எசேக்கியேல் தன் பொறுப்பைச் சரிவர செய்யாமல் இருந்திருந்தால், எருசலேமின் அழிவில் இறந்தவர்களுடைய இரத்தப்பழி அவர்மேல் விழுந்திருக்கும். (எசேக்கியேல் 33:7-9) ஆனால், எசேக்கியேல் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால் யாருடைய இரத்தப்பழிக்கும் அவர் ஆளாகவில்லை.
27 சாத்தானின் முழு உலகத்திற்கும் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. எனவே, யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை மட்டுமல்ல, அவர் “பழிவாங்கப்போகிற நாளை” குறித்தும் அறிவிக்கிறார்கள்; இப்படி அறிவிப்பதைக் கடமையாக மட்டுமல்ல, கௌரவமாகவும் நினைக்கிறார்கள். (ஏசாயா 61:2; மத்தேயு 24:14) இந்த முக்கியமான வேலையில் நீங்கள் முழுமூச்சோடு ஈடுபடுகிறீர்களா? பிரசங்க வேலையில் அப்போஸ்தலன் பவுல் ஆர்வமாய் ஈடுபட்டார். அதனால்தான், “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல. . . . கடவுளுடைய நோக்கங்களில் ஒன்றைக்கூட மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (அப்போஸ்தலர் 20:26, 27) நாம் பின்பற்றுவதற்குச் சிறந்த முன்மாதிரி, அல்லவா?
28 ஒரு தகப்பனைப் போல் யெகோவா காட்டுகிற அன்புக்கு நாம் பாத்திரராய் இருப்பதற்கு, உயிரையும் இரத்தத்தையும் அவர் மதிப்பது போல் நாம் மதித்தால் மட்டும் போதாது. அவருடைய பார்வையில் சுத்தமானவர்களாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் அடுத்த அதிகாரத்தில் பார்க்கப் போகிறோம்.
a “உயிரினங்களின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்று கடவுள் சொன்ன கூற்றைப் பற்றி சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “இந்தக் கூற்று உருவக நடையில் சொல்லப்பட்டிருந்தாலும், நேரடியான கருத்திலும் இது உண்மைதான்; அதாவது, உயிர்வாழ ஒவ்வொரு வகை இரத்த அணுவும் நமக்குத் தேவை.”
b ஆகஸ்ட் 2006 விழித்தெழு! இதழில் பக்கங்கள் 3-12-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது
c தாய் இறந்தால் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அர்த்தத்தில் சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தை மொழிபெயர்த்திருக்கின்றன. என்றாலும், எபிரெய வசனத்திலுள்ள சொல்நடையைப் பார்த்தால், “தாய்க்கு மட்டுமே ஏற்படும் சேதத்தை அது குறித்திருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று பைபிள் அகராதி ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். குற்றவாளிக்குத் தண்டனை கொடுப்பதற்கு, கரு அல்லது சிசுவின் வயதை கடவுள் கருத்தில் கொண்டதாக பைபிள் குறிப்பிடுவதில்லை என்பதையும் கவனியுங்கள்.
d “உலகத்திலிருந்து விலகியிருப்பது எப்படி?” என்ற தலைப்பில் அதிகாரம் 5-ஐக் காண்க.
e கூடுதலான தகவலுக்கு, பக்கங்கள் 246-247-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.