பாகம் 11
இன்று உண்மையான இறைநம்பிக்கை
இன்றைக்கு அநேகர் தங்களுக்கு இறைநம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டும்தான் உண்மையான இறைநம்பிக்கை இருக்கும் என இயேசு கூறினார். “அழிவுக்கு வழிநடத்துகிற வாசல் அகலமாகவும், பாதை விசாலமாகவும் இருக்கிறது; அதில் போகிறவர்கள் பலர். ஆனால், [முடிவில்லா] வாழ்வுக்கு வழிநடத்தும் வாசல் இடுக்கமாகவும், பாதை குறுகலாகவும் இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்று சொன்னார்.—மத்தேயு 7:13, 14.
தங்களுக்கு உண்மையான இறைநம்பிக்கை இருக்கிறது என்பதை இன்றைக்கு மக்கள் எப்படிக் காட்டுகிறார்கள்? “அவர்களுடைய கனிகளினால் அவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு சொன்னார். “நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும், கெட்ட மரமெல்லாம் கெட்ட கனியைக் கொடுக்கும்.” (மத்தேயு 7:16, 17) ஆம், உண்மையான இறைநம்பிக்கை ‘நல்ல கனிகளை’ பிறப்பிக்கிறது. இறைப்பண்புகளை வெளிக்காட்ட மக்களைத் தூண்டுகிறது. இந்தப் பண்புகளை மக்கள் எப்படி வெளிக்காட்டுகிறார்கள்?
வல்லமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள்
உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் தங்களுடைய வல்லமையை, அதாவது அதிகாரத்தை, இறைவனுக்குப் புகழ் சேர்க்க... மற்றவர்களுக்கு உதவி செய்ய... பயன்படுத்துகிறார்கள். “உங்களில் எவன் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறானோ அவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்” என்று இயேசு கற்பித்தார். (மாற்கு 10:43) அதுபோலவே, இறைநம்பிக்கையாளர்கள் கொடுங்கோலர்களாக இருப்பதில்லை—குடும்ப வாழ்விலும் சரி சமூக வாழ்விலும் சரி. தங்கள் மனைவியை நெஞ்சார நேசிக்கிறார்கள், அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள், அவர்களை அன்புடன் கவனித்துக்கொள்கிறார்கள். “கணவர்களே, உங்கள் மனைவிமீது எப்போதும் அன்பு காட்டுங்கள், அவள்மீது மனக்கசப்பைக் காட்டாதீர்கள்” என்று வேதவசனம் சொல்கிறது. (கொலோசெயர் 3:19) ‘கணவர்களே, . . . உங்கள் மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழுங்கள்; பெண்ணானவள் உங்களைவிடப் பலவீனமாக இருப்பதாலும், இறைவனுடைய அளவற்ற தயவினால் முடிவில்லா வாழ்வை உங்களோடுகூடப் பெறப்போவதாலும், அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்; இல்லாவிட்டால், உங்கள் வேண்டுதல்கள் கேட்கப்படாது.’—1 பேதுரு 3:7.
உண்மையான இறைநம்பிக்கையுடைய மனைவியும் “தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.” (எபேசியர் 5:33) மனைவிமார் “தங்களுடைய கணவர்மீதும் பிள்ளைகள்மீதும் அன்புள்ளவர்களாக” இருக்க வேண்டும். (தீத்து 2:4) உண்மையான இறைநம்பிக்கையுள்ள தகப்பன்மாரும் தாய்மாரும் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறார்கள்; இறைவனின் சட்டங்களையும் நியமங்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். வீட்டில், வேலையிடத்தில், எந்த இடத்தில் இருந்தாலும் மற்றவர்களைக் கண்ணியத்துடனும் மதிப்புடனும் நடத்துகிறார்கள். “ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று வேதம் சொல்லும் அறிவுரையைக் கடைப்பிடிக்கிறார்கள்.—ரோமர் 12:10.
‘லஞ்சம் வாங்காதிருப்பாயாக’ என்ற மறைநூல் கட்டளைக்கு இறைமக்கள் கீழ்ப்படிகிறார்கள். (யாத்திராகமம் 23:8, NW) சொந்த ஆதாயத்திற்காக அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வதில்லை. மாறாக, பிறருக்கு, முக்கியமாக ஏழைகளுக்கு, உதவிக்கரம் நீட்ட வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். ‘நன்மை செய்யவும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடாதீர்கள்; இப்படிப்பட்ட பலிகளில் இறைவன் பிரியமாயிருக்கிறார்’ என்ற அறிவுரையை தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கிறார்கள். (எபிரெயர் 13:16) அதனால், “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருக்கும் உண்மையை வாழ்வில் ருசிக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 20:35.
இறை நீதியைப் பின்பற்றுகிறார்கள்
இறைநம்பிக்கையாளர்கள் இறைவனுடைய சட்டதிட்டங்களுக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிகிறார்கள்; அவர்களுக்கு “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.” (1 யோவான் 5:3) ‘இறைவனின் திருச்சட்டம் நிறைவானது; . . . இறைவனின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. இறைவனின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன’ என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—சங்கீதம் 19:7, 8, பொ.மொ.
உண்மையான இறைநம்பிக்கை தப்பெண்ணங்களைக் களைந்தெறியவும் அவர்களை உந்துவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, நாட்டையோ, சமூகத்தையோ சேர்ந்தவர்களை மற்றவர்களைவிட உயர்வாகவோ தாழ்வாகவோ அவர்கள் கருதுவதில்லை; மாறாக, இறைவனைப் பின்பற்றுகிறார்கள். ‘இறைவன் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.’—அப்போஸ்தலர் 10:34, 35.
உண்மையான இறைநம்பிக்கை “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க” மக்களை உந்துவிக்கிறது. (எபிரெயர் 13:18) இறைநம்பிக்கை உள்ள ஒருவர் வம்பளக்க மாட்டார், பிறரைப் பழித்தும் பேச மாட்டார். இறைவனுக்குப் பிரியமான ஒரு நபர் “தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும் . . . இருக்கிறான்” என்று தாவூத் எழுதினார்.—சங்கீதம் 15:3.
இறை ஞானத்தை வெளிக்காட்டுகிறார்கள்
உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் போதிக்கிறார்கள். ‘வேதவசனங்கள் எல்லாம் இறைவனுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன. அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், இறைவனுடைய நீதிநெறியின்படி கண்டித்துத் திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன’ என்பதை அவர்கள் நம்புகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) மற்றவர்களோடு பழகும்போது ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வெளிக்காட்டுகிறார்கள்; அந்த ஞானம், ‘சுத்தமானதாகவும், சமாதானம் பண்ணுவதாகவும், நியாயமானதாகவும், கீழ்ப்படியத் தயாரானதாகவும், இரக்கமும் நற்செயல்களும் நிறைந்ததாகவும் . . . இருக்கிறது.’ (யாக்கோபு 3:17) இறைபக்திக்கு விரோதமான பாரம்பரியங்களையும் ஆவியுலகத்துடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களையும் அவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அதோடு, ‘உருவச் சிலைகளுக்கு விலகி தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்.’—1 யோவான் 5:21.
மெய்யான அன்பைக் காட்டுகிறார்கள்
‘நீ உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் [அதாவது, முழு மூச்சோடும்], உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக’ என்று மூஸா தீர்க்கதரிசி சொன்னார். (உபாகமம் 6:5) இறைநம்பிக்கையாளர்கள் அப்படிப்பட்ட அன்பைத்தான் இறைவனிடம் காட்டுகிறார்கள். இறைவனின் பெயரை, யெகோவா என்ற பெயரை, அவர்கள் மதிக்கிறார்கள். ‘யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறார்கள்;’ அதோடு, இறைவன்மீது நம்பிக்கை கொண்டு ‘அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறார்கள்.’ (சங்கீதம் 105:1, NW) “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்ற கட்டளைக்கும் அவர்கள் கீழ்ப்படிகிறார்கள். (லேவியராகமம் 19:18) அவர்கள் வன்முறையை வெறுக்கிறார்கள், ‘எல்லாரோடும் சமாதானமாக’ இருக்க முயற்சி செய்கிறார்கள். (ரோமர் 12:18) ஒரு கருத்தில், ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிக்கிறார்கள்.’ (ஏசாயா 2:4) அதன் விளைவாக, அவர்கள் மத்தியில் அன்பும் உலகளாவிய சகோதர நட்பும் நிலவுகிறது. (யோவான் 13:35) இப்படிப்பட்ட ஆட்களை இன்று உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா?