உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lf கேள்வி 4 பக். 22-29
  • எல்லா உயிரினமும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எல்லா உயிரினமும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியதா?
  • உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • டார்வினின் மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது
  • புதைபடிவத்தைப் பற்றியென்ன?
  • “அத்தாட்சிகளில்” உள்ள சிக்கல்கள்
  • “திரைப்பட சுருள்” உண்மையில் என்ன சொல்கிறது?
  • புதைப்படிவ பதிவுகளை பேச விடுவோமா?
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • “குரங்கு மனிதர்”—உண்மையில் என்ன?
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • பரிணாமம்—ஏன் கருத்து வேறுபாடுகள்?
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • பரிணாமம்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்
lf கேள்வி 4 பக். 22-29

கேள்வி 4

எல்லா உயிரினமும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியதா?

எல்லா உயிரினமும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியதாகக் காட்டும் சார்லஸ் டார்வினின் “உயிர் மரம்”

எல்லா உயிரினமும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று டார்வின் நினைத்தார். பூமியில் உயிர் தோன்றிய வரலாறு ஒரு மாபெரும் மரத்திற்கு ஒத்திருப்பதாக எண்ணினார். பிற்காலத்தில், இந்த “உயிர் மரம்” சாதாரண முதல் செல்கள் என்ற ஓர் அடிமரத்திலிருந்து தோன்றியதென மற்றவர்கள் நம்பினார்கள். இந்த அடிமரத்திலிருந்து கிளைகள் போல் புதிய உயிரினங்கள் தோன்றின, பிறகு அதிலிருந்து சிறு கிளைகள் தோன்றின, அதாவது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் குடும்பங்கள் தோன்றின. பிற்பாடு, அந்தக் கிளைகளிலிருந்து இளம் கிளைகள் தோன்றின, அதாவது இன்றுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எல்லா வகைகளும் உண்டாயின. ஆனால், உண்மையிலேயே இப்படித்தான் நடந்ததா?

விஞ்ஞானிகள் பலர் என்ன சொல்கிறார்கள்? எல்லா உயிரினமும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியது என்ற கோட்பாட்டை புதைபடிவம் (fossil record) ஆதரிப்பதாக அநேகர் சொல்கிறார்கள். எல்லா உயிரினமும் ஒரேமாதிரியான “கம்ப்யூட்டர் மொழியை,” அதாவது DNA-வை, பயன்படுத்துவதால் எல்லாம் ஒரே மூதாதையிலிருந்து பரிணமித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது? தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நிலவாழ் விலங்குகள், பறவைகள் ஆகியவை “அந்த அந்த இனத்தின்படி” படைக்கப்பட்டன என்று ஆதியாகம பதிவு கூறுகிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:12, 20-25, பொது மொழிபெயர்ப்பு) இந்த விளக்கத்தின்படி, ஓர் ‘இனத்திற்குள்’ பல வகைகள் இருக்க முடியும்; என்றாலும், வெவ்வேறு இனங்களைப் பிரித்துக் காட்டுவதற்கு அவை ஒவ்வொன்றுக்கும் இடையே திட்டவட்டமான வேறுபாடுகள் இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அதோடு, முழு வளர்ச்சி பெற்ற புதுவகை உயிரினங்கள் புதைபடிவத்தில் திடீரென கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் படைப்பை பற்றிய பைபிள் பதிவு நமக்குக் காட்டுகிறது.

அத்தாட்சி என்ன காட்டுகிறது? அத்தாட்சி பைபிள் விவரத்தை ஆதரிக்கிறதா, அல்லது டார்வினின் கருத்தை ஆதரிக்கிறதா? கடந்த 150 வருட கண்டுபிடிப்புகள் என்ன காட்டுகின்றன?

டார்வினின் மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது

சமீப வருடங்களில், ஒரு-செல் உயிரினங்கள் பலவற்றின் மரபியல் குறியீடுகளையும் (genetic codes) தாவர மற்றும் விலங்குகளின் மரபியல் குறியீடுகளையும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். இந்த ஒப்பீடுகளின் அடிப்படையில், டார்வினின் “உயிர் மரம்” கோட்பாட்டை உண்மையென்று நிரூபிக்க முடியுமென நினைத்தார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.

அவர்களுடைய ஆராய்ச்சி எதை வெளிப்படுத்தியது? 1999-ல் உயிரியலாளர் மால்கம் எஸ். கோர்டன் இவ்வாறு எழுதினார்: “உயிர் பல்வேறு மூலத்திலிருந்து தோன்றியதாகத் தெரிகிறது. எல்லா உயிரினங்களும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியிருக்க முடியாது.” டார்வின் நினைத்தபடி, உயிரினங்களின் பெரும் பிரிவுகள் அனைத்தும் ஒரேவொரு அடிமரத்திலிருந்து தோன்றியது என்பதற்கு அத்தாட்சி இருக்கிறதா? கோர்டன் தொடர்ந்து சொல்கிறார்: “எல்லா உயிரினமும் ஒரேவொரு மூதாதையிலிருந்து தோன்றியது என்ற பாரம்பரிய கோட்பாடு தற்போதைய பெரும் தொகுதிகளுக்கு (kingdoms) பொருந்தாது என்றே தோன்றுகிறது. இந்தக் கோட்பாடு அநேக தொகுதிகளுக்கும் (phyla) பொருந்தாது, தொகுதிகளுக்குள் உள்ள அநேக வகுப்புகளுக்கும் (classes) பொருந்தாது.”29a

எல்லாம் ஒரே மூதாதையிலிருந்து வந்தன என்ற டார்வினின் கோட்பாடு தவறு என்பதை சமீப ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. உதாரணமாக, 2009-ல் நியு சயன்டிஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை, எரிக் பாப்டிஸ்ட் என்ற பரிணாம விஞ்ஞானி சொன்னதை மேற்கோள் காட்டியது: “உயிர் மரம் உண்மை என்பதை நம்புவதற்கு நம்மிடம் எந்த அத்தாட்சியும் இல்லை.”30 பரிணாம உயிரியலாளர் மைக்கேல் ரோஸ் சொன்னதையும் அதே கட்டுரை மேற்கோள் காட்டியது: “உயிர் மரம் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரிந்த விஷயமே. ஆனால், உயிரியல் பற்றிய அடிப்படை கண்ணோட்டத்தையே அடியோடு மாற்றிக்கொள்வதுதான் அநேகருக்குக் கடினமாய் இருக்கிறது.”31b

புதைபடிவத்தைப் பற்றியென்ன?

உயிரினங்கள் ஒரே மூலத்திலிருந்து தோன்றின என்ற கருத்தைப் புதைபடிவங்கள் ஆதரிப்பதாக விஞ்ஞானிகள் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, மீன்கள் நீர்-நில வாழ்வனவாக (amphibians) மாறின என்பதற்கும், ஊரும் பிராணிகள் (reptiles) பாலூட்டிகளாக (mammals) மாறின என்பதற்கும் புதைபடிவம் அத்தாட்சி அளிக்கிறது என அவர்கள் வாதாடுகிறார்கள். ஆனால், உண்மையில் புதைபடிவ அத்தாட்சி என்ன காட்டுகிறது?

பரிணாம தொல்லுயிரியல் வல்லுநர் டேவிட் எம். ருப் இவ்வாறு கூறுகிறார்: “டார்வின் காலத்து நிலவியல் அறிஞர்களும் சரி தற்காலத்து நிலவியல் அறிஞர்களும் சரி, உயிர் படிப்படியாகத் தோன்றியதை அல்ல, கோர்வையின்றியும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றியும் தோன்றியதையே புதைபடிவம் நிரூபிப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்; அதாவது உயிரினங்கள் திடீரென்று தோன்றின, அவை உயிர் வாழ்ந்தபோது எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே இருந்தன, பிற்பாடு அவை சட்டென மறைந்துவிட்டன என்பதையே புதைபடிவம் நிரூபிப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.”32

உண்மையில், பல்வகை உயிரினங்கள் நீண்ட காலமாய் மாறாமல் இருந்ததையே பெரும்பான்மையான புதைபடிவங்கள் காட்டுகின்றன. ஓர் உயிரினத்திலிருந்து மற்றொன்று பரிணமித்தது என்பதற்கு சான்றுகள் இல்லை. மாறாக, தனித்தன்மை வாய்ந்த உடல் அமைப்பு கொண்ட உயிரினங்கள் திடீரென தோன்றின. தனிச்சிறப்புமிக்க அம்சங்கள் கொண்ட உயிரினங்கள் திடீரென தோன்றின. உதாரணமாக, ‘சோனார்’ திறனையும் எதிரொலி மூலம் இடமறியும் திறனையும் கொண்ட வௌவால்களுக்கு ஒத்த அம்சங்களைக் கொண்ட மூதாதை இருந்ததற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.

சொல்லப்போனால், விலங்கினங்களின் பெரும் பிரிவுகளில் பாதிக்கும் அதிகமானவை ஓரளவு குறுகிய காலப்பகுதியிலேயே தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. புதிய மற்றும் வேறுபட்ட உயிரினங்கள் பல திடீரென தோன்றியதாக புதைபடிவம் காட்டுவதால் அக்காலப்பகுதியை “கேம்பிரியன் வெடிப்பு” (Cambrian explosion) என தொல்லுயிரியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். கேம்பிரியன் காலப்பகுதி எது?

ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் சரியென நாம் வைத்துக்கொள்வோம். அப்படியானால், பூமி உண்டானதிலிருந்து இன்று வரையிலான காலப்பகுதியை கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்திற்கு ஒப்பிடலாம் (1). அந்தக் கணக்கின்படி, கேம்பிரியன் காலப்பகுதி என தொல்லுயிரியல் வல்லுநர்கள் அழைக்கிற இடத்திற்கு வரவேண்டுமென்றால், அந்த மைதானத்தை எட்டுப் பாகங்களாகப் பிரித்து சுமார் ஏழு பாகம் வரை நீங்கள் நடந்து வர வேண்டும் (2). அதில் ஒரு சிறிய பகுதியில்தான், விலங்குகளின் பெரும் தொகுதிகள் உருவானதாகப் புதைபடிவ பதிவுகள் காட்டுகின்றன. அவை எவ்வளவு சீக்கிரத்தில் தோன்றின? கால்பந்தாட்ட மைதானத்தில் அப்படியே நடக்கையில், ஒரு எட்டுக்கும் குறைவான இடைவெளியில்தான் அந்தப் பல்வகை உயிரினங்கள் திடீரென தோன்றின!

பூமி உண்டானதிலிருந்து இன்று வரையிலான காலப்பகுதியைக் கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்திற்கு ஒப்பிட்டுக் காட்டும் இந்தப் படத்தில், கேம்பிரியன் வெடிப்பு என்ற காலப்பகுதியைப் பார்க்கலாம்

ஓரளவு குறுகிய காலப்பகுதியில் பல்வகை உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பதால், டார்வினின் பாரம்பரிய கோட்பாட்டைப் பற்றி பரிணாம ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். உதாரணமாக, 2008-ல் பரிணாம உயிரியலாளர் ஸ்டூவர்ட் நியூமேனுடன் நடத்தப்பட்ட ஒரு பேட்டியில், புதுப்புது வகை உயிரினங்கள் திடீரென தோன்றியதை விளக்கும் ஒரு புதிய பரிணாமக் கோட்பாடு அவசியமென அவர் கூறினார். “எல்லா பரிணாம மாற்றத்தையும் விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட டார்வினின் கோட்பாட்டை இனி முக்கியமான ஒன்றாகக் கருத முடியாது, மாறாக மற்ற அநேக கோட்பாடுகளைப் போல அதுவும் ஒரு கோட்பாடு என்றே கருத முடியும்—மேக்ரோ பரிணாமத்தை (அதாவது, உடல் உறுப்புகளில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தை) புரிந்துகொள்வதற்கு அத்தியாவசியமான ஒன்றாகக்கூட அதைக் கருத முடியாது”33 என்று அவர் கூறினார்.

“அத்தாட்சிகளில்” உள்ள சிக்கல்கள்

சில பாடநூல்களில் காட்டப்பட்டுள்ளபடி நிஜ ஒப்பீட்டு அளவு

சில பாடநூல்களில் குறிப்பிட்ட வரிசையில் இருப்பதாக காண்பிக்கப்படும் புதைபடிவங்களின் உருவ அளவுகள் ஏன் மாற்றப்பட்டுள்ளன?

இடது: சில பாடநூல்களில் காட்டப்பட்டிருக்கும் புதைபடிவங்களின் உருவ அளவுகள்

வலது: நிஜ ஒப்பீட்டு அளவு

ஆனால், மீன்கள் நீர்-நில வாழ்வனவாகவும் ஊரும் பிராணிகள் பாலூட்டிகளாகவும் மாறியதை நிரூபிப்பதற்குப் பயன்படுத்தப்படும் புதைபடிவங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? பரிணாம வளர்ச்சிக்கு அவை ஆணித்தரமான அத்தாட்சி அளிக்கின்றனவா? புதைபடிவங்களை இன்னும் கூர்ந்து ஆராயும்போது அநேக சிக்கல்கள் இருப்பது வெட்டவெளிச்சமாகிறது.

முதலாவதாக, ஊரும் பிராணிகள்முதல் பாலூட்டிகள்வரை என்ற வரிசையில் வரும் உயிரினங்களின் உருவ அளவு பாடநூல்களில் சிலசமயங்களில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது. அவை ஒரே மாதிரியான அளவில் இல்லாமல், சில மிகப் பெரியவையாகவும் சில மிகச் சிறியவையாகவும் இருக்கின்றன.

இரண்டாவதாக, அந்த உயிரினங்களெல்லாம் ஏதோவொரு விதத்தில் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதற்குப் புதைபடிவத்தில் அத்தாட்சி இல்லாததும் பெரிய சிக்கல். அந்த வரிசையில் வைக்கப்பட்டுள்ள புதைபடிவங்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே கோடிக்கணக்கான ஆண்டுகால இடைவெளி இருப்பதாக ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். பெரும்பாலான இந்தப் புதைபடிவங்களுக்கு இடையே உள்ள காலப்பகுதியைக் குறித்து விலங்கியலாளர் ஹென்றி ஜீ இவ்வாறு கூறுகிறார்: “இந்தப் புதைபடிவங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதி அவ்வளவு அதிகமாய் இருப்பதால் முன்பிருந்த உயிரினங்களுக்கும் பின்பு தோன்றிய உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி நாம் திட்டவட்டமாய் எதுவும் சொல்ல முடியாது.”34c

மீன்கள் மற்றும் நீர்-நில வாழ்விகளின் புதைபடிவங்களைக் குறித்து உயிரியலாளர் மால்கம் எஸ். கோர்டன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அந்தக் காலத்தில் இருந்த இந்தத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வகை உயிரினங்களில் வெகு சொற்ப புதைபடிவங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அதுவும் அவை எந்த இனத்தைச் சேர்ந்தவை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.” அவர் மேலும் கூறுகிறார்: “அந்தக் குறிப்பிட்ட வகை உயிரினங்களுக்கும் பிற்பாடு தோன்றிய உயிரினங்களுக்கும் இடையே ஒருவேளை ஏதாவது தொடர்பு இருந்திருந்தாலும் அது எந்தளவுக்கு இருந்தது அல்லது அவை ஒவ்வொன்றுக்கும் என்ன தொடர்பு இருந்தது என்பதையெல்லாம் அறிந்துகொள்வதற்கு எந்தவொரு வழியுமில்லை.”35d

வெவ்வேறு விலங்குகளுக்கு இடையில் இருப்பதாக நினைக்கப்படும் தொடர்புகளைக் காட்டும் படம்

“திரைப்பட சுருள்” உண்மையில் என்ன சொல்கிறது?

“பரிணாமத்தைப் பற்றிய ஒரு திரைப்பட சுருளில் ஒவ்வொரு 1,000 பிரேம்களிலும் 999 பிரேம்கள் எடிட்டிங் அறையில் காணாமல் போய்விட்டால் எப்படி இருக்குமோ அப்படியே [புதைபடிவ பதிவும்] இருக்கிறது”36 என 2004-ல் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிட்டது. இந்த உதாரணம் சுட்டிக்காட்டும் விஷயங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

படச்சுருளும் அதனுடைய சில பிரேம்களும்

விலங்குகள் ஒரு வகையிலிருந்து மற்றொன்றாக பரிணமிக்கவில்லை என்று புதைபடிவங்களின் “95 பிரேம்கள்” காட்டுகிறதென்றால், தொல்லுயிரியல் வல்லுநர்கள் பரிணாமத்தை ஆதரிப்பதற்காக ஏன் மீதமுள்ள அந்த “ஐந்து பிரேம்களை” வரிசைப்படுத்திக் காட்டுகின்றனர்?

ஒரு லட்சம் பிரேம்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தில் 100 பிரேம்களை மட்டுமே நீங்கள் கண்டுபிடித்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தத் திரைப்படத்தின் கதை என்னவென்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? அந்தக் கதை இப்படித்தான் இருக்கும் என்று ஏற்கெனவே உங்களுடைய மனதில் நீங்கள் தீர்மானித்திருக்கலாம். ஆனால், அந்த 100 பிரேம்களில் 5 பிரேம்கள் மட்டும்தான் நீங்கள் நினைக்கும் கதைக்கு ஒத்திருக்கிறது; மீதமுள்ள 95 பிரேம்களோ ரொம்ப வித்தியாசமான கதையைச் சொல்கிறது. அந்த ஐந்தே பிரேம்களை வைத்து நீங்கள் ஏற்கெனவே மனதில் நினைத்த கதைதான் சரியென்று அடித்துச் சொல்வது நியாயமாக இருக்குமா? உங்களுடைய கதைக்குச் சாதகமாய் இருக்கிறது என்ற காரணத்திற்காக அந்த ஐந்து பிரேம்களை உங்களுக்குப் பிடித்த வரிசையில் வைப்பது சரியா? மற்ற 95 பிரேம்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வது நியாயமாய் இருக்கும், அல்லவா?

இந்த உதாரணம் புதைபடிவத்தைப் பற்றிய பரிணாமவாதிகளின் கண்ணோட்டத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது? கால ஓட்டத்தில் உயிரின வகைகள் மாறவில்லை என்பதை எக்கச்சக்கமான புதைபடிவங்கள்—அதாவது திரைப்பட சுருளின் 95 பிரேம்கள்—நிரூபித்தபோதிலும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான அத்தாட்சியை ஏன் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்? ரிச்சர்டு மோரிஸ் என்ற நூலாசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “அத்தாட்சிகள் நேர்மாறாக இருந்தபோதிலும் உயிரினங்கள் படிப்படியாகப் பரிணமித்து வந்தன என்ற பிரபல கருத்தைத் தொல்லுயிரியல் வல்லுநர்கள் உடும்பு போல் பிடித்துக்கொண்டார்கள்! ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் புதைபடிவ அத்தாட்சியை விளக்க அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.”37

“சில புதைபடிவங்களை வரிசைப்படுத்தி இந்த மரபுவழியில்தான் உயிரினங்கள் தோன்றின என்று சொல்வது சோதனை மூலம் நிரூபிக்கக்கூடிய விஞ்ஞான கோட்பாடு அல்ல. சொல்லப்போனால், அது பிள்ளைகளுக்குச் சொல்லப்படும் கதை மாதிரிதான் இருக்கும்—கேட்பதற்கு சுவாரஸ்யமாக, ஒரு போதனையாக இருக்கலாமே தவிர விஞ்ஞானப்பூர்வமாய் இருக்க முடியாது.”—ஹென்றி ஜீ-யின், பழங்காலத்தைத் தேடி—புதைபடிவ காலத்திற்கு முன்பிருந்து உயிரின் புதிய வரலாறு வரை (ஆங்கிலம்), பக்கங்கள் 116-117

இன்றைய பரிணாமவாதிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? பெரும்பாலான புதைபடிவ மற்றும் மரபியல் அத்தாட்சிகளின் அடிப்படையில் இல்லாமல் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிணாம கருத்துக்களின் அடிப்படையில் புதைபடிவங்களை வரிசைப்படுத்துகிறார்களா?e

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எந்த முடிவு அத்தாட்சியுடன் நன்கு ஒத்துப்போகிறது? இதுவரை பார்த்த அத்தாட்சிகளைச் சிந்தியுங்கள்.

  • முதன்முதலில் பூமியில் தோன்றிய உயிர் “சாதாரண” ஒன்றல்ல.

  • ஒரு செல்லில் உள்ள கூறுகள்கூட தானாகவே வருவதற்குத் துளிகூட சாத்தியமில்லை.

  • செல்களை இயக்கும் DNA, அதாவது “கம்ப்யூட்டர் புரோகிராம்” அல்லது சங்கேத மொழி மிக மிகச் சிக்கலானது; இது மனிதன் கண்டுபிடித்திருக்கும் எந்தவொரு தகவல் பதிவு முறையைவிட பன்மடங்கு திறமை வாய்ந்தது.

  • ஒரே மூதாதையிலிருந்து உயிர் தோன்றவில்லை என்பதை மரபியல் ஆராய்ச்சி காட்டுகிறது. அதோடு, விலங்குகளின் பெரும் தொகுதிகள் திடீரென தோன்றியதாகப் புதைபடிவங்கள் காட்டுகின்றன.

இந்த உண்மைகளின் அடிப்படையில், உயிர் தோன்றியதற்கான அத்தாட்சிகள் பைபிள் தரும் விளக்கத்திற்கு இசைவாக இருக்கின்றன என்ற முடிவுக்கு வருவதே உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? ஆனால், படைப்பைப் பற்றி பைபிள் சொல்வது விஞ்ஞானத்திற்கு முரணாக இருக்கிறது என்று பலர் சொல்கிறார்களே. அது உண்மையா? பைபிள் உண்மையில் என்னதான் சொல்கிறது?

a ஃபைலா என்ற உயிரியல் பெயர் (ஒருமையில் ஃபைலம்) ஒரே விதமான உடல் அமைப்பைக் கொண்ட விலங்குகளின் தொகுதியைக் குறிக்கிறது. எல்லா உயிரினங்களையும் அடிப்படையில் ஏழு பிரிவுகளாக விஞ்ஞானிகள் வகைப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பிரிவும் முந்தின பிரிவைவிட இன்னும் திட்டவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பிரிவு பெரும் தொகுதியை (kingdoms) குறிக்கிறது. இது உயிரினங்களைப் பொதுப்படையாக வகைப்படுத்துகிறது. அடுத்தடுத்த பிரிவுகள் பின்வருமாறு: தொகுதி (phylum), வகுப்பு (class), வரிசை (order), குடும்பம் (family), இனம் (genus), சிற்றினம் (species). உதாரணத்திற்கு, குதிரை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது: பெரும் தொகுதி, அனிமேலியா; தொகுதி, கார்டேட்டா; வகுப்பு, மம்மேலியா; வரிசை பெரிஸோடாக்டைலா; குடும்பம், ஈக்விடே; இனம், இக்வஸ்; சிற்றினம், காபாலஸ்.

b நியு சயன்டிஸ்ட் கட்டுரையும் சரி பாப்டிஸ்ட், ரோஸ் என்ற விஞ்ஞானிகளும் சரி, பரிணாமக் கோட்பாடு தவறு என்று சொல்வதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, டார்வினின் கோட்பாட்டிற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் உயிர் மரத்திற்கு எந்த அத்தாட்சியும் இல்லை என்பதே அவர்களுடைய குறிப்பு. இத்தகைய விஞ்ஞானிகள் பரிணாமத்தை ஆதரிக்கும் மற்ற விளக்கங்களை இன்னும் தேடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

c பரிணாமக் கோட்பாடு தவறென ஹென்றி ஜீ சொல்லவில்லை. புதைபடிவத்திலிருந்து ஓரளவுதான் தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் காட்டுவதற்கே அவருடைய கூற்று கொடுக்கப்பட்டுள்ளது.

d மால்கம் எஸ். கோர்டன் பரிணாமத்தை ஆதரிப்பவர்.

e உதாரணத்திற்கு, “மனிதப் பரிணாமத்தைப் பற்றியென்ன?” என்ற பெட்டியைக் காண்க.

உண்மைகளும் கேள்விகளும்

  • உண்மை: பரிணாமத்தின் இரு அடிப்படை கருத்துக்களை, அதாவது எல்லா உயிரினங்களும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றின... மெதுவாக ஏற்பட்ட சிறுசிறு மாற்றங்களால் புதுப்புது வகை உடல் அமைப்பைக் கொண்ட உயிரினங்கள் தோன்றின . . . என்ற இரு அடிப்படை கருத்துக்களை எதிர்த்து, படைப்பைப் பற்றிய பைபிளின் பதிவை நம்பாத ஆராய்ச்சியாளர்கள் சவால் விடுகிறார்கள்.

    கேள்வி: டார்வின் கோட்பாட்டின் இந்த அடிப்படை கருத்துக்களே சர்ச்சைக்குரியதாக இருப்பதால், அவருடைய பரிணாமக் கோட்பாட்டை அறிவியல்பூர்வமான உண்மை என்று சொல்ல முடியுமா?

  • உண்மை: செல் அல்லது செல்களின் உருவத்தையும் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகிற DNA-வின் வடிவமைப்பு, அதாவது “கம்ப்யூட்டர் மொழி” அல்லது சங்கேத மொழி, எல்லா உயிரினங்களிலும் ஒன்றுபோல் இருக்கிறது.

    கேள்வி: ஒரே மூதாதையிலிருந்து தோன்றியதன் காரணமாக அல்ல, மாறாக ஒரே வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டதன் காரணமாக அவை ஒன்றுபோல் இருக்கக்கூடுமா?

மனிதப் பரிணாமத்தைப் பற்றியென்ன?

மண்டையோடு

பாடநூல்களிலும் என்ஸைக்ளோப்பீடியாக்களிலும் மனிதப் பரிணாமம் என்ற தலைப்பில் எடுத்துப் பார்த்தால் அதில் வரிசையாகப் படங்கள் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்—ஒரு புறத்தில் கூன்விழுந்த, மனிதக் குரங்கு போன்ற உயிரினமும் அதைத் தொடர்ந்து வருகிற உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து பெரிய தலைகளை உடைய உயிரினங்களாக மாறுவதைப் பார்ப்பீர்கள். கடைசியில் ஒரு நவீன மனிதனின் படத்தைப் பார்ப்பீர்கள். இப்படிச் சித்தரிக்கப்படுகிற படங்களும், விடுபட்டுப்போன இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிவருகிற பரபரப்பான செய்திகளும் மனிதக் குரங்கு போன்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பரிணமித்ததற்கு ஏராளமான அத்தாட்சி இருப்பது போல் காட்டுகின்றன. இவற்றிற்கு ஆணித்தரமான அத்தாட்சி இருக்கிறதா? பின்வரும் விஷயங்களைக் குறித்து பரிணாம ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.f

புதைபடிவ அத்தாட்சி உண்மையில் என்ன காட்டுகிறது?

உண்மை: 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மனிதர்களும் மனிதக் குரங்குகளும் ஒரே மூதாதையிலிருந்து பரிணமித்தன என்பதற்கு ஆதாரமான புதைபடிவங்கள் அனைத்தும் ‘பில்லியர்ட்’ விளையாட்டு மேஜையில் அடங்கிவிடும் அளவுக்குத்தான் இருந்தன. அதுமுதல், அந்தக் கோட்பாட்டிற்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட புதைபடிவங்கள் அதிகமாகிக்கொண்டே வந்தன. இப்போது, ஒரு ரயில் பெட்டியே நிரம்பும் அளவுக்குப் புதைபடிவங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.38 ஆனால், இந்தப் புதைபடிவங்களில் பெரும்பாலானவை தனித்தனி எலும்புகளும், தனித்தனி பற்களும் கொண்டவையாக இருக்கின்றன. முழு மண்டையோடு வெகு அரிதாகத்தான் கிடைக்கிறது—முழு எலும்புக்கூடு பற்றி சொல்லவே வேண்டியதில்லை.39

கேள்வி: மனித “குடும்பம் எனும் மரத்தை” ஆதரிப்பதாகக் கருதப்படும் இந்தப் புதைபடிவங்கள் ஏராளம் கிடைத்திருந்தாலும், இவை மனிதன் எப்போது, எப்படி மனிதக் குரங்கிலிருந்து பரிணமித்து வந்தான் என்ற பரிணாமவாதிகளின் கேள்விக்குப் பதில் அளித்திருக்கின்றனவா?

பதில்: இல்லை. சொல்லப்போனால், இதற்கு நேர்மாறானதைத்தான் புதைபடிவங்கள் நிரூபித்திருக்கின்றன. இந்தப் புதைபடிவங்களை எப்படி வகைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து ஆஸ்திரேலியா, நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபின் டெரிகோட் 2009-ல் இவ்வாறு எழுதினார்: “விஞ்ஞானிகள் மத்தியில் எந்தவொரு ஒருமித்த கருத்தும் இல்லை என்பதே எல்லாருடைய ஒருமித்த கருத்து.”40 பரிணாம மரத்தின் விடுபட்டுப்போன இணைப்பு என சொல்லப்படும் ஒரு புதைபடிவத்தைக் கண்டுபிடித்தவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை இயற்கை (ஆங்கிலம்) என்ற அறிவியல் இதழ் 2007-ல் வெளியிட்டது. மனிதக் குரங்குகளிலிருந்து எப்போது, எப்படி மனிதன் வந்தான் என்பதற்கு எந்தச் சாட்சியமும் இல்லை என அந்த இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.41 “ஹோமினிட் (hominid) புதைபடிவங்களின் வகைப்பாடும் பரிணாமத்தில் அவை வகிக்கும் இடமும் எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது” என்று 2002-ல் கியூலா டையனஷ் எழுதினார்.g இவர் ஹங்கேரியில் இயோட்வோஸ் லோரான்ட் பல்கலைக்கழகத்தில், உயிரியல் சார்ந்த மானுடவியல் துறை ஆய்வாளர். மனிதக் குரங்கு போன்ற பிராணிகளிலிருந்து மனிதன் எப்போது, எங்கு, எப்படிப் பரிணமித்தான் என்பதைத் தெரிந்துகொள்ள இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் துளிகூட உதவுவதில்லை என்றும் இந்த எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.42

“விடுபட்டுப்போன இணைப்புகளின்” விளம்பரம்

உண்மை: “விடுபட்டுப்போன ஓர் இணைப்பு” புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி மீடியாக்கள் பிரபலமாக விளம்பரப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, 2009-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைபடிவத்திற்கு ஐடா என்று பெயர் சூட்டி, அதற்கு ‘ராக்-இசை நட்சத்திர அந்தஸ்தை’ கொடுத்து மீடியாக்கள் விளம்பரம் செய்ததாக ஒரு பத்திரிகை சொன்னது.43 அதுமட்டுமல்ல, லண்டனில் வெளிவரும் கார்டியன் செய்தித்தாளின் தலைப்புச் செய்தியில் இவ்வாறு போடப்பட்டிருந்தது: “ஐடா புதைபடிவம்: மாபெரும் கண்டுபிடிப்பு—மனித பரிணாமத்தில் ‘விடுபட்டுப்போன ஓர் இணைப்பு’.”44 ஆனால், சில நாட்களுக்குப் பிறகு லண்டனின் நியு சயன்டிஸ்ட் என்ற அறிவியல் பத்திரிகை இவ்வாறு சொன்னது: “ஐடா மனித பரிணாமத்தில் ‘விடுபட்டுப்போன ஓர் இணைப்பு’ அல்ல.”45

கேள்வி: “விடுபட்டுப்போன இணைப்பு” கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம் மீடியாக்களில் பரவலாக விளம்பரம் செய்யப்படுகிறது, ஆனால் மனித “குடும்பம் எனும் மரத்திலிருந்து” அந்தப் புதைபடிவம் நீக்கப்படும் செய்தி மட்டும் ஏன் வெளிவருவதில்லை?

புதைபடிவம்

பதில்: இதுபோன்ற புதைபடிவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களைக் குறித்து முன்னர் குறிப்பிடப்பட்ட ராபின் டெரிகோட் இவ்வாறு சொல்கிறார்: “சுவாரஸ்யமான செய்திகளுக்காகத் தேடி அலைகிற பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், ‘கண்டுபிடிக்கப்பட்ட’ புதைபடிவத்தின் தனித்தன்மை குறித்தும் அது கண்டுபிடிக்கப்பட்ட விதத்தைக் குறித்தும் ஆய்வுக் குழுவின் தலைவர் படுவிமரிசையாக விளம்பரப்படுத்துகிறார். இப்படிச் செய்வதன் மூலம் கல்வி நிறுவனங்களுக்கு வெளியிலிருந்து ஆய்வுக்கு நிதி திரட்ட முயலுகிறார்.”46

பாடநூல்களில் உள்ள படங்களும் குரங்கு-மனிதன் மாடல்களும்

உண்மை: மனிதனின் மூதாதையர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களுடைய தோற்றத்தைப் பாடநூல்களிலும் மியூசியங்களிலும் காணலாம்; அவற்றில் பழங்கால “மூதாதையர்களுடைய” முகத் தோற்றமும் தோல் நிறமும் ரோமத்தின் அடர்த்தியும் குரங்குகளைப் போல் இருப்பதாய் பொதுவாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படுகிறவர்கள் கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற முகத் தோற்றத்தையும் தோல் நிறத்தையும் ரோமத்தையும் கொண்டிருப்பது போல் காட்டப்படுகிறார்கள்.

கேள்வி: விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடித்திருக்கிற புதைபடிவங்களை வைத்து இப்படிப்பட்ட தோற்றத்தைச் சரியாகக் கணிக்க முடியுமா?

பதில்: இல்லை. ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் உடற்கூறு அறிவியல் துறையில் பணிபுரிகிற தடயவியல் நிபுணர் கார்ல் என். ஸ்டீஃபன் 2003-ஆம் ஆண்டில் இவ்வாறு எழுதினார்: “பழங்கால மனிதர்களுடைய முகத் தோற்றத்தைத் துல்லியமாக வடிவமைக்கவோ நிரூபிக்கவோ முடியாது.” நவீன மனிதக் குரங்குகளின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களுடைய உருவம் இப்படித்தான் இருந்தது என்று சொல்வது “ஒருதலைப்பட்சமாகவே இருக்கும், அது சரியாக இருக்காது, ஏற்க தகுந்ததாகவும் இருக்காது.” அவர் சொல்லவரும் குறிப்பு? “முற்கால ஹோமினிட் புதைபடிவங்களை அடிப்படையாக வைத்து மனிதனுடைய முகத் தோற்றத்தை ‘வடிவமைப்பது’ தவறான முடிவுக்கே வழிநடத்தும்.”47

மூளையின் அளவை வைத்து அறிவுக்கூர்மையைத் தீர்மானிப்பது

உண்மை: மனிதனின் மூதாதை என்று ஊகிக்கப்படுகிறவற்றின் மூளை அளவை வைத்து அவற்றுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு எந்தளவு நெருக்கமாக இருக்கிறது அல்லது எந்தளவு தூரமாக இருக்கிறது என்பதை பரிணாமவாதிகள் தீர்மானிக்கிறார்கள்; இது அவர்கள் பயன்படுத்தும் முக்கியமான வழிகளில் ஒன்றாகும்.

கேள்வி: மூளையின் அளவை வைத்து அறிவுக்கூர்மையைக் கணிப்பது நம்பகமான ஒன்றா?

மனித மண்டையோடும் குரங்கின் மண்டையோடும்

பதில்: இல்லை. மறைந்துபோன உயிரினங்களில் எவை மனிதனோடு நெருங்கிய தொடர்புடையவையாக இருந்தன என்பதை ஊகிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் சிலர் மூளையின் அளவைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இதன் அடிப்படையில் கணித்தபோது “பெரும்பாலும் ஆட்டம் காண்கிற ஓர் இடத்தில் நிற்பதுபோல் உணர்வதாக” அவர்கள் சொன்னார்கள்.48 ஏன்? 2008-ஆம் ஆண்டில் வெளிவந்த சயன்டிஃபிக் அமெரிக்கன் மைன்ட் என்ற இதழில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு கூற்றைக் கவனியுங்கள்: “மனிதர்களிலோ விலங்குகளிலோ மூளையின் அளவுக்கும் அறிவுக்கூர்மைக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல் அறிவுக்கூர்மைக்கும் மூளையின் அளவுக்கும் அல்லது மூளையில் குறிப்பிட்ட பகுதிகள் இருப்பதற்கும் இடையே உள்ள தொடர்பையும் அவர்களால் பகுத்துணர முடியவில்லை. மனிதர்களுடைய பேச்சாற்றலைக் கட்டுப்படுத்தும் புரோக்காஸ் பகுதி இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.”49

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மூளையின் அளவை வைத்து அறிவுக்கூர்மையை அளவிட முடியாது என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தும் ஏன் மனிதக் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட புதைபடிவங்களை மூளையின் அளவை வைத்து வரிசைப்படுத்துகிறார்கள்? அத்தாட்சியைத் தங்களுடைய கோட்பாட்டிற்குச் சாதகமாக வளைக்கிறார்களா? மனிதக் “குடும்பம் எனும் மரத்தில்” எந்தப் புதைபடிவங்களைச் சேர்க்க வேண்டும் என்பதைக் குறித்து ஏன் ஆராய்ச்சியாளர்கள் சதா வாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆராயும் புதைபடிவங்கள் மறைந்துபோன மனிதக் குரங்குகளாக இருக்கக்கூடுமா?

சரி, மனிதனைப்போல் காட்சியளிக்கும் நியான்டர்தால் (குகை மனிதர்கள்) புதைபடிவங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? ஒருவகை குரங்கு-மனிதன் இருந்தான் என்பதற்கு இவை எப்போதுமே அத்தாட்சியாகக் காட்டப்படுகின்றன. நியான்டர்தால்கள் உண்மையிலேயே என்ன என்பதைப் பற்றிய தங்களுடைய கண்ணோட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த “நியான்டர்தால்கள் உண்மையிலேயே மனித இனமாக இருந்திருக்கலாம்” என மில்ஃபிரெட் எச். உல்போஃப் என்பவர் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஃபிசிக்கல் ஆன்த்ரபாலஜி என்ற இதழில் 2009-ல் எழுதினார்.50

மனிதன் பரிணமித்தான் என்பதற்குக் கொடுக்கப்படுகிற “அத்தாட்சிக்கு” பின்னால் அகம்பாவம், பணம், மீடியாக்களின் கவனத்தைக் கவரும் எண்ணம் ஆகியவையே இருக்கின்றன என்பதை நேர்மையுள்ள யாரும் ஒத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட அத்தாட்சியை நம்ப நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா?

f குறிப்பு: இந்தப் பெட்டியில் மேற்கோள் காட்டப்படும் எந்தவொரு ஆராய்ச்சியாளரும் மனிதன் படைக்கப்பட்டான் என்பதை நம்புவதில்லை. இவர்கள் அனைவரும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்பவர்கள்.

g மனித குடும்பத்தையும் மனித இனத்திற்கு ஒத்த ஆதிகால உயிரினங்களையும் குறிப்பதற்கு “ஹோமினிட்” என்ற வார்த்தையைப் பரிணாம ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் படத்தில் என்ன தவறு?

பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்
  • இதுபோன்ற படங்களெல்லாம் உண்மைகளின் அடிப்படையில் வரையப்பட்டவை அல்ல, மாறாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஓவியர்களுடைய தப்பெண்ணத்திலும் ஊகிப்பிலும் வரையப்பட்டவை.51

  • பற்களின் புதைபடிவம்

    இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை பகுதியளவு மண்டையோடுகளையும் தனித்தனி பற்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை. முழு மண்டையோடுகள் அபூர்வமே, அப்படியென்றால் முழு எலும்புக்கூடுகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

  • பல்வேறு உயிரினங்களின் புதைபடிவங்களை எப்படி வகைப்படுத்துவது என்பதைக் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை.

  • மறைந்துபோன ஒரு உயிரினத்தின் முகத் தோற்றம், தோல் நிறம், ரோமம் ஆகியவற்றைச் சித்தரிக்கும் ஓர் ஓவியம்

    மறைந்துபோன இந்த உயிரினங்களின் முகத் தோற்றம், தோல் நிறம், ரோமம் இப்படித்தான் இருந்தது என்று ஓவியர்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

  • தற்கால மனிதன்வரை ஒவ்வொரு உயிரினமும் பெரும்பாலும் அதன் மூளை அளவின் அடிப்படையில்தான் வரிசைப்படுத்தப்படுகிறது. மூளையின் அளவை வைத்து அறிவுக்கூர்மையைக் கணிப்பது நம்பகமானதல்ல என்பதற்கு அத்தாட்சிகள் இருக்கிறபோதிலும் இப்படிச் செய்யப்படுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்