பாடம் 12
கடவுளுடைய நண்பராவது எப்படி?
1. எல்லாருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்பாரா?
எல்லா ஜனங்களும் கடவுளுடைய நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதற்கு அவரிடம் ஜெபம் செய்ய சொல்கிறார். (சங்கீதம் 65:2) ஆனால், எல்லாருடைய ஜெபத்தையும் அவர் கேட்க மாட்டார். உதாரணமாக, மனைவியை மோசமாக நடத்துகிற ஒருவர் செய்யும் ஜெபத்தை கடவுள் கேட்கமாட்டார். (1 பேதுரு 3:7) இஸ்ரவேல் ஜனங்கள் திருந்தாமல் தொடர்ந்து தவறு செய்துகொண்டே இருந்தார்கள். அதனால், அவர்கள் செய்த ஜெபங்களை கடவுள் கேட்கவில்லை. அதனால், ஜெபம் செய்வதை நாம் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது, அதை உயர்வாக மதிக்க வேண்டும். மிக மோசமான தவறு செய்தவர்கள்கூட மனம் திருந்தி கடவுளிடம் ஜெபம் செய்தால் கடவுள் அவர்களுடைய ஜெபத்தை கேட்பார்.—ஏசாயா 1:15; 55:7-ஐ வாசியுங்கள்.
எல்லாருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்பாரா? என்ற வீடியோவைப் பாருங்கள்.
2. எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
யெகோவாதான் நம்மை படைத்தார், அதனால் அவரிடம் மட்டும்தான் நாம் ஜெபம் செய்ய வேண்டும். (மத்தேயு 4:10; 6:9) நாம் எல்லாருமே பாவிகளாக இருக்கிறோம். நம் பாவங்களுக்காக இயேசு அவருடைய உயிரையே கொடுத்தார். அதனால், இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டும். (யோவான் 14:6) ஜெபத்தை மனப்பாடமாக சொல்வதையோ, எழுதி வைத்து படிப்பதையோ அவர் எதிர்பார்ப்பதில்லை. நாம் ஜெபம் செய்யும்போது, மனதில் இருந்து பேச வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார்.—மத்தேயு 6:7-ஐயும் பிலிப்பியர் 4:6, 7-ஐயும் வாசியுங்கள்.
மனதிற்குள்ளேயே அமைதியாக ஜெபம் செய்தால்கூட யெகோவா தேவனால் கேட்க முடியும். (1 சாமுவேல் 1:12, 13) காலையில் எழுந்திருக்கிறபோது, ராத்திரி தூங்கப் போகிறபோது, சாப்பிடும்போது, கஷ்டம் வரும்போது என எந்த சமயத்திலும் ஜெபம் செய்யலாம்.—சங்கீதம் 55:22-ஐயும் மத்தேயு 15:36-ஐயும் வாசியுங்கள்.
3. நாம் ஏன் கூட்டங்களுக்கு போக வேண்டும்?
இந்த உலகத்தில் நிறையப் பேருக்கு கடவுள்மீது நம்பிக்கையே இல்லை. எல்லா கஷ்டங்களையும் அவர் சரிசெய்யப் போகிறார் என்று சொன்னால் நம்மை கேலி செய்கிறார்கள். இவர்களோடு நாம் வாழ்வதால், கடவுளோடு இருக்கும் நட்பை தொடர்ந்து வளர்ப்பது சுலபம் இல்லை. (2 தீமோத்தேயு 3:1, 4; 2 பேதுரு 3:3, 13) அதனால், யெகோவாவை வணங்கும் ஜனங்களோடு இருக்கும்போது நமக்கு தேவையான உற்சாகம் கிடைக்கிறது. நாமும் அவர்களை உற்சாகப்படுத்த முடியும்.—எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.
கடவுள்மீது அன்பு காட்டுபவர்களோடு பழகும்போது நாம் கடவுளோடு இருக்கும் நட்பை தொடர்ந்து வளர்க்க முடியும். யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போகும்போது கடவுள்மீது மற்றவர்கள் எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று பார்க்க முடியும், அப்போது நம்முடைய நம்பிக்கையும் அதிகமாகும்.—ரோமர் 1:11, 12-ஐ வாசியுங்கள்.
4. கடவுளுடைய நண்பராக ஆவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இதுவரை நீங்கள் பைபிளில் படித்த விஷயங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். ஜனங்களிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார், அவர்களுக்காக என்ன செய்திருக்கிறார், என்னென்ன ஆலோசனைகளை கொடுத்திருக்கிறார், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை எல்லாம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஜெபம் செய்யும்போதும், இதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்க்கும்போதும் யெகோவா உங்கள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார், அவருக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்று புரிந்துகொள்வீர்கள். இப்படி செய்தால் யெகோவாவோடு இருக்கும் உங்கள் நட்பை இன்னும் நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும்.—யோசுவா 1:8-ஐயும் சங்கீதம் 1:1-3-ஐயும் வாசியுங்கள்.
யெகோவாவை நாம் பார்க்க முடியாது. ஆனாலும் அவர்தான் உண்மையான கடவுள், எதிர்காலத்தில் நிறைய ஆசீர்வாதங்களை கொடுக்கப்போகிறார் என்று நம்புகிறோம். அவரைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொண்டால்தான் அவரோடு இருக்கும் நம் நட்பு வளரும். ஒரு செடி நன்றாக வளர வேண்டுமென்றால் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும், அதேபோல், தினமும் பைபிளை படித்தால்தான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.—மத்தேயு 4:4-ஐயும் எபிரெயர் 11:1, 6-ஐயும் வாசியுங்கள்.
5. கடவுளுடைய நண்பராக ஆகும்போது உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
யெகோவாமீது நாம் அன்பு காட்டும்போது அவர் நம்மை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார். அவரோடு நமக்கு இருக்கும் நட்பை பாதுகாக்க நமக்கு உதவுகிறார். சாவில்லாத வாழ்க்கையை இழந்துவிடாமல் இருக்கவும் நமக்கு உதவுகிறார். (சங்கீதம் 91:1, 2, 7-10) ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் கெடுக்கிற பழக்கவழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நம்மை எச்சரிக்கிறார். திருப்தியான வாழ்க்கை வாழ்வது எப்படியென்று சொல்லிக்கொடுக்கிறார்.—சங்கீதம் 73:27, 28-ஐயும் யாக்கோபு 4:4, 8-ஐயும் வாசியுங்கள்.