அதிகாரம் 32
ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி?
மத்தேயு 12:9-14 மாற்கு 3:1-6 லூக்கா 6:6-11
சூம்பிய கையுடைய ஒருவனை ஓய்வுநாளில் குணமாக்குகிறார்
வேறொரு ஓய்வுநாளில், இயேசு ஒரு ஜெபக்கூடத்துக்குப் போகிறார். ஒருவேளை, அந்த ஜெபக்கூடம் கலிலேயாவில் இருந்திருக்கலாம். அங்கே வலது கை சூம்பிய ஒருவனை அவர் பார்க்கிறார். (லூக்கா 6:6) வேத அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு இயேசுவிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று கேட்கிறார்கள்; அவர்கள் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தக் கேள்வியே காட்டுகிறது.—மத்தேயு 12:10.
உயிரே போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டும்தான் ஓய்வுநாளில் குணப்படுத்த வேண்டும் என்று யூத மதத் தலைவர்கள் நினைக்கிறார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில் முறிந்த எலும்பைக் கட்டவோ, சுளுக்குக்குக் கட்டுப் போடவோ கூடாது என்று சொல்கிறார்கள். ஏனென்றால், இவையெல்லாம் உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள் கிடையாது. வேத அறிஞர்களும் பரிசேயர்களும் இந்தப் பாவப்பட்ட மனிதனின் மேலிருந்த அக்கறையால் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை, இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காகத்தான் இதைக் கேட்கிறார்கள்.
அவர்கள் யோசிக்கிற விதம் தவறு என்று இயேசுவுக்குத் தெரியும். ஓய்வுநாளில் வேலை செய்யக் கூடாது என்ற சட்டம் இருந்தது உண்மைதான். (யாத்திராகமம் 20:8-10) ஆனால், எந்தெந்த வேலைகளைச் செய்யக் கூடாது என்பது சம்பந்தமாக இவர்களுக்குச் சில கருத்துகள் இருக்கின்றன. அவை அளவுக்கு அதிகமாக மக்களைக் கட்டுப்படுத்துகின்றன, வேதவசனங்களுக்கு முரணாக இருக்கின்றன என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். ஓய்வுநாளில் அவர் நல்லது செய்தபோதெல்லாம் இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை அவர் சந்தித்திருந்தார். இப்போது, கருத்து மோதலுக்காகக் களம் தயாராகிறது. ஏனென்றால், சூம்பிய கையுடைய அந்த மனிதனைப் பார்த்து, “எழுந்து வந்து நடுவில் நில்” என்று இயேசு சொல்கிறார்.—மாற்கு 3:3.
இயேசு வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் பார்த்து, “உங்களில் யாருக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டால், அதை வெளியே தூக்கிவிடாமல் இருப்பீர்களா?” என்று கேட்கிறார். (மத்தேயு 12:11) பொதுவாக, ஒரு ஆட்டை அடுத்த நாள்வரை குழியிலேயே விடமாட்டார்கள். ஏனென்றால், அது செத்துவிட்டால் அவர்களுக்குத்தான் நஷ்டம். அதோடு, “நீதிமான் தன் வீட்டு விலங்குகளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறான்” என்று வேதவசனங்களும் சொல்கின்றன.—நீதிமொழிகள் 12:10.
“அப்படியானால், ஆட்டைவிட மனுஷன் எவ்வளவு மதிப்புள்ளவன்! அதனால், ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 12:12) இதிலிருந்து, ஓய்வுநாளில் குணமாக்கியதன் மூலம் இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறவில்லை என்பது தெரிகிறது. இயேசுவின் வாதத்தில் நியாயம் இருக்கிறது, கரிசனை தெரிகிறது. அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் மதத் தலைவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள்.
அவர்கள் இப்படித் தவறாக யோசிப்பதைப் பார்த்து இயேசுவுக்குக் கோபம் ஒருபக்கம், வேதனை ஒருபக்கம். அவர்களை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, சூம்பிய கையுடையவனிடம், “உன் கையை நீட்டு” என்று சொல்கிறார். (மத்தேயு 12:13) அவனும் நீட்டுகிறான்; அந்தக் கை குணமாகிறது. அவனுக்கு ஒரே சந்தோஷம்! ஆனால், இயேசுவைப் பிடிக்க வழி தேடிக்கொண்டிருக்கிற ஆட்கள் அதைப் பார்த்து என்ன செய்கிறார்கள்?
அவர்களுக்குக் கொஞ்சம்கூட சந்தோஷமே இல்லை. அவர்கள் வெளியே போய், “அவரைக் கொலை செய்வதற்காக ஏரோதுவின் ஆதரவாளர்களோடு” உடனடியாகத் திட்டம் தீட்ட ஆரம்பிக்கிறார்கள். (மாற்கு 3:6) அநேகமாக, சதுசேயர்கள் என்ற மதப் பிரிவினரும் ஏரோதுவின் ஆதரவாளர்களாக இருந்திருக்கலாம். பொதுவாக, சதுசேயர்களுக்கும் பரிசேயர்களுக்கும் ஒத்துவராது. ஆனால், இயேசுவை எதிர்க்கும் விஷயத்தில் அவர்கள் எல்லாரும் கூட்டுச் சேர்ந்துகொள்கிறார்கள்.