அதிகாரம் 75
எது உண்மையான சந்தோஷம்?
‘கடவுளுடைய விரலால்’ பேய்களை விரட்டுகிறார்
உண்மையான சந்தோஷம் எப்படிக் கிடைக்கும்?
ஜெபம் செய்வதைப் பற்றி ஏற்கெனவே சொன்ன விஷயங்களை இயேசு மறுபடியுமாக சொல்லி முடித்திருந்தார். இதேபோல், வேறு சில விஷயங்களையும் அவர் மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக, அவர் கலிலேயாவில் இருந்தபோது, பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் அவர் அற்புதங்களைச் செய்கிறார் என்று சிலர் பழி போட்டார்கள். இப்போது, யூதேயாவிலும் அதே பிரச்சினை வருகிறது.
ஒரு மனிதனை ஊமையாக்கிய பேயை இயேசு விரட்டுகிறார். அதைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவரை எதிர்க்கிறவர்களோ அவரைக் குறை சொல்கிறார்கள். “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்” என்று முன்பு குற்றம்சாட்டியதைப் போலவே இப்போதும் குற்றம்சாட்டுகிறார்கள். (லூக்கா 11:15) வேறு சிலரோ, அவர் யார் என்று தெரிந்துகொள்வதற்குக் கூடுதல் அத்தாட்சிகள் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், பரலோகத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்கிறார்கள்.
தன்னைச் சோதிப்பதற்காகத்தான் அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள் என்று இயேசு புரிந்துகொள்கிறார். கலிலேயாவில் அவரை எதிர்த்தவர்களிடம் சொன்ன அதே பதிலை இவர்களிடமும் சொல்கிறார். ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினை இருந்தால் அந்த ராஜ்யம் நிலைக்காது என்று இயேசு சொல்கிறார். “அதேபோல், சாத்தான் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்கியிருந்தால், அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைக்கும்?” என்று கேட்கிறார். பிறகு, “நான் கடவுளுடைய விரலால்தான் பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்” என்று நேரடியாகவே சொல்கிறார்.—லூக்கா 11:18-20, அடிக்குறிப்பு.
‘கடவுளுடைய விரல்’ என்று இயேசு சொன்னபோது, பல காலத்துக்கு முன்பு இஸ்ரவேலில் நடந்த சம்பவங்கள் மக்களின் ஞாபகத்துக்கு வந்திருக்கும். பார்வோனின் அரசவையில் இருந்தவர்கள் மோசே செய்த அற்புதத்தைப் பார்த்தபோது, “கடவுளுடைய விரலால் மட்டும்தான் இதைச் செய்ய முடியும்!” என்று ஆச்சரியத்தோடு சொன்னார்கள். அதோடு, இரண்டு கற்பலகைகளில் பத்துக் கட்டளைகளை எழுதியதும் ‘கடவுளுடைய விரல்தான்.’ (யாத்திராகமம் 8:19, அடிக்குறிப்பு; 31:18, அடிக்குறிப்பு) இயேசுவும்கூட ‘கடவுளுடைய விரலால்தான்,’ அதாவது கடவுளுடைய சக்தியால்தான், பேய்களை விரட்டுகிறார், நோயாளிகளைக் குணமாக்குகிறார். கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற இயேசு, அவரை எதிர்க்கிறவர்கள் முன்னால்தான் இந்த அற்புதங்களைச் செய்கிறார். ஆனாலும், அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி, கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.
ஒரு மாளிகையைக் காவல்காக்கிற பலசாலியை, அவனைவிட பலமுள்ள ஒருவரால் தோற்கடிக்க முடியும். அதேபோல, பேய்களை விரட்டுவதன் மூலம் சாத்தானைவிட தனக்கு அதிக சக்தி இருக்கிறது என்பதை இயேசு நிரூபிக்கிறார். ஒரு மனிதனைவிட்டு வெளியேறிய பேயைப் பற்றிய உதாரணத்தை இயேசு மறுபடியும் சொல்கிறார். அந்தப் பேய் போன பிறகு அந்தக் காலி இடத்தை அவன் நல்ல விஷயங்களால் நிரப்பவில்லை என்றால், அது இன்னும் ஏழு பேய்களோடு திரும்பிவரும். அப்போது அவனுடைய நிலைமை முன்பைவிட இன்னும் மோசமாகிவிடும். (மத்தேயு 12:22, 25-29, 43-45) இஸ்ரவேல் தேசத்தின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது.
இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிற ஒரு பெண், “உங்களை வயிற்றில் சுமந்து, பாலூட்டி வளர்த்த தாய் சந்தோஷமானவள்!” என்று சொல்கிறாள். ஒரு தீர்க்கதரிசி தங்கள் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று யூதப் பெண்கள் ஆசைப்பட்டார்கள். அதுவும், மேசியாவுக்குத் தாயாக வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால், இப்படிப்பட்ட போதகரைப் பெற்றதை நினைத்து மரியாள் ரொம்பச் சந்தோஷப்பட வேண்டும் என்று இந்தப் பெண் நினைத்திருக்கலாம். ஆனால், எது உண்மையிலேயே சந்தோஷத்தைத் தரும் என்று அவளுக்குப் புரிய வைக்க இயேசு நினைக்கிறார். அதனால் அந்தப் பெண்ணிடம், “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!” என்று சொல்கிறார். (லூக்கா 11:27, 28) மரியாளுக்கு விசேஷ மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்யும்போதுதான் ஒருவருக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும். முக்கியமான ஆட்களுக்கு உறவினர்களாக இருப்பதாலோ, ஒருவருடைய சாதனைகளாலோ அப்படிப்பட்ட சந்தோஷம் கிடைத்துவிடாது.
கலிலேயாவில் இருந்தபோது, பரலோகத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டவர்களை இயேசு கண்டித்தார். அதைத்தான் இங்கேயும் செய்கிறார். “யோனாவின் அடையாளத்தை” தவிர வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படாது என்று சொல்கிறார். மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்ததன் மூலமும், தைரியமாகப் பிரசங்கித்ததன் மூலமும் யோனா ஒரு அடையாளமாக இருந்தார். அவருடைய செய்தியைக் கேட்டு நினிவே மக்கள் திருந்தினார்கள். “ஆனால் இதோ! யோனாவைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 11:29-32) முன்பு, சாலொமோனின் ஞானத்தைக் கேட்க சேபா தேசத்து ராணி வந்தாள். ஆனால், இயேசு அந்த சாலொமோனைவிட பெரியவராக இருக்கிறார்.
“யாரும் விளக்கைக் கொளுத்தி மறைவான இடத்திலும் வைக்க மாட்டார்கள், கூடையால் மூடியும் வைக்க மாட்டார்கள், . . . அதை விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 11:33) இந்த மக்களுக்குக் கற்பிப்பதும் அவர்கள் முன்னால் அற்புதங்கள் செய்வதும் விளக்கை மூடி வைப்பதற்குச் சமம் என்ற அர்த்தத்தில் இப்படிச் சொல்லியிருக்கலாம். அவர்களுடைய கண்கள் ஒரே விஷயத்தில் கவனமாக இல்லாததால், அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு மனிதனை ஊமையாக்கிய பேயை, இயேசு கொஞ்சம் முன்னால்தான் விரட்டியிருந்தார். அதற்குப் பிறகு, அவன் பேச ஆரம்பித்தான். அதைப் பார்த்த மக்கள் யெகோவாவைப் புகழ்ந்திருக்க வேண்டும், அவர் செய்கிற மகத்தான செயல்களை மற்றவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அதனால், தன்னை எதிர்க்கிற ஆட்களைப் பார்த்து, “உங்களுக்குள் இருக்கும் ஒளி, இருளாக இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உடலின் எந்தப் பாகமும் இருளடையாமல் முழுவதும் பிரகாசமாக இருந்தால், உங்களுக்கு ஒளி தருகிற விளக்கைப் போலவே உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 11:35, 36.