உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 120 பக். 276-பக். 277 பாரா. 3
  • இயேசுவின் நண்பராக, கனி கொடுப்பவராக இருக்க வேண்டும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவின் நண்பராக, கனி கொடுப்பவராக இருக்க வேண்டும்
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • அவருடைய பிரிவிற்கு அப்போஸ்தலர்களை தயாரித்தல்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • ‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • கடவுளால் நேசிக்கப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • ‘இந்தத் திராட்சைச் செடியை கவனித்துக் கொள்ளும்’!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 120 பக். 276-பக். 277 பாரா. 3
மாடி அறையிலிருந்து இயேசு தன் சீஷர்களோடு பேசிக்கொண்டே புறப்படுகிறார்

அதிகாரம் 120

இயேசுவின் நண்பராக, கனி கொடுப்பவராக இருக்க வேண்டும்

யோவான் 15:1-27

  • உண்மையான திராட்சைக் கொடியும் கிளைகளும்

  • இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பது எப்படி?

இயேசு தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம் மனம் திறந்து பேசி அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறார். நேரம் இப்போது நடுராத்திரியையும் தாண்டியிருக்கும். இப்போது அவர்களைச் செயல்படத் தூண்டுகிற ஒரு உவமையைச் சொல்கிறார்.

“நான்தான் உண்மையான திராட்சைக் கொடி, என் தகப்பன்தான் திராட்சைத் தோட்டக்காரர்” என்று இயேசு ஆரம்பிக்கிறார். (யோவான் 15:1) பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இஸ்ரவேல் தேசம் யெகோவாவின் திராட்சைக் கொடி என்று அழைக்கப்பட்டது. (எரேமியா 2:21; ஓசியா 10:1, 2) அந்தத் தேசத்தை யெகோவா இப்போது ஒதுக்கித்தள்ளுகிறார். (மத்தேயு 23:37, 38) அதனால், ஒரு புதிய விஷயத்தை இயேசு இப்போது அறிமுகப்படுத்துகிறார். கி.பி. 29-ல், கடவுளுடைய சக்தியால் இயேசு அபிஷேகம் செய்யப்பட்டதிலிருந்து, அவரை ஒரு திராட்சைக் கொடியாக தகப்பன் வளர்த்துவருகிறார். இப்போது, அதில் இருக்கிற கிளைகளைப் பற்றி இயேசு சொல்கிறார்.

“கனி தராத என்னுடைய கிளைகள் எல்லாவற்றையும் [என் தகப்பன்] வெட்டிப்போடுகிறார். கனி தருகிற கிளைகள் ஒவ்வொன்றையும், அது அதிகமாகக் கனி தரும்படி சுத்தம் செய்கிறார். . . . எந்தவொரு கிளையும் தானாகக் கனி தர முடியாது, திராட்சைக் கொடியோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் கனி தர முடியும். அதேபோல், நீங்களும் என்னோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் உங்களால் கனி தர முடியும். நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 15:2-5.

தான் போன பிறகு, கடவுளுடைய சக்தி என்ற சகாயரை அனுப்புவதாக தன்னுடைய உண்மையுள்ள சீஷர்களுக்கு இயேசு வாக்குக் கொடுத்திருந்தார். 51 நாட்களுக்குப் பிறகு, அப்போஸ்தலர்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கும்போது, அவர்கள் திராட்சைக் கொடியின் கிளைகளாக ஆவார்கள். அதற்குப் பிறகு, எல்லா ‘கிளைகளும்’ இயேசுவுடன் நிலைத்திருக்க வேண்டும். எதற்காக?

“ஒருவன் என்னோடும் நான் அவனோடும் நிலைத்திருந்தால் அவன் அதிகமாகக் கனி தருவான். என்னோடு இல்லையென்றால் உங்களால் எதையுமே செய்ய முடியாது” என்று இயேசு விளக்குகிறார். அவரை உண்மையோடு பின்பற்றுகிற இந்த “கிளைகள்” அதிகமாகக் கனி கொடுப்பார்கள். அதாவது, அவருடைய குணங்களை வெளிக்காட்டுவார்கள்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிப்பார்கள்; நிறைய சீஷர்களை உருவாக்குவார்கள். ஒருவன் இயேசுவுடன் நிலைத்திருக்கவில்லை என்றால்... கனி கொடுக்கவில்லை என்றால்... என்ன ஆகும்? ‘ஒருவன் என்னோடு நிலைத்திருக்கவில்லை என்றால், அவன் வெட்டியெறியப்படுவான்’ என்று அவர் சொல்கிறார். ஆனால், “நீங்கள் என்னோடு நிலைத்திருந்தால், அதோடு என் வார்த்தைகள் உங்களுடைய இதயத்தில் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்கள், கேட்டபடியே உங்களுக்கு நடக்கும்” என்கிறார்.—யோவான் 15:5-7.

தன்னுடைய கட்டளைகளின்படி நடப்பதைப் பற்றி இயேசு ஏற்கெனவே இரண்டு தடவை பேசியிருந்தார். இப்போது மறுபடியும் அதைப் பற்றிப் பேசுகிறார். (யோவான் 14:15, 21) “நான் என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே, நீங்களும் என் கட்டளைகளின்படி நடந்தால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்” என்கிறார். யெகோவாமீதும் அவருடைய மகன்மீதும் அன்பு இருந்தால்தான் நாம் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். அதோடு, முக்கியமான இன்னொரு விஷயத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று அவர் சொல்கிறார். “நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் என் கட்டளை. ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை. என்னுடைய கட்டளைப்படி நீங்கள் நடந்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்” என்கிறார்.—யோவான் 15:10-14.

தன்மீது விசுவாசம் வைக்கிற எல்லாருக்காகவும் உயிரைக் கொடுப்பதன் மூலம், இன்னும் சில மணிநேரத்தில் இயேசு தன்னுடைய அன்பை நிரூபிப்பார். அதேபோன்ற சுயநலமில்லாத அன்பைக் காட்ட இயேசுவின் முன்மாதிரி அவருடைய சீஷர்களைத் தூண்டுகிறது. இந்த அன்புதான் அவர்களின் அடையாளம். “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.—யோவான் 13:35.

இயேசு தன் அப்போஸ்தலர்களை “நண்பர்கள்” என்று குறிப்பிட்டார். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார். “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்கிறார். இது எப்பேர்ப்பட்ட நட்பு! இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக இருப்பதும், தகப்பன் அவரிடம் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்த நட்பு நீடிக்க வேண்டுமென்றால், அவர்கள் தொடர்ந்து ‘கனி கொடுக்க வேண்டும்.’ அப்படிச் செய்தால், “என் பெயரில் தகப்பனிடம் எதைக் கேட்டாலும் அதை அவர் உங்களுக்குத் தருவார்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 15:15, 16.

இந்த “கிளைகள்,” அதாவது சீஷர்கள், ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பு வரப்போகிற கஷ்டங்களைச் சகிக்க அவர்களுக்கு உதவி செய்யும். இந்த உலகம் அவர்களை வெறுக்கும் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால், ‘உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்பே என்னை வெறுத்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அவர்களுக்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததால், . . . உலகம் உங்களை வெறுக்கிறது’ என்று ஆறுதலாகச் சொல்கிறார்.—யோவான் 15:18, 19.

இந்த உலகம் ஏன் அவர்களை வெறுக்கும் என்பதற்கு இன்னும் சில காரணங்களையும் அவர் சொல்கிறார். “நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால்தான் உங்களுக்கு விரோதமாக இவற்றையெல்லாம் செய்வார்கள். ஏனென்றால், என்னை அனுப்பியவரைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது” என்று அவர்களிடம் சொல்கிறார். அவர் செய்த அற்புதங்கள் அவரை வெறுக்கிறவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்கும் என்றும் சொல்கிறார். “வேறு யாருமே செய்யாத செயல்களை நான் அவர்கள் மத்தியில் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது. ஆனால், இப்போது அவர்கள் என்னைப் பார்த்தும்கூட என்னையும் என் தகப்பனையும் வெறுத்திருக்கிறார்கள்” என்கிறார். சொல்லப்போனால், அவர்கள் காட்டுகிற வெறுப்புகூட பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது.—யோவான் 15:21, 24, 25; சங்கீதம் 35:19; 69:4.

மறுபடியும், கடவுளுடைய சக்தியாகிய சகாயரை அனுப்புவதாக இயேசு வாக்குக் கொடுக்கிறார். அவரைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே அந்தச் சக்தி கிடைக்கும். கனி கொடுக்க, அதாவது “சாட்சி கொடுக்க,” அந்தச் சக்தி அவர்களுக்கு உதவி செய்யும்.—யோவான் 15:27.

  • இயேசு சொன்ன உவமையில், திராட்சைத் தோட்டக்காரர் யார்? திராட்சைக் கொடி யார்? கிளைகள் யார்?

  • கிளைகளிடமிருந்து என்ன கனியைக் கடவுள் எதிர்பார்க்கிறார்?

  • இயேசுவின் சீஷர்கள் எப்படி அவருடைய நண்பர்களாக இருக்க முடியும், உலகத்தின் வெறுப்பைச் சமாளிக்க அவர்களுக்கு எது உதவி செய்யும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்