உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 129 பக். 294-பக். 295 பாரா. 3
  • ”இதோ! இந்த மனுஷன்!”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ”இதோ! இந்த மனுஷன்!”
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • “இதோ! அந்த மனிதன்!”
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • பொந்தியு பிலாத்து யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இயேசு நிரபராதி என்று பிலாத்துவும் ஏரோதுவும் புரிந்துகொள்கிறார்கள்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • பிலாத்துவிடமிருந்து ஏரோதிடத்திற்கும், பின்பு மறுபடியும் பிலாத்துவிடம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 129 பக். 294-பக். 295 பாரா. 3
இயேசு ஒரு முள் கிரீடத்தையும் ஊதா நிற சால்வையையும் அணிந்திருக்கிறார். பிலாத்து அவரை வெளியே கொண்டுவந்து நிறுத்துகிறார்

அதிகாரம் 129

“இதோ! இந்த மனுஷன்!”

மத்தேயு 27:15-17, 20-30 மாற்கு 15:6-19 லூக்கா 23:18-25 யோவான் 18:39–19:5

  • இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயற்சி செய்கிறார்

  • பரபாசை விடுவிக்கும்படி யூதர்கள் கேட்கிறார்கள்

  • இயேசு கேலி செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகிறார்

இயேசுவைக் கொல்லும்படி கூச்சல்போட்ட கூட்டத்தாரிடம், “இவனுக்கு எதிராக நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஏரோதுவுக்கும் தெரியவில்லை” என்று பிலாத்து சொல்லியிருந்தார். (லூக்கா 23:14, 15) இப்போது, இயேசுவைக் காப்பாற்ற அவர் வேறொரு விதத்தில் முயற்சி செய்கிறார். அவர் மக்களிடம், “பஸ்கா பண்டிகையின்போது உங்களுக்காக நான் ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் இருக்கிறதே. அதன்படி, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்கு விடுதலை செய்யட்டுமா?” என்று கேட்கிறார்.—யோவான் 18:39.

பரபாஸ் என்ற கைதி சிறையில் இருப்பது பிலாத்துவுக்குத் தெரியும். அவன் பேர்போன கொள்ளைக்காரன், கலகக்காரன், கொலைகாரன். அதனால் பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்ய வேண்டும், பரபாசையா அல்லது கிறிஸ்து என்று அழைக்கப்படும் இயேசுவையா?” என்று கேட்கிறார். முதன்மை குருமார்கள் மக்களை நன்றாகத் தூண்டிவிட்டிருப்பதால், பரபாசை விடுதலை செய்யும்படி மக்கள் சொல்கிறார்கள். பிலாத்து மறுபடியும், “இந்த இரண்டு பேரில் யாரை உங்களுக்காக விடுதலை செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார். “பரபாசை!” என்று அவர்கள் கத்துகிறார்கள்.—மத்தேயு 27:17, 21.

பிலாத்து நொந்துபோய், “அப்படியானால், கிறிஸ்து என்று அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார். மக்கள் எல்லாரும், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கத்துகிறார்கள். (மத்தேயு 27:22) கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல், ஒரு அப்பாவியைக் கொல்லும்படி அவர்கள் கேட்கிறார்கள். பிலாத்து அவர்களிடம், “ஏன்? இவன் என்ன குற்றம் செய்தான்?” என்று ஆதங்கத்தோடு கேட்கிறார். “மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு இவன் எந்தக் குற்றமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. அதனால், இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—லூக்கா 23:22.

பிலாத்து இத்தனை தடவை கேட்டும்கூட, “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று ஆவேசமாகக் கத்துகிறார்கள். (மத்தேயு 27:23) மதத் தலைவர்கள் மக்களை நன்றாகத் தூண்டிவிட்டு, இப்படி வெறியாட்டம் போட வைத்திருக்கிறார்கள். இரத்தத்தைப் பார்க்கும்வரை அவர்கள் ஓயப்போவதில்லை. அவர்கள் கொல்லச் சொல்வது ஒரு குற்றவாளியையோ, கொலைகாரனையோ அல்ல, ஒரு நிரபராதியை! அதுவும், ஐந்து நாட்களுக்கு முன்னால் எருசலேமுக்குள் ராஜாவாக வரவேற்கப்பட்ட ஒருவரைத்தான் அவர்கள் கொல்லச் சொல்கிறார்கள். இயேசுவின் சீஷர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருந்தாலும், இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாகத்தான் நின்றிருப்பார்கள்.

அங்கே கலவரம் வெடிக்கிற சூழ்நிலை உருவாகிறது. இனி தான் என்ன சொன்னாலும், அவர்கள் கேட்கப்போவதில்லை என்று பிலாத்து புரிந்துகொள்கிறார். அதனால், கொஞ்சம் தண்ணீரை எடுத்து, அவர்கள் எல்லார் முன்பாகவும் தன் கைகளைக் கழுவி, “இந்த மனுஷனுடைய சாவுக்கு நான் பொறுப்பாளி கிடையாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். அதைப் பார்த்தும் அந்தக் கூட்டத்தார் அடங்கவில்லை. “இவனுடைய சாவுக்கு நாங்களும் எங்கள் பிள்ளைகளுமே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம்” என்று சொல்கிறார்கள்.—மத்தேயு 27:24, 25.

சரியானதைச் செய்வதைவிட மக்களைத் திருப்திப்படுத்தத்தான் ஆளுநர் ஆசைப்படுகிறார். அதனால், அவர்கள் கேட்டபடியே பரபாசை விடுதலை செய்கிறார். இயேசுவின் உடையைக் கழற்றி, அவரைச் சாட்டையால் அடிக்கும்படி படைவீரர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

படைவீரர்கள் இயேசுவை மிருகத்தனமாக அடித்து ஆளுநரின் மாளிகைக்குள் கொண்டுபோகிறார்கள். பிறகு, மற்ற படைவீரர்கள் எல்லாரும் கூடிவந்து, அவரை இன்னும் சித்திரவதை செய்கிறார்கள். முட்களால் ஒரு கிரீடத்தைச் செய்து அவருடைய தலையில் வைத்து அழுத்துகிறார்கள். அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, ராஜாக்கள் அணிகிற கருஞ்சிவப்பு நிற சால்வையைப் போர்த்திவிடுகிறார்கள். பிறகு, “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொல்லிக் கேலி செய்கிறார்கள். (மத்தேயு 27:28, 29) இது போதாதென்று, அவர்மேல் துப்பி, அவருடைய கன்னத்தில் மாறி மாறி அறைகிறார்கள். அவர் கையில் இருக்கிற பலமான கோலை வாங்கி, அவருடைய தலையில் அடிக்கிறார்கள். அவரை அவமானப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட கிரீடம் அவருடைய தலையில் இன்னும் ஆழமாக இறங்குகிறது.

இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும், இயேசு அமைதியாக, தைரியமாக இருப்பதைப் பார்த்து பிலாத்து அசந்துபோகிறார். இயேசுவின் சாவுக்குக் காரணமாகிவிடாமல் தப்பித்துக்கொள்ள அவர் இன்னொரு தடவை முயற்சி செய்கிறார். அவர் மக்களிடம், “அவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை. இதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்று சொல்கிறார். உடல் முழுவதும் வெட்டுக்காயங்களோடு, இரத்தம் வடிய வடிய நிற்கிற இயேசுவைப் பார்த்தாலாவது அந்த மக்களின் மனம் மாறாதா என்று பிலாத்து நினைத்திருக்கலாம். ஈவிரக்கமற்ற அந்த கூட்டத்தின் முன்னால் இயேசுவை நிறுத்தி, “இதோ! இந்த மனுஷன்!” என்று சொல்கிறார்.—யோவான் 19:4, 5.

பிலாத்துவின் வார்த்தைகளில் மரியாதையும் பரிதாபமும் தெரிகிறது. ஏனென்றால், இத்தனை சித்திரவதைகளுக்கும் ரணங்களுக்கும் நடுவிலும் இயேசு அமைதியாக, தைரியமாக இருந்ததை அவர் கவனிக்கிறார்.

சாட்டையடி

அடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சாட்டை

ரோமர்கள் சாட்டையால் அடிப்பதைப் பற்றி தி ஜர்னல் ஆஃப் த அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேஷன் என்ற ஆங்கில புத்தகத்தில் டாக்டர். வில்லியம் டி. எட்வர்ட்ஸ் இப்படி சொல்கிறார்:

“பொதுவாக சிறிய சாட்டையை (ஃப்ளாக்ரம் அல்லது ஃப்ளாகெல்லம்) அவர்கள் பயன்படுத்தினார்கள். அதில் நிறைய தோல் வார்கள் இணைக்கப்பட்டிருந்தன. இவை தனி வார்களாகவோ, பின்னப்பட்ட வார்களாகவோ இருந்தன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீளத்தில் இருந்தன. அவற்றில் சின்ன இரும்பு குண்டுகளோ செம்மறியாட்டின் கூர்மையான எலும்புகளோ இடைவெளி விட்டு இணைக்கப்பட்டிருக்கும். . . . இந்தச் சாட்டையை வைத்து ரோம வீரர்கள் ஒரு ஆளின் முதுகில் ஓங்கி ஓங்கி அடிப்பார்கள். அப்படி அடிக்கும்போது, அந்த இரும்பு குண்டுகள் பட்டு உடல் கன்றிப்போய்விடும். சாட்டையின் வார்களும் ஆட்டு எலும்புகளும் அவருடைய தோலையும், தோலுக்குக் கீழே இருக்கிற திசுக்களையும் கிழித்துவிடும். திரும்பத் திரும்ப அதே இடத்தில் அடி விழும்போது, அந்தக் காயம் இன்னும் ஆழமாகி, சதை கிழிந்துவிடும். கடைசியில், அடிபட்ட இடம் நார்நாராகக் கிழிந்துவிடும்.”

  • இயேசுவை விடுதலை செய்யவும், அவருடைய மரணத்துக்குக் காரணமாகிவிடாமல் இருப்பதற்கும் பிலாத்து எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்?

  • சாட்டையடி என்றால் என்ன?

  • சாட்டையால் அடிக்கப்பட்ட பிறகும், இயேசு எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்