அதிகாரம் 71
பார்வை பெற்ற மனிதனைப் பரிசேயர்கள் விசாரிக்கிறார்கள்
முன்பு பார்வை இல்லாதவனாக இருந்த மனிதனைப் பரிசேயர்கள் விசாரிக்கிறார்கள்
மதத் தலைவர்கள் “பார்வையற்றவர்கள்”
பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாத ஒருவனை இயேசு குணமாக்கினார் என்பதைப் பரிசேயர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால் அவனுடைய அப்பா-அம்மாவை அவர்கள் கூப்பிடுகிறார்கள். தங்களை ‘ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிட’ வாய்ப்பு இருக்கிறது என்பது அவனுடைய அப்பா-அம்மாவுக்குத் தெரியும். (யோவான் 9:22) அப்படி அவர்களுடைய குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டால், மற்ற யூதர்களோடு அவர்களால் பழக முடியாது. பொருளாதார விதத்திலும் குடும்பத்துக்குப் பயங்கர கஷ்டம் வந்துவிடும்.
பரிசேயர்கள் அவனுடைய அப்பா-அம்மாவிடம், “இவன்தான் உங்கள் மகனா? இவன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்கிறீர்களே, இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று கேட்கிறார்கள். அப்போது அவனுடைய அப்பா-அம்மா, “இவன் எங்களுடைய மகன்தான், பிறக்கும்போதே குருடனாகத்தான் பிறந்தான். ஆனால், இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது என்று எங்களுக்குத் தெரியாது, யார் இவனுக்குப் பார்வை தந்தது என்றும் எங்களுக்குத் தெரியாது” என்று சொல்கிறார்கள். எப்படிப் பார்வை கிடைத்தது என்று அவன் ஒருவேளை அவர்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனாலும், அவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாகப் பேசுகிறார்கள். “இவனையே கேளுங்கள். இவன் வளர்ந்த பையன்தானே, இவனே சொல்லட்டும்” என்று சொல்கிறார்கள்.—யோவான் 9:19-21.
அதனால், பரிசேயர்கள் மறுபடியும் அவனைக் கூப்பிடுகிறார்கள். இயேசுவுக்கு எதிரான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி அவனைப் பயமுறுத்துகிறார்கள். “கடவுளை மகிமைப்படுத்து. அந்த ஆள் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்று மிரட்டுகிறார்கள். அதற்கெல்லாம் அவன் அசரவில்லை. “அவர் ஒரு பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும், பார்க்க முடியாமலிருந்த என்னால் இப்போது பார்க்க முடிகிறது” என்கிறான்.—யோவான் 9:24, 25.
இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிட பரிசேயர்களுக்கு மனதில்லை. அதனால் மறுபடியும் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? உனக்கு எப்படிப் பார்வை தந்தான்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவன், “நான் ஏற்கெனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை. மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீஷர்களாக விரும்புகிறீர்களா என்ன?” என்று தைரியமாகக் கேட்கிறான். அப்போது அவர்கள் அவனைச் சபித்து, “நீதான் அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயுடைய சீஷர்கள். மோசேயிடம் கடவுள் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும்; ஆனால், அந்த ஆள் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியாது” என்று கோபமாகச் சொல்கிறார்கள்.—யோவான் 9:26-29.
அதைக் கேட்டு அந்தப் பிச்சைக்காரன் ஆச்சரியப்படுகிறான். “என்ன ஆச்சரியம்! அவர் எனக்குப் பார்வை தந்திருக்கிறார், அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று தெரியாது என்கிறீர்களே!” என்று சொல்கிறான். அதோடு, யாருடைய ஜெபத்தைக் கடவுள் கேட்கிறார், யாரை ஏற்றுக்கொள்கிறார் என்றும் அவர்களிடம் சொல்கிறான். “பாவிகளுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை, அவருக்குப் பயந்து அவருடைய விருப்பத்தின்படி செய்கிறவனுடைய ஜெபத்தைத்தான் அவர் கேட்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவிக் குருடனுக்கு ஒருவர் பார்வை தந்ததாகச் சரித்திரமே இல்லை. அவர் கடவுளிடமிருந்து வரவில்லை என்றால், அவரால் ஒன்றுமே செய்திருக்க முடியாது” என்று சொல்கிறான்.—யோவான் 9:30-33.
அந்தப் பிச்சைக்காரனின் நியாயமான வாதத்துக்குப் பதில் சொல்ல முடியாமல் பரிசேயர்கள் திணறுகிறார்கள். அதனால், “முழுக்க முழுக்கப் பாவத்தில் பிறந்த நீயா எங்களுக்குச் சொல்லித்தருகிறாய்?” என்று கேட்டு, அவனைத் துரத்திவிடுகிறார்கள்.—யோவான் 9:34.
நடந்த விஷயங்களை இயேசு கேள்விப்படுகிறார். அவர் அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து, “மனிதகுமாரன்மேல் நீ விசுவாசம் வைக்கிறாயா?” என்று கேட்கிறார். அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லுங்கள்; அப்போது நான் விசுவாசம் வைப்பேன்” என்று சொல்கிறான். இயேசு அவனிடம், “நீ அவரைப் பார்த்திருக்கிறாய்; உன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர்தான் அவர்” என்று நேரடியாகச் சொல்கிறார்.—யோவான் 9:35-37.
உடனடியாக அவன், “எஜமானே, நான் விசுவாசம் வைக்கிறேன்” என்று சொல்கிறான். தன்னுடைய விசுவாசத்தையும் மரியாதையையும் காட்டுவதற்காக அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்குகிறான். அப்போது இயேசு, “பார்வையற்றவர்கள் பார்வை அடையும்படியும் பார்வையுள்ளவர்கள் பார்வை இழக்கும்படியும் தீர்ப்பு பெறுவதற்காகவே நான் இந்த உலகத்துக்கு வந்தேன்” என்று சொல்கிறார்.—யோவான் 9:38, 39.
ஆன்மீக விஷயங்களில் மக்களை வழிநடத்துவதாக நினைத்துக்கொள்ளும் பரிசேயர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? தாங்கள் பார்வையற்றவர்கள் கிடையாது என்பது அங்கிருக்கிற பரிசேயர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், இயேசு சொன்ன விஷயம் தங்களுக்குப் பொருந்தாது என்பதைக் காட்டுவதற்காக, “நாங்களும் என்ன பார்வையற்றவர்களா?” என்று இயேசுவிடம் கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாக இருந்திருந்தால், பாவமில்லாமல் இருந்திருப்பீர்கள். ஆனால், ‘நாங்கள் பார்க்கிறோம்’ என்று நீங்கள் சொல்வதால் பாவமுள்ளவர்களாகவே இருக்கிறீர்கள்” என்று சொல்கிறார். (யோவான் 9:40, 41) ஒருவேளை அந்தப் பரிசேயர்கள் இஸ்ரவேலில் போதகர்களாக இல்லாதிருந்தால், இயேசுவை மேசியாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்காது. ஆனால், திருச்சட்டத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் அவர்கள் அவரை ஒதுக்கித்தள்ளியது மிகப் பெரிய பாவம்!