ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
நல்ல செய்தியை அறிவிக்கும் எங்கள் சக ஊழியர்களே:
ஒரே உண்மைக் கடவுளான யெகோவாவை ஒன்றுசேர்ந்து வணங்குவது எவ்வளவு பெரிய பாக்கியம்! நாம் அவருடைய “சக வேலையாட்ளாக“ இருக்கிறோம். அவர் நம்மிடம் புனிதமான, உயிர்காக்கும் வேலையை கொடுத்திருக்கிறார். அதாவது, அவருடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்கும்படியும் கற்பிக்கும்படியும் சொல்லியிருக்கிறார். (1 கொ. 3:9; மத். 28:19, 20) உலகம் முழுவதும் செய்யப்பட வேண்டிய இந்த வேலையை ஒற்றுமையாகவும் சுமூகமாகவும் செய்து முடிக்க நாம் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்.—1 கொ. 14:40.
கிறிஸ்தவ சபை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். ஒரு யெகோவாவின் சாட்சியாக உங்களுக்கு என்னென்ன விசேஷ வாய்ப்புகளும் பொறுப்புகளும் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்தப் புத்தகம் விளக்கும். நீங்கள் அந்த வாய்ப்புகளை உயர்வாக மதிக்கும்போதும், அந்தப் பொறுப்புகளைச் சரியாகச் செய்யும்போதும் ‘விசுவாசத்தில் பலப்படுவீர்கள்.’—அப். 16:4, 5; கலா. 6:5.
அதனால் இந்தப் புத்தகத்தைக் கவனமாகப் படியுங்கள். கற்றுக்கொள்ளும் விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசியுங்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருந்தால், ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தவராக இருந்தால் யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வருவதற்கும் உங்கள் சேவையை விரிவாக்குவதற்கும் என்ன செய்ய வேண்டும்? (1 தீ. 4:15) சபையின் சமாதானத்தைக் கட்டிக்காக்க உங்கள் பங்கில் என்ன செய்ய வேண்டும்? (2 கொ. 13:11) இந்தக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் பதில் தெரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற ஒரு சகோதரராக இருந்தால் உதவி ஊழியராக ஆவதற்கும் பிற்பாடு மூப்பராக ஆவதற்கும் என்ன செய்ய வேண்டும்? கடவுளுடைய அமைப்புக்குள் ஆயிரக்கணக்கான புதியவர்கள் திரண்டு வந்துகொண்டே இருப்பதால் அவர்களை வழிநடத்துவதற்கு தகுதியுள்ள சகோதரர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இந்த இலக்குகளை அடைவதற்கு ‘முயற்சி செய்வதில்’ என்னவெல்லாம் அடங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும்.—1 தீ. 3:1.
யெகோவாவின் ஏற்பாட்டில் உங்கள் பங்கு என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும் அதை உயர்வாக மதிக்கவும் இந்தப் புத்தகம் உதவ வேண்டுமென்று நாங்கள் ஊக்கமாக ஜெபம் செய்கிறோம். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். நம் பரலோகத் தகப்பனான யெகோவாவை என்றென்றும் சந்தோஷமாக வணங்கப்போகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்று நாங்கள் தொடர்ந்து ஜெபம் செய்கிறோம்.—சங். 37:10, 11; ஏசா. 65:21-25.
உங்கள் சகோதரர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு