பாடம் 17
மோசே யெகோவாவை வணங்க முடிவு எடுத்தார்
எகிப்தில் யாக்கோபின் குடும்பத்துக்கு இஸ்ரவேலர்கள் என்ற பெயர் வந்தது. யாக்கோபும் யோசேப்பும் இறந்த பிறகு புதிய பார்வோன் ஆட்சி செய்ய ஆரம்பித்தான். எகிப்தியர்களைவிட இஸ்ரவேலர்கள் அதிகமாகிக்கொண்டே போனதைப் பார்த்து பார்வோன் பயந்தான். அதனால் இஸ்ரவேலர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கினான். செங்கல்களைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினான். வயல்களில் கடினமாக வேலை வாங்கினான். எகிப்தியர்கள் அவர்களை எந்தளவுக்கு வேலை வாங்கினார்களோ அந்தளவுக்கு அவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பார்வோனுக்கு அது பிடிக்கவில்லை. அதனால், இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்று கட்டளை போட்டான். இஸ்ரவேலர்கள் ரொம்பப் பயந்துபோயிருப்பார்கள், இல்லையா?
யோகெபேத் என்ற இஸ்ரவேல் பெண்ணுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை அவள் காப்பாற்ற நினைத்தாள். அதனால், அவனை ஒரு கூடையில் வைத்து, நைல் நதியோரம் இருந்த நாணல் புற்களுக்கு இடையில் ஒளித்துவைத்தாள். என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவனுடைய அக்கா மிரியாம் கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டாள்.
பார்வோனின் மகள் அங்கே குளிக்க வந்தபோது, அந்தக் கூடையைப் பார்த்தாள். அதில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குப் பாவமாக இருந்தது. அப்போது மிரியாம், ‘இந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா?’ என்று கேட்டாள். ‘சரி’ என்று பார்வோனின் மகள் சொன்னாள். உடனே மிரியாம், அந்தக் குழந்தையின் அம்மா யோகெபேத்தைக் கூட்டிக்கொண்டு வந்தாள். ‘இந்தக் குழந்தைக்குப் பால் கொடுத்து கவனித்துக்கொள், நான் பணம் தருகிறேன்’ என்று பார்வோனின் மகள் அவளிடம் சொன்னாள்.
குழந்தை வளர்ந்த பிறகு, யோகெபேத் அவனை பார்வோனின் மகளிடம் கொண்டுவந்தாள். அவள் அவனுக்கு மோசே என்று பெயர் வைத்து, தன் சொந்த மகனைப் போல வளர்த்தாள். மோசே ஒரு இளவரசராக வளர்ந்தார். ஆசைப்பட்ட எல்லாமே அவருக்குக் கிடைத்தது. ஆனாலும், அவர் யெகோவாவை மறக்கவில்லை. தான் ஒரு எகிப்தியன் இல்லை, இஸ்ரவேலன் என்பது மோசேக்குத் தெரிந்திருந்தது. அதனால், யெகோவாவை வணங்க முடிவு எடுத்தார்.
மோசேக்கு 40 வயது இருந்தபோது, தன் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தார். ஒரு இஸ்ரவேலனை ஒரு எகிப்தியன் அடிப்பதைப் பார்த்தபோது, அந்த எகிப்தியனை மோசே அடித்துக் கொன்றுபோட்டார். பிறகு, அவனுடைய உடலை மணலுக்குள் புதைத்தார். பார்வோனுக்கு விஷயம் தெரிந்தபோது, மோசேயைக் கொல்ல முயற்சி செய்தான். அதனால், மோசே மீதியான் நாட்டுக்கு ஓடிப்போனார். அங்கே யெகோவா அவரை நன்றாகப் பார்த்துக்கொண்டார்.
“விசுவாசத்தால்தான் மோசே . . . பார்வோனுடைய மகளின் மகன் என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை; . . . கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுத்தப்படுவதையே அவர் தேர்ந்தெடுத்தார்.”—எபிரெயர் 11:24, 25