பாடம் 74
இயேசு மேசியா ஆகிறார்
‘என்னைவிட பெரியவர் ஒருவர் வருவார்’ என்று யோவான் மக்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். இயேசுவுக்குக் கிட்டத்தட்ட 30 வயது இருந்தபோது, அவர் கலிலேயாவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு வந்தார். அங்கே யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார். தனக்கும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று யோவானிடம் இயேசு கேட்டார். அதற்கு யோவான், ‘நான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக் கூடாது. நீங்கள்தான் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார். அதற்கு இயேசு, ‘நீ எனக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்’ என்று சொன்னார். அதனால், அவர்கள் இரண்டு பேரும் யோர்தான் ஆற்றுக்குள் இறங்கினார்கள். இயேசுவை யோவான் முழுவதுமாக தண்ணீரில் முக்கி எடுத்தார்.
இயேசு தண்ணீரைவிட்டு வெளியே வந்த பிறகு, ஜெபம் செய்தார். அந்த நிமிஷமே, வானம் திறந்தது. கடவுளுடைய சக்தி ஒரு புறாவைப் போல் இயேசுவின் மேல் இறங்கியது. அப்போது யெகோவா, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்” என்று பரலோகத்திலிருந்து சொன்னார்.
யெகோவாவின் சக்தி இயேசுவின் மேல் இறங்கியபோது அவர் கிறிஸ்துவாக, அதாவது மேசியாவாக ஆனார். எந்த வேலையைச் செய்வதற்காக யெகோவா அவரை இந்தப் பூமிக்கு அனுப்பினாரோ, அந்த வேலையை இயேசு இப்போது செய்ய ஆரம்பிப்பார்.
ஞானஸ்நானம் எடுத்த உடனேயே, இயேசு வனாந்தரத்துக்குப் போய் 40 நாட்கள் அங்கே இருந்தார். அங்கிருந்து வந்ததும் அவர் யோவானைப் பார்க்கப் போனார். இயேசு அவரிடம் வருவதைப் பார்த்ததும், ‘இவர்தான் கடவுள் அனுப்பிய ஆட்டுக்குட்டி. இந்த உலகத்தின் பாவங்களை இவர் நீக்குவார்’ என்று யோவான் சொன்னார். இதன் மூலம், இயேசுதான் மேசியா என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தினார். இயேசு வனாந்தரத்தில் இருந்தபோது என்ன நடந்தது தெரியுமா? அதை அடுத்த பாடத்தில் படிக்கலாம்.
“‘நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.”—மாற்கு 1:11