இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
யெகோவாவின் வணக்கத்தின் பேரில் வைராக்கியம்
கானா ஊர் கல்யாணத்திற்குப் போய் வந்த பிறகு, இயேசு கலிலேயா கடலுக்கு அருகேயிருக்கும் பட்டணமாகிய கப்பர் நாகூமுக்குப் பயணம் பண்ணி வருகிறார். அவருடைய சீஷர்களும், அவருடைய தாயாரும், யாக்கோபு, யோசேப்பு, சிமியோன், யூதாஸ் ஆகிய சீஷர்களும் அவருடனேகூட இருக்கிறார்கள். என்றபோதிலும், அந்தப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், குடும்பத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் முதலாவதாக நாசரேத்திலிருக்கும் இயேசுவின் வீட்டில் ஒருவேளை தங்கள் பயணத்தைச் சற்று நிறுத்தியிருக்கக்கூடும்.
ஆனால் கானா ஊர், நாசரேத் அல்லது கலிலேயா மலைகளுக்கு அருகேயிருக்கும் மற்ற இடங்களில் தம்முடைய ஊழியத்தைத் தொடராமல் இயேசு ஏன் கப்பர்நகூமுக்குச் செல்கிறார்? ஒரு காரணம் கப்பர்நகூம் முக்கியமான ஒரு இடத்தில் அமைந்திருப்பதினாலும், அது ஒரு பெரிய பட்டணமாக இருப்பதனாலும் ஆகும். மேலும் இயேசுவின் புதிய சீஷர்களில் பலர் கப்பர்நகூமில் அல்லது அதைச் சுற்றியே வசிக்கின்றனர், எனவே அவர்கள் அவரிடமிருந்து பயிற்றுவிப்பைப் பெற தங்களுடைய வீட்டை விட்டுவர வேண்டிய அவசியமிருக்காது.
அவர் கப்பர்நகூமில் இருந்த சமயத்தில், இயேசு அற்புதமான கிரியைகளைச் செய்தார். அவர்தாமே இதைச் சில மாதங்களுக்குப் பிறகு வெளிப்படுத்துகிறார். சீக்கிரத்திலேயே இயேசுவும் அவருடைய தோழர்களும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். அது வசந்த காலமாயிருந்தது. பொ.ச. 30, பஸ்கா பண்டிகைக்கு ஆஜராயிருக்க எருசலேமை நோக்கிச் செல்கிறார்கள். அங்கே, அவருடைய சீஷர்கள் இயேசுவில் பார்த்திராத ஒரு காரியத்தைப் பார்க்கிறார்கள்.
கடவுளுடைய சட்டத்தின் பிரகாரம், இஸ்ரவேலர் மிருக பலிகளைச் செலுத்தும்படி எதிர்பார்க்கப்பட்டனர். இப்படியிருக்க, அவர்களுடைய வசதிக்காக, எருசலேமிலிருக்கும் வியாபாரிகள் மிருகங்களையும் பறவைகளையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆலயத்திற்குள்ளே விற்பனைச் செய்கிறார்கள், மற்றும் ஜனங்களிடமிருந்து அதிகமான பணம் வாங்கி அவர்களை ஏமாற்றுகிறார்கள்.
அதிக கோபமடைந்தவராக, இயேசு கயிற்றிலான ஒரு சவுக்கைச் செய்து, அதைக் கொண்டு விற்பவர்களை வெளியே துரத்துகிறார். காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போடுகிறார். “இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்!” என்று புறா விற்கிறவர்களிடம் கோபமாகச் சொல்லுகிறார். “என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்.”
இயேசுவின் சீஷர்கள் இதைப் பார்க்கும்போது, கடவுளுடைய குமாரனைப் பற்றிய தீர்க்கதரிசனம் அவர்களுக்கு ஞாபகம் வருகிறது: “உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது.” ஆனால் யூதர்கள் அவரை நோக்கி: “நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர்” என்று கேட்கிறார்கள். இயேசு பிரதியுத்தரமாக: “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்கிறார்.
இயேசு சொல்லர்த்தமான ஆலயத்தைக் குறித்து பேசுகிறார் என்று யூதர்கள் நினைக்கிறார்கள், ஆனால் தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார். மூன்று வருடங்கள் கழித்து, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட போது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறார்கள். யோவான் 2:12-22; மத்தேயு 13:55; லூக்கா 4:23.
◆ கானா ஊர் கல்யாணத்திற்குப் பிறகு இயேசு எந்த இடங்களுக்குப் பயணம் செய்கிறார்?
◆ இயேசு ஏன் கோபப்படுகிறார்? அவர் என்ன செய்கிறார்?
◆ இவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இயேசுவின் சீஷர்கள் எதை நினைவுபடுத்துகிறார்கள்?
◆ “இந்த ஆலயத்தைக்” குறித்து இயேசு என்ன சொன்னார், அவர் எதை அர்த்தப்படுத்தினார்? (w85 11/15)