இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
ஒரு சமாரிய பெண்ணுக்குப் போதித்தல்
யூதோயாவிலிருந்து கலிலேயாவுக்குச் செல்லும் வழியில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் சமாரியா வழியாகச் செல்கிறார்கள். பயணத்தில் அதிக களைப்படைந்தவர்களாக, மத்தியான வேளையில் அவர்கள் சீகார் என்னும் ஊரில் ஒரு கிணற்றருகே ஓய்வெடுக்க நிற்கிறார்கள். இந்தக் கிணறு நூற்றாண்டுகளுக்கு முன்பு யாக்கோபினால் தோண்டப்பட்டது. நவீன பட்டணமாகிய நாப்லஸ் அதற்கு அருகே இருக்கிறது.
இயேசு இவ்விடத்தில் ஓய்வெடுக்கையில், அவருடைய சீஷர்கள் உணவு வாங்க ஊருக்குள்ளே சென்றார்கள். தண்ணீர் இரைப்பதற்காக அங்கு வந்த ஒரு சமாரிய ஸ்திரீயிடம் இயேசு, ‘தாகத்துக்குத் தண்ணீர் கொடு’ என்று கேட்டார்.
தப்பெண்ணங்கள் ஆழமாக வேர் கொண்டிருந்ததினால், யூதர்களும் சமாரியர்களும் ஒருவரோடொருவர் சம்பந்தம் கொள்ளாதவர்களாக இருந்தார்கள். எனவே அந்த ஸ்திரீ ஆச்சரியத்தோடு: “நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் ‘தாகத்துக்குத்தா’ என்று எப்படிக் கேட்கலாம்,” என்கிறாள்.
உன்னிடத்தில் கேட்பவர் இன்னார் என்பதை அறிந்திருந்தாயானால் நீ என்னிடத்தில் “ஜீவத் தண்ணீரைக்” கேட்டிருப்பாய் என்று இயேசு பதிலளிக்கிறார். இந்தத் தண்ணீர் “நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நிரூற்றாயிருக்கும்” என்று அவர் சொல்லுகிறார்.
“ஆண்டவரே, அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்” என்று அவள் கேட்கிறாள்.
இந்தச் சமயத்தில் இயேசு: “நீ போய் உன் புருஷனை அழைத்து வா” என்று கூறுகிறார்.
“எனக்குப் புருஷன் இல்லை” என்று பதிலளிக்கிறாள்.
இயேசு அவள் சொன்னதை ஒத்துக்கொள்கிறார். “ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல,” என்றார்.
“ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்,” என்று அந்த ஸ்திரீ ஆச்சரியத்தோடு சொல்கிறாள். அவளுடைய ஆவிக்குரிய அக்கறைகளை வெளிப்படுத்துகிறவளாக, சமாரியர்கள் கெர்ஸிம் மலையிலும் யூதர்கள் எருசலேமிலும் தொழுதுகொண்டார்கள் என்றும் கூறினாள்.
என்றாலும், வணக்கத்துக்குரிய இடம் முக்கியமானதல்ல என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார். “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” என்று விவரித்துக் காட்டுகிறார்.
அவர் சொன்னது அவளில் ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டுபண்ணியது. “கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்,” என்றாள்.
“உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்று இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். அந்தப் பட்டணத்திலுள்ள மற்றப் பெண்கள் அவளுடைய வாழ்க்கை முறையை வெறுத்ததினால் அவர்களோடு தொடர்பு கொள்வதைத் தவிர்க்க, மத்தியான வேளையில் தண்ணீர் எடுக்க வந்த இந்தப் பெண், அதிசயமான விதத்தில் இயேசுவால் தயவு காண்பிக்கப்பட்டாள். வேறு யாரிடமும் அறிக்கை செய்திராத ஒரு காரியத்தை அவளிடம் இயேசு வெளிப்படையாகச் சொல்லுகிறார். என்ன விளைவுகளோடு? எமது அடுத்த வெளியீட்டில் வரும் கட்டுரையில் இது விவரிக்கப்படும். யோவான் 4:3-26.
◆ இயேசு தன்னிடம் பேசியதைக் குறித்து அந்தச் சமாரிய பெண் ஏன் ஆச்சரியமடைந்தாள்?
◆ ஜீவத் தண்ணீரைக் குறித்தும் எங்கே வணங்க வேண்டும் என்பதைக் குறித்தும் இயேசு அவளுக்கு என்ன போதித்தார்?
◆ தாம் யார் என்பதை இயேசு அவளுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? வெளிப்படுத்திய இந்தக் காரியம் ஏன் ஆதிசயிக்கத்தக்கதாயிருக்கிறது? (w86 1/1)